She dropped the ornament pack down | Kishkindha-Kanda-Sarga-06 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையை ராவணன் அபகரித்தது குறித்துச் சொல்லி, சீதை வீசியெறிந்த மேலாடையையும், ஆபரணங்களையும் காட்டிய சுக்ரீவன்; அவற்றை அடையாளங்கண்டு அழுத ராமன்...
பிரீதியுடன் கூடிய சுக்ரீவன், மீண்டும் ரகுநந்தனனான ராகவனிடம் {பின்வருமாறு} பேசினான், "இராமரே, நீரும், உம்முடன் பிறந்த லக்ஷ்மணரும், எதன் நிமித்தம் ஜனங்களற்ற வனத்திற்கு வந்தீர்கள் என்பதை, உமது சேவகனும், என் மந்திரிசத்தமனும் {சிறந்த மந்திரியுமான} இந்த ஹனுமான் சொன்னான். வனத்தில் வசித்து வருகையில், உமது பாரியையின் {மனைவியான சீதையின்} அருகில் நீரும், மதிமிக்கவரான லக்ஷ்மணரும் இல்லாதபோது, அழுது கொண்டிருந்தவளும், ஜனகாத்மஜையுமான மைதிலியை ஒரு ராக்ஷசன் அபகரித்தான்.(1-3) அவன் {ராக்ஷசன்}, சரியான நேரத்திற்காகக் காத்திருந்து, கிருத்ரனான {கழுகான} ஜடாயுவைக் கொன்றான். பாரியையை {மனைவியான சீதையை உம்மிடமிருந்து} பிரித்து, அந்த ராக்ஷசன் உம்மை துக்கமடையச் செய்தான்.(4)
உமது பாரியையைப் பிரிந்த துக்கத்தில் இருந்து விரைவில் விடுபடுவீராக. நஷ்டமான {தொலைந்து போன} வேதசுருதியைப் போல, நான் அவளை மீட்டு வருவேன்[1].(5) அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, ரசாதலத்தில் {பாதாளத்தில்} இருந்தாலும், நபஸ்தலத்தில் {வானத்தில்} இருந்தாலும், நான் உமது பாரியையைக் கொண்டு வந்து உம்மிடம் கொடுப்பேன்.(6) இராகவரே, என்னுடைய இந்த சொற்கள் உண்மையானவை என்பதை அறிவீராக. மஹாபாஹுவே, உமது பாரியையானவள் {மனைவியான சீதை}, விஷம் கலந்த பக்ஷியத்தை {உணவைப்} போல, இந்திரன் முதலிய ஸுராஸுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும்} செரிக்கப்பட சாத்தியமற்றவள் ஆவாள்.(7,8அ)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மதுகைடபர்கள் வேதங்களை அபகரித்த போது, மத்ஸ்ய {மீன்} அவதாரம் எடுத்து, அவற்றைக் காத்த விஷ்ணுவைக் குறிப்பிடுகிறான் {சுக்ரீவன்}" என்றிருக்கிறது. வேதங்களை மீட்ட அந்த விஷ்ணுவைப் போலத் தானும் சீதையை மீட்பேன் என்று ராமனிடம் சுக்ரீவன் சொல்கிறான்.
மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவரே}, சோகத்தைக் கைவிடுவீராக. அந்த காந்தையை {சீதையை} உம்மிடம் கொண்டு வருவேன். ரௌத்திரக் கர்மங்களைச் செய்பவனான ராக்ஷசனால் கடத்தப்பட்டபோது, "இராமரே, ராமரே" என்றும், "இலக்ஷ்மணரே" என்றும் பெருங்குரலில் அழுது கொண்டே, பன்னகேந்திரனின் {பாம்புகளின் தலைவனுடைய} மனைவியைப் போல, ராவணனின் இடையில் நடுங்கிக் கொண்டிருந்தவளை நான் கண்டேன். அவளே மைதிலி {மிதிலை இளவரசியான சீதை} என்று அனுமானத்தால் அறிகிறேனென்றாலும் எனக்கு அதில் சந்தேகமில்லை.(8ஆ-10) சைல தலத்தில் பஞ்சமனாக {மலையில் ஐந்தாமவனாக} நான் நின்று கொண்டிருந்த போது, என்னைக் கண்டவள், தன் உத்தரீயத்தையும் {மேலாடையையும்}, சுபமான ஆபரணங்களையும் கீழே போட்டாள்.(11) அவற்றை நாங்கள் எடுத்துப் பாதுகாப்பாக வைத்தோம்[2]. நான் அவற்றைக் கொண்டு வருகிறேன்; அடையாளங்காண்பீராக" {என்றான் சுக்ரீவன்}.(12)
[2] இவ்வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடைவெவ்வழி இராவணன் கொணர மேலைநாள்செவ்வழி நோக்கி நின் தேவியே கொலாம்கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள்உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோகுழைபொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம்மழைபொரு கண் இணை வாரியோடு தன்இழை பொதிந்து இட்டனள் யாங்கள் ஏற்றனம்- கம்பராமாயணம் 3902, 3903ம் பாடல்கள், கலன் காண் படலம்பொருள்: இந்த வழியில் நாங்கள் கூடியிருந்த ஒரு சமயத்தில், முன்னொரு நாளில், கொடிய வழியில் செல்பவனான ராவணன் கொண்டு வந்தது உன் தேவிதானோ? அவள் நெடுந்தூரத்தில் வானத்தில் உள்ளவளாக நேரான வழியைப் பார்த்துத் துன்பத்தில் கதறி அழுதாள்.(3902) தூதர்களைப் போல நாங்கள் உணர்த்துவோம் என்று நினைத்தாளோ? காதணியோடு போரிடும் நீண்ட கண்களை உடையவள் கருதியதை அறிந்தோமில்லை. தன் ஆபரணங்களைப் பொதிந்து, மழை போல இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கியபடி கீழே இட்டனள், நாங்களும் ஏற்றோம்.(3903)
அப்போது ராமன், பிரியவாதம் செய்து கொண்டிருந்த சுக்ரீவனிடம் {பின்வருமாறு} சொன்னான், "சகாவே, சீக்கிரம் கொண்டுவருவாயாக. தாமதிப்பதற்கான அர்த்தம் என்ன {எதற்காக}?" {என்றான்}.(13)
இவ்வாறு சொல்லப்பட்டதும், சுக்ரீவன், ராகவனின் {ராமனின்} பிரியத்தை நிறைவேற்றுவதற்காக முழைகள் {குகைப்பகுதிகள்} நிறைந்த குகைக்குள் சீக்கிரமே பிரவேசித்தான்.(14) உத்தரீயத்தையும் {மேலாடையையும்}, மங்கல ஆபரணங்களையும் கொண்டு வந்து, "இதைப் பார்ப்பீராக" என்று ராமனிடம் அந்த வானரன் {சுக்ரீவன்} காட்டினான்.(15)
வஸ்திரத்தையும், சுபமான ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டவன் {ராமன்}, பனியால் மூடப்பட்ட சந்திரனைப் போல கண்ணீரால் நிறைந்தான்.(16) அவன் {ராமன்}, சீதையிடம் கொண்ட சினேகத்தால் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ஹா, பிரியே {அன்பே}" என்று அழுது, தைரியத்தைக் கைவிட்டுத் தரையில் விழுந்தான்.(17) அவன், அலங்காரத்திற்கு உத்தமமானவற்றை {அலங்காரத்திற்குச் சிறந்த சீதையின் ஆபரணங்களை} பலமுறை ஹிருதயத்திற்கு நெருக்கமாக வைத்துக் கொண்டு {அணைத்துக் கொண்டு}, புற்றிலிருக்கும் சர்ப்பத்தைப் போல, கோபம் நிறைந்தவனாக அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(18)
முடிவிலா கண்ணீரைப் பெருக்கிய ராமன், தன் அருகில் இருந்த சௌமித்ரியை {லக்ஷ்மணனைப்} பார்த்து {பின்வருமாறு} தீனமாக அழுது புலம்பினான்:(19) "இலக்ஷ்மணா, கடத்தப்பட்டபோது, வைதேஹியின் சரீரத்தில் இருந்து பூமியில் விழுந்த இந்த உத்தரீயத்தையும் {மேலாடையையும்}, பூஷணங்களையும் {ஆபரணங்களையும்} பார்ப்பாயாக.(20) கடத்தப்படுகையில் சீதை வீசிய இந்த பூஷணங்கள், பூமியின் பசும்புற்களில் விழுந்ததாலேயே {வடிவங்குலையாமல்} அதே ரூபத்தில் இருக்கின்றன என்று நிச்சயமாகத் தெரிகிறது" {என்றான் ராமன்}.(21)
இராமன் இவ்வாறு சொன்னதும், லக்ஷ்மணன் இந்த வாக்கியங்களைச் சொன்னான், "நான் {சீதையின் கைகளில் அணியும்} கேயூரங்களை அறிய மாட்டேன். நான் {காதுகளில் அணியும்} குண்டலங்களை அறிய மாட்டேன். நித்தியம் {சீதையின்} பாதங்களையே வணங்குவதால் {கால்களில் அணியும்} நூபரங்களை மட்டுமே நான் அறிகிறேன்[3]" {என்றான் லக்ஷ்மணன்}.(22,23அ)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது கொண்டாடப்படுவதும், சர்ச்சைக்குரியதுமான ஒரு சுலோகமாகும். இது பண்டைய கையெழுத்துப் பிரதிகளிலோ, பரோடா பதிப்பிலோ காணப்படவில்லை. சுந்தரகாண்டத்தில், {அசோகவனத்தில்} சிறைபிடிக்கப்பட்டுக் கிடக்கும் சீதையின் ஆபரணங்களைக் குறித்து ஒரு பட்டியல் ஹனுமானால் விவரிக்கப்படுகிறது. ஆனால் இங்கே, அத்தகைய பட்டியல் எதுவும் சொல்லப்படவில்லை. எனினும் லக்ஷ்மணன், தனக்கு சீதையின் மேல் உடல் ஆபரணங்களைத் தெரியாது என்பதும், "கணுக்கால்களில் அணியும் ஆபரணத்தை அறிந்திருக்கிறேன்" என்று சொல்வதும், அவன் எப்போதும் அவளது பாதங்களை வணங்கியிருக்கிறான் என்பதையே காட்டுகிறது. மரபுவாதிகள், கைங்கர்யம் என்ற தன்மையை, லக்ஷ்மணனின் குணத்திற்கு அர்ப்பணித்து, இந்த சுலோகத்தைக் கொண்டே அதை {கைங்கர்யத்தை} லக்ஷ்மணனின் குணாதிசயமாக நிறுவுகின்றனர். இலக்ஷ்மணன் சீதையைத் தன் மாதாக்களில் ஒருத்தியாகக் கருதுகிறான். அண்ணனின் மனைவி மற்றொரு அன்னையே" என்றிருக்கிறது.
அப்போது அந்த ராகவன் {ராமன்}, சுக்ரீவனிடம் தீனமாக இதைச் சொன்னான், "பிராணனை விடப் பிரியத்திற்குரிய என் பிரியையை {சீதையை}, நீ கவனித்தபோது, ரௌத்திர ரூபங்கொண்ட அந்த ராக்ஷசன் {ராவணன்}, எந்த தேசத்திற்கு {இடத்திற்கு} கடத்திச் சென்றான் என்பதைச் சொல்வாயாக.(23ஆ,24) நான் எதன் நிமித்தம் சர்வ ராக்ஷசர்களையும் அழிக்க விரும்புகிறேனோ, அந்த மஹத்தான வியசனத்தை {துன்பத்தை} எனக்கு உண்டாக்கியவன் எங்கே வசிக்கிறான்?(25) எவன் மைதிலியைக் கடத்தியதன் மூலம் எனக்குக் கோபத்தை விளைவித்தானோ, அந்த ஜீவிதம் முடிந்தவன் நிச்சயம் மிருத்யுவின் துவாரத்தை {மரணத்தின் கதவுகளைத்} திறந்துவிட்டான்.(26) பிலவகபதியே {தாவிச் செல்லும் குரங்கினத்தின் தலைவனான சுக்ரீவா}, எந்த ரஜனிசரன் {இரவுலாவி}, அனைத்தைக் காட்டிலும் என் அன்புக்குரியவளைத் துன்புறுத்தி வனத்தில் கடத்தினானோ, அந்தப் பகைவனைக் குறித்து என்னிடம் சொல்வாயாக. இன்றே நிச்சயம் அவனை யமனின் சந்நிதிக்கு அனுப்பிவைப்பேன்" {என்றான் ராமன்}.(27)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 06ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |