Sugriva consoled Rama | Kishkindha-Kanda-Sarga-07 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையை மீட்டு வருவதாக உறுதியளித்து ராமனைத் தேற்றிய சுக்ரீவன்; வாலியைக் கொல்வதாக உறுதியளித்த ராமன்...
இராமன் வருத்தத்துடன் {இவ்வாறு} சொன்னதும், வானரனான சுக்ரீவன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடனும், கண்ணீரால் தழுதழுக்கும் குரலுடனும் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(1) "துஷ்ட குலத்தைச் சேர்ந்தவனும், பாபியுமான அந்த ராக்ஷசனின் நிலயம் {வசிப்பிடம்}, சாமர்த்தியம், விக்கிரமம், குலம் ஆகியன எதையும் நான் அறிவேனில்லை.(2) அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். மைதிலியை எவ்வாறு மீட்க முடியுமோ அவ்வாறு யத்னம் {முயற்சி} செய்வேன். சோகத்தைக் கைவிடுவீராக.(3) இராவணனையும், அவனது கணங்களையும் {தொண்டர்களையும்} கொன்று, ஆத்ம பௌருஷத்திற்கு {என் ஆற்றலுக்கு} நிறைவளிக்கும் வகையிலும், நீர் மகிழ்ச்சியடையும் வகையிலும் விரைவிலேயே நான் செயல்படுவேன்[1].(4)
[1] அயனுடை அண்டத்தின்அப் புறத்தையும்மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன்உயர் புகழ்த் தேவியை உதவற்பாலெனால்துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய்- கம்பராமாயணம் 3912ம் பாடல், கலன் காண் காண்டம்பொருள்: வேதநூல்களில் வல்லோனே, பிரம்மனின் அண்டத்திற்கு அப்பாற்பட்ட இடங்களையும் தளர்வில்லாமல் நன்றாகத் தேடி, என் வலிமையையும் காட்டி, உயர்ந்த புகழுடன் கூடிய உன் தேவியை மீட்டு உன்னிடம் சேர்ப்பிப்பேன். எனவே துன்பமடையவோ, தளர்வடையவோ வேண்டாம் {என்றான் சுக்ரீவன்}.
மனக்கலக்கம் போதும். இயல்பு நிலையையும், தைரியத்தையும் அடைவீராக. உம்மைப் போன்றவர்களுக்கு இத்தகைய புத்திலாகவம் {மனத்தடுமாற்றம்} தகாது.(5) நானும், பாரியையின் பிரிவால் உண்டாகும் மஹத்தான வியசனத்தை {துன்பத்தை} அடைந்தாலும், இவ்வாறு தைரியத்தைக் கைவிட்டு சோகமடையவில்லை.(6) சாதாரண வானரனான நானே, அவளின் {என் மனைவியான ருமையின்}[2] நிமித்தம் சோகத்தை அடையவில்லை என்றால், மஹாத்மாவும், வினீதரும் {அடக்கமுள்ளவரும்}, துணிவுமிக்கவருமான உம்மைக் குறித்து என்ன சொல்வது?(7) கண்ணீர் சிந்துவதை தைரியத்தால் அடக்குவதே உமக்குத் தகும். சத்வ யுக்தர்களுக்குரிய {உள்ளச்சமநிலை கொண்டவர்களுக்குரிய} மரியாதை, துணிவு ஆகியவற்றைக் கைவிடுவது உமக்குத் தகாது.(8)
[2] கிஷ்கிந்தா காண்டம் 18ம் சர்க்கம் 19ம் சுலோகத்தில், சுக்ரீவனின் மனைவியின் பெயர் ருமை என்று ராமன் குறிப்பிடுகிறான்.
பொறுமையுள்ளவன், வியசனத்திலோ {துன்பத்திலோ}, பொருள் இழப்பிலோ, ஜீவிதாந்தத்திலோ {வாழ்வின் முடிவிலோ}, பயத்திலோ தன் சுய புத்தியின் மூலம் ஆலோசனை செய்து தளர்ச்சியடையாமல் இருப்பான்.(9) எந்த நரன், நித்தியம் பாலத்தனத்துடன் {சிறுபிள்ளைத்தனத்துடன்} தளர்ச்சியடைவானோ, அவன் ஜலத்தில் பாரத்துடன் கூடிய நவத்தை {ஓடத்தைப்} போல, தன் வசம் இழந்து சோகத்தில் மூழ்குவான்.(10) கூப்பிய கைகளுடன் கூடிய நான், நட்பால் உம்மிடம் வேண்டுகிறேன். பௌருஷத்தை {ஆற்றலை} வெளிப்படுத்துவீராக. சோகத்திற்கு வாய்ப்பளிப்பது {இடங்கொடுப்பது} உமக்குத் தகாது.(11) சோகத்தில் மூழ்குபவர்களால் சுகத்தை அனுபவிக்க முடியாது. அவர்களின் தேஜஸ் குறையும். நீர் வருந்துவது உமக்குத் தகாது.(12) இராஜேந்திரரே, சோகத்தில் மூழ்கியவனின் ஜீவிதமும் {உயிருடன் இருப்பது} சந்தேகத்திற்குரியதே. அத்தகைய சோகத்தைக் கைவிட்டு தைரியத்தை அடைவீராக.(13) வயஸ்ய பாவத்தால் ஹிதத்தை {நட்பெண்ணத்தால் நன்மையைச்} சொல்கிறேனேயன்றி உமக்கு உபதேசிக்கவில்லை. என் வயஸ்யத்தை {நட்பைப்} பூஜித்தால் {மதித்தால்}, நீர் வருத்தத்திற்கு இடமளிப்பது தகாது" {என்றான் சுக்ரீவன்}.(14)
அந்த சுக்ரீவனால், மதுரமாக சாந்தப்படுத்தப்பட்ட அந்த ராகவன், கண்ணீரால் முழுதும் நனைந்திருந்த தன் முகத்தை வஸ்திர நுனியால் துடைத்தான்.(15) பிரபுவான அந்த காகுத்ஸ்தன் {ராமன்}, சுக்ரீவனின் சொற்களால் தன் இயல்பில் திடமடைந்து, சுக்ரீவனைத் தழுவிக் கொண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்:(16) "சுக்ரீவா, சினேகித ஹிதத்தால் வயஸ்யன் {நண்பன்} எதைச் செய்ய வேண்டுமோ, அதையே நேரத்திற்குப் பொருத்தமாகச் செய்திருக்கிறாய்.(17) சகாவே, உன் வேண்டுதலின் மூலமே, நான் என் இயல்புநிலையில் திடமடைந்தேன். இவ்வகையான பந்து, விசேஷமாக இந்தக் காலங்களில் கிடைப்பதற்கரிதானவன்.(18)
ஆனால், மைதிலியையும், துராத்மாவும், ரௌத்திரங்கொண்ட ராக்ஷசனுமான ராவணனையும் தேடுவதற்கு நீ யத்னம் {முயற்சி} செய்ய வேண்டும்.(19) நம்பகத்தன்மைக்கு என்னால் எது செய்யப்பட வேண்டுமோ அதைச் சொன்னால் உன் சர்வ முயற்சிகளும் வர்ஷகாலத்தில் க்ஷேத்திரங்களை {மழைக்காலத்தில் வயலைப்} போல விளையும்.(20) ஹரிசார்தூலா {குரங்குகளில் புலியே}, அபிமானத்தால் நான் எந்த வாக்கியத்தைச் சொன்னேனோ, அதையே நீ உண்மையெனக் கருதுவாயாக.(21) பூர்வத்தில் நான் பொய் பேசியவனல்ல. ஒருபோதும் பேசவும் மாட்டேன். இதை உனக்குப் பிரதிஜ்ஞை செய்கிறேன். சத்தியத்தின் மீது நான் சபதம் ஏற்கிறேன்" {என்றான் ராமன்}.(22)
அப்போது வானரர்களுடன் கூடிய சுக்ரீவன், ராகவனின் சொற்களை, விசேஷமாக பிரதிஜ்ஞையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தான்.(23) பிறகு, இவ்வாறு ஏகாந்தமாகச் சந்தித்தவர்களும், நரரும், வானரருமான அவ்விருவரும் அன்யோன்யம் தகுந்த சுக துக்கங்களைக் கலந்தாலோசித்தனர்.(24) வித்வானும், ஹரிவீரர்களில் {குரங்குவீரர்களில்} முக்கிய ஹரியுமானவன் {சுக்ரீவன்}, நிருபர்களின் அதிபனானவன் {ராமன்} சொன்னதைக் கேட்டதும், காரியம் நிறைவேறியதாகவே ஹிருதயத்தில் நினைத்தான்.(25)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 07ல் உள்ள சுலோகங்கள்: 25
Previous | | Sanskrit | | English | | Next |