The reason for enmity | Kishkindha-Kanda-Sarga-08 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வாலி மீது கொண்ட அச்சத்தால் தான் அடைந்த நிலையைச் சொன்ன சுக்ரீவன்; பகையின் உண்மைக் காரணத்தைத் தெரிவிக்கக் கேட்ட ராமன்...
அந்த வாக்கியங்களைக் கேட்டு மகிழ்ச்சியும், நிறைவுமடைந்த சுக்ரீவன், லக்ஷ்மணனின் அண்ணனான அந்த சூரனிடம் {ராமனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "நற்குணங்கள் அமையப்பெற்ற நீர் என் சகாவாக இருக்கும்போது, நான் எல்லாவகையிலும் தேவதைகளின் அனுக்கிரகத்துக்குத் தகுந்தவனாவேன் என்பதில் சந்தேகமில்லை.(2) அனகரே {பாவமற்றவரே}, ராமரே, உமது சஹாயத்துடன் ஸுரராஜ்யத்தையுங்கூட {தேவர்களின் அரசையும்} அடைவது சாத்தியம் எனும்போது, என் ராஜ்ஜியத்தைக் குறித்து என்ன சொல்வது?(3) அக்னிசாட்சியாக ராகவவம்சரை மித்திரராக {ரகு குலத்தில் பிறந்த உம்மை நண்பராக} அடைந்த நான், பந்துக்கள், நல்லிதயம் கொண்ட நண்பர்கள் ஆகியோரின் மத்தியில் மதிப்பிற்குரியவன் ஆகியிருக்கிறேன்.(4)
நானும் உமக்குப் பொருத்தமான வயஸ்யன் {நண்பன்} என்பதை மெல்ல நீர் அறிவீர். ஆத்ம {என்} குணங்களை உம்மிடம் சொல்லும் அளவுக்கு நான் சமர்த்தனில்லை.(5) மஹாத்மாக்களின் பிரீதியானது {அன்பானது}, ஆத்மவானும் {ஆத்மாவில் நிலைத்தவரும்}, கிருதாத்மருமான {தற்கட்டுப்பாட்டைக் கொண்டவருமான} உம்மைப் போன்றவர்களின் தைரியத்தைப் போல சலனமற்றதாக {மாற்றமற்றதாக} இருக்கிறது.(6) ரஜதமோ {வெள்ளியோ}, சுவர்ணமோ {தங்கமோ}, சுபமான ஆபரணங்களோ, அவற்றை சாதுக்களின் {நல்லவர்களின்} மத்தியில் சாதுக்கள் {நல்லவர்கள்} பிரித்துப் பார்க்க மாட்டார்கள்.(7) வளமானவனோ, தரித்திரனோ, துக்கமடைந்தவனோ, சுகித்திருப்பவனோ, தோஷமற்றவனோ {குற்றமற்றவனோ}, தோஷமுள்ளவனோ ஒரு வயஸ்யனே {நண்பனே} பரம கதியாவான்.(8) அனகரே {பாபமற்றவரே}, அந்தவித சினேஹத்தைக் கண்டால், வயஸ்யனின் {நண்பனின்} பொருட்டு, தனத்தைக் கைவிடுவதும், சுகத்தைக் கைவிடுவதும், தேசத்தை {இடத்தைக்} கைவிடுவதுங்கூட செய்யத்தக்கதே" {என்றான் சுக்ரீவன்}.(9)
இராமன், வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான மதிமிக்கவனும், ஒளிமிக்கவனுமான லக்ஷ்மணனின் முன்பு, பிரிய தரிசனந்தந்த சுக்ரீவனிடம், "இஃது இவ்வாறே இருக்கிறது" என்று சொன்னான்.(10)
அப்போது சுக்ரீவன், ராமனும், மஹாபலவானான லக்ஷ்மணனும் நின்று கொண்டிருப்பதைக் கண்டு, வனத்தைச் சுற்றிலும் தன் கண்களைச் சுழற்றிப் பார்த்தான்.(11) பிறகு அந்த ஹரீஷ்வரன் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவன்}, நன்கு புஷ்பித்திருந்ததும், இலைகள் சிலவற்றுடன் கூடியதும், தேனீக்கள் நிறைந்ததுமான ஒரு சால மரத்தை அருகினில் கண்டான்.(12) சுக்ரீவன், அதில் இலைகள் பலவற்றுடன் கூடிய ஓர் அழகிய சாகையை {கிளையை} முறித்து, ராமனுக்காகப் பரப்பி அந்த ராகவனுடன் சேர்ந்து அமர்ந்தான்.(13) அப்போது, அவர்கள் இருவரும் அமர்ந்ததைக் கண்ட ஹனுமான், சால சாகை ஒன்றை முறித்து, வினீதனான லக்ஷ்மணனை அதில் அமரச் செய்தான்[1].(14)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகமும், 18, 19, 20 சுலோகங்களைப் போல ஒன்றாகத் தெரியும் இன்னும் சிலவும், இந்த காண்டத்தின் 5ம் சர்க்கத்தில் உள்ள சிலவும், இந்தச் செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதைச் சொல்கின்றன. ராமனும், லக்ஷ்மணனும் நிற்கும்போதெல்லாம், குரங்குகள் மரங்களின் கிளைகளை முறித்து, அதன் இலைகளைப் பாயாக விரித்து மதிப்புடன் ராமனை அதில் சுகமாக அமரச் செய்கின்றன. சுக்ரீவனின் துன்பத்தையும், ராமனின் உறுதிமொழியையும் சொல்லும் சில சுலோகங்களும், குரங்குகளின் ஐயத்தைத் தீர்க்க மீண்டும் மீண்டும் ராமன் உறுதி கூறுவதைக் குறிப்பிடுகின்றன" என்றிருக்கிறது.
அப்போது சுக்ரீவன், பல புஷ்பங்களும், கனிகளும் நிறைந்த அந்த உத்தம கிரியில், கடல் போன்ற அமைதியுடன் சுகமாக அமர்ந்திருந்த ராமனிடம், மகிழ்ச்சியும், உற்சாகமும் கலந்த மென்மையான, மதுரமான சொற்களில் அன்புடன் {பின்வருமாறு} சொன்னான்:(15,16) "உடன் பிறந்தவனால் அவமதிக்கப்பட்டவனும், பயத்தால் பீடிக்கப்பட்டவனுமான நான், பாரியை {ருமை என்ற என் மனைவி} அபகரிக்கப்பட்டவனாக, கிரிவரமான ரிச்யமூகத்தில் துக்கத்துடன் திரிந்து வருகிறேன்.(17) இராகவரே, உடன்பிறந்த வாலியால் வஞ்சிக்கப்பட்டு, வைரியாக்கப்பட்டிருக்கும் நான், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மனங்கலங்கி திகிலுடன் இங்கே வசித்து வருகிறேன்.(18) சர்வலோகத்திற்கும் அபயம் அளிப்பவரே, வாலியிடம் கொண்ட பயத்தால் ஆதரவற்று அநாதையைப் போலிருக்கும் எனக்கு அருள்புரிவது உமக்குத் தகும்" {என்றான் சுக்ரீவன்}.(19)
இவ்வாறு சொல்லப்பட்டதும், தேஜஸ்வியும், தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, தர்மவத்ஸலனுமான {தர்மத்தை விரும்புகிறவனுமான} அந்தக் காகுத்ஸ்தன், புன்னகைப்பவனைப் போல சுக்ரீவனிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(20) "உபகாரத்தின் பலனே மித்ரம் {உதவி செய்வதன் பலனே நட்பு}, பகைவனின் லக்ஷணம் அபகாரமாகும் {தீங்கிழைத்தலாகும்}. உன் பாரியையை {மனைவியான ருமையை} அபகரித்தவனை இன்றே நான் வதம் செய்ய விரும்புகிறேன்.(21) மஹாபாக்கியவானே, சிறகுகளைக் கொண்டவையான என்னுடைய இந்தச் சரங்கள், பளபளக்கும் தேஜஸ் கொண்டவை; கார்த்திகேய வனத்தில் தோன்றியவை[2]; ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டவை; கங்க {கழுகு} இறகுகள் பூட்டப்பட்டவை; மஹேந்திரனின் அசனிக்கு {இந்திரனின் இடிக்கு / வஜ்ரத்திற்கு} ஒப்பானவை; நல்ல கணுக்களைக் கொண்டவை; மிகக் கூர்மையான முனைகளைக் கொண்டவை; ரோஷங்கொண்ட புஜகங்களை {சீறும் சர்ப்பங்களைப்} போன்றவையுமாகும்.(22,23) மித்ரனல்லாதவனும், தீமையைச் செய்தவனும், உன்னுடன் பிறந்தானுமான வாலி என்ற பெயரைக் கொண்டவன், இந்த சரங்களால் கொல்லப்பட்டு, பர்வதம் போல் பிளந்து கிடப்பதை நீ {விரைவில்} பார்ப்பாய்" {என்றான் ராமன்}.(24)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கார்த்திகேயனின் கதையையும், அவனது தோற்றத்தையும் பாலகாண்டம் 37ம் சர்க்கத்தில் காண்க" என்றிருக்கிறது.
வாஹினிபதியான சுக்ரீவன், ராகவனின் சொற்களைக் கேட்டு, பெரிதும் மகிழ்ச்சியடைந்து, "சாது, சாது {நன்று, நன்று}" என்று சொன்னான்.(25) மேலும் அவன், "இராமரே, நான் சோகத்தில் மூழ்கியிருக்கிறேன். சோகத்தில் புலம்புகிறவர்களுக்கு நீரே கதி. வயஸ்யத்தை {நட்பை} ஏற்படுத்திக் கொண்டதாலேயே உண்மையில் நான் இவற்றை உம்மிடம் வெளிப்படுத்துகிறேன் {என் துயரங்களை உம் முன் வெளிப்படுத்துகிறேன்}.(26) கையைக் கொடுத்து அக்னி சாட்சியாக எனக்கு வயஸ்யராகிவிட்ட நீர், என்னுயிரினும் மேலானவர் என்று நான் சத்தியத்தின் மீது சபதமேற்கிறேன்.(27) இவ்வாறு வயஸ்யராகக் கருதுவதால் நம்பிக்கையுடன் அனைத்தையும் {யாதொன்றையும் மறைக்காமல்} தெளிவாகச் சொல்கிறேன். எது அந்தரங்கமான துக்கமோ, அது மனத்தை ஓயாமல் உருக்குகிறது" {என்றான் சுக்ரீவன்}.(28)
அவன் {சுக்ரீவன்} இவ்வளவு சொற்களைச் சொன்னதும், அவனது கண்களில் கண்ணீர் பெருகியது. கண்ணீரால் குரல் தடைபட்டு, உரக்கப் பேச இயலாதவனானான்.(29) சுக்ரீவன், ராமனின் சன்னிதியில் {முன்னிலையில்} நதி வேகத்துடன் திடீரென வந்த கண்ணீரின் வேகத்தைத் தைரியத்துடன் அடக்கினான்.(30) தேஜஸ்வியான அவன், அந்தக் கண்ணீரை அடக்கி, தன் சுப நயனங்களை {கண்களைத்} துடைத்துக் கொண்டு, பெருமூச்சுவிட்டபடியே மீண்டும் ராகவனிடம் {இந்த} வாக்கியங்களைச் சொன்னான்:(31) "பூர்வத்தில் பலவந்தமாக வாலியால் என் ராஜ்ஜியத்தில் இருந்து இறக்கப்பட்டேன். மேலும் கடுஞ்சொற்களைக் கேட்கச் செய்யப்பட்டு, அங்கிருந்து நான் விரட்டப்பட்டேன்.(32) பிராணனைவிட மதிப்புமிக்க என் பாரியையை {மனைவியான ருமையை} அவன் பறித்துக் கொண்டான். என்னுடைய நண்பர்களையும் சிறையில் அடைத்துவிட்டான்.(33) இராகவரே, அந்த துஷ்டாத்மா என்னை அழிப்பதற்கான முயற்சிகளையும் பலமுறை செய்தான். அவனால் அனுப்பப்பட்ட வானரர்களை நான் கொன்றேன்.(34)
இராகவரே, பயத்தில் அனைத்திலும் பீதி கொண்ட அதே சந்தேகத்துடனே உம்மைக் கண்டும் நான் நெருங்காமல் இருந்தேன்.(35) இந்த ஹனுமானும், சில பிரமுகர்களும் மட்டுமே எனக்கு சஹாயம் செய்கின்றனர். இவர்களாலேயே இந்த இன்னல்களுக்கு மத்தியிலும் நான் உயிரைத் தரித்திருக்கிறேன்.(36) சினேகத்துடன் கூடிய இந்த கபிக்களே {குரங்குகளே} எங்கும் என்னை ரக்ஷிக்கிறார்கள். நான் எங்கே சென்றாலும் உடன் வருகிறார்கள். நான் இருக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.(37) இராமரே, இதுவே என் சுருக்கமான கதை. உமக்கு விஸ்தாரமாகச் சொல்வதில் என்ன இருக்கிறது? பௌருஷத்திற்கு {ஆற்றலுக்குப்} புகழ்பெற்றவனும், என் அண்ணனுமான அந்த வாலி என் பகைவனாவான்.(38) அவனது அழிவால் மட்டுமே என் துக்கம் துடைக்கப்படும். மேலும் என் சுகமான ஜீவிதமும் அவனது அழிவிலேயே இருக்கிறது.(39) சோகத்தால் பீடிக்கப்பட்டவனான என்னால் என் சோகத்தின் முடிவும் சொல்லப்பட்டது. சகாவுக்காக துக்கிப்பவனோ, சுகிப்பவனோ எவ்வாறிருப்பினும் நித்தியம் சகாவே கதியாவான்" {என்றான் சுக்ரீவன்}.(40)
சுக்ரீவனின் சொற்கள் அனைத்தையும் கேட்ட ராமன், இவ்வாறு சொன்னான், "எதன் நிமித்தம் வைரம் உண்டானது என்ற தத்துவத்தை {உண்மையைக்} கேட்க விரும்புகிறேன்.(41) வானரா, உங்கள் வைரத்தின் காரணத்தைக் கேட்டு, அதன் பலாபலத்தை {பலம், பலவீனங்களைக்} கருத்தில் கொண்ட பிறகு வேண்டியதை சுகமாகச் செய்வேன்.(42) நீ அவமதிக்கப்பட்டதைக் கேட்டதனால் என் ஹிருதயம் நடுங்குகிறது. என் கோபம் மழைக்காலத்தின் நீரைப் போல வேகமாக வளர்கிறது.(43) நான் தனுவை உயர்த்தி பாணத்தை ஏவுவதற்கு முன்பே உன் பகைவன் அழிந்துவிடுவான் என்ற மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் {அனைத்தையும்} சொல்வாயாக" {என்றான் ராமன்}.(44)
மஹாத்மாவான காகுத்ஸ்தன் {ராமன்} இவ்வாறு சொன்னதும், நான்கு வானரர்களுடன் கூடிய அந்த சுக்ரீவன், ஒப்பற்ற பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(45) பிறகு மகிழ்ச்சியான வதனத்துடன் கூடிய சுக்ரீவன், அந்த லக்ஷ்மணாக்ரஜனிடம் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமனிடம்}, வைரத்திற்கான காரணத் தத்துவத்தை {உண்மைக் காரணத்தைச்} சொல்லத் தொடங்கினான்.(46)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 08ல் உள்ள சுலோகங்கள்: 46
Previous | | Sanskrit | | English | | Next |