She received him | Aranya-Kanda-Sarga-46 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: முனிவரின் தோற்றத்தில் வந்த ராவணன்; சீதையைப் புகழ்ந்து அவளைக் குறித்து விசாரிப்பது; இராவணனை துறவியாகக் கருதி பூஜித்த சீதை...
அவள் {சீதை, இவ்வாறு} கடுமையாகப் பேசியதும் அந்த ராகவானுஜன் {ராமனின் தம்பியான லக்ஷ்மணன்} பெருங்கோபத்துடனும், ஏக்கத்துடனும் தாமதம் செய்யாமல் ராமனிடம் சென்றான்.(1) அப்போது தசக்ரீவன் {பத்து கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, தன்னை மறைத்துக் கொண்டு, பரிவ்ராஜக ரூபத்தை {நாடு கடந்து அலைந்து திரியும் துறவியின் வடிவைத்} தரித்துக் கொண்டு சீக்கிரமாக வைதேஹியை நோக்கி அங்கே வந்தான்.(2) பிறகு மென்மையான காஷாயமும் {காவி உடையும்}, சிகையும் {குடுமியும்}, குடையும் தரித்து, {மரப்} பாதுகைகளை அணிந்து, இடது தோளில் சுபமான திரிதண்டத்தையும், கமண்டலத்தையும் வைத்துக் கொண்டு பரிவ்ராஜக ரூபத்தில் {நாடோடியான துறவியின் வடிவில்} வைதேஹியை நோக்கி வந்தான்.(3,4அ) அந்த அதிபலவான், சூரிய சந்திரர்கள் இல்லாத சந்தியா வேளையை {அடையும்} மஹத்தான தமஸை {பேரிருளைப்} போல சகோதரர்களான அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள்} இல்லாமல் வனத்தில் தனியாக இருந்த அவளை அடைந்தான்.(4ஆ,5அ) அப்போது அந்த அதிபயங்கரன், சசியை {சந்திரனைப்} பிரிந்த ரோஹிணியை பாபகிரஹம் {செவ்வாய், பார்ப்பதைப்} போலப் புகழ்மிக்க ராஜபுத்திரியும் {ராம பத்தினியும்}[1], இளம்பருவத்தினளுமான அவளைக் கண்டான்.(5ஆ,6அ)
[1] சில பதிப்புகளில் ராஜபுத்திரியென்றும், சில பதிப்புகளில் ராம பத்தினி என்றும் இருக்கிறது.
உக்கிர பாப கர்மங்களைச் செய்பவனான அவனை {ராவணனைக்} கண்டு ஜனஸ்தானத்தில் இருந்த மரங்களும் அசையாமல் இருந்தன, மாருதனும் வீசாதிருந்தான் {காற்று வீசாதிருந்தது}.(6ஆ,7அ) சீக்கிரமாகப் பாயும் கோதாவரி நதியும், சிவந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அவனைக் கண்ட பயத்தில் அமைதியாகச் செல்ல ஆரம்பித்தாள்[2].(7ஆ,8அ) இராமன் இல்லாத நேரத்திற்காகக் காத்திருந்த தசக்ரீவன் ராவணன், அவனில்லாத அந்த வேளையில், பிக்ஷுவின் ரூபத்தில் வைதேஹியை அணுகினான்.(8ஆ,9அ) அந்த பவ்யமில்லாதவன் {மதிப்பும், பணிவும் அற்றவனான ராவணன்}, பர்த்தாவை {கணவனைக்} குறித்து யோசித்துக் கொண்டிருந்த வைதேஹியிடம், சனைச்சரன் சித்திரையைப் போல {தயங்கி மெதுவாக நடக்கும் சனி சித்திரை நட்சத்திரத்தை நெருங்குவதைப் போல}, பவ்யமான ரூபத்தில் {மதிப்புமிக்க அடக்கமான வடிவத்தில்} நெருங்கினான்.(9ஆ,10அ)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மரங்கள், காற்று, ஆறு ஆகியவற்றின் எதிர்வினைகள் பாலகாண்டத்தில் 1:15:10ல் சொல்லப்பட்டுள்ளன" என்றிருக்கிறது. அதாவது, "சூரியன் அவனை வாட்டுவதில்லை, மாருதன் {வாயு} அவன்மீது வேகமாக வீசுவதில்லை, அலைகளின் தலைவனான சமுத்திரனும் அவனைக் கண்டு அலைபாய்வதில்லை" என்றிருக்கிறது.
புற்களால் {மறைக்கப்பட்ட} கிணற்றைப் போல, பவ்ய ரூபத்தால் தன்னை மறைத்துக் கொண்டவன் {ராவணன்}, புகழ்பெற்றவளும், ராம பத்தினியுமான வைதேஹியைக் கண்டு திகைத்து நின்றான்.(10ஆ,11அ) இராவணன், அங்கேயே நின்று ராமனின் பத்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது மகிழ்ச்சிமிக்கவனும், துஷ்ட மனத்துடன் கூடியவனுமான அந்த நிசாசரன் {இரவுலாவி}, மங்கலமானவளும், அழகிய பற்களையும், உதடுகளையும் கொண்டவளும், பூர்ண சந்திரனுக்கு ஒப்பான முகத்தைக் கொண்டவளும், பர்ணசாலையில் சோகத்துடன் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவளும், பத்ம இதழ் போன்ற கண்களைக் கொண்டவளும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவளுமான அந்த வைதேஹியை நெருங்கினான்.(11ஆ-13) காமனின் சரங்களால் {மன்மத பாணங்களால்} பீடிக்கப்பட்ட அந்த ராக்ஷசாதிபன் அவளை {ராவணன் சீதையைக்} கண்டு, பிரம்ம கோஷங்களை உதிர்த்துக் கொண்டு, யாருமில்லாமல் இருப்பவளிடம் {சீதையிடம்} பணிவான குரலில் இந்த வாக்கியங்களைச் சொன்னான்.(14)
மூவுலகங்களிலும் உத்தமியும் {சிறந்தவளும்}, பத்மங்கள் இல்லாத ஸ்ரீயை {தாமரை இல்லாத லட்சுமியைப்} போன்றவளும், ஒளிரும் உடலுடன் கூடியவளுமான அவளை {சீதையை} ராவணன் {பின்வருமாறு} புகழ்ந்தான்:(15) "காஞ்சன வர்ணத்தில் {பொன்னிறத்தில்} ஒளிர்பவளே, மஞ்சள் பட்டாடை உடுத்தியவளே, கமலங்களால் {தாமரைகளால்} அலங்கரிக்கப்பட்ட பத்மினீயை {தாமரை ஓடையைப்} போல மங்கல மாலை சூடியவளே, நீ யார்?(16) மங்கல முகம் படைத்தவளே, அழகு பொருந்தியவளே, ஹ்ரீ {மதிப்பு}, கீர்த்தி {புகழ்}, ஸ்ரீ {செழிப்பு, ஆகியவற்றின் வடிவாக} ஆகத் திகழ்பவளா?[3] சுப லக்ஷ்மியா? அப்சரஸ்ஸா? {நற்பேறளிக்கும் தேவியான} பூதியா? ஸ்வைரசாரிணியான {விருப்பம் போல் திரியும்} ரதியா?(17)
[3] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "நீ வெட்கத்தின் வடிவமான ஹ்ரீயா? புகழின் வடிவமான கீர்த்தியா? மங்கல செல்வத்தின் வடிவமான ஸ்ரீயா?" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "மலைமகளா? கலைமகளா? இந்திராணியா?" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நிலமகளோ, பூமகளோ, நாமகளோ" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹ்ரீ என்பது பணிவின் வடிவம், கீர்த்தி என்பது செயல்களின் வடிவம், பூதி என்பது நற்பேற்றை அருள்பவள். ரதி, மன்மதனின் மனைவியாவாள். விருப்பம் போல் திரிபவள் என்பது ஆண் தெய்வத் துணையில்லாத ரதியைக் குறிக்கிறது" என்றிருக்கிறது.
