Ashoka garden | Aranya-Kanda-Sarga-56 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நேரடியாகப் பேச விரும்பாத சீதை, இடையில் ஒரு புல்லை வைத்து விட்டு, ராமனின் வலிமையையும், ராவணன் அழிவையும் பேசுவது; சீதையை அசோக வனத்திற்கு அனுப்பிய ராவணன்...
இவ்வாறு {ராவணனால்} சொல்லப்பட்ட போது, சோகத்தில் சோர்ந்திருந்த அந்த வைதேஹி, பயமற்றவளாக, ஒரு புல்லை {துரும்பை} இடையில் வைத்து, ராவணனுக்கு மறுமொழி கூறினாள்:(1) "தசரதர் என்ற பெயரைக் கொண்ட ராஜா, அசைக்கப்பட முடியாத தர்ம சேதுவை {தர்மத்தின் மதிற்சுவர் / பாலத்தைப்} போன்ற சத்திய சந்தர் என நன்றாக அறியப்பட்டவர். அவருடைய புத்திரரே அந்த ராகவர் {ராமர்}.(2) மூவுலகங்களிலும் புகழ்பெற்றவரும், தீர்க்கபாஹுவும் {நீண்ட கைகளைக் கொண்டவரும்}, விசாலாக்ஷரும் {நீண்ட விழிகளைக் கொண்டவரும்}, ராமன் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த தர்மாத்மாவே தைவதம் போன்ற என் பதி {தெய்வம் போன்ற என் கணவர்} ஆவார்.(3) இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவரும், சிங்கத்தின் தோள்களையும், பெரும் பிரகாசத்தையும் கொண்டவரும், உடன் பிறந்தவரான லக்ஷ்மணருடன் கூடியவருமான அவரே, உன் பிராணனை அபகரிக்கப் போகிறார்.(4)
என்னை நீ அவரின் முன்னால் பலவந்தமாகத் தாக்கியிருதால், ஜனஸ்தானத்தில் கரனைப் போல நீ போரில் கொல்லப்பட்டுக் கிடந்திருப்பாய்.(5) கோர ரூபமும், மஹாபலமும் கொண்டவர்கள் என்று சொல்லப்படும் இந்த ராக்ஷசர்கள் உன்னுடன் இருந்தால், இவர்கள் அனைவரும் கருடனிடம் பன்னகங்களை {பாம்புகளைப்} போல விஷமற்றவர்களாகி இருப்பார்கள் {இவர்களால் ராமரை ஒன்றும் செய்திருக்க முடியாது}.(6) அவரது நாண்கயிற்றில் இருந்து நேரடியாக விடுக்கப்பட்டவையும், காஞ்சனத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான சரங்கள், அலைகள் கங்கைக் கரையை {அழிப்பதைப்} போல உன் சரீரத்தை முற்றாக அழித்தொழித்திருக்கும்.(7) இராவணா, நீ அஸுரர்களாலோ, ஸுரர்களாலோ வதம் செய்யப்படவில்லை என்றாலும், எவரிடம் மஹத்தான வைரத்தை உண்டாக்கிக் கொண்டாயோ அவரிடம் இருந்து நீ ஜீவனுடன் தப்பமாட்டாய்.(8) பலவானான அந்த ராகவர், உன் ஜீவிதம் மொத்தத்தையும் முடித்து வைப்பார். யூபத்திடம் சென்ற பசுவை {விலங்கைப்} போல உன் ஜீவிதம் நிலைப்பது சாத்தியமல்ல.(9) இராக்ஷசா, அந்த ராமர் கோபத்தில் எரியும் கண்களுடன் உன்னைப் பார்த்தால், ருத்திரன் மன்மதனை {பார்த்ததைப்} போல இப்போதே நீ முற்றாக எரிந்து போவாய்.(10)
எவர், வானத்தில் இருந்து சந்திரனை பூமியில் விழச்செய்வாரோ, அல்லது முற்றாக அழித்துவிடுவாரோ, சாகரத்தை வற்றிப் போகச் செய்வாரோ அவர் இங்கிருந்து சீதையை விடுவிப்பார்.(11) உன் ஆயுள் போய்விட்டது; ஸ்ரீ {செழிப்பு} போய்விட்டது; சத்வம் {துணிவுடன் கூடிய பெருந்தன்மை} போய்விட்டது; இந்திரியங்கள் {புலன்கள்} போய்விட்டன. உன் செயல்களால் லங்கை வைதவ்யம் அடைய {கைமைத் தன்மையை விதவைத்தன்மையை அடையப்} போகிறாள்.(12) எதனால் நீ என்னை வனத்தில் பதியின் அருகில் இருந்து பிரித்து இழுத்து வந்தாயோ, அந்த பாப கர்மம் உன் சுகத்திற்கான ஆதாரமாகாது.(13) பேரொளிமிக்க என் பர்த்தாவானவர் {ராமர்}, தன் வீரியத்தைச் சார்ந்தும், என் மைத்துனருடன் {லக்ஷ்மணருடன்} சேர்ந்தும் சூனியமான தண்டகத்தில் பயமின்றி வசித்து வந்தார்.(14) அவர், போரில் சரவர்ஷத்தால் {கணைமாரியால்} உன் காத்திரங்களில் {உடலுறுப்புகளில்} இருந்து செருக்கையும், பலத்தையும், வீரியத்தையும், அதேவிதத்தில் அகங்காரத்தையும் அப்புறம் அகற்றுவார்.(15)
பூதங்கள் {உயிரினங்கள்}, காலனால் விதிக்கப்பட்டு நாசத்தை அடைவது எவ்வாறு காணப்படுகிறதோ அவ்வாறே கால வசத்தை அடைந்த நரர்களே தங்கள் காரியங்களில் தவறுசெய்கிறார்கள்.(16) இராக்ஷசாதமா {ராக்ஷசர்களில் இழிந்தவனே}, என்னைத் தாக்கியதால், உனக்கும், ராக்ஷசர்களுக்கும், அந்தப்புரத்தாருக்கும் அழிவுக்கான அந்த காலம் இதோ வாய்த்திருக்கிறது.(17) யஜ்ஞ மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டு, ஆகுதி பாண்டங்களால் {வேள்விப் பாத்திரங்களால்} சூழப்பட்டு, துவிஜாதியினரின் மந்திரங்களால் புனிதமடைந்த வேதியை நசுக்கி அழிப்பது சண்டாளனுக்கு சாத்தியமல்ல.(18) அதேபோலவே, இராக்ஷசாதமா {ராக்ஷசர்களில் இழிந்தவனே}, நான் நித்திய தர்மரின் {ராமரின்} தர்மபத்தினியாவேன். திட விரதத்துடன் கூடிய என்னை பாபியான உன்னால் தீண்ட முடியாது.(19) பத்மக்குளங்களில் நித்தியம் ராஜ ஹம்சங்கள் விளையாடும். அந்த ஹம்சி {பெண் அன்னம்}, புற்கள் நிறைந்த சேற்றிலுள்ள மத்குகத்தை {நீர்க்காக்கையை} எப்படிப் பார்க்கும்?(20) இராக்ஷசா, உணர்வுகளற்ற இந்த சரீரத்தைக் கட்டிப்போடுவாயாக, அல்லது அழித்துக் கொள்வாயாக. எனக்கு இந்த சரீரமோ, ஜீவிதமோ ரக்ஷிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் நான், பிருத்வியில் பழியைப் பொறுத்துக் கொள்ளமாட்டேன்" {என்றாள் சீதை}.(21,22அ)
வைதேஹியான மைதிலி, குரோதத்துடன் ராவணனிடம் இவ்வாறான கடுஞ்சொற்களைப் பேசிவிட்டு, மீண்டும் ஏதும் சொல்லாதிருந்தாள்.(22ஆ,23அ) ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்தும் {மயிர்ச்சிலிர்ப்பை} சீதையின் கடுஞ்சொற்களைக் கேட்ட பிறகு, சீதையிடம் பயத்தை உண்டாக்கும் சொற்களில் {ராவணன் பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(23ஆ,24அ) "மைதிலி, பாமினி {அழகிய பெண்ணே}, என் வாக்கியங்களைக் கேட்பாயாக. சாருஹாசினி {அழகிய புன்னகையைக் கொண்டவளே}, துவாதச {பனிரெண்டு} மாத காலத்திற்குள் என்னை நீ அணுகவில்லை என்றால், பிறகு சமையற்காரர்கள் உன்னை காலை உணவுக்காக துண்டுகளாக வெட்டுவார்கள்" {என்றான் ராவணன்}.(24ஆ,25)
சத்ருக்களை ராவணம் செய்ய வைப்பவனான {ஓலமிடச் செய்பவனான} ராவணன், குரோதத்துடன் இத்தகைய கடும் வாக்கியங்களைச் சொன்ன பிறகு, ராக்ஷசிகளிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(26) "அருவருப்பூட்டும் கோரத் தோற்றம் கொண்டவர்களே, மாமிசமும், குருதியும் உணவாகக் கொண்டவர்களே, ராக்ஷசிகளே, சீக்கிரமே இவளது செருக்கை அகற்றுவீராக" {என்றான்}.(27) கோரமான அந்த ராக்ஷசீ கணங்கள், அவன் இவ்வாறு சொன்னதும், கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு மைதிலியைச் சூழ்ந்து கொண்டனர்.(28) இராஜாவான அந்த ராவணன், மேதினியைப் பிளப்பது போல தன் கால்களை உதைத்து கலங்கச் செய்து, அந்த கோர தரிசனங்கொண்டவர்களிடம் {பின்வருமாறு} தெளிவாகச் சொன்னான்:(29) "மைதிலியை அசோக வனத்தின் மத்தியில் அழைத்துச் செல்வீராக. அங்கே இவளை நீங்கள் இவ்வாறே சூழ்ந்து கொண்டு கூடமாக ரக்ஷிப்பீராக {கமுக்கமாக / ரகசியமாக / யாரும் அறியாமல் காப்பீராக}.(30) அங்கே அனைவரும் கோரமாக விரல்களைச் சுட்டியும் {அச்சுறுத்தியும்}, மீண்டும் சாந்தமாகவும் {ஆறுதலாகப் பேசியும்} வனத்தில் கஜவதுவை {பெண்யானையைப்} போல மைதிலியை வசப்படுத்துவீராக" {என்றான் ராவணன்}.(31)
இராவணன் இவ்வாறு தெளிவாக ஆணையிட்டதும், அந்த ராக்ஷசிகள் மைதிலியை அழைத்துக் கொண்டு, விரும்பத்தக்க அனைத்துப் பழங்களும், நானாவித புஷ்பங்களும், பழங்களும் நிறைந்த விருக்ஷங்களால் சூழப்பட்டதும், சர்வ காலத்திலும் மதங்கொண்ட துவிஜங்களால் {பறவைகளால்} சேவிக்கப்பட்டதுமான அசோக வனத்திற்குச் சென்றனர்.(32,33) சோகத்தில் மூழ்கிய அங்கங்களைக் கொண்டவளும், ஜனகாத்மஜையுமான அந்த மைதிலி, ஹரிணீ வியாகரீகளிடம் {பெண்மான் பெண்புலிகளிடம் சிக்கிக் கொண்டதைப்} போல, ராக்ஷசிகளின் வசத்தை அடைந்தாள்.(34) மஹத்தான சோகத்தால் எரிக்கப்பட்டவளும், பயந்தவளும், ஜனகாத்மஜையுமான மைதிலி, பாசத்தால் {கயிற்றால்} கட்டப்பட்ட மிருகியை {பெண் மானைப்} போல அமைதியை {நிம்மதியை} அடைந்தாளில்லை.(35) விரூப நேத்திரங்களை {வடிவமற்ற கண்களைக்} கொண்டவர்களால் அதிகம் மிரட்டப்பட்ட மைதிலி, பயசோகத்தால் பீடிக்கப்பட்டவளாக அங்கே அமைதியை அடையாமல், மைத்துனனுடன் {லக்ஷ்மணனுடன்} இருக்கும் தன் அன்புக்குரிய பதியை {கணவனை} நினைத்து நினைவிழந்தவளானாள்.(36)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 56ல் உள்ள சுலோகங்கள்: 36
Previous | | Sanskrit | | English | | Next |