Valmiki gets divine guidance to compile the epic | Bala-Kanda-Sarga-02 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : வேடன் கிரௌஞ்சப் பறவையைக் கொன்றதைக் கண்டு அவனைச் சபித்த வால்மீகி; சொற்கள் ஸ்லோகமானது கண்டு ஆச்சரியமடைந்தது; ராமாயணம் படைக்கும்படி வால்மீகியிடம் சொன்ன பிரம்மன்...
உரையாற்றுவதில் சிறந்தவரும், தர்மாத்மாவுமான அந்த மஹாமுனிவர் {வால்மீகி}, நாரதரின் உரையைக் கேட்ட பிறகு, தமது சீடர்களுடன் அவரை வழிபட்டார்.(1) இவ்வகையில் தகுந்த முறையில் வழிபடப்பட்ட அந்த தேவரிஷி {நாரதர்}, {வால்மீகியிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றார்.(2) அவர் தேவலோகத்திற்குச் சென்ற ஒரு முஹூர்த்தத்திற்குள், அந்த முனிவர் {வால்மீகி} ஜாஹ்னவியின் {ஜானவியின்/கங்கையின்} அருகிலேயே இருந்த தமஸை தீரத்திற்குச் சென்றார்.(3)
{வால்மீகி} முனிவர், தூய்மையான அந்த ஆற்றங்கரைக்குச் சென்று, அதன் தீர்த்தத்தை {ஆற்றின் ஆழமில்லா பகுதியைக்} கண்டு, தமதருகே இருந்த சீடனிடம்,(4) "பரத்வாஜா, {காமக்ரோதங்களால் கலங்காமல் இருக்கும்} நல்ல மனிதனின் மனம் போல இனிமையானதாகவும், சேறில்லாத தெளிந்த நீருடனும் கூடிய இந்தத் தீர்த்தத்தை {துறையைப்} பார்.(5) அன்பனே, கலசம் {கமண்டலம்} இங்கே இருக்கட்டும். என் மரவுரியைக் கொடுப்பாயாக. உத்தமமான இந்த தமஸைதீர்த்தத்தில் நான் இறங்கப் போகிறேன்" என்றார்.(6)
மஹாத்மாவான வால்மீகியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குருவிடம் பணிவுள்ளவரான பரத்வாஜர், அந்த முனிவரிடம் மரவுரியைக் கொடுத்தார்.(7) புலனடக்கம் கொண்ட அவர் {வால்மீகி}, சீடரின் கைகளில் இருந்து மரவுரியைப் பெற்றுக் கொண்டு, சுற்றிலும் பார்த்துக் கொண்டே அந்தப் பரந்த வனத்தில் நடந்து சென்றார்.(8) அந்தப் புனிதமானவர், இணைபிரியாதவையும், இனிய குரலில் கூவிக் கொண்டிருந்தவையுமான கிரௌஞ்சங்கள் இரண்டு அங்கே அருகில் திரிந்து {பறந்து} கொண்டிருப்பதைக் கண்டார்.(9) பாவ நோக்கம் {கொல்லும் நோக்கம்} கொண்டவனும், கொடூரம் நிறைந்தவனுமான நிஷாதன் {வேடன்} ஒருவன், அந்த இணையில் ஒன்றான சேவலை {ஆண் பறவையை} அவரது கண் முன்பாகவே கொன்றான்.(10)
{தாமிரம் போன்ற} சிவந்த முகட்டுடனும் {சிகையுடனும்}, சிறந்த சிறகுகளுடனும் கணவனுடன் எப்போதும் இணைபிரியாமல் ஒன்றாகத் திரிந்த மனைவி {பேடை / பெண் பறவை}, கொல்லப்பட்ட அந்தப் பறவை {தன் கணவன்} குருதியில் மறைந்த சிறகுகளுடன் தரையில் சுழன்று உருள்வதைக் கண்டு, பிரிவு தாளாமல் உண்மையில் பரிதாபமாகக் கதறியது.(11,12) தர்மாத்மாவான அந்த ரிஷி, நிஷாதனால் அவ்வாறு வீழ்த்தப்பட்ட பறவையைக் கண்டு இரக்கம் கொண்டார்.(13)
அப்போது அந்த துவிஜர் {இருபிறப்பாளரான வால்மீகி}, ஓலமிடும் அந்தக் கிரௌஞ்சத்தைக் கண்டு ’இஃது அதர்மம்’ எனக் {கருதி} கருணையுடன் இந்தச் சொற்களைச் சொன்னார்,(14) {வால்மீகி}, "நிஷாதா, காமத்தில் மயங்கியிருந்த கிரௌஞ்சங்களில் ஒன்றை நீ கொன்றதால், நெடுங்காலம் நிலையற்றவனாவாய்" {என்று சொன்னார்}[1].(15)
[1] ஸ்ரீ.அ.வீ.நரசிம்ஹாசாரியரின் பதிப்பில், "நான்முகனருளால் வால்மீகியின் முகத்தில் முதலிலுண்டான இந்த ச்லோகம் வேடனைச் சபித்தது மாத்திரத்திலே முடியத்தக்கதல்ல. இத்தால் ஸ்ரீ ராமாவதாரஞ்செய்த பகவானுக்குப் பல்லாண்டு பாடுகிறாரென்று முன்புள்ளோர் கூறுவர். அதெங்ஙனேயென்றால், "நிஷாத சப்தம் இருப்பிடத்தையும், மா சப்தம் லக்ஷ்மியையும் சொல்லுமாகையால் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடமானவனே, ராக்ஷஸஜாதியான ராவணன் மண்டோதரியென்னும் இவ்விரட்டையிலிருந்து காமவிகாரங்கொண்ட ஒருவனாகிய ராவணனைக் கொன்றாய்; அதனால் பல்லாண்டுகள் நிலைபெற்றிருப்பாயாக" என்பது" என்றிருக்கிறது. தாதாசாரியசுவாமிகளின் பதிப்பில், "இதில் மற்றொரு பொருளும் தோன்றியது. திருமகளுக்கிருப்பிடமான பகவானே மந்தோதரியும், இராவணனுமாகிய இரண்டு ராக்ஷதர்களில் காமமயக்கங்கொண்ட ஒருவனை (இராவணனை) சங்கரித்ததனாலே நெடுங்காலமும் பெருங்கீர்த்தி பெற்று வாழ்வீர் - என்பது" என்றிருக்கிறது. இந்த ஸ்லோகத்தை இராமாயணத்துடன் பொருத்திப் பார்த்தால் பலவாறு பொருள் கொள்ளலாம் என அப்பொருள்கள் பலவற்றையும் http://valmikiramayan.pcriot.com என்ற வலைத்தளத்தில் உள்ள தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் கொடுத்திருக்கிறார்கள். ஆர்வமுள்ளோர் அவற்றை அங்கே ஆங்கிலத்தில் காணலாம். தமிழில் நரசிம்மாசாரியாரின் பதிப்பிலும் பல பொருள்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
இவ்வாறு சொல்லிவிட்டு, 'இந்தப் பறவையின் நிமித்தம் உண்டான சோகத்தில் என்னால் சொல்லப்பட்டது என்ன?' என்று இதயத்தில் ஆய்ந்து சிந்தனையில் ஆழ்ந்தார்.(16) முனிவர்களில் சிறந்தவரும், மதிமானும் {நுண்ணறிவுமிக்கவரும்}, பெரும் விவேகியுமான அவர் {வால்மீகி}, தம் மனத்தில் சிந்தித்துத் தீர்மானித்து, சீடரிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்.(17) {வால்மீகி, பரத்வாஜரிடம்}, "நான் சோகத்தில் இருந்தபோது எழுந்ததும், பாடலாகவும், தந்தி இசையாகவும் இசைக்கத் தகுந்த சொற்களால் அமைந்ததும், நாலடிகளைக் கொண்டதுமான இந்தச் சொற்றொடரை ஸ்லோகமெனச் சொல்லலாமேயன்றி வேறில்லை" {என்றார்}[2].(18)
[2] நரசிம்மாசாரியார் பதிப்பின் அடிக்குறிப்பில், "சோகித்துச் சபித்தவிது அநுசிதமேயாயினும் எனக்கு இது கீர்த்தியை விளைவிப்பதாக வேணுமன்றி வேறான அகீர்த்தியைத் தருவதாக வேண்டாமென்று பொருளென்று சிலர் கருத்து" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "இந்தச் செய்யுள் நான்கு பகுதிகளாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியும் எட்டு எழுத்துகளால் சமமாக நிறைந்திருக்கிறது. இது ஸம்ஸ்கிருதச் செய்யுள் வகையில் அனுஷ்டூப் சந்தமென அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
சீடரும் {பரத்வாஜரும்}, முனிவரால் {வால்மீகியால்} சொல்லப்பட்ட உத்தம வாக்கியத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் {மனத்தில் மனனம் செய்து கொண்டார்}. முனிவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்.(19) அந்த முனிவர், அந்தத் தீர்த்தத்தில் விதிப்படி அபிஷேகம் செய்து {நீராடி}, அதன் {தான் சொன்ன சுலோகத்தின்} பொருளை மட்டும் சிந்தித்துத் திரும்பி வந்தார்[3].(20) சாத்திரங்களை அறிந்தவரான சீடர் பரத்வாஜர், பூர்ண கலசத்தை {நீர் நிறைந்த கமண்டலத்தை} எடுத்துக் கொண்டு பணிவுடன் குருவைப் பின் தொடர்ந்து சென்றார்.(21) தர்மத்தை அறிந்தவரான அவர் {வால்மீகி}, சீடர்களுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து, அமர்ந்து பல கதைகள் பேசினாலும் {சுலோகம் குறித்த நினைவில்} தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.(22)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது முனிவர்களுக்கான நடுப்பகல் நீராடலாகும் {மாத்யான்னிகஸ்நாநம்}. இங்கே சொல்லப்படும் அபிஷேகம் என்ற சொல் விழா காலங்களில் தேவர்களுக்குச் செய்யப்படும் அபிஷேகம், முடிசூட்டுவிழாவில் மன்னர்களுக்குச் செய்யப்படும் அபிஷேகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. தினந்தோறும் செய்யக்கூடிய நீராடலுக்காக வால்மீகி ஆற்றுக்கு வருகிறார். வழக்கமாக ஆற்றின் நீரில் மூழ்குவதே நீராடலாகும். ஆனால் இங்கே நீர் அவர் மீது பொழியப்பட்டது என்று சொல்வதாகத் தோன்றுகிறது. அவர் மீது பொழிந்த நீரானது, ராமாயணத்தின் கவிச்சொற்களுக்கான ஒப்புமையாகத் தெரிகிறது" என்றிருக்கிறது.
லோக கர்த்தனும், பிரபுவும், பேரொளி படைத்தவனும், நான்கு முகங்களைக் கொண்டவனுமான பிரம்மன், முனிவர்களில் சிறந்தவரான அவரைக் காண தானாகவே அங்கே வந்தான்.(23) அப்போது, பக்திமானான வால்மீகி அவனைக் கண்டு, பேராச்சரியமடைந்து, விரைவாக எழுந்து, பணிவுடன் கைகளைக் கூப்பி, பேச்சற்றவராக அருகில் நின்றார்.(24) அத்தகையவர் {வால்மீகி}, அந்த தேவனை {பிரம்மனை} விதிப்படி வணங்கி, நலம் விசாரித்து, பாதங்களைக் கழுவ நீரும், அர்க்கியமும் கொடுத்து வரவேற்று, உயர்ந்த இருக்கையில் அமரச் செய்து இடையறாமல் பூஜித்தார்.(25) அந்த இருக்கையில் அமர்ந்த பகவான் {பிரம்மன்}, பெரிதும் வழிபடப்பட்டவனாக, ஓர் ஆசனத்தில் அமருமாறு வால்மீகியிடம் சைகை காட்டினான்.(26) அவர், பிரம்மனால் முறையாக அனுமதிக்கப்பட்டு ஆசனத்தில் அமர்ந்தாலும், லோகபிதாமகனே வெளிப்பட்டு {தம் முன்} அங்கே அமர்ந்திருந்தாலும், அந்நாளில் நிகழ்ந்த அதே நிகழ்வுகளே மீண்டும் மீண்டும் அவரது மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன.(27,28அ) ’பகைவரை {இரையைக்} கைப்பற்றும் புத்தியைத் தவிர வேறு காரணமேதும் இல்லாதவனாக, அழகாகக் கூவிக் கொண்டிருந்த கிரௌஞ்சப் பறவையைக் கொன்று துன்பத்தை ஏற்படுத்தியவன் பாபாத்மாவாவான்’ {என்று அவர் நினைத்தார்}.(28ஆ,29அ) இவ்வாறு சோக நிலையில் இருந்தவர் {வால்மீகி}, தம் மனத்தை ஆழமான சிந்தனைக்குத் திருப்பி, மீண்டும் அந்தக் கிரௌஞ்சப் பறவையையே நினைத்து, {அதே} சுலோகத்தைப் பாடினார்.(29ஆ,30அ)
அப்போது பிரம்மன் புன்னகைத்தவாறே, முனிவர்களில் சிறந்தவரான அவரிடம், "நீ அமைத்தது சுலோகமே; இதில் விசாரணை {ஐயங்கொள்ளத்} தேவையில்லை.(30ஆ) ஹே! பிராமணா, நீ சொன்ன அந்தச் சொற்கள் என் விருப்பத்தால் மட்டுமே எழுந்தவை. எனவே, ஹே! ரிஷிகளில் சிறந்தவனே, ராமசரிதத்தை முழுமையாக {சுலோகங்களாகவே} நீ செய்வாயாக.(31) தர்மாத்மாவும், உலகில் தேவனைப் போன்றவனும், நுண்ணறிவுமிக்கவனும், தீரனுமான {துணிவுமிக்கவனுமான} ராமனின் விருத்தத்தை {வரலாற்றை} நாரதனிடம் கேட்டவாறே சொல்வாயாக.(32) சுமித்ரையின் மகனுடன் {லக்ஷ்மணனுடன்} கூடிய துணிவுமிக்க ராமனையும், ராட்சசர்களையும் குறித்து அறிந்த, அறியப்படாத அனைத்தையும், வெளிப்படுத்தப்பட்டதும், வெளிப்படுத்தப்படாததுமான வைதேஹியின் {சீதையின்} நிலையையும், அறிந்ததும், இன்னும் அறியாததுமான நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இனி நீ அறிவாய்.(33,34) மனோஹரமானதும் {இதயம் விரும்புவதும்}, புண்ணியத்தைக் கொடுப்பதுமான ராம காதையை நீ சுலோகங்களாக அமைப்பாயாக. இக்காவியத்தில் உன்னுடைய சொல்லொன்றும் பொய்யாகாது.(35) பூமியில் கிரிகளும் {மலைகளும்}, ஆறுகளும் உள்ளவரை இவ்வுலகில் இராமாயணம் புகழ்பெற்றிருக்கும்.(36) உன்னால் செய்யப்படும் ராம காதை புகழ்பெற்றிருக்கும் வரை, மேலும் கீழும் உள்ள உலகங்களிலும், என் உலகத்திலும் {பிரம்ம லோகத்திலும்} நீ வசித்திருப்பாய் {புகழ்பெற்றிருப்பாய்}" என்றான் {பிரம்மன்}.(37)
பகவான் {பிரம்மன்}, இதைச் சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்தான். அப்போது அந்தத் தெய்வீக முனிவர் {வால்மீகி}, தம்முடைய சீடர்களுடன் சேர்ந்து ஆச்சரியமடைந்தார்.(38) பிறகு, அவரது சீடர்கள் அனைவரும், மீண்டும் மீண்டும் அந்த ஸ்லோகத்தைப் பாடி மகிழ்ந்து, மீண்டும் நேர்மாறாக எதிரிடையாகவும் பாடி ஆச்சரியமடைந்தனர்[4].(39) இணையான எழுத்துகளுடனும், நான்கு அடிகளுடனும் அந்த மஹரிஷியால் பாடப்பட்ட சுலோகங்கள், {பிறரால்} மீண்டும் மீண்டும் ஓதப்பட்டபோது சுலோகத்வத்தை அடைந்தன {மிகச் சிறந்த சுலோகங்களாகக் கேட்பவர்களிடம் முக்கியத்துவம் பெற்றன}.(40) எண்ணங்களைச் செயலாக்க வல்லவரான அந்தப் மஹரிஷியிடம், ‘இராமாயணக் காவியம் முழுவதையும் நான் இவ்வாறே {இத்தகைய சுலோகங்களால்} அமைப்பேன்’ என்ற உள்ளுணர்வு பிறந்தது.(41)
[4] நேர்மாறாக எதிரிடையாகப் பாடினார்கள் என்பது வேறு பதிப்புகளில் இல்லை. நரசிம்மாசாரியாரின் பதிப்பில், "பின்பு அவ்வால்மீகியின் சிஷ்யர்கள் அனைவரும் இந்த ச்லோகத்தை மீளவும் பாடினர். பின்னும் மிகவும் ஆச்சரியமுற்றுக் களித்து அடிக்கடி இதென்ன அற்புதமென்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்" என்றிருக்கிறது. தாதாசாரியாரின் பதிப்பில், "பின்பு, வால்மீகி பகவானானவர் தம்முடைய சிஷியர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தை அடைந்து அந்தச்சுலோகத்தை அடிக்கடி அவர்கள் பாடிக்களிக்க, தாமும் அதன் இலக்கண அமைதிகளைக் கண்டு களிப்படைந்தார்" என்றிருக்கிறது.
கீர்த்திமானும் {புகழ்வாய்ந்தவரும்}, உதாரதீயுமான {பெருந்தகைமையுடையவருமான} அந்த முனிவர், பெரும்புகழ் பெற்ற ராமனின் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பவையும், சீராகப் பேசும் தொனியில் பொருள்களை விளக்குபவையும், மனோஹரமானவையும் {இதயத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியவையும்}, சரியான விகிதத்தில் அமைந்த சொற்களுடன் கூடியவையுமான நூற்றுக்கணக்கான சுலோகங்களால் இந்தக் காவியத்தை அமைத்தார்.(42) அந்த முனிவரால் சொல்லப்பட்டதும், சிக்கலற்ற சொற்றொடர்கள், சந்திகள், பதங்கள், ஏற்றக்குறைவில்லாமல் இனிமையாக ஒழுகும் நன்கு புனையப்பட்ட வாக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்டதுமான இந்த ரகுவரசரிதம் {ரகு குலத்தில் சிறந்தவனான ராமனின் வரலாறு}, தசக்ரீவனின் {ராவணனின்} வதத்தையும், இன்னும் பலவற்றையும் சொல்கிறது; யாவரும் கேட்பீராக.(43)
பாலகாண்டம் சர்க்கம் – 02ல் உள்ள சுலோகங்கள்: 43
Previous | | Sanskrit | | English | | Next |