Maricha killed | Aranya-Kanda-Sarga-44 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மாய மானை விரட்டிச் சென்று கைப்பற்ற முடியாமல் அதைக் கொன்ற ராமன்; இராமனின் குரலில் சீதையையும், லக்ஷ்மணனையும் அழைத்த மான்; மானின் மரணம்...
மஹாதேஜஸ்வியான அந்த ரகுநந்தனன் {ராமன்}, தன்னுடன் பிறந்தானிடம் {லக்ஷ்மணனிடம்} இவ்வாறு தெளிவாகச் சொல்லிவிட்டு, ஜாம்பூநத {தங்கக்} கைப்பிடியுடன் கூடிய வாளைத் தன் இடையில் கட்டிக் கொண்டான்.(1) பிறகு, வெல்லப்பட முடியாத அந்த விக்கிரமனானவன் {ராமன்}, தன்னை அலங்கரிப்பதும், மூவிடங்களில் வளைந்துள்ளதுமான வில்லை எடுத்துக் கொண்டு[1], இரண்டு கலாபங்களையும் {தூணிகளையும்} முதுகில் கட்டிக் கொண்டு புறப்பட்டுச் சென்றான்.(2) அந்த மிருகம் {ராக்ஷசன் மாரீசன் ஏற்றிருந்த மான்}, தன்னை நோக்கி வரும் ராஜேந்திரனான அவனை {ராமனை} உற்று நோக்கிவிட்டு, அவனை வஞ்சிப்பதற்காக அச்சத்துடன் மறைவதும், பார்வைக்குப் புலப்படுவதுமாக இருந்தது. இராமன் வாளைக் கட்டிக் கொண்டும், தனுவையும் எடுத்துக் கொண்டும் அந்த மிருகம் இருக்குமிடத்திற்கு விரைந்து சென்றான்.(3,4அ)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் வில் சிறப்புமிக்கதாகும். இரண்டு வளைவுகளுக்குப் பதில், அது மூன்று வளைவுகளைக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "தனக்கு அலங்காரமாய் விளங்கும் மூன்றிடங்களில் வளைந்துள்ள கோதண்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "மூன்று வளைவுள்ள கோதண்டத்தையுந் திருக்கரத்திலேந்தி" என்றிருக்கிறது. இங்கே மூலத்தில் எவ்விடத்திலும் கோதண்டம் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.
தனுஷ்பாணியாக இருக்கும் தன்னைக் கண்டு, மஹாவனத்தில் ஓடும் அதை {அந்த மானை}, ரூபத்தால் மேம்பட்டு ஜொலிப்பதாகவும், சில சமயங்களில் கணைகளின் பாய்ச்சலுக்கு அஞ்சி அதிக தூரம் ஓடிவிட்டதாகவும், நெருங்கி ஆசை காட்டுவதாகவும், சந்தேஹங்கொண்டதாகவும், கலக்கமிக்கதாகவும், அம்பரத்தில் {ஆகாயத்தில்} துள்ளிக் குதிப்பதாகவும், சிதறிக் கிடக்கும் மேகங்களால் சூழப்பட்ட சாரத {கூதிர் கால} சந்திர மண்டலத்தைப் போல வனத்தின் சில இடங்களில் பார்வைக்குப் புலனாகிறதாகவும், {வேறு சில இடங்களில் புலனாகாது} மறைந்து போகிறதாகவும் கண்டான்.(4ஆ-7அ) மிருகத் தன்மையை அடைந்தவனான அந்த மாரீசன், ஒரு முஹூர்த்த காலம் இவ்வாறே {ராமனால்} தூரத்தில் பிரகாசிப்பவனாகக் காணப்பட்டான். பிறகு மீண்டும் காணப்படாமலும், காணப்பட்டும் இருந்தான். இவ்வாறே ராமன் தன் ஆசிரமத்திலிருந்து வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டான்.(7ஆ,8)
அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்}, ஆசைகாட்டி வஞ்சிக்கப்பட்டதால் மெய்மறந்து, குரோதத்தை அடைந்து, களைப்புமிக்கவனாகி நிழலை நாடி புல்தரையில் நின்றான்.(9) மிருக ரூபத்தில் இருந்த அந்த நிசாசரன் {இரவுலாவியான மாரீசன்}, இவ்வாறு அவனை வெறிகொள்ளச் செய்த பிறகு, வனமிருகங்களால் {காட்டு மான்களால்} சூழப்பட்டவனாகத் திடீரென சமீபத்திலேயே தென்பட்டான்.(10) அவன், தன்னைக் கைப்பற்றும் ஆசையுடன் இருப்பவனை {ராமனை} மீண்டும் கண்டு, அவனை நோக்கி ஓடிய அதே க்ஷணத்தில் மீண்டும் திகிலுடன் மறைந்து போனான்.(11) பிறகு மஹாதேஜஸ்வியான ராமன், தூரத்தில் அடர்த்தியான மரங்களை விட்டு வெளிப்படுவதை கண்டு, அதைக் கொல்வதெனும் உறுதியான நிச்சயத்தை அடைந்தான்.(12)
அப்போது, பலவானான ராகவன் {ராமன்}, முன்னிலும் அதிக கோபத்தை அடைந்து, சூரியக் கதிர்களுக்கு ஒப்பான பிரகாசத்துடன் ஜொலிப்பதும், பகைவரை அழிக்கவல்லதுமான சரத்தை {கணையை} எடுத்து, உறுதிமிக்க வில்லில் பூட்டி, பலத்துடன் இழுத்து, பெருமூச்சுவிடும் பன்னகத்தை {பாம்பைப்} போன்ற ஒளியுடன் ஜொலிப்பதும், பிரம்மனால் கவனமாக உண்டாக்கப்பட்டதுமான அஸ்திரத்தை அந்த மிருகத்தைக் குறி பார்த்து விடுவித்தான்.(13-15அ) இடிக்கு ஒப்பான அந்த உத்தம சரம், அந்த மிருக ரூப சரீரத்தை ஆழமாகத் துளைத்து, மாரீசனின் ஹிருதயத்தைப் பிளந்தது.(15ஆ,16அ) அப்போது, சரத்தால் தாக்கப்பட்டு அற்ப ஜீவனுடன் {குற்றுயிருடன்} இருந்த அவன் {மாரீசன்}, பெரிதும் துன்புற்று, பைரவ நாதம் செய்து {பயங்கரப் பேரொலியுடன் முழங்கி}, பனையின் {பனைமரத்தின்} உயரத்திற்குக் குதித்து, தரணியில் விழுந்தான்.(16ஆ,17அ)
மாரீசன் மரிக்கும்போது, பொய்யுடலைக் கைவிட்டு, 'சீதை எவ்வாறு லக்ஷ்மணனை இங்கே அனுப்புவாள்? சூனியத்தில் அவளை ராவணன் எவ்வாறு அபகரிப்பான்?' என்பதை ஆலோசித்து, அந்த ராக்ஷசனின் {ராவணின்} சொற்களை நினைவுகூர்ந்தான்.(17ஆ,18) பிறகு அவன் பிராப்த {ஏற்ற} காலத்தை அறிந்து, ராகவனை நிகர்த்த குரலில், "ஹா சீதே, ஹா லக்ஷ்மணா" என்று கூச்சலிட்டான்[2].(19) அவனது {ராமனின்} ஒப்பற்ற சரம், அந்த மாரீசனின் மர்மங்களைப் பிளந்த போது, அந்த மிருக ரூபத்தைக் கைவிட்டவன், ராக்ஷச ரூபத்தை ஏற்று, பேருடல் படைத்தவனாகி ஜீவிதத்தைத் துறந்தான் {உயிரைவிட்டான்}.(20,21அ)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மாரீசன் ராவணனின் கூட்டாளி இல்லையென்றால், அவன் சொன்னது போல் லக்ஷ்மணனையும், சீதையையும் கூவி அழைக்காமல் இறந்திருக்கலாம். ஆனால் அவன் "ராவணனின் சொற்களை நினைவுகூர்ந்து, அது குறித்துச் சிந்தித்தான்" என்று இங்கே சொல்லப்படுகிறது. அவன் உண்மையில் ராவணனின் மரணத்தையே நினைத்திருக்கக்கூடும். மாரீசன் தன் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருப்பதால் {அவன் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்} ராவணனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் {ராவணன்} எதைச் செய்திருந்தாலும் அஃது அவனுக்கே பாதகமாக முடியும். எனவே, "ராவணனின் அழிவுக்காக ராவணன் சொன்னது போலவே நாம் செயல்படுவோம்" என்றே மாரீசன் நினைத்திருப்பான்" என்றிருக்கிறது.
