Thursday, 22 July 2021

குசலவர் ராமாயணம் கற்றது | பால காண்டம் சர்க்கம் - 04 (36)

Lava and Kusha assigned to sing the epic & Rama listents to it | Bala-Kanda-Sarga-04 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : குசனுக்கும், லவனுக்கும் ராமாயணத்தைக் கற்பித்த வால்மீகி; ராமனிடம் ராமாயணம் பாடிய குசலவர்கள்...

Valmiki teaching Ramayana to Kusa and Lava

அந்தத் தெய்வீக ரிஷி {வால்மீகி}, ராமன் தன் ராஜ்யத்துக்குத் திரும்பி வந்ததும், அற்புதமான சொற்களுடனும், அர்த்தத்துடனும் அந்த சரிதத்தை {ராமாயணத்தை} முழுமையாகச் செய்தார்.(1) அந்த ரிஷி, {ராமாயணத்தின்} இருபத்துநாலாயிரம் ஸ்லோகங்களை, ஐநூறு சர்க்கங்களிலும், ஆறு காண்டங்களிலும், பிறகு அமைந்த உத்தரத்திலும் அதைச் சொன்னார்[1].(2) பேரறிஞரான அந்தப் பிரபு {வால்மீகி}, {பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரையான} முதன்மையான பகுதியையும், {உத்தர காண்டமெனும்} தொடர்ச்சியையும் கொண்டதாக அதை {ராமாயணத்தை} அமைத்து, 'உண்மையில், இவையாவற்றையும் பாடவல்லவன்[2] எவன்?' எனச் சிந்தித்தார்.(3) அப்போது, முனிவர்களின் உடுப்பில் இருந்த குசனும், லவனும் தியானத்திலும், சிந்தனையிலும் ஆழ்ந்திருந்த அந்த மஹரிஷியின் {வால்மீகியின்} பாதங்களைத் தீண்டினர்.(4) தர்மம் அறிந்தவர்களும், ராஜபுத்திரர்களும், மதிப்புமிக்கவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், உடன்பிறந்தவர்களும், {வால்மீகி வசித்த அதே} ஆசிரமத்தில் வசித்தவர்களுமான குசனையும், லவனையும் வால்மீகி கண்டார்.(5)

[1] காயத்ரி மந்திரத்தின் இருபத்துநான்கு எழுத்துகள், ஒவ்வொரு ஆயிரம் சுலோகங்களின் தொடக்கத்திலும் அமையுமாறு ராமாயணம் படைக்கப்பட்டிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுலோகங்கள், காண்டங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் சர்ச்சை எழுகிறது. அபுதய காண்டம் என்றழைக்கப்படும் உத்தர ராமாயணமும் வால்மீகி சொன்னதுதான் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டால், 7 காண்டங்களும், 649 சர்க்கங்களும், 24,253 சுலோகங்களும் வர வேண்டும். "24,000 என்று சொல்லப்படும்போது அஃது உண்மையில் கணித முறையில் உறுதிசெய்யப்படுவதற்கில்லை என்றே கொள்ள வேண்டும். உண்மையில் 30 வயதாகும் ஒருவன் தன் வயது 29 வருடங்களும், 6 மாதங்களும், 7 நாட்களும் என்று சொல்ல மாட்டான்" என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் இந்த பாலகாண்டத்தின் பெரும்பகுதியே வால்மீகியால் செய்யப்பட்டதில்லை என்றும் சொல்கிறார்கள்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பின் அடிக்குறிப்பில், "இப்போது வழங்கிவருகிற பாடப்படி ஸ்ரீமத்ராமாயணத்தில் 253 சுலோகங்களும், சில சர்க்கங்களும் அதிகமாயிருக்கின்றன. வெகு காலமானதால் இந்த வித்தியாசம் வந்ததென்றும், அல்லது முனிவரே சில்லறையைக் கருதாமல் பிரதானமாகக் கூறியிருக்கலாமென்றும் நியாயஞ் சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது. இந்தச் சுலோகம் முழுமையும் பிபேக்திப்ராயின் செம்பதிப்பில் இல்லை.

[2] மூலச்சொல் "ப்ரயுஞ்ஜீயாதி³தி" என்பதாகும். https://www.valmiki.iitk.ac.in/ என்ற வலைத்தளத்தில் இதற்குச் செயல்படுத்தவல்லவன் என்று பொருள் கொள்கிறார்கள். நரசிம்மாசாரியார் பதிப்பில், "இதைப் பாடவல்லவனெவனோ" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "இதை யார் நன்றாகப் பாடவல்லவர்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இந்தக் கதையை விவரிக்கப் போகிறவன் எவன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "சபைகளின் முன் இதை வெளியிடப் போகிறவன் எவன்" என்றிருக்கிறது.

அந்தப் பிரபு {வால்மீகி}, வேதங்களை நன்கு அறிந்தவர்களான அந்த மேதாவிகளைக் கண்டு, வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் உள்ள கருத்தை {தாற்பரியங்களை} வலியுறுத்தும் நோக்கம் கொண்ட அந்தக் காவியத்தை அவர்களைப் பெற்றுக் கொள்ளச் செய்தார் {கற்கச் செய்தார்}.(6) நோன்புகள் அனைத்தையும் நோற்பவரான அவர், மொத்த காவியத்தையும் ராமாயணம் என்றும், சீதையின் செஞ்சரிதம் {சீதாய சரிதம் மஹத்} என்றும், பௌலஸ்திய வதம் {புலஸ்தியரின் வழி வந்த ராவணனின் வதம்} என்றும் சொன்னார்[3].(7) படிக்கவும், பாடவும் இனிமையானதும், மூவகை அளவுகளில் {தாள லயங்களில்} அமையும் இசைக்கும், ஏழு ஸ்வரங்களுக்கும் இணங்கி அமைவதும்[4], {வீணை முதலிய} தந்தி கருவிகளின் இசைக்கும், பண்ணுக்கும் பொருந்துவதும்,(8) காதல், கருணை, நகைச்சுவை, சீற்றம், அச்சம், வீரம் போன்ற அழகியல்களை {சிருங்காரம், கருணை, ஹாஸ்யம், ரௌத்திரம், பயம், வீரம் போன்ற ரஸங்களைக்}[5] கொண்டதுமாக இந்தக் காவியம் பாடப்பட்டது.(9)

[3] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமாயணத்தில் சீதையின் செயல்பாடுகளே முதன்மையானது, ராவண வதம் அடுத்தது. ஒரே காவியத்திற்குப் பல பெயர்களைத் தருவது மஹாகாவியங்களில் வழக்கமே" என்றிருக்கிறது.

[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு மூன்றளவுகளாவன - பாட்டினொலியை விடுத்துக் காட்டுகிற, த்ர்யச்ரம் என்றும், சதுரச்ரம் என்றும், மிச்ரம் என்றும் பேர் பெற்றவையாவது, த்ருதம் என்றும், மத்யம் என்றும், விலம்பிதமென்றுஞ் சொல்லப்படுகிறவையாவது. ஏழு ஸ்வரங்களாவன ஷட்ஜமென்றும், மத்யமமென்றும், காந்தாரமென்றும், நிஷாதமென்றும், ருஷபமென்றும், தைவதமென்றும், பஞ்சமமென்றுஞ் சொல்லப்படும் ஏழு ஸ்வரங்கள்" என்றிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அழகியல்கள் என்பதை நவரசங்களாகக் கொள்வது இந்திய வகைப்பாடு. அவை 1. சிருங்காரம் (காதல்), 2. ஹாஸம் (நகைச்சுவை உணர்வு), சோகம் (துயரம்), குரோதம் (சீற்றம்), உத்ஸாஹம் (உற்சாகம், துணிவு), பயம் (அச்சம்), ஜுகுப்சம் (அருவருப்பு), விஸ்மயம் (வியப்பு) என்பனவாகும். மேலும் சிருங்காரம் என்பது இரண்டு வகைப்படும். அவை அ. சம்போகம் (துணையுடன் இருப்பது), விப்ரலம்பம் (துணையில்லாமல் இருப்பது) என்பனவாகும். ராமாயணத்தின் நடையானது, ராமன் சீதையைக் கண்டது முதல் அவளைப் பிரிவது வரை காதலின் (சிருங்காரத்தில்) முதல் வகையைச் சேர்ந்தது. அவள் பிரிந்தது முதல், மீண்டும் சேர்வது வரை காதலின் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. சூர்ப்பணகை, திரிஜடை தொடர்புடைய சர்க்கங்கள் நகைச்சுவை உணர்வு சார்ந்தவை. தசரதன், ஜடாயு முதலியோர் வரும் சர்க்கங்கள் சோகம் தருபவை. கொலை, சித்ரவதை போன்ற சர்க்கங்கள் சீற்றத்தைத் தூண்டுபவை. லக்ஷ்மணன், இந்திரஜித் முதலியோர் வரும் சர்க்கங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துபவை. காடுகளிலோ, சீதையைச் சூழ்ந்திருப்பவர்களாகவோ காணப்படும் பயங்கர ராட்சசகணங்கள் வரும் சர்க்கங்கள் அச்சத்தை ஏற்படுத்துபவை. விராதன், கபந்தன் முதலிய பயங்கர உடல் படைத்த ராட்சசர்கள் வரும் சர்க்கங்கள் அருவருப்பை உணர வைப்பவை. ஹனுமன் கடலைத் தாண்டி, லங்கை எரிப்பதும், மொத்தமாக ராம ராவணப் போரும் வியப்பளிக்கக் கூடியவை" என்றிருக்கிறது.

இசைக்கலையை அறிந்தவர்களும், குரலின் ஏற்ற இறக்கங்களை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர்களுமான அந்தச் சகோதரர்கள் {குசனும், லவனும்} செழிப்பான குரல் வளத்துடன் கூடிய கந்தர்வர்களை {தெய்வீகப் பாடகர்களைப்} போலத் தெரிந்தனர்.(10) நல்ல வடிவழகையும், மதுரமான குரலையும் கொண்ட அவர்கள், பிம்பத்தில் இருந்து கடைந்தெடுக்கப்பட்ட பிரதிபிம்பங்கள் இரண்டைப் போல ராமனின் உடலில் இருந்து வெளிப்பட்டவர்களாவர்.(11) அந்த ராஜபுத்திரர்கள், தர்மத்தை விளக்கிச் சொல்லும் அந்தச் சிறந்த காவியத்தைக் குற்றங்குறைகள் அற்ற வகையில் தங்கள் குரலால் முழுமையாகப் பாதுகாத்தனர்.(12) உபதேசிக்கப்பட்ட யாவையும் நன்கறிந்த அவ்விருவரும் {குசலவர்கள்} ரிஷிகள், அறிஞர்கள், உன்னதர்கள் கூடும் கூட்டங்களில் குவிந்த கவனத்துடனும், சிறப்பாகவும் அவற்றைப் பாடினர்.(13)

ஒருமுறை, மஹாத்மாக்களும், பெருஞ்சிறப்புமிக்கவர்களும், நல்ல குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களுமான அவ்விருவரும், ரிஷிகளும், நல்லாத்மாக்களும் கூடிய கூட்டமொன்றின் மத்தியில் நின்று இந்தக் காவியத்தைப் பாடிக் கொண்டிருந்தனர்.(14) அதைக் கேட்ட முனிவர்கள் அனைவரும், பேராச்சரியத்துடன் விழிகள் விரிய கண்ணீர் சிந்தி, "நன்று, நன்று" என்றனர்.(15) தர்மத்தைக் காப்பவர்களான அந்த முனிவர்கள் அனைவரும், இதய மகிழ்ச்சியடைந்தவர்களாக, புகழத் தகுந்தவர்களும், பாடிக் கொண்டிருந்தவர்களுமான குசனையும், லவனையும் பாராட்டினார்கள்.(16) "ஆஹா, இந்த கீதத்தின் இனிமையும், குறிப்பாகச் சுலோகங்களின் பொருளும் மிகச்சிறப்பாக இருக்கின்றன. இவை யாவும் நீண்ட காலத்திற்கு முன் நடந்திருந்தாலும் தற்போது நடப்பதைப் போல {கண் முன் நடப்பதைப் போலத்} தெரிகின்றன.(17) இவர்கள் இருவரும், காவியத்திற்குள் நுழைந்து, தாளத்திற்கு ஏற்ப ஸ்வர, ராகங்களுடன் அதன் உட்கருத்தை ஒரே குரலில் இனிமையாகவும், பரவசம் தரும் வகையிலும் பாடுகின்றனர்" {என்று அம்முனிவர்கள் பாராட்டினர்}.(18) தவத்தால் அருளப்பட்ட மஹரிஷிகள் இவ்வாறு பாராட்டியதைப் போலவே அவ்விருவரும் மிக இனிமையாகவும், பொருள் நிறைந்தவாறும், {ராகங்களில்} பெருந்திறனுடனும் பாடினர்.(19)

நிறைவடைந்த ஒரு முனிவர், எழுந்து சென்று அவர்கள் இருவருக்கும் ஒரு கலசத்தைக் கொடுத்தார். மதிப்பிற்குரிய பெரும் முனிவர் ஒருவர், அவர்களைப் பாராட்டிவிட்டு ஒரு சணல் ஆடையை {மரவுரியைக்} கொடுத்தார்.(20) மற்றொரு முனிவர் கருப்பு மான் தோலை {கிருஷ்ணார்ஜிதத்தைக்} கொடுத்தார், மற்றொருவர் புனித நூலையும் {யஜ்ஞோபவீதத்தையும்}, மற்றொருவர் கமண்டலத்தையும், இன்னுமொரு மாமுனிவர் முஞ்சப் புல்லையும் {மௌஞ்சியையும்} பாடுபவர்களுக்குக் கொடுத்தனர்.{21} இன்னொருவர் இடைக்கச்சையையும், மகிழ்ச்சியடைந்த மற்றொரு முனிவர் கைக்கோடரியையும்,{22} மற்றொருவர் காசாயத்தையும் {காவி வேட்டியையும்}, மற்றொருவர் போர்வையையும் {துண்டையும்}, மற்றொருவர் தலைப்பாகையையும்,{23} இன்னொருவர் வசியம் செய்யும் தண்டங்களையும் {மந்திரக்கோல்களையும்}, வேறொருவர் வேள்விப் பாத்திரத்தையும், இன்னொருவர் விறகுக் கட்டைகளையும், மற்றொருவர் ஒதும்பரி மரப் பலகையையும் {அத்திப்பலகையையும்} கொடுத்தனர்.{24} இன்னுமொருவர் ஆசி கூறினார், மற்றொருவர் நீண்ட ஆயுள் அடையுமாறு வாழ்த்தினார். பிறகு அவர்களுக்கு மஹரிஷிகள் மகிழ்ச்சியாக வரங்களை அளித்தனர்.{25} இவ்வாறே அந்த சத்தியவான்கள் {குசலவர்கள்} முனிவர்கள் அனைவரிடமும் வரங்களைப் பெற்றனர்.{26}(21-26) ஆயுளையும், செழிப்பையும் உண்டாக்குவதும், கேட்பதற்கு மனோஹரமாகமானதுமான இந்த கீதம், நன்றாகப் பாடப்படும்போது அதைப் பாடுபவர்களுக்கு எங்கும் பாராட்டைப் பெற்றுத் தந்தது.{27}

ஒரு முறை, அனைத்து வகைப் பாடல்களையும் பாடுவதில் திறம்பெற்றவர்களான அவர்கள், ராஜமார்க்கங்களில் {அரசின் நெடுஞ்சாலைகளில்} பாடிக் கொண்டிருந்த போது, பரதனின் தமையனை {ராமனைக்} கண்டனர்.{28}(27,28) பகைவரை அழிப்பவனான ராமன், பூஜிக்கத் தகுந்தவர்களும், உடன் பிறந்தவர்களுமான அவ்விருவரையும் தன் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்று பூஜித்தான்.(29) அந்தப் பிரபு {ராமன்}, தன் அருகே அமர்ந்திருந்த ஆலோசகர்களும், தம்பிகளும் சூழ, திவ்ய காஞ்சன சிம்மாசனத்தில் {தெய்வீகமான பொன் அரியணையில்} அமர்ந்திருந்தான்.(30)

அழகிய பண்புகளையும், ஒழுக்கத்தையும் கொண்டவர்களும், உடன் பிறந்தவர்களுமான அவர்களைக் கண்ட ராமன், தன் தம்பிகளான லக்ஷ்மணன், சத்ருக்னன், பரதன் ஆகியோரிடம்,(31) "அற்புதச் சொற்களையும், பொருளையும் {விசித்ர அர்த்த பதங்களைக்} கொண்ட இந்தப் பாடலானது தெய்வீக ஒளி படைத்த இவர்களிடம் இருந்து கவனமாகக் கேட்கப்படட்டும்" என்று சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தினான்.(32)

அவ்விருவரும், தெளிவான தங்கள் குரல்களில் இனிமையாகவும், தெளிவாகவும், தந்திக் கருவியைப் போன்ற லயத்துடனும், பொருளைத் தெளிவாகச் சொல்லும் வகையிலும் பாடினர்.(33) காதுகள் அனைத்திற்கும் சுகத்தை அளிக்கும் இந்த கீதம், கூடியிருந்தோர் அனைவரின் உடல்களையும், மனங்களையும், இதயங்களையும் வசப்படுத்தி ஒளிர்ந்தது {மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் விளங்கியது}.(34)

{ராமன்}, "பார்த்திவ லக்ஷணம் {மன்னர்களுக்குரிய இலக்கணம்} பொருந்தியவர்களும், முனிவர்களும், மஹாதபஸ்விகளுமான இந்தக் குசலவர்கள் சொல்வதும், எனக்கு நன்மையை விளைவிப்பதும், தீர்வைத் தருவதில் ஆற்றல்வாய்ந்ததுமான இந்தச் சரிதத்தைக் கேட்பீராக[6]" {என்றான்}.(35)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே ராமன் "இது சீதையின் காவியம் என்பதால் தீர்வைத் தருவதில் ஆற்றல்வாய்ந்தது" என்று சொல்கிறான். அவன் தற்புகழ்ச்சி செய்பவனல்ல. காவியங்களில் வரும் துணிவுமிக்க வீரர்கள் இத்தகைய இகழ்வுக்கு ஆளாகமாட்டார்கள். தற்காலத்தில் தன்னுடன் இல்லாத தன் அன்புக்குரியவளின் காவியத்தைக் கேட்பது அவனுக்கு ஆறுதலைத் தருகிறது. எனவே அவன் "சீதாய சரிதம் மஹத் {சீதையின் செஞ்சரிதம்}" என்ற இந்தக் காவியத்தை அனைவரையும் கேட்கச் சொல்கிறான்" என்றிருக்கிறது.

அப்போது ராமனின் சொற்களால் ஊக்கமடைந்த அவ்விருவரும், மார்க்கமெனும் ராக வழிமுறையில் பாடினர், அந்தக் கூட்டத்தில் இருந்த ராமனும், தன் மனத்தை அமைதியடைச் செய்யும் இதய விருப்பம் கொண்டான்[7].(36)

[7] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ராமனும் அதில் மனமூன்றி அருகிலிருந்து கேட்டநுபவிக்க விரும்பியும், சீதையின் கதையாகையால் அதைக் கேட்டுத் தரிக்கலாமென்று ஆதரங்கொண்டும் மெல்ல மெல்ல ஸபையின் நடுவே வந்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அவர்களும் அந்த நியமனப்படி மார்க்கமென்கிற சாதாரண விதத்திற்பாட, சுவாமி மிக்க ஆஸக்தியோடே கேட்டருளினார்" என்றிருக்கிறது.
 

பாலகாண்டம் சர்க்கம் – 04ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை