Astra Samhara | Bala-Kanda-Sarga-28 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனுக்கு உபசம்ஹார மந்திரங்களை உபதேசித்த விஷ்வாமித்ரர்...
காகுத்ஸ்தன் {காகுத்ஸ்தனின் வழித்தோன்றலான ராமன்}, தூய்மையடைந்தவனாக அஸ்திரங்களைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த வதனத்துடன் {முகத்துடன்} சென்று கொண்டிருந்தபோது விஷ்வாமித்ரரிடம் சொன்னான்:(1) "பகவானே, நான் அஸ்திரங்களைப் பெற்றுக் கொண்டு ஸுரர்களாலும் {தேவர்களாலும்} வெல்லப்பட முடியாதவனாக இருந்தாலும், முனிபுங்கவரே, அஸ்திர ஸம்ஹாரத்தை {அஸ்திரங்களைத் திரும்ப அழைக்கும் மந்திரங்களை} அறிய விரும்புகிறேன்" {என்றான்}.(2)
அந்த காகுத்ஸ்தன் இவ்வாறு சொன்னதும் திடமானவரும், நல்விரதங்களைக் கொண்டவரும், தூய்மையானவருமான விஷ்வாமித்ர மஹாமுனி அந்த ஸம்ஹாரங்களைச் சொல்லத் தொடங்கினார்:(3) "ஸத்யவந்தம், ஸத்யகீர்த்தி, திருஷ்டம், ரபஸம், பிரதிஹாரதரம், பராங்முகம், அவாங்முகம்,(4) லக்ஷியம், அலக்ஷியம், திருடநாபம், ஸுநாபம், தஷாக்ஷம், ஷதவக்த்ரம், தஷஷீர்ஷம், சதோதரம்,(5) பத்மநாபம், மஹாநாபம், துந்துநாபம், ஸுவநாபம், ஜ்யோதிஷம், ஷகுனம் {கிருசநம்}, நைராஷ்யம், விமலம்,(6) யௌகந்தரம், விநிந்திரம் {ஹரித்ரம்}, தைத்யம், பிரமதனம், ஷுசி பாஹு, மஹாபாஹு, நிஷ்கலி, விருசி, ஸார்ச்சிர்மாலி, திருதிமாலி, விருத்திமான், ருசிரம்,(7) ராகவா {ராமா}, பித்ரம், ஸௌமனஸம், விதூதம், மகரம், கரவீரகரம், தனம், தானியம்,(8) காரூபம், காமருசி, மோஹம், ஆவரணம், ஜிரும்பகம், ஸர்ப்பநாபம், பந்தானம், வரணம் என்பவையும்(9) ஒளிர்பவையும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவையுமான} இந்தக் கிருஷாஷ்வ தனயர்களை {கிருஷாஷ்வரின் பிள்ளைகளை} நீ என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு பத்ரமாக இருப்பாயாக. நீ இதற்குத் தகுந்தவனாக இருக்கிறாய்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(10)
காகுத்ஸ்தன் {ராமன்} மகிழ்ச்சிமிக்க அந்தராத்மாவுடன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அவற்றைப் பெற்றுக் கொண்டான். அவற்றில் தெய்வீக ஒளி பொருந்திய உடலுடன் கூடியவையும், ஈர்க்கக்கூடியவையும், சுகம் அருள்பவையும்,(11) நெருப்பு போன்ற சிலவும், தூமம் {புகை} போன்ற சிலவும், சந்திரனையும், அர்க்கனையும் {சூரியனையும்} போன்ற சிலவும், மதிப்புடன் தங்கள் கைகளைக் குவித்தும்,(12) கைகளைக் கூப்பியும் மதுரமான பாஷையில் {இன்மொழியில்} ராமனிடம், "நரஷார்தூலா, இதோ இருக்கிறோம். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுவாயாக" {என்றன}.(13)
அப்போது ரகுனந்தனன் {ராமன்} அவற்றிடம், "காரியம் நேரிடுங்காலத்தில் மனத்தில் நினைத்ததும் எனக்கு ஸஹாயம் செய்வீராக. {அதுவரை} நீங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்வீராக" {என்றான்}.(14)
பின்பு அவை, "அவ்வாறே ஆகட்டும்" என்று காகுத்ஸ்தனிடம் சொல்லிவிட்டு அவனைப் பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து}, ராமனின் சம்மதத்தின் பேரில் அங்கிருந்து சென்றன.(15)
இராகவன் {ராமன்}, அவற்றை அறிந்து சென்று கொண்டிருந்தபோது விஷ்வாமித்ர மஹாமுனியிடம் இந்த மதுரமான மென்வசனத்தைச் சொன்னான்:(16) "பர்வதத்துடைய {மலையுடைய} இந்தப் பக்கத்தின் அருகில் மேக அமைப்பைப் போன்றதும், மிருகங்கள் நிறைந்ததும், அதி மனோஹரமானதும், இனிய குரல்களுடன் கூடிய நானாவித பறவைகள், மரக்கூட்டங்கள் ஆகியவற்றுடன் ஒளிர்வதுமான இந்தக் காட்சி என்ன? எனக்கு இது பரம குதூகலத்தை அளிக்கிறது.(17,18) முனிசிரேஷ்டரே {முனிவர்களில் சிறந்தவரே}, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் கானகத்திலிருந்து வெளியேறிவிட்டோம் என்பது இந்த தேசத்தின் மகிழ்ச்சியான சூழலால் புரிகிறது. பகவானே, இந்த ஆசிரமம் யாருடையது? அனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(19,20அ) மஹாமுனியே, பாவிகளும், பிராமணர்களைத் துன்புறச் செய்பவர்களும், துஷ்டசாரிகளும் {தீமை செய்பவர்களும்}, உமது யஜ்ஞத்திற்குத் தடையேற்படுத்த வருபவர்களுமான அந்தப் துராத்மாக்கள் எங்கே? பகவானே, உமது யஜ்ஞ கிரியைகள் நடைபெறும் இடம் எங்கே? பிராமணரே, ராக்ஷச வதம் செய்து என்னால் காக்கப்பட வேண்டிய அந்த இடம் எங்கே? பிரபுவே, முனிசிரேஷ்டரே, இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்" {என்றான் ராமன்}.(20ஆ-22)
பாலகாண்டம் சர்க்கம் – 28ல் உள்ள சுலோகங்கள் : 22
Previous | | Sanskrit | | English | | Next |