Vishvamitra's request | Bala-Kanda-Sarga-19 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : விஷ்வாமித்ரர் பத்து நாட்கள் தன் யஜ்ஞத்தைக் காக்க ராமனை அனுப்புமாறு தசரதனிடம் கோரியது; கலக்கமடைந்த தசரதன்...
அந்த ராஜசிம்மத்தின் {தசரதனின்} அற்புதமான, விஸ்தாரமான வாக்கியத்தைக் கேட்ட மஹாதேஜஸ்வி {விஷ்வாமித்ரர்} மயிர்க்கூச்சமடைந்தவராக இவ்வாறு பேசினார்:(1) "ராஜஷார்தூலா {மன்னர்களில் புலியே}, மஹாவம்சத்தில் பிறந்து, வசிஷ்டரிடம் உபதேசம் பெற்ற உனக்கன்றி வேறொருவனுக்கும் இது தகாது.(2) ராஜஷார்தூலா, என் இதயத்தில் உள்ளவற்றைச் சொல்லப் போகிறேன், நீ அந்தக் காரியத்தை நிச்சயித்து {தீர்மானித்து}, சத்தியத்திற்குக் கட்டுப்படுவாயாக.(3)
புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, நான் ஸித்தியர்த்தத்திற்காக {என் தவத்தின் இலக்கை அடைவதற்காக} ஒரு நியமத்தை {நோன்பைப்} பின்பற்றுகிறேன். காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்ல} ராக்ஷசர்கள் இருவர் அதற்குத் தடையேற்படுத்துகிறார்கள்.(4) என் விரதம் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில் வீரியவான்களும், நல்ல பயிற்சி பெற்றவர்களுமான மாரீசன், ஸுபாஹு என்ற ராக்ஷசர்கள் இருவர் மாமிசங்களையும், உதிர வெள்ளத்தையும் வேதியில் {அக்னி குண்டத்தில்} பொழிகின்றனர்.(5,6அ) நியமம் தடைபட்டதும் அதைச் செய்ய முனைந்த நான் உற்சாகமிழந்து அந்த இடத்தில் இருந்து திரும்ப வேண்டியிருக்கிறது.(6ஆ,7அ) பார்த்திபா {மன்னா}, குரோதங்கொள்ள என் புத்தி இடங்கொடுக்கவில்லை. நோன்பு காலத்தில் சாபம் கொடுக்கக்கூடாது என்பதைப் போன்றதே இதுவும் ஆகும்.(7ஆ,8அ)
ராஜஷார்தூலா, சத்யபராக்கிரமனும், காகத்தின் சிறகுகளை சிரத்தில் தரித்தவனும் {காகத்தின் சிறகுகளைப் போன்ற கருத்த தலைமுடியைக் கொண்ட இளைஞனும்}, சூரனும், உன் புத்திரர்களில் மூத்தவனுமான ராமனை எனக்குக் கொடுப்பாயாக.(8ஆ,9அ) அவன் என்னால் பாதுகாக்கப்படுவான். தீச்செயல்களைச் செய்யும் அந்த ராக்ஷசர்களைத் தன் திவ்ய தேஜஸினால் அவனால் அழிக்க இயலும்.(9ஆ,10அ) அவனுக்குப் பல வகைகளில் நான் செய்யப் போகும் நன்மைகளினால் அவன் மூவுலகங்களிலும் புகழை ஈட்டுவான். இதில் ஐயமேதுமில்லை.(10ஆ,11அ) அந்த இருவரும் ராமனை எவ்வகையிலும் அடைந்தால் அவர்களால் உறுதியாக நிற்க முடியாது, ராகவனைத் தவிர வேறு எவருக்கும் அந்த இருவரைக் கொல்லும் மனவலிமை கிடையாது.(11ஆ,12அ) ராஜஷார்தூலா {மன்னர்களில் புலியே}, வீரியவான்களும், காலபாசத்தின் வசப்பட்டவர்களுமான அந்தப் பாவிகள் இருவரும் மஹாத்மாவான ராமனுக்கு நிகராக மாட்டார்கள்.(12ஆ,13அ) பார்த்திபா, புத்திர பாசங்கொள்வது உனக்குத் தகாது. அந்த இரு ராக்ஷசர்களும் நிச்சயம் அழிவார்கள் என நான் உனக்குப் பிரதிஜ்ஞை செய்கிறேன்.(13ஆ,14அ)
மஹாத்மாவும், சத்தியபராக்கிரமனுமான ராமனை முற்றாக நான் அறிவதைப் போலவே, மஹாதேஜஸ்வியான வசிஷ்டரும், இந்தத் தவசிகளும் அறிவார்கள்.(14ஆ,15அ) ராஜேந்திரா, தர்மலாபத்தையும், புவியில் நீடிக்கும் பரம புகழையும் நீ இச்சித்தால் ராமனை என்னிடம் கொடுப்பாயாக.(15ஆ,16அ) காகுத்ஸ்தா {காகுத்ஸ குல மன்னனான தசரதா}, உன் மந்திரிகளும், வசிஷ்டர் தலைமையிலான பிரமுகர்கள் அனைவரும் சம்மதித்தால் ராமனை என்னுடன் அனுப்புவாயாக.(16ஆ,17அ) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், உன் விருப்பத்திற்குரிய மகனுமான ராமனை யஜ்ஞத்திற்காகப் பத்து ராத்திரிகளுக்குத் தாமதமின்றிக் கொடுப்பாயாக.(17ஆ,18அ) ராகவா, என் யஜ்ஞத்திற்கான காலம் தவறாதவாறு நீ செயல்படுவாயாக. சோக மனம் கொள்ளாமல் பத்ரமாக இருப்பாயாக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(18ஆ,19அ)
தர்மாத்மாவும், மஹாதேஜஸ்வியுமான மஹாமுனி விஷ்வாமித்ரர், இவ்வாறு தர்மார்த்த ஸஹிதம் {அறம் பொருளுடன் கூடிய} வசனத்தைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார்.(19ஆ,20அ) அந்த ராஜேந்திரன் {தசரதன்} விஷ்வாமித்ரர் சொன்ன சுபச் சொற்களைக் கேட்டு மஹாசோகம் அடைந்தான்; நடுங்கியவனாக மயக்கமுமடைந்தான். அதன்பிறகு சுயநினைவு மீண்டெழுந்து பயந்து விழுந்தான்.(20ஆ,21) இவ்வாறு இதயத்தைப் பிளக்கும் அந்த முனி வசனத்தைக் கேட்டவனும், மஹானும், மஹாத்மாவுமான அந்த நராதிபன் {மனிதர்களில் தலைவனான தசரதன்}, அதீதமான மனக்கலக்கமடைந்து, ஆசனத்தில் இருந்து தடுமாறி விழுந்தான்.(22)
பாலகாண்டம் சர்க்கம் –19ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |