Wednesday 25 August 2021

மிதிலை புறப்பாடு | பால காண்டம் சர்க்கம் - 31 (24)

Proceeding to Mithila | Bala-Kanda-Sarga-31 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மிதிலைக்குப் புறப்பட்ட முனிவர்கள்; செவ்வந்தி வேளையில் சோணையாற்றங் கரையில் தங்கியது ...


நோக்கம் நிறைவேறி மகிழ்ச்சியடைந்தவர்களும், வீரர்களுமான ராமனும், லக்ஷ்மணனும் அவ்விரவில் அந்தராத்மாவில் இன்புற்றவர்களாக அங்கே வசித்தனர்.(1) அவ்விரவு பகலாகி விடியலில் காலைக் கிரியைகளைச் செய்த அவ்விருவரும் ரிஷிகளுடன் இருந்த விஷ்வாமித்ரரை நோக்கிச் சென்றனர்.(2) மதுரபாஷையுடன் {இன்மொழியுடன்} கூடிய அவர்கள், பாவகனை {அக்னியைப்} போல ஜொலித்துக் கொண்டிருந்த அந்த முனிசிரேஷ்டரை {முனிவர்களில் சிறந்த விசுவாமித்ரரை} வணங்கி, மதிப்புமிக்க இந்த உயர்ந்த வாக்கியத்தைப் பேசினார்கள்:(3) "ஓ! முனிஷார்தூலரே {முனிவர்களில் புலியே}, கிங்கரர்களான {பணியாட்களான} நாங்கள் இதோ வந்திருக்கிறோம். முனிசிரேஷ்டரே {முனிவர்களில் சிறந்தவரே}, நாங்கள் நிறைவேற்ற வேண்டிய உமது ஆணைகள் என்னென்ன?" {என்று ராமனும், லக்ஷ்மணனும் விஷ்வாமித்ரரிடம் கேட்டனர்}.(4)

அவர்களால் இந்த வாக்கியம் சொல்லப்பட்டபோது, மஹாரிஷிகள் அனைவரும், விஷ்வாமித்ரரைத் தங்கள் முன்னிட்டுக் கொண்டு, ராமனிடம் இந்த வசனத்தைச் சொன்னார்கள்:(5) "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே} மிதிலையில் பரம தர்மிஷ்டனான ஜனகனின் யஜ்ஞம் {அறம் செழிக்கும் ஜனகனின் வேள்வி} ஒன்று நடைபெற இருக்கிறது. நாங்கள் அனைவரும் அங்கே செல்கிறோம்.(6) நரஷார்தூலா {மனிதர்களில் புலியே}, நீயும் எங்களுடன் வரலாம். அங்கே அற்புதமான தனுரத்தினமொன்று {ரத்தினம் போன்ற வில்லொன்று} இருக்கிறது. அதை நீ காண வேண்டும்.(7) நரசிரேஷ்டா, போரில் கற்பனைக்கெட்டாத பலங்கொண்டதும், கோரமானதும், பரம பிரகாசம் கொண்டதுமான அந்த வில், பூர்வத்தில் ஒரு ஸதஸ்ஸில் {வேள்வியில்}[1] தைவதைகளால் {தேவர்களால்}[2] கொடுக்கப்பட்டதாகும்.(8) அதை உயர்த்தி நாண்பொருத்த தேவர்களும், கந்தர்வர்களும், அசுரர்களும், ராக்ஷசர்களும் சக்தர்களல்ல என்றால் மனுஷர்கள் எம்மாத்திரம்?(9) அந்த தனுசின் {வில்லின்} வீரியத்தை விசாரித்து ஆர்வங்காட்டிய ராஜபுத்திரர்கள், மஹாபலவான்கள், மஹீக்ஷிதர்கள் {மன்னர்கள்} ஆகியோரால் அதற்கு நாண்பொருத்த முடியவில்லை.(10) நரஷார்தூலா, காகுத்ஸ்தா {காகுத்ஸ்தனின் வழித்தோன்றலே ராமா}, மிதிலையின் மஹாத்மாவுடைய அந்த தனுசையும் {ஜனகனின் வில்லையும்}, பரம அற்புதமான அந்த யஜ்ஞத்தையும் அங்கே {வந்தால்} நீ காணலாம்.(11) நரஷார்தூலா, நல்ல நாபத்தைக் கொண்ட {மத்தியப் பகுதியான நல்ல கைப்பிடியைக் கொண்ட} அந்த உத்தம தனுசானது {வில்லானது} மைதிலேயனால் {மிதிலையின் மன்னனான தேவராதனால்} தைவதைகள் அனைவரிடமும் யஜ்ஞப் பழமாக {வேள்வியின் பலனாக} வேண்டப்பட்டது[3].(12) இராகவா, வேள்விக்கொடையாகப் பெறப்பட்டு, அந்த நிருபதியின் {மன்னனான ஜனகனின்} வீட்டில் {தனுர் உத்ஸவத்தில் [ஆயுத பூஜையில்], சந்தனம் முதலிய} விதவிதமான நறுமணப் பொருட்களுடனும், அகிற்புகையின் தூமகந்தத்துடனும் அது வழிபடப்படுகிறது" {என்றனர்}.(13)

[1] நரசிம்மாசாரியார் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்பு சிவன் இந்த வில்லைக் கொண்டு தக்ஷப்ரஜாபதியின் யாகத்தை அழித்தனன். தேவர்கள் சிவனை மனந்தெளியச் செய்து அந்த வில்லைப் பெற்றனர். தேவராதனென்னும் பெயர் கொண்டு முன்புள்ள ஒரு ஜநகமஹாராஜன் யஜ்ஞத்தினால் தேவர்களைக் களிக்கச் செய்து அத்தேவர்களிடமிருந்து அவ்வில்லைப் பெற்றனன். ஆகையால் சிவபிரானுடைய அவ்வில்லானது வம்சக்ரமமாக ஜநகமஹாராஜனிடத்தில் இருக்கின்றதென்று கருத்து" என்றிருக்கிறது.

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு ஸகல தேவர்களும் கூடி வந்து சிவபெருமான்தானே கொடுத்ததாக மஹேச்வரதீர்த்தவ்யாக்யநம்" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ப்ரீத꞉ ச பகவானீசஸ் த்ரிஸூலீ நீல லோஹித꞉ ப்ரததௌ சத்ரு நாசார்தம் ஜநகாயாத்புதம் தனு꞉" என்று கூர்மபுராணத்திலும், "சாபம் ஸ்ஹம்போ꞉ தயாத் தத்தம்" என்று பத்மபுராணத்திலும் உள்ள வாக்கியங்கள், "ஜனகனின் {தேவராதனின்} யஜ்ஞத்தில் நிறைவடைந்தவனும், திரிசூலபாணியும், நீலகண்டனுமானவன் {சிவன்}, பகைவரை அழிக்கும் அற்புத வில்லை அவனுக்குக் கொடுத்தான்" என்று பிரமாணமாக இருக்கின்றன" என்றிருக்கிறது.

அவர்கள் இவ்வாறு சொன்னதும் அந்த முனிவரர் {முனிவர்களில் சிறந்த விசுவாமித்ரர்}, அந்த ரிஷி சங்கத்துடனும் {அந்த ரிஷிகளின் கூட்டத்துடனும்}, அந்தக் காகுத்ஸ்தர்களுடனும்[4] அங்குள்ள வனதேவதைகளிடம் விடைபெற்றுக் கொண்டு பயணத்தைத் தொடங்கும் வகையில்:(14) "நீங்கள் அருளப்பட்டிருப்பீராக {உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும்}. நான் சித்திபெற்றதால் {என் வேள்வி நிறைவடைந்ததால்} இந்த ஆசிரமத்திலிருந்து {சித்தாசிரமத்திலிருந்து} ஜாஹ்னவியின் உத்தரதீரத்தில் {கங்கையின் வடகரையில்} உள்ள இமய மலையுச்சியை நோக்கிச் செல்லப் போகிறேன்" {என்று வனதேவதைகளிடம் சொன்னார்}.(15)

[4] 13ம் சுலோகம் வரை ராமனிடம், "மிதிலைக்கு வருகிறாயா?" என்று முனிவர்கள் கேட்கின்றனர். 14ம் சுலோகத்தில் ராமலக்ஷ்மணர்களுடன் விசுவாமித்ரர் புறப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. இடையில் இராமனும், லக்ஷ்மணனும் "நாங்களுக்கும் மிதிலைக்கு வருகிறோம்" என்று உடன்பட்டிருக்க வேண்டும்.

முனிஷார்தூலரும், தபோதனருமான {தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான} கௌசிகர் {குசிகனின் வழித்தோன்றலான விசுவாமித்ரர்}, அதன்பிறகு வட திசையை நோக்கிப் பயணம் மேற்கொண்டார்[5].(16) இவ்வாறு புறப்பட்ட அந்த முனிவரைத் தொடர்ந்து நூறு வண்டிகளில் பிரம்மவாதிகளும் பிரயாணம் செய்தனர்.(17) சித்தாசிரமவாசிகளான மிருக கணங்களும், பக்ஷி கணங்களும் {விலங்குகளும், பறவைகளும்} மஹாத்மாவும், தபோதனருமான விஷ்வாமித்ரரைப் பின்தொடர்ந்து சென்றன. ஆனால் அந்த ரிஷி அந்த விலங்குகளையும், பறவைகளையும் திரும்பிச் செல்லச் செய்தார்.(18,19அ) அந்த முனிகணங்கள் அவ்வழியில் அதிக தூரம் சென்றதும் திவாகரன் {சூரியன்} மறையும் நேரத்தில் சோணையின் {சோணை ஆற்றங்} கரையில் வாசம் செய்தனர் {முகாம் அமைத்தனர்}[6].(19ஆ,20அ)

[5] மிதிலைக்குச் செல்பவர்கள் சித்தாசிரமத்தில் இருந்து வடக்குத் திசை நோக்கிச் செல்கிறார்கள் என்றால், சித்தாசிரமம் நிச்சயம் மிதிலைக்குத் தெற்கேதான் அமைந்திருக்க வேண்டும். எனில் 30ம் சர்க்கத்தின் 3ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்ட கூற்றுக்கு இது வலுசேர்ப்பதாகவே உள்ளது. அதே போல 29ம் சர்க்கத்தின் 9ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்ட திபெத்தின் சம்பாலாவாக இஃது இருக்க முடியாது என்றும் தெரிகிறது.

[6] சித்தாசிரமத்திற்கும் மிதிலைக்கும் இடையில் இந்த சோணை ஆறு {அல்லது சோணே / சோணா ஆறு} இருந்தது.

அளவற்ற ஒளி பொருந்தி அவர்கள் தினகரன் {சூரியன்} அஸ்தமிக்கும்போது ஸ்நானம் செய்து {நீராடி, மாலை சந்தியா வேளையில் அக்னிஹோத்ரம் செய்ய} ஹுதாசனனை {அக்னியை} மூட்டி விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு அமர்ந்தனர்.(20ஆ,21அ) சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, ராமனும் அந்த முனிவர்களைப் பூஜித்து, மதிநிறைந்த விஷ்வாமித்ரரின் முன் அமர்ந்தனர்.(21ஆ,22அ) அப்போது மஹாதேஜஸ்வியான ராமன், தபோதனரும், முனிஷார்தூலருமான விஷ்வாமித்ரரை நோக்கி குதூகலம் மேலிட {பின்வருமாறு} கேட்டான்:(22ஆ,23அ) "பகவானே, அழகுடனும், செழித்து விளங்கும் வனத்துடனும் கூடிய இந்தத் தேசம் என்ன {யாருடையது}? இதைக் கேட்க விரும்புகிறேன். பத்ரமாக இருப்பீராக {உமக்கு மங்கலம் உண்டாகட்டும்}. இதை உள்ளபடியே சொல்வீராக" {என்று விசுவாமித்ரரிடம் ராமன் கேட்டான்}.(23ஆ,24அ)

நல்விரதம் கொண்ட அந்த மஹாதபஸ்வி {விசுவாமித்ரர்}, ராமனின் சொற்களில் ஊக்கமடைந்து, அந்தத் தேசத்தைக் குறித்த அனைத்தையும் ரிஷிகளின் மத்தியில் சொல்லத் தொடங்கினார்.(24ஆ,இ) 

பாலகாண்டம் சர்க்கம் – 31ல் உள்ள சுலோகங்கள் : 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை