Tara | Kishkindha-Kanda-Sarga-15 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் நோக்கத்தில் ஐயுற்ற தாரை; இராமனுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டியது; போரிடச் செல்வதில் இருந்து வாலியைத் தடுத்தது...
அப்போது அந்தப்புரத்தில் இருந்தவனும், பொறுமையற்றவனுமான வாலி, மஹாத்மாவும், தன்னுடன் பிறந்தவனுமான சுக்ரீவனின் அந்தப் பெரும் நாதத்தைக் கேட்டான்.(1) சர்வ பூதங்களையும் {உயிரினங்கள் அனைத்தையும்} பெரிதும் நடுங்கச் செய்த அந்தப் பெரும் நாதத்தைக் கேட்ட அதே நேரத்தில் அவனது மதம் நஷ்டமடைந்து {குடிமயக்கம் தொலைந்து}, மஹா குரோதம் எழுந்தது.(2) அப்போது, கனகப் பிரபையுடனும் {பொன் போன்ற பிரகாசத்துடனும்} கூடிய அந்த வாலி, கோபத்தால் பீடிக்கப்பட்ட அங்கங்களுடன் செவ்வண்ணம் அடைந்த சூரியனைப் போல உடனே பிரபையற்றவன் {ஒளியற்றவன்} ஆனான்.(3) கோரைப் பற்களுடன் கூடியவனும், குரோதத்தால் எரியும் அக்னியைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான வாலி, பிடுங்கி எறியப்பட்ட பத்மங்களுடனும், தண்டுகளுடனும் கூடிய மடுவைப் போலிருந்தான்.(4) அந்த ஹரி {குரங்கான வாலி}, பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சப்தத்தைக் கேட்டு, மேதினியைப் பிளப்பது போல வேகநடை நடந்து வெளிப்பட்டான்.(5)
அச்சத்தால் கலக்கமடைந்த தாரை, நட்பை வெளிப்படுத்தும் வகையில் அவனை சினேஹத்துடன் அணைத்துக் கொண்டு, ஹிதத்தை {நன்மையை} விளைவிக்கும் இந்தச் சொற்களைச் சொன்னாள்:(6) "வீரரே, நதி வேகத்தைப் போல் வரும் இந்தக் குரோதத்தை, காலையில் சயனத்தில் இருந்து எழும்போது {கைவிடும்} சூடிக்கழித்த பூமாலையைப் போல நல்லபடியாகக் கைவிடுவீராக.(7) வானரரே, அவருடன் {சுக்ரீவருடன், நாளை} காலையில் போரில் ஈடுபடுவீராக[1]. வீரரே, இதில் சத்ருவுக்குப் பெருமையோ, உமக்கு சிறுமையோ இல்லை.(8) உடனே நீர் வெளியே செல்வது எனக்குப் பிடிக்கவில்லை. எதன் நிமித்தம் உம்மைத் தடுக்கிறேன் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(9)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அடுத்த நாள் காலையில் போரிடுவது என்றால் சுக்ரீவன் அங்கே மாலை வேளையில் வந்திருக்கிறான். இதை சிலர் ஏற்பதில்லை. அவர்கள் கால்யம் என்ற சொல்லுக்கு வேறு பொருளைத் தருகிறார்கள்" என்றிருக்கிறது.
அவர் {சுக்ரீவர்}, பூர்வத்தில் குரோதத்தில் வீழ்ந்து, உம்மை யுத்தத்திற்கு அழைத்தார். நீரும் வெளியே சென்று விரட்டினீர். உம்மால் புடைக்கப்பட்டுத் திசைகளெங்கும் ஓடிச் சென்றார்.(10) உம்மால் விரட்டப்பட்டவரும், விசேஷமாக பீடிக்கப்பட்டவருமான அவர், இங்கே மீண்டும் வந்து அழைப்பது என்னில் சந்தேகத்தை விளைவிக்கிறது.(11) பெரும்நாதம் செய்பவரின் ஆணவம், முயற்சி, ஆவேச வெறி ஆகியவற்றுக்கு அற்ப காரணம் இருக்க முடியாது.(12) சுக்ரீவர், சஹாயம் ஏதும் இல்லாமல் இங்கே வந்திருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. பெரும் சஹாயத்தைத் திரட்டிக் கொண்டு, அதைச் சார்ந்தே அவர் கர்ஜிக்கிறார்.(13) வானரர்களில் இயல்பிலேயே நிபுணரும், புத்திமானுமான சுக்ரீவர், ஒருவனின் வீரியத்தை பரீக்ஷிக்காமல் ஸக்யம் {கூட்டணி / நட்பு வைத்துக்} கொள்ள மாட்டார்.(14)
வீரரே, பூர்வத்திலேயே {நம்} குமாரன் அங்கதன் சொன்ன கதையை {செய்தியைக்} கேட்டிருக்கிறேன். ஹிதமான {நன்மையை விளைவிக்கும்} சொல்லை இதோ சொல்லப் போகிறேன்.(15) வனத்தின் உள்ளே சென்று வந்த இந்தக் குமாரன் அங்கதன், தன் சாரர்கள் {ஒற்றர்கள்} மூலம் அறிந்த கதையை {செய்தியை} உள்ளபடியே சொன்னான்.(16) இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவர்களும், அயோத்தியாதிபதியின் புத்திரர்களும், சமரில் ஜயிக்கப்பட முடியாதவர்களும், தாக்கப்பட முடியாதவர்களுமான ராமலக்ஷ்மணர்கள் என்ற இரு சூரர்கள், சுக்ரீவரின் விருப்பத்திற்குரிய ஆசையை நிறைவேற்றுவதற்காக இங்கே வந்திருக்கின்றனர்.(17,18அ) உதிக்கும் யுகாந்த {யுக முடிவில் எழும்} அக்னியைப் போலப் பிறர் பலத்தை அழித்து, ரண கர்மங்களில் {போர்ச்செயல்பாடுகளில்} ஆர்ப்பரிப்பவனான ராமன், உம்முடன் பிறந்தவருக்கு {சுக்ரீவருக்கு} சஹாயனாக இருக்கிறான்[2].(18ஆ,19அ)
[2] கொற்றவ நின் பெருங் குவவுத் தோள் வலிக்குஇற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான்பெற்றிலன் பெருந்திறல் பெயர்த்தும் போர் செயற்குஉற்றது நெடுந்துணை உடைமையால் என்றாள்- கம்பராமாயணம் 3956ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: "கொற்றவனே {வெற்றியை உடையவனே}, உன் பெருமைமிக்கத் திரண்ட தோள்களின் வலிமைக்கு முன்பு வலிமை அழிந்து வருத்தமுற்று சென்றவன் {சுக்ரீவன்}, புதிதாகப் பேராற்றலைப் பெறவில்லை என்றாலும், மீண்டும் போர் செய்ய வந்தது பெருந்துணையைக் கொண்டமையால்" என்றாள் {தாரை}.
சாதுக்கள் உறையும் விருக்ஷமாகவும் {நல்லவர்கள் அண்டும் மரமாகவும்}, துன்புற்றோரின் பரம கதியாகவும், திக்கற்றோரின் நல்ல காப்பிடமாகவும், புகழின் ஒரே கொள்ளிடமாகவும் அவன் இருக்கிறான்.(19ஆ,20அ) ஞானத்துடனும், விஜ்ஞானத்துடனும் கூடிய அவன், பிதாவின் ஆணையில் உறுதியாக நின்று, தாதுக்குளுக்கு சைலேந்திரனை {மலைகளின் மன்னனான ஹிமவானைப்} போல {நல்ல} குணங்களின் மஹத்தான சுரங்கமாகத் திகழ்கிறான்.(20ஆ,21அ) எனவே, ரணகர்மங்களில் ஜயிக்கப்பட முடியாதவனும், அளவிடப்பட முடியாதவனும், மஹாத்மாவுமான அந்த ராமனுடன் நீர் விரோதம் கொள்வது பொறுத்துக் கொள்ளத்தக்கதல்ல.(21ஆ,22அ)
சூரரே, நான் ஒன்றைச் சொல்கிறேன். உமது கோபத்தைத் தூண்டும் விருப்பம் ஏதும் எனக்கில்லை. உமக்கு ஹிதமானதையே சொல்கிறேன். கேட்டுச் செயல்படுவீராக.(22ஆ,23அ) வீரரே, ராஜாவே, உடனே சுக்ரீவரை யௌவராஜ்ஜியத்தில் {இளவரசராக} நல்ல முறையில் அபிஷேகம் செய்விப்பீராக. தம்பியுடன் மோத வேண்டாம்.(23ஆ,24அ) வைரத்தை தூரத்தில் விட்டுவிட்டு, சுக்ரீவருடன் ஒற்றுமையையும், அந்த ராமனுடன் நட்பையும் நீர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.(24ஆ,25அ) தம்பியான அந்த வானரரை {சுக்ரீவரை} நீர் சீராட்டி வளர்ப்பதே தகும். அவர் இங்கிருந்தாலும் {கிஷ்கிந்தையில் இருந்தாலும்}, அங்கிருந்தாலும் {ரிச்யமூகத்தில் இருந்தாலும்}, எங்கிருந்தாலும் உமது பந்துவே ஆவார்.(25ஆ,26அ)
அவருக்கு {சுக்ரீவருக்கு} சமமான பந்து எவரையும் புவியில் நான் பார்க்கவில்லை. இந்த வைரத்தை முற்றிலும் கைவிடுவீராக. தானம், மானம் முதலிய சத்காரங்களை {கொடை / செல்வம், கௌரவம் முதலிய நற்காரியங்களைச்} செய்த பிறகு, அவரை உமதருகிலேயே வைத்துக் கொள்வீராக.(26ஆ,27) அகன்ற கிரீவம் {கழுத்தைக்} கொண்ட சுக்ரீவர், உமது மஹத்தான பந்துவாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். உடன் பிறந்த நட்பை நம்புவதே உமக்குத் தகும். இனி வேறு வழியில்லை.(28) நீர் எனக்குப் பிரிய காரியம் செய்வதாக இருந்தால், ஹிதம் செய்பவளாக என்னைக் கருதினால், பிரியத்துவத்தால் யாசிக்கிறேன் {அந்த அன்பினால் வேண்டுகிறேன்}, என் வாக்கியங்களின் படி நல்லன செய்வீராக.(29) அருள்கூர்ந்து, பத்தியம் போன்ற என் பேச்சைக் கேட்பீராக. கோபத்தை மட்டுமே தொடர்வது உமக்குத் தகாது. சக்ரனுக்கு {இந்திரனுக்கு} சமமான தேஜஸ்ஸைக் கொண்ட கோசலராஜன் மகனுடன் {ராமனுடன்} நீர் மோதுவது உண்மையில் பொறுத்துக்கொள்ளத் தக்கதல்ல" {என்றாள் தாரை}.(30)
தாரை, அந்த வாலியிடம் ஹிதமான, பத்தியமான இந்த வாக்கியங்களைச் சொன்ன பிறகு, காலனின் கைவசப்பட்டு, விநாச {அழிவுக்} காலத்தை அடைந்தவனான அவனுக்கு {வாலிக்குத் தாரையின்} அந்தச் சொற்கள் பிடிக்கவில்லை.(31)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 15ல் உள்ள சுலோகங்கள்: 31
Previous | | Sanskrit | | English | | Next |