Dundhubhi | Kishkindha-Kanda-Sarga-11 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வாலியின் ஆற்றலை வியந்து சொன்ன சுக்ரீவன்; துந்துபியின் அறைகூவலை விவரித்தது; வாலிக்கு மதங்க முனிவரின் சாபம்; தன் வலிமையை வெளிப்படுத்தத் தொடங்கிய ராமன்...
சுக்ரீவன், மகிழ்ச்சியையும், பௌருஷத்தையும் {ஆற்றலையும்} அதிகரிக்கும் ராமனின் சொற்களைக் கேட்டு, ராகவனை {ராமனைப்} பூஜிக்கவும், போற்றவும் தொடங்கினான்:(1) "நன்கு ஜுவலிப்பவையும், கூர்மையானவையும், மர்மங்களைத் துளைப்பவையுமான இந்தச் சரங்கள், நீர் கோபமடைகையில், யுகாந்தத்தின் பாஸ்கரனை {யுக முடிவின் சூரியனைப்} போல உலகங்களை தஹிக்கும் என்பதில் சந்தேகமில்லை.(2) வாலியின் பௌருஷம் {ஆற்றல்} எதுவோ, வீரியம் எதுவோ, துணிவு எதுவோ அவற்றை என்னிடம் இருந்து ஏகமனத்துடன் கேட்ட பின்பு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக.(3)
களைப்பில்லாதவனான வாலி, சூரியன் உதிப்பதற்கு முன், மேற்கு சமுத்திரத்தில் இருந்து கிழக்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் நடப்பவன்[1].(4) அந்த வீரியவான், சைலங்களின் உச்சிகளில் ஏறி, மஹத்தான சிகரங்களை {பந்துகளைப் போல} உயரத் தூக்கி வீசி மீண்டும் தன் கைகளில் பிடிப்பான்.(5) ஆத்ம பலத்தை வெளிப்படுத்துவதற்காக, வனத்தில் செழித்திருக்கும் விதவிதமான பல்வேறு மரங்களை தன் வலிமையால் முறித்து வீழ்த்துவான்.(6)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே வாலி சந்தியோபாசனம் என்ற வேதச் சடங்கைப் பின்பற்றுவதாகச் சொல்லப்படுகிறது. சூரியன் உதிப்பதற்கு முன்பான பிரம்ம முஹூர்த்தம் உசஸ்க்கு நீர்க்காணிக்கை அளிக்கும் நேரமாகும். வாலி ஏதோவொரு ஆற்றங்கரையிலோ, தடாகத்திலோ தன் தினச் சடங்குகளைச் செய்ய அமராமல், கிழக்குக் கடலுக்குச் சென்று தன் தின நீராடலையும், தென் கடலுக்குச் சென்று ஆசமனத்தையும், மேற்குக் கடலுக்குச் சென்று அர்க்கியத்தையும், வட கடலுக்குச் சென்று ஜபத்தையும், சூர்யோபஸ்தானத்தையும் செய்து தினமும் சூரியனை வரவேற்கிறான். இதையேதான் வாலியின் மனைவியான தாரை, ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் வாலியை உடனே சந்திக்க வந்த ராவணன் பொறுமையிழக்கும்போது சொல்கிறாள். "இராவணா, வாலி நான்கு கடல்களிலும் காணிக்கையளித்துவிட்டுத் திரும்பி வரும்வரை காத்திருப்பாயாக" என்கிறாள் தாரை" என்றிருக்கிறது.
கைலாச சிகரத்தைப் போலப் பிரகாசிப்பவனும், வீரியவானும், துந்துபி என்ற பெயரைக் கொண்டவனுமான மஹிஷமானவன் {எருமையானவன்}, ஆயிரம் நாகங்களின் {யானைகளின்} பலத்தைக் கொண்டிருந்தான்.(7) வீரியத்தாலும், உற்சாகத்தாலும், வரதானத்தாலும் மோஹமடைந்தவனும், துஷ்டாத்மாவும், மஹாகாயனுமான அவன் {பேருடல் படைத்தவனுமான அந்த துந்துபி}, சரிதாம்பதியான {ஆறுகளின் தலைவனான} சமுத்திரத்திடம் சென்றான்.(8) அலைகளின் கொள்ளிடமும், ரத்தினங்களின் சேமிப்புக் கிடங்குமான அந்த சாகரத்தை அடைந்து, "எனக்கு யுத்தத்தைக் கொடுப்பாயாக {என்னுடன் போரிடுவாயாக}" என்று அந்த மஹார்ணவத்தின் {பெருங்கடலிடம்} சொன்னான்.(9)
அப்போது ராஜாவே {ராமரே}, தர்மாத்மாவும், மஹாபலனுமான அந்த சமுத்திரன் எழுந்து, காலனால் தூண்டப்பட்ட அந்த அசுரனிடம் {துந்துபியிடம், இந்தச்} சொற்களைச் சொன்னான்:(10) "யுத்த விசாரதா {போரில் நிபுணனே}, உனக்கு யுத்தத்தை தத்தம் செய்வதற்கு நான் சமர்த்தனல்லேன். எவன் உன்னுடன் யுத்தம் செய்ய ஒத்தவனோ அவனைச் சொல்கிறேன் கேட்பாயாக.(11) பரம தபஸ்விகளின் சரணிடமும் {புகலிடமும்}, சங்கரரின் மாமனும் {சிவனின் மாமனாரும்}, ஹிமவான் என்ற நாமத்தால் அறியப்பட்டவனும், மஹாபிரஸ்ரவணங்களையும் {பேரருவிகளையும்}, பல குகைகளையும், சிற்றருவிகளையும் {சுனைகளையும்} கொண்டவனும், மஹாரண்யத்தில் சைலராஜனுமான ஒருவன் {பெருங்காட்டில் உள்ள மலைகளின் அரசனுமான இமய மலையானவன்}, உன் பிரீதிக்கு ஒப்பற்றதைச் செய்யும் சமர்த்தனாக இருக்கிறான்" {என்றான் சமுத்திரன்}.(12,13)
அசுரோத்தமனான துந்துபி அந்த சமுத்திரம் பீதியடைவதை அறிந்து, வில்லில் இருந்து ஏவப்பட்ட சரத்தைப் போல, ஹிமவான் வனத்தை அடைந்தான். வெண்கஜேந்திரன் {வெண்மையான யானைகளின் தலைவனைப்} போன்ற பாறைகளைப் பூமியில் வீழ்த்தி பெரும் நாதம் {முழக்கம்} செய்தான்.(14,15) வெண்மேகத்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்டவனும், மென்மையானவனும், தோற்றத்தில் இனிமையானவனுமான ஹிமவான், தன் சிகரத்தில் நின்றவாறே {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(16) "தர்மவத்ஸலா {தர்மத்தை விரும்புகிறவனே}, துந்துபி, நீ என்னைத் துன்புறுத்துவது தகாது. தபஸ்விகளின் புகலிடமான நான், ரண கர்மத்தில் குசலமற்றவன் {போர்த்தொழில் நிபுணனல்லேன்}" {என்றான் ஹிமவான்}.(17)
துந்துபி, மதிமிக்க அந்த கிரிராஜன் சொன்ன சொற்களைக் கேட்டு, கோபத்தால் கண்கள் சிவந்து, {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(18) "நீ யுத்தத்தில் சமர்த்தனில்லை என்றாலோ, என்னிடம் கொண்ட பயத்தால் துணிவற்று இருந்தாலோ, எவன் எனக்கு யுத்தத்தைத் தரும் போர்மனப்பான்மை கொண்டவனோ, அவனைக் குறித்துச் சொல்வாயாக" {என்றான் துந்துபி}.(19)
வாக்கிய விசாரதனும், தர்மாத்மாவுமான ஹிமவான், இதைக் கேட்டுக் குரோதத்துடன் இருக்கும் அந்த அசுரோத்தமனிடம் {துந்துபியிடம்} முன் எப்போதும் சொல்லப்படாத வாக்கியங்களைச் சொன்னான்:(20) "மஹாபிராஜ்ஞனே {பெரும்புத்திசாலியே}, சக்ரபுத்திரனும் {இந்திரனின் மகனும்}, ஸ்ரீமானும், பிரதாபவானும், வாலி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு வானரன், ஒப்பற்ற சிறப்புடைய கிஷ்கிந்தையில் வசிக்கிறான்.(21) அவன் மஹாபிராஜ்ஞன் {பெரும் புத்திசாலி}; யுத்த விசாரதன் {போரில் நிபுணன்}, நமுசியுடன் வாசவனை {இந்திரனைப்} போல, அவன் உனக்கு துவந்த யுத்தத்தை தத்தம் செய்யவல்ல சமர்த்தனாவான்.(22) இங்கே யுத்தத்தை இச்சிக்கும் நீ அவனை சீக்கிரம் அணுகுவாயாக. சூரனான அவன் நித்தியம் சமரகர்மங்களில் {எப்போதும் போர் நடவடிக்கைகளில்} வெல்வதற்கரியவனே" {என்றான் ஹிமவான்}.(23)
அப்போது அந்த துந்துபி, ஹிமவானின் வாக்கியங்களைக் கேட்டுக் கோபமடைந்து, அந்த வாலியின் கிஷ்கிந்தாபுரிக்குச் சென்றான்.(24) மஹாபலவானான துந்துபி, கூரிய கொம்புகளுடன் கூடிய மஹிஷ ரூபம் {எருமை வடிவம்} தரித்து, மழைக்காலத்தில் நபதலத்தில் {வானில்} நீர் நிறைந்த மஹாமேகத்தைப் போல, {அனைவரையும்} அச்சுறுத்தியபடியே கிஷ்கிந்தையின் வாயிலை அடைந்து, பூமியை நடுங்கச் செய்து, துந்துபியை {பேரிகை முழங்குவதைப்} போல கர்ஜித்தான்.(25,26) சமீபத்தில் இருந்த மரங்களை வேரோடு முறித்து, வசுதையை {தரையைத்} தன் குளம்புகளால் குடைந்து, யானையைப் போல அடாவடியாகத் தன் கொம்புகளால் அந்த துவாரத்தை {வாயிலைக்} கீறினான்[2].(27)
[2] கம்பராமாயணத்தில் துந்துபி முதலில் திருமாலிடம் செல்கிறான். பிறகு, திருமால் அவனை சிவனிடம் அனுப்ப, சிவன் அவனை தேவேந்திரனிடம் அனுப்ப, தேவேந்திரன் துந்துபியை வாலியிடம் அனுப்புவதாக இருக்கிறது.அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்தம்மன்னவன் வருக போர் செய்க எனா மலையினைச்சின்ன பின்னம் படுத்திடுதலும் சினவி என்முன்னவன் முன்னர் வந்து அனையவன் முனைதலும்- கம்பராமாயணம் 3892ம் பாடல், துந்துபிப் படலம்பொருள்: "தேவேந்திரன் அனுப்பிவிட, அவனும் {துந்துபியும்} மகிழ்ச்சியுடன் {கிஷ்கிந்தைக்கு} வந்து, "குரங்குகளின் மன்னவனே வருக. போர் செய்க" என்று சொல்லி மலையைச் சின்னபின்னம் படுத்தும்போது, என் அண்ணன் சினங்கொண்டு எதிரில் வந்து அவனுடன் {துந்துபிடம்} போரிடவும்" {என்று சுக்ரீவன் ராமனிடம் சொல்கிறான்}.
அந்தப்புரத்திற்குச் சென்ற வாலி, அந்த சப்தத்தைக் கேட்டுப் பொறுக்கமுடியாதவனாக, தாரைகளுடன் கூடிய சந்திரனைப் போல, ஸ்திரீகளுடன் வெளியே வந்தான்.(28) வனசாரிகள் அனைவருக்கும், ஹரிக்களுக்கும் {குரங்குகளுக்கும்} ஈஷ்வரனான வாலி, அந்த துந்துபியிடம் தெளிவான அக்ஷரப் பதங்களுடன் {பின்வரும்} மித வாக்கியத்தைச் சொன்னான்:(29) "துந்துபியே, இந்த நகர துவாரத்தை {வாயிலைத்} தடுத்துக் கொண்டு கர்ஜனை செய்வதன் அர்த்தம் என்ன? நான் உன்னை அறிவேன். மஹாபலவானே, {உன்} பிராணனை ரக்ஷித்துக் கொள்வாயாக" {என்றான் வாலி}.(30)