பூமியில் விழுந்தவனும், பயங்கரத் தோற்றம் கொண்டவனும், உதிரத்தால் நனைந்த அங்கங்களைக் கொண்டவனும், மஹீதலத்தில் {தரையில்} புரண்டு கொண்டிருந்தவனுமான அந்த ராக்ஷசனை {மாரீசனைக்} கண்ட ராமன், லக்ஷ்மணன் சொன்னதை நினைத்து, மனத்தால் சீதையை அடைந்தான் {சீதையுடன் இருப்பது போல உணர்ந்தான்}.(21ஆ,22) "இந்த மாரீசனின் மாயையை லக்ஷ்மணன் முன்பே சொன்னான். அஃது அவ்வாறே நடந்தது; மாயம் செய்து கொல்லப்பட்டவன் எவனோ அவன் மாரீசனே.(23) அத்தகைய இந்த ராக்ஷசன் மரணிக்கும்போது, "ஹா சீதே, ஹா லக்ஷ்மணா" என்று கூச்சலிட்டதைக் கேட்டு சீதை என்ன ஆவாள்?{24} மஹாபாஹுவான லக்ஷ்மணனும் என்ன அவஸ்தையை அடைவான்" {என்று சிந்தித்தான் ராமன்}. தர்மாத்மாவான ராமன் இவ்வாறு சிந்தித்து {உண்டான அச்சத்தால்} மயிர்ச் சிலிர்ப்பை அடைந்தான்.(24,25) மிருக ரூபத்தில் இருந்த அந்த ராக்ஷசனைக் கொன்ற ராமன், {தன் குரலில்} அவன் கூச்சலிட்டத்தைக் கேட்டு, மனக்கசப்பில் பிறக்கும் தீவிர பயத்தை அடைந்தான்[3].(26) பிறகு அந்த ராகவன், மற்றொரு புள்ளிமானைக் கொன்று, அதன் மாமிசத்தை எடுத்துக் கொண்டு துரிதமாக ஜனஸ்தானத்தை நோக்கி விரைந்து சென்றான்[4].(27)
[3] புழைத்த வாளி உரம் புக புல்லியோன்இழைத்த மாயையின் என் குரலால் இசைத்துஅழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு செய்துமால்மழைக் கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான்.- கம்பராமாயணம் 3316ம் பாடல், மாரீசன் வதைப்படலம்பொருள்: "துளைத்த அம்பு உள்ளே புகுந்ததும் அந்த இழிந்தவன் இழைத்த மாயையால் என் குரலால் உரக்க அழைத்தானல்லவா? அது கேட்டு மழை போல் குளிர்ந்த கண்களை உடைய பேதை துன்பம் கொள்வாளே" என்று உள்ளம் வருந்தினான்.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், இந்த சர்க்கத்தின் அடியில், "மாரீசன் கதையைக் கேட்பதன் மூலம் உண்டாகும் பலன்கள்" என்ற தலைப்பில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது: "வேறு எந்த ராக்ஷசர்களின் வதத்தையும் போலவே மாரீசனின் மரணமும் கொண்டாடப்படுகிறது. இதைக் கேட்பதனாலோ, படிப்பதனாலோ புண்ணியம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பலன்கள் ராமாயணத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் இணையான உரைகளைக் கொண்ட ஸ்கந்த புராணம், ஆதியாத்ம ராமாயணம் முதலியவற்றில் சொல்லப்படுகிறது. மாரீசன் வதம் குறித்து ஆதியாத்ம ராமாயணம் பின்வருமாறு சொல்கிறது."தத் தே³ஹாத் உத்³தி⁴தம் தேஜ꞉ ஸர்வ லோகஸ்ய பஷ்²யத꞉ .ராமம் ஏவ ஆவிஷ²த் தே³வா꞉ விஸ்மயம் பரமம் ஜகு³꞉ ..கிம் கர்ம க்ருʼத்வா கிம் ப்ராப்த꞉ பாதகீ முநி ஹிம்ஸக꞉ .அத²வா ராக⁴வஸ்ய அயம் மஹிமா ந அத்ர ஸங்ஷ²ய꞉ ..த்³விஜோ வா ராக்ஷஸோ வா அபி பாபீ வா தா⁴ர்மிகோ வா .த்யஜன் கலேப³ரம் ராமம் ஸ்ம்ருʼத்வா யாதி பரமம் பத³ம் ..அனைத்து உலகங்களின் முன்னிலையில் அந்த தேஹத்தில் இருந்து தெய்வீக ஒளி உதித்தது. தேவர்கள் ராமனைக் கண்டு {பின்வருமாறு சொல்லி} பரம ஆச்சரியம் அடைந்தனர், "பாவப்பட்ட முனிவர்களை ஹிம்சித்தவன் என்ன கர்மம் செய்தான்? என்ன பிராப்தத்தை அடைந்தான்? இது ராகவனின் மகிமையல்லாமல் வேறில்லை. இதில் ஐயமில்லை" {என்று நினைத்த தேவர்கள்}, துவிஜனோ, ராக்ஷசனோ, பாபியோ, தார்மீகனோ எவனொருவன் தன் உடலைத் துறக்கையில் ராமனை நினைக்கிறானோ அவன் பரமபதத்தையே அடைகிறான்" என்று சொல்லி அருளிய தேவர்கள், ராமனால் மாரீசனின் ஆத்மா முக்தி அடைந்ததைக் கண்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்" என்று ஆதியாத்ம ராமாயணம் ஏழாம் சர்க்கத்தில் இருக்கிறது" என்றிருக்கிறது.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 44ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |