Kushanabha's daughters | Bala-Kanda-Sarga-32 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: குசனின் நான்கு மகன்கள்; அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நகரங்கள்; வாயுவை மறுத்த குசநாபனின் மகள்கள்...
{விசுவாமித்ரர் சொல்லத் தொடங்கினார்}, "பிரம்மயோனியும் {பிரம்மனின் மனத்தில் தோன்றிய மகனும்}, மஹாதபஸ்வியும், தடைபடாத விரதங்களைக் கொண்டவனும், தர்மம் அறிந்தவனும், தர்மம் அறிந்தவர்களுக்குப் பிரதிபூஜை செய்பவனும், குசன் என்ற பெயர் கொண்டவனுமான மஹான் ஒருவன் இருந்தான்.(1) அந்த மஹாத்மா {குசன்}, உன்னதப் பிறவியைக் கொண்டவளும், தகுந்தவளுமான {தகுந்த மனைவியுமான} வைதர்ப்பியிடம் {விதர்ப்ப இளவரசியிடம்}, மஹாபலம் பொருந்தியவர்களும், தன்னையே போன்றவர்களுமான குசாம்பன், குசநாபன், ஆதூர்த்தரஜஸ், வஸு என்ற நான்கு சுதன்களை {மகன்களை} பெற்றான்.(2,3அ) அந்தக் குசன், யுக்திமிகுந்தவர்களும், மஹா உற்சாகம் கொண்டவர்களும், தர்மிஷ்டர்களும் {அறத்தைப் பின்பற்றுபவர்களும்}, சத்தியவாதிகளுமான தன் புத்திரர்கள் க்ஷத்திரிய தர்மங்களை நிலைநிறுத்த வேண்டுமென விரும்பி, அவர்களிடம், "புத்திரர்களே, பாலனஞ்செய்வீராக {ஆட்சியை நிறுவுவீராக}. {அவ்வாறு செய்து} தர்மத்தை அதிகம் ஈட்டுவீராக" என்றான்.(3ஆ,4)
குசனின் வசனத்தைக் கேட்டவர்களும், லோகஸத்தமர்களும் {உலகில் வல்லவர்களும்}, நிருவரர்களுமான {மனிதர்களில் சிறந்தவர்களுமான} அந்த நால்வரில் அனைவரும் நகரங்களைக் கட்டத் தொடங்கினர்.(5) மஹாதேஜஸ்வியான குசாம்பன், கௌசாம்பிபுரியை அமைத்தான். தர்மாத்மாவான குசநாபன், மஹோதயபுரத்தை அமைத்தான்.(6) இராமா, மஹாமதியாளனான ஆதூர்த்தரஜஸ், தர்மாரண்யபுரம் என்ற சிறந்த நகரத்தையும், ராஜா வஸு, கிரிவ்ரஜத்தையும்[1] அமைத்தனர்.(7) சுற்றிலும் இந்த ஐந்து சிறந்த மலைகளுடன் பிரகாசிப்பதும், வசுமதி என்ற பெயரைக் கொண்டதுமான இவ்விடம் மஹாத்மா வஸுவினுடையதாகும்.(8) இரம்யமானதும், நன்கறியப்பட்டதும், மாகதத்திற்குள் {மகதநாட்டிற்குள்} வந்து செல்வதுமான இந்த மாகதீ நதி {சோணை ஆறு}[2] முக்கியமான இந்த ஐந்து மலைகளுக்கிடையே பாய்ந்து மாலையைப் போல ஒளிர்கிறது.(9) இராமா, மஹாத்மாவான வஸுவினுடையதும், கிழக்கு நோக்கிப் பாய்வதுமான இந்த மாகதீ {சோணை ஆறு} பயிர்களை மாலையாகக் கொண்ட சிறந்த கழனிகளைக் கொண்டதாகும்.