மதிமிக்கவனான அந்த வானரேந்திரனின் {வானரர்களின் தலைவனான வாலியின்} அந்த வசனத்தைக் கேட்ட துந்துபி, குரோதத்தால் கண்கள் சிவந்தவனாக, இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(31) "வீரா, ஸ்திரீகளின் முன்பு வசனம் பேசுவது உனக்குத் தகாது. இப்போது எனக்கு யுத்தத்தைத் தருவாயாக. அப்போது உன் பலத்தை நான் அறிந்து கொள்வேன்.(32) அல்லது, வானரா, இப்போது இந்த நிசியில் {இரவில்} குரோதத்தைப் பொறுத்துக் கொள்கிறேன். உதயம் வரை தடையில்லாமல் காமத்திலும், போகத்திலும் திளைத்திருப்பாயாக.(33) வானரங்களைத் தழுவிக் கொண்டு, கொடையளிப்பாயாக. சர்வ சாகை மிருக {கிளைகளில் வசிக்கும் விலங்குகளின்} இந்திரத்வம் கொண்டவனான நீ, நண்பர்களிடம் விடைபெற்றுக் கொள்வாயாக.(34) கிஷ்கிந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. புரியை {நகரை} உனக்குச் சமமானவனிடம் ஒப்படைத்துவிட்டு, ஸ்திரீகளுடன் விளையாடுவாயாக. நான் உன் ஆணவத்தை அழிப்பவன் ஆவேன்.(35) எவன் மத்தனையோ {குடி மயக்கத்தில் இருப்பவனையோ}, பிரமத்தனையோ {கவனக்குறைவாக இருப்பவனையோ}, வீழ்ந்தவனையோ, ஏதுமற்றவனையோ {ஆயுதமற்றவனையோ}, மதமோஹத்தால் செயலிழந்தவனையோ கொல்வானோ, அவன் இவ்வுலகத்தில் கருவைக் கொன்றவனாவான் {கருவைக் கொன்ற பாவத்தை அடைவான்}. நீ அவ்விதமாகவே இருக்கிறாய்" {என்றான் துந்துபி}.(36)
அப்போது அவன் {வாலி}, சிரித்துக் கொண்டே, தாரை முதலிய பிறர் உள்ளிட்ட அந்த சர்வ ஸ்திரீகளையும் அனுப்பிவிட்டு, மந்தனான {மூடனான} அந்த அசுரேஷ்வரனிடம் குரோதத்துடன் {பின்வருமாறு} பேசினான்:(37) "மத்தன் {குடித்திருக்கிறேன்} என்று என்னை நினைக்காதே. போரில் பீதி கொள்ளாதவனாக இருந்தால், என்னுடைய இந்த மதமே {குடியே} இந்தப் பயங்கரப் போரின் வீரபானமெனக் கருதுவாயாக" {என்றான் வாலி}.(38)
அவனிடம் இவ்வாறு சொல்லிவிட்டுக் குரோதமடைந்து, பிதாவான மஹேந்திரனால் தத்தம் செய்யப்பட்ட காஞ்சன மாலையை உயர்த்திவிட்டுக் கொண்டு, யுத்தத்திற்கு ஆயத்தமாக நின்றான்.(39) அப்போது கபிகுஞ்சரனான {குரங்குகளில் யானையான அந்த} வாலி, கிரிக்கு ஒப்பான அந்த துந்துபியின் கொம்புகளைப் பற்றி, பெரும் கர்ஜனை செய்த படியே தூக்கிவீசினான்.(40) வாலி அவனைச் சுழற்றி, பெருங்குரலில் கர்ஜித்தபடியே கீழே வீசியபோது அவனது காதுகளில் இருந்து ரத்தம் பாய்ந்தது.(41) குரோதத்தால் தூண்டப்பட்டுப் பரஸ்பரம் ஜயம்பெற விரும்பிய துந்துபி, வாலி ஆகியோர் இருவருக்கும் இடையில் கோரமான யுத்தம் நடந்தது.(42) பிறகு பராக்கிரமத்தில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான வாலி, தன் முஷ்டிகள், முழங்கால்கள், பாதங்கள் ஆகியவற்றைக் கொண்டும், பாறைகளையும், மரங்களையும் கொண்டும் யுத்தம் செய்தான்.(43)
அங்கே அந்த வானரனும் {வாலியும்}, அசுரனும் {துந்துபியும்} பரஸ்பரம் தாக்கிக் கொண்ட யுத்தத்தில், அசுரன் பலவீனமடைந்தான், சக்ரனின் மகனோ {வாலியோ} வலிமையடைந்தான்[3].(44) அந்த துந்துபியைத் தூக்கி தரணியில் வீசியபோது, பிராணனை அபகரிக்கும் அந்த யுத்தத்தில் துந்துபி முழுமையாக நசுக்கப்பட்டான்.(45) அவ்வாறு அவன் விழுந்தபோது, அவனது மூலங்களில் {காதுகள், கண்கள், நாசி முதலிய நவ துவாரங்களில்} இருந்து ஏராளமான ரத்தம் வழிந்தது. அந்த மஹாபாஹு பஞ்சத்வத்தை[4] அடைந்து தரையில் வீழ்ந்து கிடந்தான்.(46) வேகம் நிறைந்த வாலி, உயிர் இழந்து, அசைவற்றுக் கிடந்தவனை {துந்துபியை} இரு கைகளாலும் தூக்கி, ஏகவேகத்தில் {ஒரே வீச்சில்} ஒரு யோஜனைக்கு வீசியெறிந்தான்.(47)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாலி, தன் தந்தையான இந்திரன் கொடுத்ததும், எதிரியின் பலத்தில் பாதியைத் தனக்குத் தருவதுமான தங்க மாலையை அணிந்திருக்கிறான். எனவே, துந்துபியின் பலம் இங்கே குறைகிறது" என்றிருக்கிறது. வாலி எதிரியின் பலத்தில் பாதியைப் பெறுவான் என்று இங்கே நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஓர் உயிரினத்தின் ஐந்தாம் நிலை என்பது மரணமாகும். 1. ஜாகிருத அவஸ்தை {விழிப்புநிலை} 2. ஸ்வப்ன அவஸ்தை {கனவு நிலை}, 3.ஸுசுப்த அவஸ்தை {ஆழ்ந்த உறக்கம்}, 4. தூரிய அவஸ்தை {முதன் மூன்றைவிட ஆழ்ந்த நிலை}. அதன் பிறகு ஐந்தாம் நிலை மரணமாகும்" என்றிருக்கிறது.
அவ்வாறு வேகமாக வீசியெறியப்பட்டவனது வாயில் இருந்து விழுந்த பிந்துக்கள் {ரத்தத்துளிகள்}, மாருதனால் {காற்றால்} இழுத்துச் செல்லப்பட்டு, மதங்கரின் ஆசிரமத்தில் விழுந்தன.(48) மஹாபாக்கியவானான முனிவர் {மதங்கர்}, அங்கே விழுந்த அந்த ரத்தத் துளிகளைக் கண்டு, அவன் {அதற்குக் காரணமான வாலியின்} மீது குரோதமடைந்து, அவன் யார் என்பது குறித்துச் சிந்தித்தார்.(49) "எந்த துராத்மா என் மீது ரத்தத்தை விழச் செய்தான்? துர்புத்தி கொண்டவனும், பாலனைப் போன்றவனுமான அந்த துராத்மா யார்?" {என்று சிந்தித்தார்}.(50) அந்த முனிசத்தமர் {முனிவர்களில் சிறந்த மதங்கர்} இவ்வாறு சொல்லிவிட்டு {ஆசிரமத்தைவிட்டு} வெளியே வந்து, உயிர் இல்லாமல் புவியில் கிடந்த பர்வதரூபத்திலான மஹிஷத்தை {மலையின் வடிவிலான எருமைக்கடாவைக்} கண்டார்.(51)
அவர், இது வானரன் செய்தது என்பதை தபசக்தியால் அறிந்து, அவ்வாறு வீசியெறிந்த வானரன் {வாலியின்} மீது மஹாசாபத்தை ஏவினார்.(52) "எனக்கு உறைவிடமளிக்கும் வனத்தில் உதிரத்தைச் சிதறி அதைக் கெடுத்தவன் எவனோ, அவன் இங்கே பிரவேசிக்கக் கூடாது. பிரவேசித்தால் வதம் உண்டாகும் {அவன் சாவான்}.(53) அசுரனின் உடலை வீசி, இந்த மரங்களை முற்றிலும் அழித்தவன், என் ஆசிரமத்தைச் சுற்றிலும் முழுமையாக ஒரு யோஜனைக்குள் அடியெடுத்து வைத்தால், துர்புத்தி கொண்ட அவன் நிச்சயம் இல்லாமல் போவான்.(54,55அ) நான் இருக்கும் வனத்தைச் சார்ந்த அவனது சகாக்கள் {அமைச்சர்கள்} சிலரும் இங்கே வசிக்கக்கூடாது. இதைக் கேட்டதும் அவர்கள் சுகமாகச் செல்லட்டும்.(55ஆ,56அ) நித்தியம் புத்திரனைப் போல ரக்ஷிக்கப்படுவதும், நான் இருப்பதுமான இந்த வனத்தில் அவர்கள் இலைகள், தளிர்கள் ஆகியவற்றை அழித்து பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை இல்லாமல் செய்து கொண்டிருந்தால் அவர்களையும் நான் நிச்சயம் சபிப்பேன்.(56ஆ,57) இன்றைய நாளே கெடுவாகும். நாளை எந்த வானரனையும் நான் கண்டால், அவன் நிச்சயம் பல்லாயிரம் வருஷங்கள் சைலமாக {மலையாகக்} கிடப்பான்" {என்றார் மதங்கர்}.(58)
அப்போது முனிவர் தெளிவாகச் சொன்ன சொற்களைக் கேட்ட வானரர்கள், அந்த வனத்தில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றனர். அவர்களைக் கண்ட வாலி {பின்வருமாறு} சொன்னான்:(59) "மதங்கவனவாசிகளான நீங்கள் அனைவரும், என் சமீபத்தை அடைந்திருப்பது ஏன்? வனமும், அதில் வசிப்பவர்களும் நலம்தானே?" {என்று கேட்டான் வாலி}.(60)
அப்போது அந்த வானரர்கள் அனைவரும், சர்வ காரணங்களையும், வாலிக்கு உண்டான சாபத்தையும் ஹேம மாலையணிந்திருந்தவனான வாலியிடம் சொன்னார்கள்.(61) வானரர்கள் சொன்ன அந்த சொற்களைக் கேட்டபிறகு, வாலி தன் கைகளைக் கூப்பிக் கொண்டு {மதங்க} மஹாரிஷியை அணுகி யாசித்தான்.(62) மஹரிஷி அவனைக் கருத்தில் கொள்ளாமல் திரும்பித் தமது ஆசிரமத்திற்குள் பிரவேசித்தார். சாபத்தைச் சுமந்த வாலி, பீதியுடன் குழப்பமுமடைந்தான்.(63) நரேஷ்வரரே {ராமரே}, அப்போதிலிருந்து சாப பயத்தால் பீடிக்கப்பட்ட ஹரி {குரங்கான வாலி}, ரிச்யமூக மஹாகிரியில் பிரவேசிக்கவோ, ஏன் அதைக் காணவோ கூட இச்சிப்பதில்லை.(64)
இராமரே, அவன் பிரவேசிக்காததை அறிந்த நான், கவலையைக் கைவிட்டு, என் அமைச்சர்களுடன் இந்த மஹாவனத்தில் திரிகிறேன்.(65) கிரிகூடத்திற்கு ஒப்பாகப் பிரகாசிக்கும் இந்தப் பெரும் எலும்புக் குவியல், {வாலியின்} வீரிய உற்சாகத்தால் தூக்கி வீசப்பட்ட அந்த துந்துபியினுடையவையாகும்.(66) வாலி, சாகைகள் {கிளைகள்} நிறைந்தவையும், பெரியவையுமான இந்த சப்த சாலங்களில் {ஏழு சாலமரங்கள்} ஒன்றை தன் பலத்தால் ஓர் இலையேனும் இல்லாமல் செய்யும் சமர்த்தனாவான்.(67) இராமரே, இவை யாவற்றிலும் இணையற்றவனான அவனது வீரியத்தையே வெளிப்படுத்தினேன். நிருபரே, இத்தகையவனான அந்த வாலியை உம்மால் சமரில் {போரில்} எவ்வாறு கொல்ல முடியும்?" {என்று கேட்டான் சுக்ரீவன்}.(68)
இலக்ஷ்மணன், இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சுக்ரீவனிடம் சிரித்தபடியே {பின்வருமாறு} சொன்னான், "எந்த கர்மத்தைச் செய்வதால் வாலியை வதம் செய்யலாம் என்று நம்புவாய்?" {என்று கேட்டான்}.(69)
அப்போது சுக்ரீவன், அவனிடம் {பின்வருமாறு} சொன்னான், "பூர்வத்தில் அந்த வாலி, இந்த சப்த சாலங்களையும் {இந்த ஏழு ஆச்சா மரங்களையும்}, ஒன்றன்பின் ஒன்றாக பல சந்தர்ப்பங்களில் கலங்கடித்திருக்கிறான்[5].(70) இலக்ஷ்மணரே, அந்த மரங்களில் ஒன்றை, ராமர் ஒரே பாணத்தால் துளைத்தாலும், கொல்லப்பட்ட மஹிஷத்தின் எலும்பை ஒரே காலால் தூக்கி வலுவுடன் இருநூறு தனு அளவு தொலைவுக்கு[6] வீசினாலும், ராமரின் விக்ரமத்தைக் கண்டு வாலி நிச்சயம் கொல்லப்படுவான் என்பதில் நம்பிக்கை கொள்வேன்" {என்றான் சுக்ரீவன்}.(71,72)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சில மொழிபெயர்ப்புகளில் வாலி, வில்லைப் பயன்படுத்தாமல் ஒரே கணையால் ஒரு மரத்தைத் துளைத்து, அதன் பிறகு அதை எடுத்து, மீண்டும் அடுத்தடுத்த மரங்களைப் பலமுறை துளைத்தான் என்றிருக்கிறது. குரங்கின் கைகளில் வில்லுக்கும், கணைக்கும் வேலையில்லை. அவை பற்கள், நகங்கள், மரத்தண்டுகள், கிளைகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குபவை. எனவே, இங்கே வாலி, அந்த மரத்தை அசைத்து இலைகளை உதிர்த்து தன் பலத்தை வெளிப்படுத்தினான் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. இங்கே 67ம் சுலோகம் இந்தத் தீர்மானத்திற்கு வலுசேர்க்கிறது.
[6] தர்மாலயப் பதிப்பில், "இருநூறு வில்லளவு, அதாவது 1200 அடி தூரம்" என்றிருக்கிறது.
சுக்ரீவன், சிவந்த கடைக்கண்களைக் கொண்ட ராமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, ஒரு முஹூர்த்தம் சிந்தித்து, மீண்டும் அந்த காகுத்ஸ்தனிடம் {ராமனிடம் பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(73) "சூரனும், சூரர்களைக் கொன்றவனும், பலத்திற்காகவும், பௌருஷத்திற்காகவும் {ஆற்றலுக்காகவும்} பெரும்புகழ்பெற்றவனும், பலவானுமான வானரன் வாலி, யுத்தங்களில் ஒருபோதும் தோற்றவனில்லை.(74) ஸுரர்களாலும் சாதிக்க முடியாதவை அவனது கர்மங்கள் என்பது வெளிப்படை. அவற்றை நினைத்துப் பீதியடைந்தே, ரிச்யமூகத்தை அடைக்கலமாகக் கொண்டேன்.(75) அந்த வானரேந்திரன், வெல்லப்பட முடியாதவன், தாக்கப்பட முடியாதவன், இரக்கமற்றவன் என்று தீர்மானித்தே நான் இந்த ரிச்யமூகத்தை விட்டகலாமல் இருக்கிறேன்.(76)
நம்பத்தகுந்தவர்களும், வீரர்களுமான ஹனுமான் முதலிய பிரமுகர்களுடனும், அமைச்சர்களுடனும் இந்த மஹாவனத்தில் கவலையுடனும், சந்தேகத்துடனும் நான் திரிந்து வருகிறேன்.(77) மெச்சத்தகுந்த உண்மை நண்பராக உம்மையும் அடைந்திருக்கிறேன். மித்ரவத்ஸலரே {நண்பர்களிடம் அன்புடையவரே}, புருஷவியாகரரே {மனிதர்களில் புலியே}, ஹிமவானைப் போன்ற உம்மிடம் நான் தஞ்சமடைந்திருக்கிறேன்.(78) ஆனால், பலசாலியும், என் உடன் பிறந்த துஷ்டனுமான அவனது {வாலியின்} பலத்தை அறிந்திருக்கிறேன். இராகவரே, சமரில் {போரில்} உமது வீரியம் குறித்து எனக்குத் தெளிவாகத் தெரியாது.(79) நான் உம்மை எடைபோடவில்லை {சோதிக்கவில்லை}, குறைத்தும் மதிப்பிடவில்லை, பீதியடையச் செய்யவுமில்லை. அவனது பீம கர்மங்கள் {பயங்கரச் செயல்கள்} என்னில் அச்சத்தை உண்டாக்குகின்றன.(80) இராகவரே, உமது சொல், பிரமாணம் {உறுதிமொழி}, தைரியம், ஆகிருதி {உடலுருவம்} ஆகியவை பஸ்மத்தால் மறைக்கப்பட்ட அனலனை {சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பைப்} போல பரம தேஜஸ்ஸை வெளிப்படுத்தாமல் இல்லை" {என்றான் சுக்ரீவன்}.(81)
இராமன், மஹாத்மாவான அந்த சுக்ரீவன் சொன்ன சொற்களைக் கேட்ட பிறகு, அந்த ஹரியை {குரங்கான சுக்ரீவனை} நோக்கிப் புன்னகைத்து {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(82) "வானரா, விக்ரமத்தில் எங்களிடம் உனக்கு நம்பிக்கையில்லை என்றால், நீ மெச்சத்தகுந்த நம்பிக்கையை இதோ நான் உண்டாக்குகிறேன்" {என்றான் ராமன்}.(83)
இலக்ஷ்மணாக்ரஜனும் {லக்ஷ்மணனின் அண்ணனும்}, மஹாபாஹுவும், வீரியவானுமான ராகவன், இவ்வாறு சொல்லி சுக்ரீவனை சாந்தப்படுத்தி, துந்துபியின் உடலை விளையாட்டாகத் தன் பாதத்தின் கட்டைவிரலால் தூக்கினான். உதிர்ந்து போன அந்த அசுரனின் உடலைத் தன் பாதத்தின் கட்டைவிரலால் பத்து யோஜனை தொலைவுக்கு வீசினான்.(84,85)
சுக்ரீவன், தூக்கிவீசப்பட்ட உடலைக் கண்ட பிறகு, லக்ஷ்மணனின் முன்னிலையிலும், ஹரிக்களின் {குரங்குகளின்} முன்னிலையிலும் தஹிக்கும் பாஸ்கரனை {சூரியனைப்} போன்ற வீரனான ராமனிடம் மீண்டும் அர்த்தம் பொதிந்த இந்தச் சொற்களைச் சொன்னான்:(86) "சகாவே, அந்நேரத்தில் களைத்தவனும், மத்தனும் {குடித்தவனும்}, என்னுடன் பிறந்தவனுமான வாலி, {ரத்தத்தால் நனைந்த} ஈரத்துடனும், மாமிசத்துடனும், வாடாமல் இருந்த உடலைத் தூக்கிவீசினான்.(87) இராகவரே, இப்போதோ லகுவானதும், மாமிசமற்றதும், திருணபூதமாக்கப்பட்டதுமான {புல்லைப் போல ஆனதுமான} ஒன்றை ரகுநந்தனரான நீர் விளையாட்டாகத் தூக்கி வீசினீர்.(88) இதில் உமது பலம் அதிகமா? அவனது பலம் அதிகமா? என்பதை அறிய முடியவில்லை. இராகவரே, நனைந்தது, உலர்ந்தது என்று இவற்றில் மஹத்தான வேறுபாடு இருக்கிறது.(89)
தாதா {ஐயா}, உமக்கும், அவனுக்கும் என்ன பலம் என்பதில் சந்தேகமிருக்கிறது. ஒரே சாலத்தை {ஒரே ஒரு ஆச்சா மரத்தை} முழுமையாகப் பிளந்தால் பலாபலம் வெளிப்படையாகத் தெரியும்.(90) மற்றொரு ஹஸ்தியின் ஹஸ்தத்தை {யானையின் துதிக்கையைப்} போல இந்த கார்முகத்தில் {வில்லில்} நாணேற்றி, காதுவரை முழுமையாக வளைத்து, மஹா சரத்தை ஏவுவீராக.(91) இராஜரே, உம்மால் நன்கு ஏவப்படும் சரம், இந்த சாலத்தைத் துளைத்துச் சென்றால் அதில் {அக்காரியத்தில்} சந்தேகம் இல்லாமல் போகும். சிந்தித்தது போதும். நிச்சயம் என் பிரியத்தைச் செய்வீராக. உம்மை {நான்} சோதிக்கவில்லை.(92) தேஜஸ்ஸில் ரவி {சூரியன்} எப்படியோ, மஹா சைலங்களில் ஹிமவான் எப்படியோ, நான்கு கால் பிராணிகளில் கேசரி {சிங்கம்} சிறந்திருப்பது எப்படியோ அப்படி விக்ரமத்தில் நரர்களில் சிறந்திருப்பவர் நீரே" {என்றான் சுக்ரீவன்}.(93)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 11ல் உள்ள சுலோகங்கள்: 93
Previous | | Sanskrit | | English | | Next |