உன் பற்கள் சமமாகவும், அதன் நுனிகள் மலர்மொட்டுகளைப் போல மென்மையாகவும் இருக்கின்றன. வெண்மையாகவும், களங்கமில்லாமலும் இருக்கும் உன் விசாலமான நேத்திரங்களின் ஓரங்கள் {கடைக்கண்கள்} சிவந்திருக்கின்றன, அதன் தாரகைகள் {விழிகள்} கரியனவாக இருக்கின்றன.(18) உன் நிதம்பங்கள் {பின்புறங்கள்} விசாலமாக பருத்து இருக்கின்றன. வழுவழுப்பான உன் தொடைகள் கரிகரத்திற்கு {யானையின் துதிக்கைகளுக்கு} ஒப்பானவையாகத் திகழ்கின்றன. இதோ பருத்து, உருண்டு, திரண்டு, ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு விம்மி நிற்பவையும்,{19} புடைத்துத் துருத்திக் கொண்டிருக்கும் காம்புகளுடனும், விருப்பத்திற்குரிய பனம்பழங்களுக்கு ஒப்பான மென்மையுடனும் கூடியவையும், மணிகள் பதித்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான உன்னுடைய பாற்குடங்கள் {மார்புகள்} இரண்டும் அழகாக இருக்கின்றன.(19,20)
சாருஸ்மிதே {அழகிய புன்னகையைக் கொண்டவளே}, சாருததி {அழகிய பற்களைக் கொண்டவளே}, சாருநேத்ரே {அழகிய கண்களைக் கொண்டவளே}, விலாசினி {அழகிய பெண்ணே}, நதியானது, நீரால் தன் கரைகளை {அழித்துக் கொள்வதைப்} போல என் மனத்தைக் கொள்ளையிடும் அழகியே, கைப்பிடியளவு இடையைக் கொண்டவளே, அழகிய கேசம் உடையவளே, பிதுங்கும் ஸ்தனங்களைக் கொண்டவளே,(21,22அ) மஹீதலத்தில் இத்தகைய ரூபம் கொண்ட நாரீயை {பெண்ணை} நான் பூர்வத்தில் கண்டதில்லை; தேவிகளிலும் இல்லை; கந்தர்விகளிலும் இல்லை; யக்ஷிகளிலும் இல்லை; கின்னரிகளிலும் கண்டதில்லை.(22ஆ,23அ) உலகங்களில் முதன்மையான ரூபத்துடன் கூடியவளும், அழகும், இளமையும் நிறைந்தவளுமான உன்னுடைய இந்த காந்தார வாசம் என் சித்தத்தை உன்மத்தங்கொள்ளச் செய்கிறது {நீ இந்த அடர்ந்த காட்டில் வசிப்பது என்னை பைத்தியமாக்குகிறது}.(23ஆ,24அ)
இத்தகையவளான நீ, திரும்பிச்சென்று நலமாக இருப்பாயாக. இங்கே நீ வசிப்பது உனக்குத் தகாது. இது கோரமானவர்களும், காமரூபிகளுமான {நினைத்த வடிவம் எடுக்கவல்லவர்களுமான} ராக்ஷசர்களின் வசிப்பிடமாகும்.(24ஆ,25அ) செழிப்புடன் கூடிய நகரங்களின் தோட்டங்களும், ரம்மியமான மேன்மணிமாடங்களும், நறுமணமிக்க உபவனங்களும் மட்டுமே நீ இருப்பதற்குத் தகுந்தவை.(25ஆ,26அ) கருவிழிகளைக் கொண்டவளே, சோபனையே {அழகில் பிரகாசிப்பவளே}, சிறந்த மாலைகள், சிறந்த கந்தம் {நறுமணப் பொருள்கள்}, சிறந்த வஸ்திரம் {உடை} ஆகியவற்றுக்கும், சிறந்த பர்த்தாவுக்கும் {கணவனுக்கும்} மட்டுமே நீ தகுந்தவள் என்று நான் கருதுகிறேன்.(26ஆ,27அ) அழகிய புன்னகையையும், இடையையும் கொண்டவளே, நீ யார் என்பதைச் சொல். ருத்திரர்கள், மருதர்கள், வசுக்களுக்கு உரியவளா? எனக்கு நீ தேவியாகத் தோன்றுகிறாய்.(27ஆ,28அ)
இங்கே கந்தர்வர்கள் வருவதில்லை; தேவர்களோ, கின்னரர்களோ வருவதில்லை. இது ராக்ஷசர்களின் வசிப்பிடம். நீ எப்படி இங்கே வந்தாய்?(28ஆ,29அ) இங்கே கிளைகளில் அமரும் மிருகங்கள் {குரங்குகள்}, சிங்கங்கள், துவீபிகள் {சிறுத்தைகள்}, வியாகரங்கள் {புலிகள்} உள்ளிட்ட மிருகங்களும், ரிக்ஷங்கள் {கரடிகள்}, ஓநாய்கள், கழுகுகள் ஆகியவற்றின் அச்சமில்லாமல் எப்படி இருக்கிறாய்?(29ஆ,30அ) சிறந்த முகத்தைக் கொண்டவளே, மதங்கொண்டவையும், கோரமானவையும், வலிமைமிக்கவையுமான குஞ்சரங்கள் {யானைகள்}, மஹாரண்யத்தில் தனியாக இருக்கும் உன்னை அச்சுறுத்தவில்லையா?(30ஆ,31அ) கல்யாணி {மங்கலமானவளே}, நீ யார்? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாய்? இராக்ஷசர்களால் சேவிக்கப்படும் கோரமான தண்டகத்தில் தனியாக எந்நிமித்தம் {எதன் காரணமாகத்} திரிந்து கொண்டிருக்கிறாய்" {என்று கேட்டான் ராவணன்}.(31ஆ,32அ)
துராத்மாவான ராவணன், இவ்வாறு புகழ்ந்த போது, மைதிலியும், வைதேஹியுமான அவள் {சீதை}, துவிஜாதி {இருபிறப்பாள வகையினரின்} வேஷத்தில் வந்திருந்த அந்த ராவணனைக் கண்டு, சர்வ அதிதி சத்காரங்களுடன் {விருந்தினருக்குரிய அனைத்து மரியாதைகளுடன் அவனை} பூஜிக்கத் தொடங்கினாள்.(32ஆ,33) பிறகு, முதலில் ஆசனத்தையும், பாத்யத்தையும் {கால் கழுவுவதற்கான நீரையும்} கொடுத்து வரவேற்று[4], மென்மையான தோற்றத்துடன் இருந்த அவனிடம், "இதோ சித்தமாக {பிச்சை தயாராக} இருக்கிறது" என்று சொன்னாள்.(34) பிறகு அந்த மைதிலி {மிதிலை இளவரசி}, பாத்திரத்துடனும், காவி உடையுடனும் கூடிய துவிஜாதி வேஷத்தில் வந்தவன் {ராவணன்}, பிராமணனைப் போலிருப்பதைக் கண்டு, திட்டவட்டமாக வெறுப்பதற்கான காரணமேதும் {உபாயமேதும் / அபாயமேதும்} காணாமல்[5] {பிராமணனை அழைப்பது போல் பின்வருமாறு} அழைத்தாள்:(35) "பிராமணரே, இதோ தர்ப்பைப் பாய், சுகமாக அமர்வீராக. இதோ பாத்யம், இதை ஏற்றுக் கொள்வீராக. இதோ வனத்தில் விளைந்த உத்தம விளைச்சல் {பழங்கள், கிழங்குகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள்}. இவை உமக்காக சித்தமாக இருக்கின்றன. இனி ஓய்வுடன் புசிப்பீராக" {என்றாள் சீதை}[5].(36)
[4] தோகையும் அவ்வழி தோம் இல் சிந்தனைச்சேகு அறு நோன்பினர் என்னும் சிந்தையால்பாகு இயல் கிளவியாள் பவளக் கொம்பர் போன்றுஏகுமின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள்.- கம்பராமாயணம் 3343ம் பாடல், இராவணன் சூழ்ச்சிப் படலம்பொருள்: சீதையும் அவ்வனத்தில் குற்றமற்ற மனத்தையும், குற்றமற்ற விரதத்தையும் உடையவர் என்று {அவனைக் குறித்துச் சிந்தித்தாள்}. பாகு போன்ற சொற்களை உடையவளும், பவளக் கொம்பு போல் அழகை உடையவளுமான சீதை "இங்கே எழுந்தருள்க" என்று முன்னே வந்து வரவேற்றாள்.
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பிலுள்ள அடிக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு, "இங்கே சில பதிப்புகளில் "உபாயமேதும் காணாமல்" என்றும், சில பதிப்புகளில் "அபாயமேதும் காணாமல்" என்றும் இருக்கிறது. இதன் காரணமாக சீதை முதலிலேயே ராவணனைப் போலி பிராமணன் என்று கண்டுபிடித்துவிட்டதாகச் சிலரும், அவ்வாறு அவள் அடையாளம் காணவில்லை என்று சிலரும் சொல்கின்றனர். ஒரு சந்நியாசி ராத்திரியில் அலைவது, வாகனங்களைப் பயன்படுத்துவது, பெண்கள் தொடர்பான காரியங்களில் ஆர்வம் காட்டுது, பெண்களுடன் பழகுவது, படுக்கையில் தூங்குவது, வெள்ளை உடை தரிப்பது ஆகியவை அவனது வீழ்ச்சியைக் குறிக்கும். ராவணன் பெண் வர்ணனை செய்கிறான் என்பதால் மிதிலையில் வளர்ந்த சீதை இதை எளிதாகக் கண்டுபிடித்திருப்பாள். அதனால்தான் வால்மீகி மைதிலி என்ற பெயரை இங்கே குறிப்பிடுகிறார் என்று சொல்கின்றனர். சரி கண்டுவிட்டாள் என்றால், ஏன் அவனை அனுப்பாமல் பிச்சையிட்டுக் கொண்டிருக்கிறாள்? ராமன் வருவது வரை காலந்தாழ்த்த அவ்வாறு காத்திருந்தாள் என்று சொல்கிறார்கள்" என்றிருக்கிறது. இருப்பினும் சீதை இத்தருணத்தில் ராவணனின் போலித் தோற்றத்தைக் கண்டுபிடித்து விட்டதாகத் தெரியவில்லை. அடுத்த சர்க்கத்தின் 2ம் சுலோகம் அதை உறுதி செய்கிறது.
இப்படி அழைக்கப்பட்ட ராவணன், பிரதிபூர்ணமாக பேசும் நரேந்திர பத்தினியான மைதிலியை ஆராய்ந்து, தன் ஆத்ம வதத்தின் {தன் அழிவின்} பொருட்டு, அவளை பலவந்தமாகக் கவர்ந்து செல்வதில் தன் மனத்தை திடங்கொள்ளச் செய்தான்.(37) அப்போது வேட்டைக்குச் சென்ற அழகிய உடல் படைத்த தன் பதி {தன் கணவன் ராமன்}, லக்ஷ்மணனுடன் வருவான் என எதிர்பார்த்துக் காத்திருந்தவள் {சீதை}, அந்த மஹத்தான வனத்தின் பசுமையையன்றி ராமலக்ஷ்மணர்களைக் கண்டாளில்லை.(38)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 46ல் உள்ள சுலோகங்கள்: 38
Previous | | Sanskrit | | English | | Next |