(10)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கௌசாம்பி தற்போதைய {உத்திரப்ரதேசத்திலுள்ள} கன்னோஜ் நகரமென்றும், கிரிவ்ரஜம் தற்போதைய {பீகாரிலுள்ள} ராஜகிரகம் என்றும் நம்பப்படுகிறது" என்றிருக்கிறது. அடுத்த சர்க்கத்தின் அடிக்குறிப்பில் குசநாபனின் மஹோதயபுரமே கன்னோஜ் என்று கிரிஃபித் சொல்வதாக தேசிராஜு ஹனுமந்தராவ் குறிப்பிடுகிறார்.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆறு தற்காலத்தைய சோன் ஆறு என்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. இது கங்கையாற்றின் தென் துணையாறுகளில் மிகப் பெரியதாகும். மத்தியப்ரதேசத்தில் உற்பத்தியாகி உத்திரப்ரதேசம், ஜார்க்கண்ட், பீகார் வழியாகப் பாட்னா நகரத்தின் அருகில் கங்கையில் கலக்கிறது. தற்காலத்தில் ஒரு மனிதனால் ஒரு நாளில் 50 கி.மீ. தொலைவைக் கடக்க முடியும். எனில் சித்தாசிரமம் இந்த ஆற்றில் இருந்து 50 கி.மீ. சுற்றுவட்டத்தில் எங்காவது அமைந்திருக்க வேண்டும்.
இரகுநந்தனா, தர்மாத்மாவும், ராஜரிஷியுமான குசநாபன் கிருதாசியின் மூலம் ஒப்பற்றவர்களாகத் திகழும் நூறு கன்னிகைகளைப் பெற்றான்.(11) இராகவா, யௌவனசாலினிகளும் {இளைமையுடையவர்களும்}, ரூபவதிகளுமான {அழகி வடிவங்கொண்டவர்களுமான} அவர்கள், தங்களைச் சிறந்த ஆரணங்களால் நன்கலங்கரித்துக் கொண்டு மழைக்காலத்தில் நூறு கீற்றுகளுடன் கூடிய மின்னலைப் போல உத்யானபூமிக்கு {பூங்கா / தோட்டத்திற்கு} வந்து, பாடியும், ஆடியும், வாத்தியங்களை இசைத்தும் இன்பத்தில் மூழ்கினர்.(12,13) அங்கங்கள் அனைத்திலும் அழகுடன் மிளிர்பவர்களும், புவியில் ஒப்பற்ற ரூபங்கொண்டவர்களுமான அவர்கள், உத்யானபூமிக்கு வந்து மேகங்களின் மத்தியிலுள்ள தாரைகளை {நட்சத்திரங்களைப்} போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(14) சர்வாத்மகனான {எங்கும் பரவுபவனான} வாயு, சர்வ குணங்களிலும் சிறந்தவர்களும், யௌவன ரூப அழகுடையவர்களுமான அவர்களைக் கண்டு இந்த வசனத்தைச் சொன்னான்:(15) "நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன். நீங்கள் என் பாரியைகளாவீராக. {அதனால் நீங்கள்} மனுஷத் தன்மையைக் கைவிட்டு, {தேவர்களைப் போன்ற} தீர்க்காயுளை அடைவீர்கள்.(16) நித்ய யௌவனம் மானிடர்க்கு வாய்க்ககாது. {எனவே, என்னை மணந்து} அழிவற்ற யௌவனத்தைப் பெற்று அமரர்களைப் போல விளங்குவீராக" {என்றான் வாயு தேவன்}.(17)
தடையற்ற செயல்களைச் செய்யும் வாயுவின் இந்த வசனத்தைக் கேட்டுச் சிரித்த அந்த நூறு கன்னிகைகளும், இந்த வாக்கியத்தைச் சொன்னார்கள்:(18) "ஸுரஸத்தமா {தேவர்களில் சிறந்தவா}, சர்வபூதங்களின் {அனைத்து உயிரினங்களின்} உள்ளே நகரும் உன் பிரபாவத்தை {வலிமையை} நாங்கள் அனைவரும் அறிவோம். எங்களை ஏன் நீ அவமதிக்கிறாய்?(19) ஸுரஸத்தமா, குசநாபரின் மகள்களான நாங்கள் அனைவரும் தேவஸ்தானத்தில் இருந்து உன்னை விலக்க வல்லவர்களாவோம். தேவா, இருப்பினும் நாங்கள் {எங்கள்} தவத்தைக் காத்துக் கொள்கிறோம்.(20) துர்மேதையே, ஸ்வதர்மத்துடன் கூடிய எங்களுக்கு, சத்தியவாதியான எங்கள் பிதாவை அவமதித்து ஸ்வயம்வரத்தில் {கணவரைத்} தேர்ந்தெடுக்கும் காலம் நேராது[3].(21) எங்களுக்குப் பிதாவே பிரபு. அவரே எங்கள் பரம தைவதை {பரமதெய்வம்}. எங்கள் பிதா எவருக்குக் கொடுக்கிறாரோ அவரே எங்கள் பர்த்தா {கணவர்} ஆவார்" {என்றர்}.(22)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இதை எங்கள் தகப்பனாராகிய குசநாபர் அறிவாராயின், உனக்கு அவர் மிருத்யுவாகக் கூடுமே. அவர் அப்படியாகாதிருக்க வேண்டும். ஆகையால் ஸத்யத்தையே பேசுந்தன்மையுள்ள அம்மஹானுபவரை அவமதிக்க வேண்டாம். உலகத்தில் பெண்களைத் தகப்பன் உத்தேசித்துக் கொடுப்பதன்றோ தர்மம். அப்படியே தகப்பனாகிய குசநாபர் எங்களை எவனுக்குக் கொடுப்பாரோ, அப்படிப்பட்ட வரனையே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றம். (ஸத்யவாதியாகிய தகப்பனை அவமதித்து எங்களிஷ்டப்படி பர்த்தாவைத் தேடிக் கைக்கொள்ளுங்காலம் உண்டாக வேண்டாம்)" என்றிருக்கிறது.
அவர்களின் வசனத்தைக் கேட்டவனும், பகவானும், பிரபுவுமான அந்த ஹரி {வாயு}, பரமகோபத்துடன் {அவர்களின்} உடலெங்கும் பிரவேசித்து {அவர்களின் உறுப்புகளை முறித்து} முடக்கினான் {கூனிகளாக்கினான்}.(23) வாயுவால் சிதைக்கப்பட்ட அந்தக் கன்னிகைகள் நிருபதியின் கிருஹத்தில் {மன்னனின் இல்லத்தில்} கலக்கத்துடனும், லஜ்ஜையுடனும் {வெட்கத்துடனும்}, கண்ணீருடனும் பிரவேசித்தனர்.(24) அந்த ராஜா, தன் அன்புக்குரியவர்களும், தீனர்களும், பேரழகிகளுமான அந்தக் கன்னிகைகள் முடமானதைக் கண்டு பெருங்குழப்பமடைந்து இதைச் சொன்னான்:(25) "புத்ரிகளே, இஃது என்ன? தர்மத்தை அவமதித்தவன் எவன்? இதைச் சொல்வீராக. உங்கள் அனைவரையும் குப்ஜைகளாக்கியவன் {கூனிகளாக்கியவன்} எவன்? சைகைகள் செய்கிறீர்களேயன்றி பேசாதிருக்கிறீர்கள்" என்று சொன்ன ராஜன் {குசநாபன்} பெருமூச்சுவிட்டபடியே அவர்களின் மறுமொழியை எதிர்பார்த்து அமைதியடைந்தான்.(26)
பாலகாண்டம் சர்க்கம் – 32ல் உள்ள சுலோகங்கள் : 26
Previous | | Sanskrit | | English | | Next |