Saturday 14 October 2023

சுக்ரீவன் சொன்ன மேற்கு | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 42 (58)

West as said by Sugreeva | Kishkindha-Kanda-Sarga-42 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுஷேணனின் தலைமையில் மேற்குத் திசைக்கு மற்றொரு படையை அனுப்பிய சுக்ரீவன்; அத்திசையில் உள்ள ஆறுகள், மலைகளின் வர்ணனை...

Sugreeva orders Sushena

சுக்ரீவன், ஹரிக்களை தக்ஷிணதிசைக்கு {குரங்குகளை தென்திசைக்கு} அனுப்பியபிறகு, மேகத்திற்கு ஒப்பானவனும், சுஷேணன் என்ற பெயரைக் கொண்டவனுமான வானரனிடம் பேசினான்.(1) இராஜா {சுக்ரீவன்}, தாரையின் பிதாவும், தன் மாமனாருமான அந்த பீமவிக்கிரமனை {அஞ்சத்தக்க வீரம் படைத்த சுஷேணனை} அணுகி, கைகளைக் கூப்பி வணங்கி, இந்த வாக்கியங்களைச் சொன்னான்.(2) மஹரிஷியின் {மரீசியின்} புத்திரனும், கபிகளிற்சிறந்த சூரர்களால் சூழப்பட்ட மஹாகபியும் {சிறந்த குரங்குகளால் சூழப்பட்ட பெருங்குரங்கும்}, மஹேந்திரனுக்கு ஒப்பாக ஒளிர்பவனுமான மாரீசன்,{3} புத்தி விக்கிரம சம்பன்னர்களும், வைனதேயனுக்கு {கருடனுக்கு} இணையான ஒளி படைத்தவர்களும், மரீசியின் புத்திரர்களுமான மாரீசர்கள், மஹாபலவான்களான அர்ச்சிஷ்மாலயர்கள்,{4} ரிஷிபுத்திரர்கள் ஆகியோருள்ளிட்ட அனைவரையும் பிரதீசீம் திசைக்கு {மேற்குத் திசைக்கு} அனுப்ப {பின்வருமாறு} ஆணையிட்டான்:(3-5அ) “கபிசத்தமர்களே {குரங்குகளில் உயர்ந்தவர்களே}, நீங்கள் அனைவரும், இருநூறாயிரம்  கபிக்களுடன் {இரண்டு லக்ஷம் குரங்குகளுடன்}, சுஷேணரை முன்னிட்டுக் கொண்டு, வைதேஹியைத் தேடிச் செல்வீராக.(5ஆ,6அ) சௌராஷ்டிரம், பாஹ்லீகம், அதேபோல சந்திரசித்திரம் {மதுரா}[1] ஆகியவற்றிலும்,{6ஆ} செழிப்புமிக்கவையும், ரம்மியமானவையுமான ஜனபதங்களிலும் {கிராமப்புறங்களிலும்}, பெரிய நகரங்களிலும், புன்னாகம் {புன்னை}, வகுலம் {மகிழம்}, உத்தாலகம்[2], ஆகுலம் {நறுவிலி மரங்கள்} நிறைந்த காடுகளின் உட்புறங்களிலும்,{7} அதேபோல, ஹரிபுங்கவர்களே {குரங்குகளில் மேலானவர்களே}, கேதகங்கள் {தாழைகள்} அடர்ந்த காடுகளிலும் தேடுவீராக.(6ஆ-8அ)

[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சந்திரசித்திரம் என்பது இன்றைய மதுராவைக் குறிக்கும். வேறு பதிப்புகளில் இது சூரதேசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சௌராஷ்டிரம் என்பது இன்றைய குஜராத் ஆகும்” என்றிருக்கிறது. இராமாயண காலத்தில் மதுரா, “மதுவனம்” என்று அறியப்பட்டிருந்தது. இருந்தாலும் சுக்ரீவன் இங்கே ராமாயண காலத்திற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த தேசத்தைக் குறிப்பிடுகிறான். அதனாலேயே பிற்காலத்தில் “மதுவனம்” என்றும், “மதுரா” என்றும் அறியப்படும் இவ்விடம் “சந்திரச்சித்திரம்” என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. ஹரிவம்சம், விஷ்ணு பர்வம், 94ம் அத்தியாயம், 39,40 சுலோகங்களில் {2:94:39,40}, “இராமனின் தம்பியான சத்ருக்னன், லவணாசுரனைக் கொன்று மதுவனத்தை அழித்தான். சுமித்ரையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அந்தத் தலைவன் {சத்ருக்னன்}, தன்னால் அழிக்கப்பட்ட அந்த மதுவனத்தில்தான் மதுரா நகரை அமைத்தான்” என்றிருக்கிறது. வெவ்வேறு புராணங்களில் மதுவனத்தை அழித்து, மதுரா நகராக்கியது சத்ருக்னனா? லக்ஷ்மணனா? என்பதில் குழப்பம் தென்படுகிறது.

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “உத்தாலகம் என்பது தேனைக் குறிக்கும். எனவே, இது தேனை அடைவதற்கான ஒரு மரமாகும்” என்றிருக்கிறது

மேற்கு நோக்கிப் பாய்பவையும், குளிர்ந்த ஜலங்கொண்டவையும், மங்கலமானவையுமான நதங்களிலும் {மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளிலும்},{8ஆ} தாபஸர்களின் அரண்யங்களிலும் {தபம் செய்யும் முனிவர்கள் இருக்கும் காடுகளிலும்}, காந்தாரங்களிலும் {ஆழ்ந்த கானகங்களிலும்}, கிரிகளிலும் {மலைகளிலும்}, நீரில்லா ஸ்தலங்களிலும், அதியுச்ச சிகரங்களைக் கொண்டவையும், குளிர்ந்தவையுமான மலைகளிலும்,{9} கிரி ஜாலங்கள் சூழ்ந்த துர்கங்களிலும் பஷ்சிம {கடப்பதற்கரிய மலைத்தொகுப்புகள் சூழ்ந்த பகுதிகளிலும் மேற்குத்} திசையில் தேடிய பிறகு, இன்னும் மேற்கே சென்றால் சமுத்திரத்தைக் காணலாம்.{10} வானரர்களே, அங்கே திமிகளுடனும் {திமிங்கலங்களுடனும்}, முதலைகளுடனும் கூடிய கலங்கிய ஜலத்தைக் காண்பீர்கள்.(8ஆ-11அ) அங்கே கபயர்கள் {குரங்குகள்}, கேதக கண்டங்களிலும் {தாழை மரங்களிலும்}, தமால கஹனங்களிலும் {பச்சிலைக் காடுகளிலும்}, நாரிகேல வனங்களிலும் {தென்னந்தோப்புகளிலும்} நடமாடுகிறார்கள்.(11ஆ,12அ) அங்கே, சீதையையும், ராவணனின் நிலயத்தையும் தேடுவீராக.{12ஆ} கடல்முனையில் அமைந்திருக்கும் பர்வதங்களிலும், வனங்களிலும் {மலைகளிலும், காடுகளிலும்}, முரசீ பட்டணத்திலும், ரம்மியமான ஜடாபுரத்திலும்,{13} அவந்தியிலும், அங்களேபத்திலும், அதே போல அலக்ஷித வனத்திலும், ஆங்காங்கே உள்ள ராஷ்டிரங்களிலும், விசாலமான பட்டணங்களிலும் {தேடுவீராக}[3].(12ஆ-14) 

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “வேறுபதிப்புகளில் முரளீ, ஜதீபுரம், மௌர்வி என்ற பெயர்களைக் கொண்ட நகரங்கள் சொல்லப்படுகின்றன” என்றிருக்கிறது

சிந்து சாகர சங்கமத்தில் {சிந்து நதியும், அரபிக்கடலும் கலக்கும் இடத்தில்}, ஹேமகிரி {பொன்மலை} என்ற பெயரைக் கொண்டதும், சதசிருங்கங்களை {நூறு சிகரங்களைக்} கொண்டதும், பெரும் மரங்களுடன் கூடியதுமான மஹாபர்வதம் இருக்கிறது.(15) அங்கே ரம்மியமான பிரஸ்தங்களில் {மலைகளின் புல்வெளிகளில்} சிறகுகளுடன் கூடிய சிம்ஹங்கள் {சிங்கங்கள்} இருக்கின்றன. அவை, திமி, மத்ஸ்யம், கஜங்கள் {திமிங்கலங்கள், மீன்கள், யானைகள்} ஆகியவற்றைத் தங்கள் கூடுகளுக்குக் கொண்டு செல்கின்றன.(16) கிரி சிருங்கத்தை {அந்தப் பொன்மலைச்சிகரத்தை} அடைந்ததும்,  இடிமேகத்தைப் போல ஒலியெழுப்புபவையும் {பிளிறுபவையும்}, செருக்கு நிறைந்தவையும், திருப்தி அடைந்தவையுமான மாதங்கங்கள் {யானைகள்}, பூரண நீர் கொண்டவையும், விசாலமானவையுமான அந்த சிம்ஹங்களின் குகைகளில் திரிந்து கொண்டிருக்கின்றன.(17,18அ) காமரூபிகளான கபிக்களே {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான குரங்குகளே}, திவத்தை ஸ்பரிசிக்கும் சித்திரமான {சொர்க்கத்தைத் தீண்டும் அழகிய} மரங்கள் நிறைந்த அதன் காஞ்சன சிருங்கத்தை {தங்கச்சிகரத்தை} முழுமையாகவும், விரைவாகவும் தேடுவீராக.(18ஆ,19அ)

வானரர்களே, அங்கே சென்றதும், சமுத்திரத்தில் உள்ள பாரியாத்ரத்தில் {பாரியாத்ர மலையில்} நூறு யோஜனைகள் கொண்டதும், காஞ்சனமயமானதும், {பொன்மயமானதும்}, கடப்பதற்கரியதுமான சிகரத்தைக் காண்பீர்கள்.(19ஆ,20அ) அங்கே, வலிமைமிக்கவர்களும், அக்னிக்கு ஒப்பாகப் பிரகாசிப்பவர்களும், கோரர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} கந்தர்வர்கள் இருபத்துநான்கு கோடி பேர் வசித்திருக்கின்றனர்[4].(20ஆ,21அ) எங்கேயும் நிறைந்திருப்பவர்களும், பாவகனின் நாவுகளை {நெருப்பின் தழல்களைப்} போலப் பிரகாசிப்பவர்களுமான அவர்களை, பீம விக்கிரமர்களான {அஞ்சத்தக்க வெற்றிநடை கொண்ட} வானரர்கள் நெருங்கக்கூடாது.(21ஆ,22அ) அந்த தேசத்தில் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} பழங்களைக் கூடப் பறிக்கக்கூடாது. சத்வவந்தர்களும் {நன்னெறியைப் பின்பற்றுபவர்களும்}, மஹாபலவான்களுமான அந்த வீரர்கள், வெல்வதற்கரியவர்கள். பீமவிக்கிரமர்களான {அஞ்சத்தக்க வெற்றிநடை கொண்டவர்களான} அவர்கள், அங்கே பழங்களையும், கிழங்குகளையும் ரக்ஷித்து {காத்துக்} கொண்டிருக்கிறார்கள்[5].(22ஆ,23) அங்கேயும் யத்னம் செய்து {முயற்சியுடன்} ஜானகியை {சீதையைத்} தேடுவீராக. கபித்வத்தை {குரங்குத் தன்மையைப்} பின்பற்றுபவர்களுக்கு அவர்களிடம் {அந்த கந்தர்வர்களிடம்} எந்த பயமும் உண்டாகாது.(24) அங்கிருந்து வைடூரிய வர்ணத்தில் ஒளிர்வதும், வடிவில் வஜ்ரம் {வைரம்} போல் நிற்பதும், நானாவித மரங்கள், கொடிகள் ஆகியவை நிறைந்ததும், ஸ்ரீமான் வஜ்ரம் என்ற பெயரைக் கொண்டதுமான மஹாகிரியானது {பெரும்மலையானது},{25} அங்கே ஒரு யோஜனை அகலத்திலும், அதே அளவு உயரத்திலும் இருக்கிறது. பிலவங்கமர்களே {தாவிச் செல்லும் குரங்குகளே}, அங்கேயுள்ள குகைகளில் பிரயத்னத்துடன் தேடுவீராக.(25,26) 

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே சொல்லப்படும் கந்தர்வர்கள் தெய்வீக இசைக்கலைஞர்களல்ல; மனித கந்தர்வர்கள். இங்கே குறிப்பிடப்படும் “பாரியாத்ரம்”, விந்தியமலைப்பகுதியில் உள்ளதல்ல; இன்றைய பாகிஸ்தானில் உள்ள “சுலைமான்” மலைத்தொடரில் உள்ள ஏதேனுமொரு மலையாக இருக்க வேண்டும்” என்றிருக்கிறது. மஹாபாரதம், பீஷ்ம பர்வம், பகுதி 9ல் பாரதத்தின் எல்லைகளாகத் திகழும் மலைகளின் பட்டியலில் இந்த பாரியாத்ரமும் குறிப்பிடப்படுகிறது.  

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்தப் பகுதி உலர்ந்த பழங்களுக்குப் பிரசித்தி பெற்ற இன்றைய ஆப்கானிஸ்தானமாக இருக்கலாம். காபூல்வாசிகள் சுவைமிகுந்த உலர்ந்த பழங்களை விற்பனை செய்வது, பழங்கால வழக்கமேயாகும். அவர்கள், அவ்வகையிலான உயர்ரக பழங்களைத் தோட்டங்களில் விளைவிக்கும் போது, எந்தத் தோட்டக்காரன்தான் குரங்குகள் பழங்களைப் பறிக்க அனுமதிப்பான்?” என்றிருக்கிறது.

சமுத்திரத்தின் நான்காம் பாகத்தில், சக்ரவான் என்ற பெயரில் ஒரு பர்வதம் {மலை} இருக்கிறது. அங்கே விஷ்வகர்மனால் ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சக்கரம் நிர்மாணிக்கப்பட்டது[6].(27) அங்கே புருஷோத்தமன் {விஷ்ணு}, பஞ்சஜனனையும், ஹயக்ரீவன் என்ற தானவனையும் கொன்று, அங்கிருந்து சக்கரத்தையும், {பாஞ்சஜன்யம் என்ற} சங்கையும் எடுத்துக் கொண்டான்.(28) அங்கே {அந்த சக்ரவான் மலையின்} ரம்மியமான தாழ்வரைகளிலும், விசாலமான குகைகளிலும் ஆங்காங்கே ராவணனையும், வைதேஹியையும் தேடுவீராக.(29) 

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இது வெறும் ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சக்கரமல்ல; ஆனால் ஆயிரம் பகுதிகளைக் கொண்ட, அல்லது ஆயிரம் துணை ஆயுதங்களைக் கொண்ட ஓர் இயந்திர ஆயுதம் என்று சொல்லப்படுகிறது. தேவதச்சனான விஷ்வகர்மன் இத்தகைய அற்புதமானவற்றை தேவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்திரனின் சொர்க்கத்தை அசுரர்கள் கைப்பற்றும்போது, அந்த அச்சுறுத்தலின் கீழ், அசுரர்களுக்கும் நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறான்” என்றிருக்கிறது.

அதற்கப்பாலுள்ள வருணாலயத்தில் {கடலில்}, அறுபத்திநான்கு யோஜனைகள் கொண்டதும், சுவர்ண சிருங்கத்துடன் {தங்கச் சிகரத்துடன்} கூடியதும், வராஹம் என்ற பெயரைக் கொண்டதுமான மஹத்தான பர்வதம் இருக்கிறது.(30) அங்கே பிராக்ஜ்யோதிஷம் என்ற பெயரில் ஜாதரூபமயமான புரம் {பொன்மயமான நகரம்} இருக்கிறது. அங்கே துஷ்டாத்மாவும், நரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான தானவன் வசிக்கிறான்[7].(31) இரம்மியமான அதன் தாழ்வரைகளிலும், விசாலமான குகைகளிலும் ராவணனையும், வைதேஹியையும் ஆங்காங்கே தேடுவீராக.(32) 

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “காளிதாசனின் படைப்புகளில் குறிப்பிடப்படும் இந்தப் பிராக்ஜோதிஷம், இன்றைய அசாம் என்று கருதப்படுகிறது. சிலர் இந்த இடத்தில் இந்த இடம் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடாது என்று சொல்கின்றனர். இந்த சுலோகத்தை சேர்த்திருப்பது நகலெடுத்தவர்கள் செய்த பிழை என்றும் சொல்லப்படுகிறது. ஜியோகரஃபி ஆஃப் புராணாஸ் (Geography of Puranas) நூலில், எஸ்.எம்.அலி, “நாட்டின் கிழக்கு விளிம்பில் இருந்த புகழ்பெற்ற ஜனபதம் இஃது” என்று சொல்கிறார். இது கிட்டத்தட்ட பிரம்மபுத்திரா நதியின் பள்ளத்தாக்கில் அமைகிறது. “பிராக்” என்பதற்கு “முதல்”, அல்லது “கிழக்கு” என்றும், “ஜ்யோதிஷ்” என்பதற்கு, “கிரகம்”, “சூரியன்”, “ஒளி” என்றும் பொருள் கொள்ளலாம். இந்தப் பெயருக்கான முழு பொருள், “முதல் ஒளியைப் பெறும் இடம்”, அதாவது கிழக்கிந்தியா, அதாவது அசாம் என்பதாகும்” என்றிருக்கிறது.

காஞ்சனக் கொள்ளிடம் {பொன்கருவூலம்} போல் தெரியும் அந்த சைலேந்திரத்தை {சிறந்த மலையான வராஹ மலையைக்} கடந்தால், நீர்த்தாரைகளைப் பொழியும் அருவிகளுடன் கூடிய சர்வசௌவர்ண பர்வதம் இருக்கிறது.(33) சுற்றிலும் கஜங்கள், வராஹங்கள், சிம்ஹங்கள், வியாகரங்கள் {யானைகள், பன்றிகள், சிங்கங்கள், புலிகள்} ஆகியவை, அவற்றின் {நீரருவிகளின்} சப்தங்களால் செருக்குற்று எப்போதும் {அந்த மலையை நோக்கி} கர்ஜித்துக் கொண்டிருக்கின்றன.(34) ஹரிஹயனும் {பச்சை குதிரைகளைக் கொண்டவனும்}, ஸ்ரீமானும், பாகசாசனனுமான மஹேந்திரன் {பகன் என்ற அசுரனை அழித்தவனுமான பெரும் இந்திரன்} எங்கே ஸுரர்களால் {தேவர்களால்} ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டானோ, அத்தகைய பர்வதம் மேகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(35) மஹேந்திரனால் பரிபாலிக்கப்படும் அந்த சைலேந்திரத்தை {சர்வசௌவர்ண / மேகவந்த மலையைக்} கடந்ததும், இளம் ஆதித்யனின் வர்ணம் கொண்டவையும், சுற்றிலும் ஒளிமயமானவையும், முழுமையாகப் புஷ்பித்த ஜாதரூபமயமான விருக்ஷங்களைக் {முற்றிலும் மலர்ந்த பொன்மயமான மரங்களைக்} கொண்டவையுமான அறுபதுனாயிரம் காஞ்சன கிரிகளுக்கும் {பொன் மலைகளுக்கும்} செல்வீராக.(36,37) 

அதன் மத்தியில் ராஜா மேரு என்ற உத்தம பர்வதம் இருக்கிறது. பூர்வத்தில் அந்த சைலத்திற்கு, அருள்நிறைந்த ஆதித்யன் {சூரியன்} வரம் ஒன்றை தத்தம் செய்தான்.(38) சைலேந்திரத்திடம் அவன் {அந்த மேரு மலையிடம் சூரியன்} இவ்வாறு சொன்னான், “உன்னைப் புகலிடமாகக் கொள்ளும் அனைத்தும், பகலிலும், ராத்திரியிலும் என் அருளால் காஞ்சனமயமாகும் {பொன்மயமாகும்}.{39} தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்களென எவரானாலும் உன்னில் வசிக்கும் பக்தர்களும் என் பிரபையால் காஞ்சனப் பிரபையுடன் {பொன்னொளியுடன்} ஒளிர்வார்கள்” {என்று மேரு மலைக்கு வரமளித்தான் சூரியன்}.(39,40) விஷ்வேதேவர்களும், வசுக்களும், மருத்துக்களும், திவ ஓகஸர்களும் {சொர்க்கவாசிகளும்}, பஷ்சிம சந்தியில் {மேற்கில் தோன்றும் மாலை சந்தியா வேளையில்} உத்தம பர்வதமான மேருவுக்கு வரும் ஆதித்யனிடம் {சூரியனிடம்} நெருங்கி அமர்கின்றனர். அவர்கள் அனைவராலும் வழிபடப்படும் சூரியன், சர்வ பூதங்களுக்கும் {அனைத்து உயிரினங்களுக்கும்} புலப்படாத வகையில் அஸ்த பர்வதத்திற்குச் செல்கிறான்.(41,42) 

