Valmiki gets divine guidance to compile the epic | Bala-Kanda-Sarga-03 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : இராமாயணக் காவியத்தைத் தொகுக்கும் திட்டம்; காவியத்தின் முக்கியப் பகுதிகள் உரைக்க ஏற்படுத்திக் கொண்ட திட்டம்; மொத்த காவியமும் மிகச் சிறந்த வகையில் அமைக்கப்படுவது...
அந்த தர்மாத்மா {வால்மீகி}, தர்மம் நிறைந்த காவியத்தின் சாரத்தை {நாரதரிடம்} கேட்டு, அந்த மதிமிக்கவனின் {ராமனின்} வரலாற்றில் இருப்பனவற்றையும், அதற்கு மேலும் அறியப்பட்டனவற்றையும் முழுமையாகத் தேடத் தொடங்கினார்.(1) அந்த முனிவர், தர்பைப் பாயில் கிழக்கு நோக்கி அமர்ந்து, நீரைத் தொட்டு, கைகளைக் கூப்பி, {அவற்றைத்} தெளிவாகப் புரிந்து கொள்ள யோக தர்மத்தின்படி விரிவாகத் தேடத் தொடங்கினார் {யோகத்தில் அமர்ந்து சிந்தித்தார்}.(2)
இராமன், லக்ஷ்மணன், சீதை, ராஜா தசரதன், அவனது {தசரதனின்} மனைவியர், அவன் {ராமன்} நாட்டை அடைந்தபோது நடந்த நிகழ்வுகள், செயல்கள், அவர்களது சிரிப்பு, உரையாடல்கள் என இவ்வாறு மொத்தமாக அனைத்தையும் {உள்ளபடியே} தமது தர்மவீரியத்தினால் {தவசக்தியால்} அவர் முழுமையாகக் கண்டார்.(3,4) சத்தியசந்தனான ராமன், ஸ்திரீயுடன் {சீதையுடன்} மூவராக வனத்தில் திரிந்த போது நடந்தவை அனைத்தையும் அவர் தெளிந்தறிந்தார்.(5) அந்த தர்மாத்மா {வால்மீகி} யோகத்தில் துய்த்திருந்து, முன்னர் நடந்தவை அனைத்தையும் உள்ளங்கனி நெல்லிக்கனிபோல நன்றாகக் கண்டார்.(6)
அந்த மஹாமதியாளர் {வால்மீகி}, தர்மத்தின் மூலம் {தமது யோக ஆற்றலின் மூலம்} அனைத்தையும் உண்மையாக அறிந்துணர்ந்து இன்பம், பொருள் {காமார்த்த} குணங்களை நிறைவாகக் கொண்டதும், அறம், பொருள் {தர்மார்த்த} குணங்களை விரிவாகச் சொல்வதும், ரத்தினத்தால் நிறைந்த சமுத்திரத்தைப் போன்றதும், கேட்கும் அனைவருக்கும் இனிமையைத் தருவதும், அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்பவனான ராமனைக் குறித்துச் சொல்வதுமான சரிதத்தைச் செய்தார்.(7,8) இவ்வாறே தெய்வீகரான அந்த முனிவர், மஹாத்மாவான நாரதர் முன்பு சொன்ன ரகுவம்ச சரிதத்தை அமைத்தார்.(9)
அதில் {ரகுவம்ச சரிதத்தில்}, இராமனின் பிறப்பு, அவனது மஹாவீரியம், அனைவரிடமும் நயமாக நடந்து கொள்ளும் அவனது தன்மை, அண்டந்தழுவிய அன்பு, விடாமுயற்சி, வாய்மை நிறைந்த ஒழுக்கம், மதிப்புரவு ஆகியவற்றையும்,(10) மகிழ்ச்சியூட்டும் கதைகள் இன்னும் பலவற்றையும், விஷ்வாமித்ரரின் தொடர்பு, ஜானகியுடனான {சீதையுடனான} விவாகம், பெரும் வில்லை உடைத்தது,(11) {ஸ்ரீ}ராமனுக்கும் {பரசு}ராமருக்கும் இடையில் நடைபெற்ற விவாதம், தசரத ராமனின் குணங்கள், அதேபோல ராமனின் அபிஷேகம் {பட்டாபிஷேகம்}, கைகேயியின் தீய நோக்கம்,(12) அபிஷேகம் சீர்குலைதல், ராமன் நாடு கடந்து சென்றது, ராஜாவின் {தசரதனின்} சோக ஒப்பாரி, அவன் {தசரதன்} பரலோகம் சென்றது,(13) குடிமக்களின் துயரம், {ராமன் தன்} குடிமக்களை விட்டுச் சென்றது, நிஷாதிபதியுடன் {வேடர்த்தலைவன் குஹனுடன்} உரையாடல், சூதன் {சுமந்திரன்} திரும்பிச் சென்றது {ஆகியன விளக்கப்படுகின்றன}.(14)
கங்கையைக் கடந்தது, பரத்வாஜரைக் கண்டது, பரத்வாஜரின் அறிவுரையின் பேரில் சித்திரகூடத்தைக் கண்டது,(15) வசிப்பிடம் அமைக்கும்பணி, தந்தையின் ஈமக்கிரியையைச் செய்யவும், {நாட்டுக்குத் திரும்பி வர} ராமனின் அருள் வேண்டியும் பரதனின் வருகை,(16) பாதுகைகளுக்கு அபிஷேகம் செய்து {பரதனின்} நந்திக்கிராமவாசம், {ராமன்} தண்டகாரண்யம் சென்று விராதனை வதம் செய்தது,(17) சரபங்கரைக் கண்டு, சுதீக்ஷ்ணரைச் சந்தித்தல், அனசூயையின் மென்மையான பேச்சும், {சீதையின் அங்கத்தில் தடவ} சந்தனம் கொடுத்ததும்,(18) அகஸ்தியரைக் கண்டது, பெரும் வில்லைப் பெற்றுக் கொண்டது, சூர்ப்பணகையுடன் வாதம் செய்தது, அதே போல {அவள்} வடிவங்குலைக்கப்பட்டது,(19) கரன், திரிசிரன் வதம், ராவணன் கோபம் அடைந்தது, மாரீச வதம், அதே போல வைதேஹி ஹரணம் {சீதை அபகரிக்கப்பட்டது},(20) {சீதைக்காக} ராகவனின் புலம்பல், கழுகு ராஜன் கொல்லப்பட்டது, கபந்தனைக் கண்டது, பம்பையைக் கண்டது,(21) சபரியைக் கண்டது, கனிகளும், கிழங்குகளும் உண்டது, {சீதையை எண்ணி} துயரத்தில் புலம்பியது, பம்பையில் ஹனுமனைக் கண்டது,(22) ருஷ்யமுகம் சென்றது, சுக்ரீவனைச் சந்தித்தது, நம்பிக்கையை ஏற்படுத்தும் நட்பு கொண்டது, வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த மற்போர்,(23) வாலியைக் கொன்றது, சுக்ரீவன் {மன்னனாக} நிறுவப்பட்டது, {வாலியின் மனைவியான} தாரையின் புலம்பல், ஒப்புக்கொண்டது போல் மழைக்காலத்தில் {போருக்குப் புறப்படாமல்} நின்றது,(24) சிங்கம் போன்ற ராகவனின் கோபம், துருப்புகளைத் திரட்டியது, திசைகளெங்கும் {வானரங்களை} அனுப்பியது, {வானரங்களுக்குச் சொல்லப்பட்ட} பிருத்வீ {பூமி} வர்ணனை,(25) {ஹனுமனிடம்} மோதிரம் கொடுத்தது, ருக்ஷனின் {கரடியின்} குகையைக் கண்டது, {சீதையைக் காணாத வானரர்கள்} பிராயோபவேசம் செய்ய {உண்பதைத் தவிர்த்து இறக்க} முயன்றது, சம்பாதியைக் கண்டது,(26) {மஹேந்திர} மலையில் ஏறியது[1], சாகரத்தை {பெருங்கடலைத்} தாண்டியது, சமுத்திரனின் அறிவுரை, மைநாக மலையைக் கண்டது,(27) ராட்சசியைக் கொன்றது, நிழலைக் கவரும் ஸிம்ஹிகையைக் கண்டு, அவளையும் கொன்றது, லங்காமலையைக் கண்டது {ஆகியனவும் விளக்கப்படுகின்றன}.(28)
[1] நரசிம்மாசாரியரின் பதிப்பில், இது மலயபர்வதம் என்று சொல்லப்படுகிறது, அதன் அடிக்குறிப்பில், "இம்மலயம் லங்கைக்கு ஆதாரமான மலையினோர் பாகம், கடலைக் கடக்கும்பொழுது ஹநுமான் ஏறிய மலயம் வேறு. ‘மலய பர்வதாந்தரே பர்வதாசே" என்று நிகண்டுவிற் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், இது மகேந்திரகிரி என்றே சொல்லப்படுகிறது. இந்தச் சுலோகம் முழுவதும், இன்னும் சில சுலோகங்களும் பிபேக்திப்ராயின் செம்பதிப்பில் இல்லை.
{ஹனுமன்} இரவில் லங்கைக்குள் புகுந்தது, தனியாக இருப்பதாகச் சிந்தித்தது, மது அருந்தும் இடத்திற்குச் சென்றது, அந்தப்புரத்தைக் கண்டது,(29) ராவணனையும், புஷ்பகத்தையும் {புஷ்பக விமானத்தையும்} கண்டது, அசோக வனத்தில் திரிந்தது, சீதையைக் கண்டது,(30) ஆதாரச் சான்றை {மோதிரத்தைக்} கொடுத்தது, சீதையிடம் பேசியது, சீதையை ராக்ஷசிகள் அச்சுறுத்துவதைக் கண்டது, திரிஜடை கனவு கண்டது,(31) சீதை ரத்தினத்தைக் கொடுத்தது, {ஹனுமன்} மரங்களை வேருடன் பிடுங்கியது, ராக்ஷசிகள் தப்பி ஓடியது, கிங்கரர்களை {காவலர்களைக்} கொன்றது,(32) வாயுவின் மகன் {ஹனுமன்} கைப்பற்றப்பட்டது, லங்கையை எரித்துக் கர்ஜனை செய்தது, பறந்து திரும்பியது, மதுவனத்தை அழித்தது,(33) ரத்தினத்தைக் கொடுத்ததும் ராகவன் ஆறுதல் அடைந்தது, சமுத்திரனைச் சந்தித்து, நளன் சேதுவை {பாலத்தைக்} கட்டியது,(34) சமுத்திரத்தைக் கடந்தது, இரவில் லங்கையை முற்றுகையிட்டது, {ராமன்} விபீஷணனைச் சந்தித்தது, அவன் வதம் செய்யும் வழிமுறையை உரைத்தது,(35) கும்பகர்ணனையும், மேகநாதனையும் {இந்திரஜித்தையும்} கொன்றது, ராவணனை அழித்தது, பகைவனின் நகரில் இருந்து சீதையை மீட்டது,(36) விபீஷணனுக்கு அபிஷேகம் செய்தது, புஷ்பகத்தைக் கண்டது, அயோத்திக்குச் சென்றது, வழியில் பரத்வாஜரைச் சந்தித்தது,(37) வாயுபுத்திரனை {ஹனுமனை} அனுப்புவது, பரதனைச் சந்தித்தது, ராமாபிஷேகவிழா, சைனியங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பியது, {ராமனின் ஆட்சியில்} நாட்டின் மக்கள் மகிழ்ச்சி அடைவது, சீதையைப் பிரிவது {ஆகியனவும் விளக்கப்படுகின்றன}.(38)
தெய்வீகரான வால்மீகி ரிஷி, ராமன் தொடர்பாகப் பூமியின் பரப்பில் நடந்த மிகச்சிறு நிகழ்வுகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் உத்தரக் காவியத்தில் {இந்தக் காவியத்தில் பின்னர்} அமைத்தார்.(39)
பாலகாண்டம் சர்க்கம் – 03ல் உள்ள சுலோகங்கள்: 39
Previous | | Sanskrit | | English | | Next |