Brahmadatta | Bala-Kanda-Sarga-33 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: குசநாபன் தன் மகள்களைப் பிரம்மதத்தனுக்கு மணமுடித்துக் கொடுத்தது; பிரம்மதத்தனின் தீண்டலில் மீண்டும் சுய வடிவை அடைந்த கன்னிகைகள்...
{விசுவாமித்ரர் தொடர்ந்தார்}, "மதிநிறைந்தவனான குசநாபனின் அந்த வசனத்தைக் கேட்ட அந்த நூறு கன்னிகைகளும், {தங்கள் தந்தையின்} பாதத்தைத் தங்கள் நெற்றியால் தீண்டி {வணங்கி, பின்வருமாறு} பேசினார்கள்:(1) "ராஜாவே, சர்வாத்மகனான {அனைவரிலும் இருப்பவனான} வாயு, எங்களை அவமதிக்க விரும்பி அசுப மார்க்கத்தைப் பின்பற்றி தர்மத்தை மீறினான்.(2) "நாங்கள் பிதாவைச் சார்ந்தவர்கள். நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. நாங்கள் சுதந்திரமானவர்களல்ல. பிதா எங்களை உனக்குக் கொடுப்பாரோ, மாட்டாரோ. நீ அவரிடம் வேண்டுவாயாக"(3) என்று நாங்கள் அனைவரும் {அவனிடம்} சொன்னோம். பாவத்தில் பந்தப்பட்டவனும் {கட்டுண்டவனும்}, {எங்கள்} வசனத்தைப் புரிந்து {ஏற்றுக்} கொள்ளாதவனுமான அந்த வாயுவால் அதிகத் துன்பத்திற்கு உள்ளானோம்"[1] என்றனர் {குசநாபகன்னிகள்}.(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாயுவால் அந்த சத கன்னிகளும் கூனிகளாக்கப்பட்டதால் அந்த நகரம் கன்யாகுப்ஜம் {கூன்விழுந்த கன்னிகள்} என்ற பெயரில் புகழ்பெற்றது. அதுவே இன்றைய கன்னோஜ் நகரம் என்று கிரிஃபித் சொல்கிறார்" என்றிருக்கிறது. 1:32:6ல் குசநாபன் மஹோதயபுரத்தை அமைத்தான் என்றிருக்கிறது. அங்கே உள்ள 1ம் அடிக்குறிப்பில் தேசிராஜு ஹனுமந்தராவ் குசாம்பன் அமைத்த கௌசாம்பி நகரை கன்னோஜ் என்று குறிப்பிடுகிறார். இங்கே குசநாபன் அமைத்த மஹோதயபுரத்தை கன்யாகுப்ஜம் என்றும், இன்றைய கன்னோஜ் என்றும் கிரிஃபித் சொல்வதாகச் சொல்கிறார். ஆனால், இன்றும் உத்திரப்ரதேசத்தில் கௌசாம்பி என்ற பெயரிலும், கன்னோஜ் என்ற பெயரிலும் தனித்தனி மாவட்டங்கள் இருக்கின்றன. கன்னியாகுப்ஜம்தான் கன்னோஜ் என்று விக்கிபீடியா சொல்கிறது. கௌசாம்பி லக்னௌக்குத் தெற்கிலும், பிரயாக்ராஜ் {அலாஹாபாத்துக்கு} மேற்கிலும் இருக்கிறது. கன்னோஜ் லக்னௌக்கு மேற்கில் இருக்கிறது.
பரமதார்மீகனும், மஹாதேஜ்வியுமான ராஜா {குசநாபன்}, அவர்களுடைய அந்த வசனத்தைக் கேட்டு உத்தமமான அந்த நூறு கன்னிகைகளிடம் இதைச் சொன்னான்:(5) "புத்திரீகளே, பொறுமைசாலிகளின் கடமை பொறுமையே {மன்னிப்பதே} ஆகும். அதுவே மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது. நம் குலத்தை உணர்ந்து நீங்கள் ஐக்கியத்துடன் {ஒற்றுமையுடன்} இருந்திருக்கிறீர்கள்.(6) நாரீகளுக்கும் {பெண்களுக்கும்}, புருஷர்களுக்கும் {ஆண்களுக்கும்} பொறுமையே அலங்காரம். இங்கே இருக்கும் பொறுமையைப் பயில்வது எவருக்கும், குறிப்பாக திரிதசர்களுக்கும் {தேவர்களுக்கும்} அரிதானதாகும். நீங்கள் அனைவரும் வேறுபாடின்றி அவ்வகைப் பொறுமையைப் பின்பற்றியிருக்கிறீர்கள்[2].(7,8அ) புத்திரீகளே, பொறுமையே தானம், பொறுமையே சத்தியம், பொறுமையே யஜ்ஞம், பொறுமையே புகழ், பொறுமையே தர்மம், இந்தப் பொறுமையாலேயே இந்த ஜகம் நிலைத்திருக்கிறது" {என்றான் குசநாபன்}.(8ஆ,9அ)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அப்சரஸ் கிருதாசியின் பிள்ளைகள் என்பதால் தேவர்களைப் போன்ற குணங்களையும், இயல்புகளையும், தோற்றத்தையும் நீங்கள் கொண்டிருந்தாலும், மனிதர்களுக்கேயுரிய உடல்சார்ந்த இன்பங்களுக்குப் பணிந்துவிடாமல் வாயு தேவனை மன்னித்திருக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
காகுத்ஸ்தா {ராமா}, திரிசர்களின் {தேவர்களின்} துணிவையும், மந்திரஞானத்தையும் {சிந்திக்கும் திறனையும்} கொண்ட அந்த ராஜா {குசநாபன்}, கன்னிகைகளை விட்டு அகன்று, அவர்களை {திருமணம் செய்து} கொடுப்பது குறித்தும், அதற்கான தேசம், காலம், பொருத்தம் {திருமணத்திற்கான இடம், நேரம், பொருத்தமான மணமகன்}, செய்ய வேண்டிய முன்மொழிவுகள் ஆகியவற்றையும் மந்திரிகளுடன் ஆலோசித்தான்.(9ஆ,10)
அந்தக் காலத்தில் தான் பெரும்பிரகாசம் கொண்டவரும், ஊர்த்தவரேதஸும் {உயிர்நீரை மேல்நோக்கி எழச் செய்தவரும்}, நன்னடத்தைக் கொண்டவரும் சூளி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு ரிஷி, வேதங்களில் சொன்னபடி தவம் செய்வதில் வெற்றி அடைந்தார்[3].(11) அந்த ரிஷி தவம் செய்து கொண்டிருந்த இடத்தில் ஊர்மிளையின் மகளும், ஸோமதை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு கந்தர்வீ அவருக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தாள்.(12) அவள் அவரிடம் பணிவுடன் நடந்து கொண்டு தர்மிஷ்டையாக சுஷ்ரூஷையில் {தொண்டில்} தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வசித்திருந்தாள். பத்ரமாக இருப்பாயாக {மங்கலம் உண்டாகட்டும்}. சிறிது காலத்தில் அந்தக் குரு {சூளி} அவளிடம் {அவளது தொண்டில்} நிறைவடைந்தார்.(13) ரகுநந்தனா, அவர் காலயோகத்தில் {ஒரு சந்தர்ப்பத்தில்} அவளிடம் நல்ல முறையில், "நான் முற்றிலும் நிறைவடைந்தேன். பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. நீ விரும்பும் எந்தக் காரியத்தை நான் செய்ய வேண்டும்?" {என்று கேட்டார்}.(14)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹட யோகம் என்றழைக்கப்படும் தூய யோக முறையைப் பயிலும் யோகிகள், தங்கள் உயிர் நீரை வெளியேற்றாமல் இருக்கும் நிலையை ஊர்த்தவரேதஸ் என்று சொல்வார்கள். அவர்கள் உடலின் ஆறு நாளங்களின் வழியாக அந்த உயிர்நீரைத் தங்கள் தலைக்குக் கொண்டு செல்வார்கள். இவ்வகைப் பயிற்சி அவர்களின் மனத்தையும், உடலையும் பளபளக்கச் செய்து வளப்படுத்தி அவர்களைச் சுற்றிலும் ஒரு தெய்வீக ஒளிவட்டத்தை ஏற்படுத்தும்" என்றிருக்கிறது.
முனிவர் நிறைவடைந்ததை உணர்ந்தவளும், வாக்கியம் அமைப்பதை அறிந்தவளுமான கந்தர்வீ {ஸோமதை}, பரமபிரீதியுடன் {பெரும் மகிழ்ச்சியுடன்}, மதுரஸ்வரத்தில் {இனிய குரலில்} வாக்கியத்தை அமைத்துப் பேசினாள்:(15) "மஹாதவசியே, நீர் பிரம்மபூதராகும் போது {பிரம்மத்துடன் ஒன்றாகும்போது}, பிரம்ம ஒளி உம்மில் எழுகிறது. பிரம்ம தவத்துடன் கூடியவனும், தார்மீகனுமான ஒரு புத்திரனை நான் விரும்புகிறேன்.(16) நான் பதியற்றவளாக இருக்கிறேன். பத்ரமாக {மங்கலமாக} இருப்பீராக. நான் எவருடைய பாரியையும் {மனைவியும்} அல்லள் {திருமணமாகாதவள்}. உம்மை அண்டியிருக்கும் எனக்கு உமது பிரம்ம சக்தியின் மூலம் ஒரு சுதனை {மகனைக்} கொடுப்பதே உமக்குத் தகும்" {என்றாள் சோமதை}.(17)
அவளிடம் அன்பு கொண்ட அந்த பிரம்மரிஷி சூளி, பிரம்மனைப் போன்றவனும், பிரம்மதத்தன் என்று புகழ்பெற்றவனும், உத்தமனுமான ஒரு மானஸ சுதனை அவளுக்குக் கொடுத்தார்.(18) பிரம்மதத்தனான அந்த ராஜா, தேவலோகத்தில் தேவராஜனைப் போலக் காம்பில்யாபுரியில் இருந்து மகத்தான ஆட்சி செய்துவந்தான்.(19)
காகுத்ஸ்தா {காகுத்ஸ்த குலத்தைச் சேர்ந்த ராமா}, தார்மீக ராஜாவான குசநாபன், அந்தச் சதகன்னியரையும் பிரம்மதத்தனுக்கு தத்தம் செய்ய புத்தியில் தீர்மானித்தான்.(20) மஹாதேஜஸ்வியும், மஹீபதியுமான அந்த ராஜா {குசநாபன்}, அந்தப் பிரம்மதத்தனை அழைத்து, அந்தராத்மாவில் பெரிதும் மகிழ்ந்து நூறு கன்னியரையும் {அவனுக்குத் திருமணம் செய்து} கொடுத்தான்.(21) ரகுநந்தனா, தேவபதியைப் போன்ற மஹீபாலன் பிரம்மதத்தன் அடுத்தடுத்து ஒவ்வொருவராக அவர்களின் உள்ளங்கைகளைப் பற்றினான்.(22) அப்போது அவனது உள்ளங்கை ஸ்பரிசத்தின் விளைவாக அந்த நூறு கன்னிகைகளின் கூன் நிமிர்ந்ததுடன் ஒளிமிக்கவர்களாகவும் பிரகாசித்தனர்.(23) மஹீபதியான குசநாபன், {தன் மகள்கள்} வாயுவில் இருந்து விடுபட்டதைக் கண்டு பரமபிரீதியடைந்து மீண்டும் மீண்டும் அவர்களைப் பார்த்து இன்புற்றான்.(24) அந்த மஹீபதி {குசநாபன்}, திருமணம் முடிந்ததும் மன்னன் பிரம்மதத்தனையும், அவனது தாரங்களையும் {மனைவிகளையும்}, உபாத்யாயகணங்களையும் {ஆசிரியர் கூட்டத்தினரையும் காம்பில்யத்திற்கு} அனுப்பிவைத்தான்.(25) கந்தர்வி ஸோமதை, தன் மகனைக் கண்டு, அந்தக் கன்னிகையரை மீண்டும் மீண்டும் தடவிக் கொடுத்து, குசநாபனைப் புகழ்ந்து, புத்திரனின் நற்செயலையும் புகழ்ந்து, அவர்களிடம் {மருமகள்களிடம்} மகிழ்ச்சியடைந்தாள் {அவர்களை ஆசீர்வதித்தாள்" என்றார் விசுவாமித்ரர்}.(26)
பாலகாண்டம் சர்க்கம் – 33ல் உள்ள சுலோகங்கள் : 26
Previous | | Sanskrit | | English | | Next |