திவாகரன் {பகலை உண்டாக்கும் சூரியன்}, அரை முஹூர்த்தத்தில் பத்தாயிரம் யோஜனைகளைக் கடந்து, உயர்ந்த மலையை {அஸ்தகிரியை} சீக்கிரமே அடைகிறான்.(43) அதன் சிருங்கத்தில் {சிகரத்தில்}, பல அடுக்குகளைக் கொண்டதும், சூரியனின் ஒளிக்கு ஒப்பானதும், மஹத்தானதும், திவ்யமானதுமான ஒரு பவனத்தை {வசிப்பிடத்தை} விஷ்வகர்மன் ஏற்படுத்தியிருக்கிறான்.(44) சித்திரமானவையும் {அழகானவையும்}, நானாவித பக்ஷிகளின் {பறவைகளின்} இன்னொலியுடன் கூடியவையுமான மரங்களுடன் சோபிப்பதும், மஹாத்மாவும், பாசஹஸ்தனுமான {கையில் பாசக்கயிற்றுடன் கூடியவனுமான} வருணனின் நிகேதம் {வசிப்பிடம்} அங்கேயே இருக்கிறது.(45) மேருவுக்கும், அஸ்தத்திற்கும் இடையில் தசசிரம் {பத்துத் தலை} கொண்டதும், ஜாதரூபமயமான ஸ்ரீமானும், சித்திர வேதிகையுடன் {அழகிய வேள்விப்பீடத்துடன்} கூடியதுமான மஹாதாலம் {பெரும் பனை  / பெரும் பேரீச்ச மரம்} ஒளிர்ந்து கொண்டிருக்கிறது[8].(46) துர்கங்கள், சரஸ்கள், சரிதங்கள் {கடப்பதற்கரிய மலைப்பகுதிகள், பொய்கைகள், ஆறுகள்} ஆகியவற்றைக் கொண்ட அவை அனைத்திலும் ஆங்காங்கே வைதேஹியையும், ராவணனையும் தேடுவீராக.(47) 

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இது தற்கால அரேபியாவாகவும், புராதன பாரசீக மாகாணமுமாக இருக்க வேண்டும். ஏனெனில் அங்கேயும், தென்கிழக்காசிய முழுவதுங்கூட பேரீச்ச மரங்கள் உயர்வாக மதிக்கப்படுகின்றன” என்றும், இன்னும் அதிகமும் சொல்லப்பட்டிருக்கிறது.

தர்மஜ்ஞரும் {தர்மத்தை அறிந்தவரும்}, தானே தாபஸ பாவம் அடைந்தவரும் {தன் தவத்தால் ஞானமடைந்தவரும்}, பிரம்மனுக்கு சமமானவர் என்று புகழ்பெற்றவருமான மேருசாவர்ணி {முனிவர்} இங்கேயே வசித்து வருகிறார்.(48) சூரியனுக்கு ஒப்பான ஒளி கொண்ட மஹரிஷியான மேருசாவர்ணியின் முன், பூமியை சிரஸால் வணங்கிவிட்டு, மைதிலியைக் குறித்தும், அவள் எங்கிருக்கிறாள் என்பதைக் குறித்தும் அவரிடம் கேட்பீராக.(49) பாஸ்கரன், ஜீவலோகத்தில் {சூரியன், உயிரினங்களின் உலகத்தில்} இதுவரைதான் ரஜனியின் {இரவின்} சிதைவில் இருளில்லாமல் செய்துவிட்டு, அஸ்த பர்வதத்தை {அஸ்த மலையை} அடைகிறான்.(50) வானரபுங்கவர்களே, அதுவரையே வானரர்கள் செல்வது சாத்தியம். பாஸ்கரனற்றவையும் {சூரியனற்றவையும்}, எல்லையற்றவையுமாக அதற்கப்பாலும் இருப்பனவற்றை {இருக்கும் நிலப்பரப்புகளை} நான் அறிந்தவனல்ல[9].(51)

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “தி ஏன்சியன்ட் ஜியோகிரஃபி ஆஃப் இந்தியா {The ancient geography of India} என்ற நூலில் கே.பாசு, “வால்மீகி இங்கே சில இடங்களை மட்டுமே குறிப்பிடுகிறார், அதிலும் மேற்கிலிருக்கும் மலைகளையும், கவித்துவமாக சூரியன் மறையும் நிலத்தையும் மட்டுமே குறிப்பிடுகிறார் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எகிப்து, அசிரியா, கிரேக்கம் ஆகியவை பெரும் பழமைவாய்ந்தவையாக இருந்தாலும், அந்தக்காலத்தில் {ராமாயண காலத்தில்} அவற்றைக் குறித்து இங்கே அறியப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. வால்மீகியின் காலத்தில் இதுபோன்ற தேசங்களே கூட இருந்திருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் இந்திய ஆரியர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்கிறார். அபாஸ்கரம் {சூரியனில்லாத}, அமர்யாதம் {எல்லையற்ற} என்ற இந்த சொற்களுக்கு, “ஞானமில்லாத, ஒழுக்கமில்லாத” என்றும் பொருள் கொள்ளலாம். எனவே, பாரசீகத்திற்கு மேற்கே இருந்த இந்த நாகரிங்கள் அனைத்தும், பாபிலோன், அசிரிய நாகரியங்களுக்கு முன்பிருந்தவை என்று கணிக்கலாம். “கல்விமானும், பண்பாடு தெரிந்தவனுமான ராவணனே கூட, இதற்கப்பாலுள்ள இழிந்த நாகரிகம் கொண்டவர்களுடன் தொடர்பில்லாதவன். இதற்கப்பால் நிச்சயம் அவன் சீதையைக் கொண்டு சென்றிருக்கமாட்டான். எனவே அங்கே நீங்கள் தேட வேண்டியதில்லை” என்று சுக்ரீவன் சொல்வதாகவும் இங்கே எடுத்துக் கொள்ளலாம்” என்றிருக்கிறது.

வைதேஹியையும், ராவணனின் நிலயத்தையும் அறிந்து கொண்டு, அஸ்த பர்வதத்தில் இருந்து மாசம் பூர்ணமாவதற்குள் {ஒரு மாதம் முடிவதற்குள்} திரும்பி வருவீராக.(52) மாசம் கடந்தும் வராமல் இருப்பவர்கள் என்னால் வதம் செய்யப்படத்தக்கவர்கள். சூரரான என் மாமனார் {சுஷேணர்} உங்களுடன் வருவார்.(53) திஷ்டகாரிகளான {ஆணையிடப்பட்டவற்றை நிறைவேற்றுபவர்களான} நீங்கள், மஹாபாஹுவும், மஹாபலம்வாய்ந்தவரும், என் மாமனாருமான குரு {மதிப்பிற்குரிய சுஷேணர்} சொல்லும் அனைத்தையும் கேட்பீராக.(54) விக்ராந்தர்களான நீங்கள் அனைவரும், “இதுவே பிரமாணம்” என்று, இவரது பிரமாணங்களை நிறைவேற்றி பஷ்சிம திசையில் {மேற்குத் திசையில்} தேடுவீராக.(55) அமிததேஜஸ்வியான நரேந்திரரின் பத்தினியை {அளவற்ற வலிமை கொண்ட மனிதர்களின் மன்னனான ராமரின் மனைவி சீதையைக்} கண்ட பிறகு, செய்ய வேண்டிய காரியங்களைச் செய்துவிட்டு, கிருதார்த்தர்களாவீராக {காரியம் நிறைவேறியவர்களாக ஆவீராக}.(56) இந்தக் காரியத்தில் வேறு எதையும்விட, எது பிரியத்திற்குரியதோ, தேசம், காலம், அர்த்தம் ஆகியவற்றுக்கு {இடத்திற்கும், நேரத்திற்கும், பொருளுக்கும் / நோக்கத்திற்கும்} எது சம்மதமானதோ அதைத் தீர்மானித்துக் காரியத்தை நிறைவேற்றுவீராக” {என்றான் சுக்ரீவன்}.(57)

பிறகு, சுஷேணனும், பிலவங்கம {தாவிச்செல்லும் குரங்குப்} பிரமுகர்களும், சுக்ரீவனின் வாக்கியங்களை நிபுணத்துவத்துடன் கேட்டவர்கள் அனைவரும், பிலவகாதிபனிடம் {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனிடம்} விடைபெற்றுக் கொண்டு வருணன் வசிக்கும் அந்தத் திசையை {மேற்குத் திசையை} நோக்கிச் சென்றனர்.(58)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 42ல் உள்ள சுலோகங்கள்: 58

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹிமவான் ஹேமை