Lanka set on fire | Sundara-Kanda-Sarga-54 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விபீஷணனின் வீட்டைத் தவிர மொத்த லங்கையையும் எரித்த ஹனுமான்...
மனோரதம் நிறைவேறிய பிறகு, லங்கையைப் பார்த்த கபி {குரங்கான ஹனுமான்}, பெருகும் உற்சாகத்துடன் எஞ்சியிருக்கும் காரியத்தைக் குறித்து {பின்வருமாறு} சிந்தித்தான்:(1) "இங்கே நான் செய்வதற்கு உண்மையில் எஞ்சியிருக்கும் செயல் என்ன? இப்போது இந்த ராக்ஷசர்களுக்கு அதிக சந்தாபத்தை {மனத்துன்பத்தை} உண்டாக்கக்கூடியது எது?(2) வனம் முறிக்கப்பட்டது. மேலான ராக்ஷசர்கள் கொல்லப்பட்டனர். படையின் ஒரு பகுதி குறைக்கப்பட்டது. துர்கத்தை நாசஞ்செய்ய {கோட்டையை அழிக்க} வேண்டியதே எஞ்சியிருக்கிறது.(3) துர்கம் நாசமடைந்தால் {கோட்டை அழிந்தால், ராமரின்} கர்மம் சிரமமில்லாமல் சுகமாக அமையும். இந்தக் காரியத்தில் செய்யும் அற்ப யத்னமும் {முயற்சியும், கடல் தாண்டி வந்த என்} சிரமத்திற்கான பலனைக் கொடுக்கும்.(4) என் லாங்கூலத்தில் {வாலில்} எரிந்து கொண்டிருக்கும் இந்த ஹவ்யவாஹனனுக்கு {அக்னி தேவனுக்கு}, இந்த உத்தம கிருஹங்களை {சிறந்த வீடுகளை} தர்ப்பணம் செய்வதே நியாயமாகும்" {என்று நினைத்தான் ஹனுமான்}.(5)
பிறகு, மின்னலுடன் கூடிய மேகத்தைப் போல, எரிந்து கொண்டிருக்கும் வாலுடன் கூடிய மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, லங்கையிலுள்ள பவனங்களின் {வீடுகளின்} உச்சிகளில் சுற்றித் திரிந்தான்.(6) உத்யானங்களையும் {தோட்டங்களையும்}, பிராசாதங்களையும் {மாளிகைகளையும்} நோக்கிய அந்த வானரன் {ஹனுமான்}, ராக்ஷசர்களின் ஒரு கிருஹத்தை விட்டு, மற்றொரு கிருஹத்திற்கு அச்சமில்லாமல் சென்றான்.(7) வாயுவுக்கு சமமான பலம் கொண்ட அவன் {ஹனுமான்}, மஹாவேகத்துடன் பிரஹஸ்தனின் நிவேசனத்தின் {வீட்டின்} மீது பாய்ந்து, அங்கே அக்னியை இறக்கி வைத்தான்.{8} வீரியவானான ஹனுமான், அங்கிருந்து மஹாபார்ஷ்வனின் வேஷ்மத்திற்கு {வீட்டிற்குப்} பாய்ந்து, கால அனல சிகைக்கு {பிரளயத்தின் போது உண்டாகும் அக்னிக்கு} ஒப்பான அக்னியை விடுவித்தான்.(8,9) பிறகு, மஹாதேஜஸ்வியான அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, வஜ்ரதம்ஷ்ட்ரன், சுகன், மதிமிக்க சாரணன் ஆகியோருக்கு உரியவற்றின் மீதும் {ஆகியோரின் வீடுகள் மீதும்} பாய்ந்தான்.(10)
அதன்பிறகு, இந்திரஜித்தின் வேஷ்மத்தை எரித்த ஹரியூதபன் {குரங்குக் குழு தலைவனான ஹனுமான்}, அதன்பிறகு, ஜம்புமாலி, ஸுமாலி ஆகியோரின் பவனங்களையும் {வீடுகளையும்} எரித்தான்.{11} ரஷ்மிகேதுவின் பவனத்தையும், அதேபோல, சூரியசத்ரு, ஹிரஸ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், ராக்ஷசன் ரோமசன் ஆகியோருக்கு உரியனவற்றையும் {ஆகியோரின் வீடுகளையும்},{12} அவ்வாறே யுத்தோன்மத்தன், மத்தன், ராக்ஷசன் துவஜக்ரீவன், கோரனான வித்யுத்ஜிஹ்வன், ஹஸ்திமுகன் ஆகியோருக்கு உரியனவற்றையும் {ஆகியோரின் வீடுகளையும்},{13} கராளன், பிசாசன், சோணிதாக்ஷன் ஆகியோருக்கு உரியனவற்றையும் {ஆகியோரின் வீடுகளையும்}, கும்பகர்ணனின் பவனத்தையும்,{14} அவ்வாறே யஜ்ஞசத்ருவின் பவனத்தையும், பிரம்மசத்ருவுக்கு உரியதையும் {பிரம்மசத்ருவின் வீட்டையும்}, நராந்தகன், கும்பன், துராத்மாவான நிகும்பன் ஆகியோருக்கு உரியனவற்றையும் {ஆகியோரின் வீடுகளையும்},{15} அடுத்து, அடுத்து என எரித்த மஹாதேஜஸ்வியான ஹரிபுங்கவன் {குரங்குகளில் முதன்மையான ஹனுமான்}, விபீஷணனின் கிருஹத்தை மட்டும் தீண்டாமல் தாண்டிச் சென்றான்.(11-16) பெரும்புகழ்வாய்ந்தவனான அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, செல்வச்செழிப்புள்ள செல்வந்தர்களின் அந்தந்த கிருஹங்களில் உள்ள செல்வங்களையும் எரித்தான்.(17)
வீரியவானும், லக்ஷ்மிவானுமான அவன் {ஹனுமான்}, அவை அனைத்தையும் கடந்து சென்ற பிறகு, ராக்ஷசேந்திரனின் நிவேசனத்தை {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் வீட்டை} அடைந்தான்.(18) மேரு, மந்தரத்திற்கு {மேரு மலைக்கும், மந்தர மலைக்கும்} ஒப்பானதும், சர்வ மங்கலங்கள் நிறைந்ததும், நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த முக்கிய கிருஹத்தில்,{19} லாங்கூலத்தின் {வாலின்} நுனியில் இருப்பதும், கொழுந்துவிட்டு எரிவதுமான அக்னியை இறக்கிவிட்டு, வீரனான ஹனுமான், யுகாந்தத்தின் மேகம் {யுக முடிவில் தோன்றும் மேகத்தைப்} போல நாதம் செய்தான்[1].(19,20)
[1] நீரைவற்றிடப் பருகி மா நெடு நிலம் தடவிதாருவைச் சுட்டு மலைகளைத் தழல் செய்து தனி மாமேருவைப் பற்றிஎரிகின்ற கால வெங் கனல்போல்ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ- கம்பராமாயணம் 5980ம் பாடல், சுந்தர காண்டம், இலங்கை எரியூட்டு படலம்பொருள்: நீர்நிலைகள் வற்றிப் போகும்படி அவற்றை உறிஞ்சி, நீண்ட பெரும் நிலம் முழுவதும் பரந்து அழித்து, மரங்களை எரித்து, மலைகளை நெருப்பில் வேகச் செய்து, யுகமுடிவில் தோன்றி ஒப்பற்ற மகாமேரு மலையை எரிக்கும் நெருப்பைப் போல, ஊர் முழுவதையும் அவித்துவிட்டு, இராவணனின் வீட்டில் புகுந்து உயர்ந்து எழுந்தது நெருப்பு.
காற்றுடன் சேர்ந்த ஹுதாசனன் {வாயுவுடன் கூடிய அக்னி}, அதிவேகத்துடன் வளர்ந்து, மஹாபலத்துடன் கூடிய காலாக்னியைப் போல எரிந்தான்.(21) பவனன் {வாயு}, கொழுந்துவிட்டு எரிந்த அக்னியை அந்த வேஷ்மங்களுக்குச் சுமந்து சென்றான். காற்றுடன் சேர்ந்த ஹுதாசனன் அதிவேகத்தை அடைந்தான்.(22) காஞ்சன ஜாலங்களுடன் {பொற்சாளரங்களுடன்} கூடியவையும், முத்தும், மணிகளும், ரத்தினங்களும் பதிக்கப்பெற்றவையுமான அந்த மஹத்தான பவனங்கள் இடிந்து விழுந்தன.(23) தங்கள் கிருஹங்களைக் காக்க அங்கேயும், இங்கேயும் ஓடியவர்களும், தைரியத்தையும், ஏராளமான செல்வத்தையும் இழந்தவர்களுமான ராக்ஷசர்களிடம், "ஹா, இந்த அக்னியே கபிரூபத்தில் {குரங்கின் வடிவில்} வந்திருக்கிறான்" என்ற ஆரவார சப்தம் உண்டானது.(24,25அ) அவிழ்ந்த கூந்தலுடன் கூடிய சில ஸ்திரீகள், ஸ்தனத்துடன் அணைந்திருந்தவர்களை {பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தைகளை} எடுத்துக் கொண்டு, அம்பரத்தின் {வானத்து} மேகங்களில் இருந்து பாயும் சௌதாமினியை {மின்னற்கொடியைப்} போல் ஒளிர்ந்தபடியே, அக்னி சூழ்ந்த தங்கள் வீடுகளில் இருந்து திடீரென்று கீழே குதித்தனர்.(25ஆ,26) அவன் {ஹனுமான்}, வஜ்ரம், பவளம், வைடூரியம், முத்து, வெள்ளி நிறைந்த விசித்திர பவனங்களை உருகியோடும் தாதுக்களாகக் கண்டான்.(27)
எப்படி அக்னியானவன், கட்டைகளினாலும், புற்களினாலும் திருப்தியடைவதில்லையோ, அப்படியே ஹனூமானும் ராக்ஷசேந்திரர்கள் கொல்லப்படுவதில் திருப்தியடைந்தானில்லை. ஹனூமானால் கொல்லப்பட்ட ராக்ஷசர்களைக் கொண்டு வசுந்தரையும் {பூமியும்} திருப்தியடைந்தாளில்லை.(28,29அ) வஹ்னியின் சிகைகள் {அக்னியின் தழல்கள்}, சில இடங்களில் கிம்சுகங்களை {பலாசம்பூக்களைப்} போலவும், சில இடங்களில் சால்மலி {இலவம்பூ} மொட்டுகளைப் போலவும், சில இடங்களில் குங்குமங்களை {குங்குமப்பூக்களைப்} போலவும் ஒளிர்ந்தன.(29ஆ,30அ) உருத்திரன் {எரித்த} திரிபுரத்தைப் போல, வேகவானும், மஹாத்மாவுமான வானரன் ஹனூமந்தனால் அந்த லங்காபுரம் எரிக்கப்பட்டது.(30ஆ,இ)
வேகவானான ஹனூமதனால் மூட்டப்பட்ட அக்னி, லங்காபுரம் அமைந்திருந்த {திரிகூட} பர்வத உச்சியில் நெருப்பு வளையங்களுடன் ஒளிர்ந்தபடியே பீமபராக்கிரமத்துடன் எழுந்தது.(31) பவனங்களில் மூட்டப்பட்ட அக்னி, மாருதனுடன் சேர்ந்து, புகையில்லாத ஒளியுடன் கூடியதாக, ராக்ஷச சரீரங்களை நெய்யாகக் கொண்டு பெருகுவதாக, யுகாந்த கால அனலனுக்கு {அக்னிக்குத்} துல்லியமான வேகத்துடன் வானத்தை முட்டும் அளவுக்கு வளர்ந்தது.(32) கோடி சூரியர்களுக்கு நிகரான பிரபையுடன் கூடிய மஹா அக்னி, அண்டத்தைப் பிளப்பது போல, அனேக அசனிகளின் {இடிகளின்} சப்தத்துடன் மொத்த லங்கையையும் சூழ்ந்து எரித்தது.(33) கடும் பிரபையைக் கொண்ட அக்னி, அங்கே அம்பரத்தில் {வானத்தில்} அதிகமாக வளர்ந்து, கிம்சுக புஷ்பத்தின் {பலாசம்பூவின்} முகட்டைப் போல் விளங்கியது. எரிந்து தணியும் நெருப்பின் புகைப்படலத்தால் மறைக்கப்பட்ட மேகங்கள், நீலோத்பலம் போன்ற நிறமுடையவையாக பிரகாசித்தன.(34)
"இவன் வானரன் அல்லன். வஜ்ரந்தரித்த மஹேந்திரனாகவோ, சாக்ஷாத் யமனாகவோ, வருணனாகவோ, அநிலனாகவோ {வாயுவாகவோ}, அக்னியாகவோ, ருத்திரனாகவோ, அர்க்கனாகவோ {சூரியனாகவோ}, தனதனாகவோ {குபேரனாகவோ}, சோமனாகவோ இருக்க வேண்டும். அல்லது உடல்கொண்டு வந்த காலனாக இருக்க வேண்டும்.(35) அனைவரின் பிதாமஹனும் {பெரும்பாட்டனும்}, அனைத்தையும் படைத்தவனும், சதுர்முகனுமான பிரம்மனின் பெருங்கோபமே, ராக்ஷசர்களை சம்ஹாரம் செய்ய வானர ரூபந்தரித்து வந்திருக்கிறதா என்ன?(36) அல்லது, சிந்தனைக்கு அப்பாற்பட்டதும், புலப்படாததும், அந்தமற்றதும், இணையற்றதுமான பரம வைஷ்ணவ தேஜஸ்ஸே {விஷ்ணுவின் மேலான சக்தியே}, தன் மாயையால் ராக்ஷசர்களின் நாசத்திற்காக இப்போது கபிரூபமேற்று {குரங்கின் வடிவை ஏற்று} வந்திருக்கிறதா என்ன?"(37) என்ற சிறந்த ராக்ஷசகணங்கள் {ராக்ஷசக் கூட்டத்தினர்} அனைவரும், பிராணிசங்கத்துடனும் {உயிரினங்களின் கூட்டத்துடனும்}, கிருஹங்களுடனும், விருக்ஷங்களுடனும் கூடிய அந்த புரீ விரைவாக எரிக்கப்பட்டதைக் கண்டு, கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து அங்கே பேசிக் கொண்டனர்.(38)
அப்போது, ராக்ஷசர்கள், அஷ்வங்கள், ரதங்கள், நாகங்கள் {யானைகள்}, பக்ஷி சங்கங்கள், மிருகங்கள், விருக்ஷங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து, திடீரென எரிக்கப்பட்ட லங்கையானவள், ஆரவார சப்தத்துடனும் தீனமாக அழுதாள்.(39) இராக்ஷசர்கள், கோர ஆரவாரத்துடன் பயங்கரமாக சப்தமிட்டபடியே பல்வேறு வகைகளில் {பின்வருமாறு} சொன்னார்கள், "ஹா தாதா {ஐயோ தந்தையே}, ஹா புத்ரகா {அன்புக்குரிய மகனே}, காந்தரே {கணவரே}, மித்ரா {நண்பா}, ஹா போகம் நிறைந்த புண்ணிய ஜீவிதமே" {என்றனர் ராக்ஷசர்கள்}.(40) பலமிக்க ஹனூமதனின் குரோதத்தில் வீழ்ந்தவளும், ஹுதாசனனின் ஜுவாலைகளால் சூழப்பட்டவளும், கொல்லப்பட்ட வீரர்களுடனும், பின்வாங்கும் போர்வீரர்களுடனும் கூடியவளுமான லங்கையானவள், சாபத்தால் பீடிக்கப்பட்டவளைப் போலத் தெரிந்தாள்.(41)
