Ramavatara | Bala-Kanda-Sarga-18 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் பிறப்பு: குழந்தைப் பருவத்தில் அவர்களின் குணங்கள்; விஷ்வாமித்ரரின் வரவு...
அந்த மஹாத்மாவின் ஹயமேத {தசரதனின் அஷ்வமேதயாக} சடங்குகள் நிறைவடைந்ததும் ஸுரர்கள் தங்கள் பாகத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(1) பத்தினிகளுடன் கூடிய ராஜா, நோன்புகளுக்கான விதிகளை நிறைவேற்றிவிட்டுப் பணியாட்கள், காவலர்கள், வாகனங்களுடன் நகரத்திற்குள் பிரவேசித்தான்.(2) அவனால் தகுந்த முறையில் கௌரவிக்கப்பட்ட பிரத்வீஷ்வரர்கள் {பிருத்வி ஈஷ்வர்கள்/பூமியின் மன்னர்கள்} மிகவும் மகிழ்ச்சியடைந்து, முனிபுங்கவரை {வசிஷ்டரை / ரிஷ்யசிருங்கரை} வணங்கிவிட்டுத் தங்கள் தங்கள் தேசங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(3) அந்த நகரத்தில் இருந்து தங்கள் தேசங்களில் உள்ள வசிப்பிடங்களுக்குச் செல்பவர்களும், ஸ்ரீமான்களுமான அந்த ராஜர்கள், சுகமான பயணத்தால்[1] மகிழ்ச்சியடைந்தவர்களாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(4) பூமியின் தலைவர்கள் சென்ற பிறகு, ஸ்ரீமானான ராஜா தசரதன், உத்தம துவிஜர்களை முன்னிட்டுக் கொண்டு நகரத்திற்குள் பிரவேசித்தான்.(5) ரிஷ்யசிருங்கரும் நன்கு பூஜிக்கப்பட்டவராகத் தமது சக பயணிகளுடனும், அறம்சார்ந்தவனான மன்னனுடனும் {ரோமபாதனுடனும்} சாந்தையும் பின்தொடர அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.(6) அவர்கள் அனைவரையும் வழியனுப்பி வைத்த ராஜா {தசரதன்}, மனம் நிறைந்தவனாகப் புத்ரோத்பத்தியைக் குறித்துச் சிந்தித்தபடியே அங்கே சுகமாக வசித்திருந்தான்.(7)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சில உரைகளில் தசரதன் அந்த அரசர்களின் படைவீரர்களுக்கு வெள்ளைச் சீருடைகளை அளித்தான், அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்று சொல்கின்றன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியாரின் பதிப்பில், "அவ்வயோத்யா நகரத்திலிருந்து தமது பட்டணத்திற்குச் செல்லுகின்றன செல்வம் நிறைந்த மன்னவரது ஸைந்யங்கள் அவ்வரசனால் கொடுக்கப்பட்ட விலையற்ற ஆடையாபரணங்களால் அலங்காரங்கொண்டு சுப்ரங்களாகி விளங்கின" என்றிருக்கிறது.
அந்த யஜ்ஞம் நிறைவடைந்து ஆறு பருவகாலங்கள் கடந்து பனிரெண்டாம் மாதத்தில், சித்திரை மாத {வளர்பிறை} நவமி திதியன்று,(8) அதிதியை தேவதையாகக் கொண்ட நட்சத்திரத்தில் {புனர்பூசத்தில்}, ஐந்து கிரகங்கள் தங்கள் சொந்த உச்ச ஸ்தானங்களை அடைந்த நிலையில், கார்கடக லக்னத்தில், வாக்கதிபதியும் {வியாழன் கோளும்}, இந்துவும் {சந்திரனும்} சேர்ந்து {லக்னத்தில்} உதித்துக் கொண்டிருக்க,(9) ஜகந்நாதனும், சர்வலோகநமஸ்கிருதனும் {உலகங்கள் அனைத்தாலும் வணங்கப்படுபவனும்}, சர்வ லக்ஷணங்கள் பொருந்தியவனுமான ராமன் கௌசல்யைக்குப் பிறந்தான்[2].