Astra Shastras | Bala-Kanda-Sarga-27 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அஸ்திர சஸ்திரங்களைக் கொடுத்த விஷ்வாமித்ரர்; ராமனை அடைந்த அஸ்திரங்கள்...
அந்தப் பெரும்புகழ்பெற்றவர் {விஷ்வாமித்ரர்} அங்கே இரவு தங்கி, {காலையில்} ராகவனிடம் புன்னகைத்து மதுரமான இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(1) "பெரும்புகழ்பெற்ற ராஜபுத்திரா {ராமா}, நான் பெரும் நிறைவடைந்திருக்கிறேன். நீ பத்ரமாக {அருளப்பட்டு} இருப்பாயாக. நான் பரமபிரீதியுடன் அஸ்திரங்களனைத்தையும் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(2) தேவாசுர கணங்களையும், கந்தர்வர்கள் உரகர்களையும், புவியில் உள்ள பகைவர்களையும் போரில் அடக்கி, வீழ்த்தி ஜயங்கொள்ளச் செய்யும் திவ்யாஸ்திரங்கள் அனைத்தையும் நான் உனக்குக் கொடுக்கப்போகிறேன். நீ பத்ரமாக {அருளப்பட்டு} இருப்பாயாக.(3,4அ)
ராகவா {ராமா}, மஹாதிவ்யமான தண்டச்சக்கரத்தை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(4ஆ) வீரா, அடுத்ததாக தர்மச்சக்கரத்தையும், காலச்சக்கரத்தையும், அவ்வாறே விஷ்ணு சக்கரத்தையும், மேலும் ஐந்திரச்சக்கரத்தையும்,(5) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, வஜ்ராஸ்திரத்தையும், சைவ சூலத்தையும் {சிவனின் சிறந்த சூலத்தையும்}, ராகவா, பிரம்மஷிர அஸ்திரத்தையும், ஐஷீகத்தையும்,(6) மஹாபாஹு {பெருந்தோள்களைக் கொண்டவனே}, அதி உக்கிரமானதும், ஒப்பற்றதுமான பிரம்மாஸ்திரத்தையும், காகுத்ஸ்தா, மோதகீ, ஷிகரீ என்ற {என்றழைக்கப்படும்} பிரகாசமிக்க கதைகள் {கதாயுதங்கள்} இரண்டையும்,(7) நரஷார்தூலா {மனிதர்களில் புலியே}, நிருபாத்மஜா {அரசனின் மகனே}, நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(8அ)
இராமா, தர்மபாசத்தையும், காலபாசத்தையும், வருணபாசத்தையும், ஒப்பற்ற அதே அஸ்திரத்தையும் {வாருணாஸ்திரத்தையும்} நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(8ஆ,9அ) ரகுனந்தனா, சுஷ்கம் {வற்றச் செய்வது}, ஆர்திரம் {நனையச் செய்வது} என்ற இரண்டு அசனிகளையும் {இடிகளையும்}, பைநாகாஸ்திரத்தையும் {பினாகம்}, நாராயணாஸ்திரத்தையும் நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(9ஆ,10அ) அனகா {குற்றமற்றவனே}, சிகரம் என்ற பெயரில் அறியப்படுவதும், அக்னிக்குப் பிடித்தமானதுமான ஆக்னேயாஸ்திரம், பிரதமம் என்ற பெயரில் அறியப்படும் வாயவ்யம் ஆகியவற்றையும் நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(10ஆ,11அ)
காகுத்ஸ்தா, ராகவா, ஹயசிரம் {குதிரைத்தலை} என்ற பெயருடைய அஸ்திரத்தையும், அதேபோலக் கிரௌஞ்சாஸ்திரத்தையும், {விஷ்ணுசக்தி, ருத்ரசக்தி என்ற} சக்தி ஆயுதங்கள் இரண்டையும் நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(11ஆ,12அ) ராக்ஷச வதத்திற்காக அசுரர்கள் தரிக்கும் கோரமான கங்காலம், காபாலம், கங்கணம் போன்றவற்றையும் நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(12ஆ,13அ) மஹாபாஹு {வலிமைமிக்கத் தோள்களைக் கொண்டவனே}, நிருவராத்மஜா {சிறந்த மன்னனின் மகனே}, வைத்யாதரம் என்ற மஹாஸ்திரத்தையும், நந்தனம் என்ற பெயரைக் கொண்ட ரத்தினம் போன்ற வாளையும் நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.(13ஆ,14அ)
ராகவா, கந்தர்வர்களால் விரும்பப்படும் {மயக்கமடையச் செய்யும்} மோஹனம் என்ற பெயரைக் கொண்ட அஸ்திரத்தையும், {உறக்கத்தைத் தூண்டும்} பிரஸ்வாபனம், {பகைவரின் கோபத்தைத் தணிக்கும்} சௌம்யமான பிரசமனம் என்ற அஸ்திரங்களையும்,(14ஆ,15அ) {மழையைப் பொழியச் செய்யும்} வர்ஷணம், {வடிகட்டும்} சோஷணம், {ஈரப்பதமூட்டும்} ஸந்தாபனம், {அழுகையைத் தூண்டும்} விலாபனம்,(15ஆ) கந்தர்வர்களுக்குப் பிடித்தமான மானவம் என்ற பெயரைக் கொண்ட அஸ்திரம், கந்தர்பனுக்கு {மன்மதனுக்குப்} பிடித்தமானதும், வெல்லப்படமுடியாததுமான மாதனம் {மதனாஸ்திரம்} ஆகியவற்றையும்,(16) நரஷார்தூலா, ராஜபுத்திரா, பெரும் நற்பேற்றைப் பெற்றவனே, மோஹனம் என்ற பெயரைக் கொண்ட பைசாசங்களுக்குப் பிடித்தமான அஸ்திரங்களையும் பெற்றுக்கொள்வாயாக.(17)
நரஷார்தூலா, நிருபாத்மஜா, மஹாபலமிக்க தாமஸம், சௌமனம், வெல்லப்படமுடியாத ஸம்வர்த்தம், மௌஸலம் ஆகியவற்றையும்,(18) மஹாபாஹு, ஸத்யாஸ்திரம், மாயாமயம், சௌரம் ஆகியவற்றையும், பிற ஆயுதங்களின் பிரகாசத்தை அதிகரிப்பதும் தேஜபிரபம் என்ற பெயரைக் கொண்டதுமான அஸ்திரத்தையும்,(19) {குளிர்ந்த} சிசிரம் என்ற பெயரைக் கொண்ட சோமாஸ்திரம், பயங்கரமான துவாஷ்டிராஸ்திரம், பாகனின் பயங்கரமான சீதேஷு, மானவம் ஆகியவற்றையும் பெற்றுக் கொள்வாயாக.(20) மஹாபாஹு, நிருபாத்மஜா, ராமா, விரும்பிய வடிவை ஏற்கவல்லவையும், மஹாபலம் பொருந்தியவையும், பெரும் நற்பேற்றை அருள்பவையுமான இவற்றை சீக்கிரமாகப் பெற்றுக் கொள்வாயாக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(21)
பிறகு அந்த முனிபுங்கவர், {புனிதநீராடி} தூய்மைடைந்து, கிழக்குமுகமாக நின்று பெரும் மகிழ்ச்சியுடன் ராமனுக்கு மிக உத்தமமான மந்திரக்ராமத்தைக் கொடுத்தார்.(22) தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத அஸ்திரங்களை அந்த விப்ரர் {விஷ்வாமித்ரர்} ராகவனுக்கு அர்ப்பணித்தார் {கற்பித்தார்}.(23) நுண்ணறிவுமிக்கவரான அந்த விஷ்வாமித்ர முனி ஜபம் செய்தபோது, பெரும் மதிப்புமிக்க அந்த அஸ்திரங்கள் அனைத்தும் ராகவனிடம் நெருங்கி வந்தன.(24) பரம இணக்கத்துடன் கூடிய அவை அனைத்தும் {அந்த அஸ்திரங்கள் அனைத்தும்} கைகளைக் கூப்பி மகிழ்ச்சியுடன் ராமனிடம், "ராகவா, நாங்கள் உன் கிங்கரர்களாவோம் {பணியாட்களாவோம்}. எதையெதை நீ விரும்புவாயோ, அவை அனைத்தையும் நாங்கள் செய்வோம். பத்ரமாக {அருளப்பட்டு} இருப்பாயாக" என்றன.(25,26அ)
ஆத்மநிறைவுடன் கூடிய ராமன், அப்போதே அவற்றைப் பெற்றுக் கொண்டான். அந்த காகுத்ஸ்தன், தன் உள்ளங்கையால் அந்த பலவான்களைத் தடவிக் கொடுத்து, அவற்றிடம், "மனத்தில் நினைத்ததும் தோன்றுவீராக" என்று சொல்லி, விடைபெற்றுக் கொள்ளுமாறு அவற்றுக்கு ஊக்கமளித்தான்.(26ஆ,27) பிறகு அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, நன்றிமிக்க இதயத்துடன் விஷ்வாமித்ர மஹாமுனியை வணங்கிவிட்டு, பயணத்திற்கு ஆயத்தமானான்.(28)
பாலகாண்டம் சர்க்கம் – 27ல் உள்ள சுலோகங்கள் : 28
Previous | | Sanskrit | | English | | Next |