மஹாமனம் கொண்ட ஹனுமான், குழம்பியவர்களும், பயந்தவர்களும், விசனத்தில் இருப்பவர்களுமான ராக்ஷசர்களுடன் கூடியதாக, ஹுதாசனனின் ஜுவாலைகளால் சூழப்பட்டு, ஸ்வயம்பூவின் {பிரம்மனின்} கோபத்தால் அழிக்கப்படும் அவனியை {பூமியைப்} போல, லங்கையைக் கண்டான்.(42) பவனாத்மஜனும், கபியுமான ஹனூமான், சிறந்த மரங்கள் நிறைந்த வனத்தை பங்கம் செய்து, போரில் மஹத்தான ராக்ஷசர்களை ஹதம் செய்து, கிருஹரத்னங்களை மாலையாக {சிறந்த மாளிகைகளை வரிசையாகக்} கொண்ட அந்தப் புரீயை எரித்துவிட்டு அமைதியடைந்தான்.(43) எரியும் லாங்கூலத்தால் {வாலால்} உண்டான நெருப்பு மாலையுடன் கூடிய வானர ராஜசிம்மன் {ஹனுமான்}, கதிர்களையே மாலையாகக் கொண்ட ஆதித்யனைப் போல் ஒளிர்ந்தபடியே, விசித்திரமான திரிகூட சிருங்கத்தின் தலத்தில் {திரிகூட மலைச் சிகரத்தின் உச்சியில்} நின்று கொண்டிருந்தான்.(44)
அந்த மஹாத்மா {ஹனுமான்}, அந்த ராக்ஷசர்களில் பலரைக் கொன்றுவிட்டு, பல்வேறு மரங்களுடன் கூடிய அந்த வனத்தையும் முறித்துவிட்டு, ராக்ஷச பவனங்களில் அக்னியை வீசிவிட்டு, மனத்தால் ராமனிடம் சென்றான்.(45) அப்போது, வானர வீரர்களில் முக்கியனும், மஹாபலம் பொருந்தியவனும், மாருதனுக்குத் துல்லியமான வேகத்தைக் கொண்டவனும், மஹாமதிபடைத்தவர்களில் மிகச் சிறந்தவனுமான அந்த வாயுசுதனை {வாயு மைந்தன் ஹனுமானை} தேவகணங்கள் அனைத்தும் துதித்தன.(46) மஹாதேஜஸ்வியான மஹாகபி {ஹனுமான்}, வனத்தை பங்கம் செய்து, போரில் ராக்ஷசர்களை ஹதம் செய்து, ரம்மியமான லங்காபுரியை எரித்துவிட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தான்[2].(47)
[2] தர்மாலயப் பதிப்பில், "மஹாபலவானான வானரோத்தமர் லங்கையை எல்லாம் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, அப்பொழுது வாலின் தீயை ஸமுத்திரத்தில் தோய்த்து அணையச் செய்தார்" என்றிருக்கிறது. இச்செய்தி பல பதிப்புகளில் இடம்பெறுகிறது. சில பதிப்புகளில் இடம்பெறவில்லை.
தேவர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும், கந்தர்வர்களும் அங்கே அந்த லங்காம்புரீ எரிவதைக் கண்டு பரம ஆச்சரியம் அடைந்தனர்.(48) மஹாகபியும், வானரசிரேஷ்டனுமான அந்த ஹனுமந்தனைக் கண்ட சர்வ பூதங்களும், காலாக்னி என்று நினைத்து அஞ்சி நடுங்கின.(49) அங்கே சர்வ தேவர்களும், முனிபுங்கவர்களும், கந்தர்வ, வித்யாதர, நாக, யக்ஷர்களும், மஹத்தான பூதங்கள் அனைத்தும் ஒப்பற்ற ரூபத்திலான பரமபிரீதியை அடைந்தனர்.(50)
சுந்தர காண்டம் சர்க்கம் – 54ல் உள்ள சுலோகங்கள்: 50
Previous | | Sanskrit | | English | | Next |