(10) விஷ்ணுவின் பாதி அம்சமாகவும், பேரருள் படைத்தவனாகவும், இக்ஷ்வாகு குலத்தின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனாகவும், தாமரைக் கண்களையும், நீண்ட கரங்களையும், சிவந்த இதழ்களையும், துந்துபி போன்ற குரலையும் கொண்ட மகனாக அவன் திகழ்ந்தான்.(11) அளவில்லா தேஜஸைக் கொண்ட அந்தப் புத்திரனால், தேவர்களில் சிறந்த வஜ்ரபாணியுடன் {இந்திரனுடன்} கூடிய அதிதியைப் போலக் கௌசல்யை ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(12)
[2] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அச்வமேதயாகம் முடிந்து ஓராண்டு சென்றது. இப்படி ஓராண்டு சென்றபின், கௌஸல்யா தேவி பாயஸம் புசித்தது முதலாகப் பன்னிரண்டாவது மாதமாகிய சித்திரை மாதத்தில், நவமி திதியன்று, புணர்வஸு நக்ஷத்ரத்தில், ஸூர்யன், அங்காரகன், சனி, பிருஹஸ்பதி, சுக்ரன் ஆகிய இவ்வைவரும் தந்தமுடைய உச்சஸ்தானங்களாகிய மேஷ மகரத் துலா கர்க்கடக மீனங்களில் இருக்கையில் அதில் பிருகஸ்பதி சந்திரனோடு கலந்திருக்கக் கர்க்கடக லக்நத்தில் ஸகல ஜகந்நாயகனும் உலகங்கள் அனைத்தும் வணங்கத்தக்கவனும், ஸமஸ்த சுப லக்ஷணங்களும் பொருந்தியவனும், மஹாபாக்யசாலியும் விஷ்ணுவின் அர்த்தாம்சமுமாகிய இக்ஷ்குவாகு வம்சத்திற்கு மேன்மேலும் பெருமையைப் படைக்கவல்லவனுமாகிய ஸ்ரீராம னென்னும் புதல்வனைப் பெற்றனள்" என்றிருக்கிறது.
சத்யபராக்கிரமனும், சாக்ஷாத் விஷ்ணுவின் நான்காம் பாகனும் {விஷ்ணுவின் எட்டில் ஒரு பாக அம்சம் கொண்டவனும்}, அனைத்து குணங்களும் பொருந்தியவனுமான பரதன் என்ற பெயர் படைத்தவன் கைகேயிக்குப் பிறந்தான்.(13) அதன்பிறகு, வீரர்களும், அனைத்து அஸ்திரங்களிலும் நிபுணத்துவம் கொண்டவர்களும், விஷ்ணுவின் நாலில் ஒருபாகமும், எட்டில் ஒருபாகமும் ஆனவர்களுமான லக்ஷ்மணனும், சத்ருக்னனும் சுமித்ரையின் சுதன்களாகப் பிறந்தனர்.(14) நல்ல மனம் படைத்த பரதன், பூச நட்சத்திரம் மீன லக்னத்திலும், சுமித்திரையின் மகன்கள் {லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகிய இரட்டையர்} சர்ப்பத்தின் தலைமையிலான நட்சத்திரம் {ஆயில்யம் நட்சத்திரம்} கடக லக்னத்திலும் சூரியன் உதித்தபோது பிறந்தனர்[3].(15) குணவான்களும், அழகிய வடிவம் கொண்டவர்களும், ஒளி பொருந்தியவர்களும், மஹாத்மாக்களுமான ராஜனின் நான்கு புத்திரர்களும் தனித்தனியாகப் பிறந்தாலும் புரோஷ்டபத உபமானத்தைப் போல {பசுவின் கால்களைப் போல}[4] ஒன்றாகவே இருந்தனர்.(16)
[3] இராமன் பிறந்தது முதல் நாள் என்றால், பரதன் பிறந்தது இரண்டாம் நாள் என்றும், லக்ஷ்மணச் சத்ருக்னர்கள் பிறந்தது மூன்றாம் நாள் என்றும் மேற்கண்ட நட்சத்திரங்களின் குறிப்பில் தெரிகிறது. புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகியவை 28 நட்சத்திரங்கள் கொண்ட அமைப்பில் 7, 8, 9ம் நட்சத்திரங்களாகும்.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "புரோஷ்டபதம் என்றால் பசுவின் கால்கள் என்ற பொருளைத் தரும். மேலும் அண்டத்தில் சிறகுகளுடன் கூடிய ஒரு மாயப்புரவி போல் உருவகப்படும் பெகாசஸ் நட்சத்திரத் தொகுப்பின் சிறகுகளில் அமைந்திருக்கும் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்கூட்டம் ஒவ்வொன்றிலும் ஈரிரு நட்சத்திரங்கள் இருக்கும். அந்த நான்கு நட்சத்திரங்களும் சேர்ந்து ஒரு சரியான சதுரத்தை அமைக்கும். இரட்டை இரட்டையாக இருக்கும் நட்சத்திரங்களைப் போல ராமன், லக்ஷ்மணன், பரதன் சத்ருக்னன் ஆகியோர் இருந்தனர் என்றும் இங்கே பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
அப்போது கந்தர்வர்கள் மெல்லிசை பாடினர், அப்சரஸ்கள் நாட்டியம் ஆடினர், தேவதுந்துபிகள் ஒலித்தன, சொர்க்கத்திலிருந்து மலர்மாரி பொழிந்தது. அயோத்தியின் ஜனகுலங்கள் அந்நிகழ்வை மஹோத்சவமாகக் கொண்டாடினர்.(17,18அ) வீதிகளில் ஜனங்கள் நிறைந்திருந்தனர், நடர்களும், நர்த்தகர்களும், பாடகர்களும் விரைந்து வந்தனர், வாத்தியங்கள் இசைப்பவர்களும், பார்வையாளர்களும் ஆர்ப்பரித்தனர், வீதிகள் எங்கும் அனைத்து வகை ரத்தினங்களும் விரவிக் கிடந்தன.(18ஆ,19) ராஜா {தசரதன்}, சூதர்களுக்கும், மாகதர்களுக்கும், வந்திகளுக்கும் தகுந்த கொடைகளை அளித்தான். மேலும் அவன் பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களையும், செல்வத்தையும் கொடையளித்தான்.(20)
{பிள்ளைகள் பிறந்து} பதினோரு நாட்களுக்குப் பிறகு[5] நாமகர்மம் {பெயர்ச்சூட்டுவிழா} நடைபெற்றது. அப்போது மஹாத்மாவான மூத்தவனுக்கு ராமன் என்றும், கைகேயியின் சுதனுக்குப் பரதன் என்றும், சுமித்ரையின் மகன்களில் ஒருவனுக்கு லக்ஷ்மணன் என்றும், மற்றொருவனுக்குச் சத்ருக்னன் என்றும் வசிஷ்டர் பரமபிரீதியுடன் பெயர்களைச் சூட்டினார்[6].(21,22) பிராமணர்களுக்கும், நகர, ஜனபதவாசிகளுக்கும் போஜனம் அளிக்கப்பட்டது. பிராமணர்களுக்கு மதிப்புமிக்க ரத்தினங்கள் பலவும் அளவில்லாமல் கொடையளிக்கப்பட்டன. ஜன்ம சடங்குகளின் {ஜாதகர்மத்தின்} தொடர்ச்சியாகச் செய்யப்படவேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டன.(23,24அ)
[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு மூலத்தில் "அதீத்யைகாதஷாஹந்து" என்று சொல்லுகையால், பன்னிரெண்டாவது திநத்தில் நாமகரணம் நடந்ததென்று தோன்றுகிறது. க்ஷத்திரியர்களுக்குப் பன்னிரண்டாவது நாள் வரையில் ஸூதக முண்டென்று ச்ருதியும் பதின்மூன்றாவது நாள் நாமகரணமென்று ஸ்ம்ருதியுஞ் சொல்லுகையால், பதினோராவது நாள் கடந்த பின் பன்னிரண்டாவது நாளில் நாமகரணஞ்செய்வது விருத்தமாகும். ஆகையால் இங்கு "ஏகாதஷாஹம்" (பதினோராவது நாள்) என்றால் லக்ஷ்மணன் பிறந்தது முதற்கொண்டு பதினோராவது திநமாகக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அப்படியாயின், ராமன் முதனாள் பிறந்தவனாகையால் அவன் பிறந்த திநம் முதற்கொண்டு பன்னிரண்டாவது திநமாகும். அது கடந்த பின் பதின்மூன்றாவது திநத்தில் நாமகரணம் நடப்பது உபபந்நமாகும்" என்றிருக்கிறது.
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அறத்தால் மக்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்பவன் என்பது ராமன் என்ற பெயரின் பொருள். ராமன் என்ற பெயர் மிகப் பழைமையானது என்று பத்ம புராணம் சொல்கிறது. சுமையைச் சுமப்பவன் என்பது பரதன் என்ற பெயரின் பொருளாகும். லக்ஷ்மியால் நிறைந்தவன் என்றும், தன்னலமற்ற அர்ப்பணிப்பு கொண்டவன் என்றும் லக்ஷ்மணன் என்ற பெயருக்குப் பொருள் கொள்ளலாம். எப்போதும் பகைவரை அழிப்பவன் என்பது சத்ருக்னன் என்ற பெயரின் பொருளாகும். புரா = எதிர்கால ஹிதம் = நன்மையைச் செய்தல் = புரோஹிதர். அத்தகைய புரோகிதர் வசிஷ்டர் இளவரசர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினார். எனவே இந்தப் பெயர்ச்சூட்டுவிழா குறிப்பிட்ட முக்கியத்துவம் பெறுகிறது" என்றிருக்கிறது.
அவர்களில் மூத்தவனான ராமன் துவஜம் {கொடிக்கம்பம்} போன்றவனாகவும், பிதாவுக்கு மிகப் பிடித்தமானவனாகவும், ஸ்வயம்பூவை {பிரம்மனைப்} போல அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்புடையவனாகவும் இருந்தான்.(24ஆ,25அ) அவர்கள் அனைவரும் வேத அறிஞர்களாகவும், சூரர்களாகவும், உலகங்களின் நன்மையில் விருப்பம் கொண்டவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும், நல்ல குணங்களைக் கொண்டவர்களாகவும் வளர்ந்தனர்.(25ஆ,26அ) அவர்களில் மஹாதேஜஸுடன் கூடிய ராமன், சத்திபராக்கிரமமும், நிலவைப் போன்ற அமைதியும் கொண்டவனாகவும், உலகங்கள் அனைத்தினாலும் விரும்பப்படுபவனாகவும் இருந்தான்.(26ஆ,27அ) அவன் கஜங்களின் தோள்களிலும், அஷ்வங்களின் முதுகிலும், ரதங்களைச் செலுத்தியும் பயணிக்கும் திறன் கொண்டவனாகவும் {யானை, குதிரை, தேர் சவாரிகளில் சிறந்தவனாகவும்}, தனுர் வேதத்தில் திளைப்பவனாகவும், பிதாவுக்குத் தொண்டு செய்வதில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தான்.(27ஆ,28அ)
லக்ஷ்மிவர்தனனான {செழிப்பை அதிகரிப்பவனான} லக்ஷ்மணன், உடன் பிறந்தவர்களில் மூத்தவனும், உலகங்களுக்கு ஆனந்தத்தைத் தருபவனுமான ராமனை பால்ய பருவம் முதலே நித்தம் நேசிப்பவனாக இருந்தான்.(28ஆ,29அ) அர்ப்பணிப்பு எனும் செல்வத்துடன் கூடிய லக்ஷ்மணன், சரீரத் தொண்டின் மூலம் தன்னை ராமனுக்கு அர்ப்பணித்துக் கொண்டான். அவன் ராமனின் மற்றொரு பிராணனோ என ஐயுறும் அளவுக்கு நடந்து கொண்டான்.(29ஆ,30அ) புருஷோத்தமனான {மனிதர்களில் சிறந்தவனான} ராமன், அவன் {லக்ஷ்மணன்} இல்லாமல் நித்திரைக்கும் {உறங்கவும்} செல்லமாட்டான்; எவ்வளவு சுவைமிக்க அன்னமாக இருந்தாலும் அவன் இல்லாமல் உண்ணவும் மாட்டான்.(30ஆ,31அ) ராகவன் {ராமன்} குதிரையில் ஏறி வேட்டையாடச் சென்றாலும் லக்ஷ்மணன் தனுசுடன் {வில்லுடன்} அவனைப் பின்தொடர்ந்து சென்று விடுவான்.(31ஆ,32அ) லக்ஷ்மணனுடன் பிறந்த சத்ருக்னன் பரதனிடம் நித்தம் உயிருக்குயிரான அன்புடன் இருந்தான். அவனும் {பரதனும்} அவனிடம் {சத்ருக்னனிடம்} அவ்வாறே அன்புடன் இருந்தான்.(32ஆ,33அ)
அன்புக்குரிய நான்கு புத்திரர்களுடன் கூடிய பெரும்பேற்றைப் பெற்றவன் {தசரதன்}, தேவர்களுடன் கூடிய பிதாமஹனை {பிரம்மனைப்} போலப் பரம மகிழ்ச்சியை அடைந்திருந்தான்.(33ஆ,34அ) நல்ல குணங்கள் அனைத்தையும் கொண்ட அவர்கள் ஞானத்துடன் கூடியவர்களாகவும், {தகாததைச் செய்வதில்} நாணம் கொண்டவர்களாகவும், கீர்த்திமான்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும், தீர்க்கதரிசனம் கொண்டவர்களாகவும், அனைத்து வகையிலும் இத்தகைய பிரபாவத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தபோது அவர்களின் பிதாவானவன் {தசரதன்} அனைத்து வகையிலும் ஒரு லோகாதிபனைப் போல நிறைவடைந்தான்.(34ஆ-36அ) மனிதர்களில் புலிகளான அவர்கள், வேத கல்வியில் மூழ்கி, பிதாவிற்குச் செய்யும் தொண்டில் மகிழ்ந்து, தனுர்வேதத்தில் சிறந்து விளங்கினர்.(36ஆ,37அ)
அப்போது தர்மாத்மாவான அந்த ராஜா {தசரதன்}, உபாத்யர்களுடனும் {ஆசிரியர்களுடனும்}, பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} அவர்களின் திருமணக் காரியத்தைக் குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான்.(37ஆ,38அ) அந்த மஹாத்மா {தசரதன்}, இவ்வாறே மந்திரிகளின் மத்தியில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, மஹாதேஜஸ் பொருந்தி விஷ்வாமித்ர மஹாமுனி அங்கே வந்தார்.(38ஆ,39அ) அவர் ராஜனை தரிசிக்க விரும்பி வாயில் காப்போனிடம், "குசிக குலத்தோனும், காதியின் மகனுமான நான் வந்திருக்கிறேன் எனச் சீக்கிரம் {மன்னனிடம்} அறிவிப்பீராக" என்றார்.(39ஆ,40அ)
இந்த வசனத்தைக் கேட்ட அனைவரும் மனம் பதைத்து, அந்த வாக்கியத்தால் நடுக்கமுற்று ராஜனிடம் விரைந்து சென்றனர்.(40ஆ,41அ) ராஜபவனத்தை {ராஜமாளிகையை} அடைந்த அவர்கள் விஷ்வாமித்ர ரிஷி வந்திருப்பதை அந்த இக்ஷ்வாகு குல மன்னனிடம் {தசரதனிடம்} அறிவித்தனர்.(41ஆ,42அ) அவர்களின் வசனத்தைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்தவன் {தசரதன்}, வாசவன் {இந்திரன்} பிரம்மனிடம் செல்வதைப் போலப் புரோஹிதர்களுடன் சேர்ந்து பணிவுடன் அவரை வரவேற்கச் சென்றான்.(42ஆ,43அ)
அப்போது அந்த ராஜன் {தசரதன்}, ஜொலித்துக் கொண்டிருந்தவரும், தவ ஒளி பொருந்தியவரும், கடும் விரதம் நோற்பவருமான அவரைக் கண்டு மகிழ்ச்சிமிக்க வதனத்துடன் {முகத்துடன்} அர்க்கியம் கொடுத்தான்.(43ஆ,44அ) அவரும் சாத்திர நடைமுறையின் நோக்கில் ராஜனிடம் அர்க்கியத்தைப் பெற்றுக் கொண்டு அந்த நராதிபனிடம் {தசரதனிடம்} குசலம் {நலத்தைக் குறித்து} விசாரித்தார்.(44ஆ,45அ) உயர்ந்த தார்மீகரான அந்தக் கௌசிகர் {குசிக குல விஷ்வாமித்ரர்}, நகரம், ஜனபதம், ஆகியவற்றின் நலத்தையும், பந்துக்கள், நண்பர்கள் ஆகியோரின் நலத்தையும் குறித்து ராஜனிடம் விசாரிக்கும் வகையில்,(45ஆ,46அ) "உனக்கு இணையானவர்கள் {மற்ற நாட்டு மன்னர்கள்} அனைவரும் உன்னை எதிர்க்காமல் இணங்குகிறார்களா? பகைவர்களை நீ வென்றாயா? {வேள்வி முதலிய} தெய்வீக கர்மங்களையும், {விருந்தோம்பல் முதலிய} மானுஷ கர்மங்களையும் முறையாகச் செய்கிறாயா?" {என்று கேட்டார்}.(46ஆ,47அ)
மேலும் அவர் {விஷ்வாமித்ரர்}, முனிபுங்கவரான வசிஷ்டரையும், மேலான ரிஷிகளையும் முறைப்படி சந்தித்துக் குசலம் விசாரித்தார்.(47ஆ,48அ) பிறகு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் ராஜனின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து தகுந்த முறையில் பூஜிக்கப்பட்டு இருக்கைகளில் அமர்ந்தனர்.(48ஆ,49அ) பெருந்தயாளனான ராஜன், மஹாமுனிவரான விஷ்வாமித்ரரின் வருகையால் இதயம் மகிழ்ந்தவனாக அவரைப் பூஜித்து இவ்வாறு பேசினான்:(49ஆ,50அ) "மஹாமுனிவரே, அமுதத்தைப் பெற்றதைப் போலவும், நீரற்ற {வறந்த} நிலத்தில் மழை பொழிந்தது போலவும், பிள்ளையில்லாதவனுக்குத் தகுந்த மனைவிகளிடத்தில் புத்திரர்கள் பிறந்தது போலவும், தொலைத்தது {தொலைந்த செல்வம்} மீண்டும் அகப்பட்டது போலவும், பெரும் நிகழ்வில் உண்டாகும் மகிழ்ச்சியைப் போலவும் உமது வரவு அமைந்திருக்கிறது. உமது வரவு நல்வரவாகட்டும். (50ஆ-52அ) பிராமணரே, மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். உமது விருப்பமென்ன? அதை நான் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்? நீர் என்னிடம் எதையும் பெறத் தகுந்தவர். மதிப்பை அளிப்பவரே, என் பிராப்தத்தால் {நற்பேற்றால்} நீர் இங்கே வந்தீர். இன்று என் பிறவி பயனடைந்தது. என் வாழ்வு சிறந்த வாழ்வானது. விப்ரேந்திரரே, நீர் வந்ததால் என் இரவு விடிந்தது.(52ஆ-54அ).
பூர்வத்தில் ராஜரிஷியாக இருந்த நீர் தெள்ளிய மகிமையாலும், தவத்தாலும் பிரம்மரிஷி என்ற நிலையை அடைந்தீர். பல வகைகளில் நீர் எனக்கு மதிப்புமிக்கவர்.(54ஆ,55அ) விப்ரரே, இஃது அற்புதமானது, பரம பவித்ரமானது. பிரபுவே, உமது வரவின் மூலம் நான் நல்ல க்ஷேத்திர கதியை[7] அடைந்தவனானேன்.(55ஆ,56அ) நீர் நினைத்து வந்த காரியத்தை என்னிடம் சொன்னால், நான் அருளப்பட்டவனாவேன். உமது காரியத்தைச் செய்து நான் பயன்பெற விரும்புகிறேன்.(56ஆ,57அ) நல்ல விரதங்களைக் கொண்டவரே, காரியத்தின் சாத்தியக்கூற்றை எண்ணுவது உமக்குத் தகாது. நான் மிச்சமில்லாமல் அதைச் செய்வேன். உண்மையில் நீர் எனக்குத் தேவனைப் போன்றவராவீர்.(57ஆ,58அ) துவிஜரே, எனக்கு இது பெருஞ்செழிப்பைத் தரவல்லது. உமது வரவாலேயே இஃது எனக்கு வாய்க்கப்பெற்றது. சிறந்த தர்மங்கள் அனைத்தும் எனக்குக் கிட்டிவிட்டன" {என்றான் தசரதன்}.(58ஆ,இ)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விஷ்வாமித்ரரின் வருகையால் தன் நகரமே புனிதமடைந்துவிட்டதாகத் தசரதன் கருதுகிறேன். மேலும் அவன் உண்மையில் புனிதமான எந்த இடத்திற்கும் செல்லாமலேயே புண்ணிய யாத்திரை செய்த பலனை அடைந்தவனாகத் தன்னைக் கருதுகிறான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "நீர் வந்து எனக்குத் தர்சநங் கொடுத்தமையால் நானிருக்குமிவ்விடம் புண்யக்ஷேத்ரமாயிற்று" என்றிருக்கிறது.
அந்த ஆத்மவான் {தசரதன்}, கேட்பவர்களின் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் பணிவுடன் இந்த வாக்கியத்தைச் சொன்னதைக் கேட்டதும் குணத்தாலும், நன்மதிப்பாலும் புகழ்பெற்றவரும், சிறந்த குணங்களைக் கொண்டவருமான அந்தப் பரமரிஷி {விஷ்வாமித்ரர்} பெரும் மகிழ்ச்சியடைந்தார்.(59)
பாலகாண்டம் சர்க்கம் –18ல் உள்ள சுலோகங்கள்: 59
Previous | | Sanskrit | | English | | Next |