Monday, 27 March 2023

நிருதர் தீவினை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 37 (25)

The sin of the demons | Aranya-Kanda-Sarga-37 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை ஆகியோரின் குணங்களை ராவணனிடம் எடுத்துரைத்து, சீதையைக் கடத்தும் எண்ணத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்திய மாரீசன்...

Mareecha and Ravana

இராக்ஷசேந்திரனின் {ராவணனின்} அந்த வாக்கியங்களைக் கேட்டதும், வாக்கிய விசாரதனும் {வாக்கியங்களை அமைப்பதில் திறன்மிக்கவனும்}, பெரும் புத்திமானுமான மாரீசன் அந்த ராக்ஷசேசுவரனிடம் {பின்வருமாறு} மறுமொழிகூறினான்:(1) "இராஜாவே, பிரியவாதம் செய்யும் புருஷர்கள் {இனிமையாகப் பேசும் மனிதர்கள்} கிடைப்பது எப்போதும் சுலபமே. விரும்பத்தகாததாக இருந்தாலும் பத்தியமானதை {நன்மையளிப்பதைச்} சொல்பவனும், கேட்பவனும் கிடைப்பது துர்லபமே {அவர்கள் கிடைத்தற்கரியவர்களே}.(2) சாரர்கள் {ஒற்றர்கள்} இல்லாதவனான நீ சபலக்காரனாகவும் இருக்கிறாய். மஹாவீரியம் கொண்டவனும், உத்தம குணங்களைக் கொண்டவனும், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பானவனுமான ராமனை நீ நிச்சயம் புரிந்து கொள்ளமாட்டாய்.(3)

தாதா {ஐயா / குழந்தாய்}, புவியில் சர்வ ராக்ஷசர்களுக்கும் நலம் விளையுமா? ராமன் பெருங்குரோதம் அடைந்தால் உலகத்தை ராக்ஷசர்களற்றதாக்கிவிடுவான்.(4) ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை} உன் ஜீவிதத்தை முடித்து வைக்கவே பிறந்திருக்கிறாளா என்ன? சீதையின் நிமித்தம் மஹத்தான விசனம் உண்டாக வேண்டாம்[1].(5) அங்குசமின்றி {கட்டுப்பாடின்றி} விரும்பியவாறெல்லாம் செயல்படும் உன்னைப் போன்ற ஈசுவரனை அடைந்த அந்த ராக்ஷசாபுரி லங்கை உன்னோடு சேர்ந்து நாசமடையப் போகிறது.(6) விரும்பியவாறு செயல்படுபவனும், தீய நடத்தை கொண்டவனும், தீய வழிகளில் ஆலோசனை வழங்கப்பட்டவனும், துர்மதியாளனுமான உன்னைப் போன்ற எந்த ராஜாவும் தன்னையும், தன் சொந்த ஜனங்களையும், ராஷ்டிரத்தையும் அழித்துவிடுவான்[2].(7)

[1] வெவ்வேறு பதிப்புகளில், "இந்த சீதையின் நிமித்தம் எனக்குத் துன்பம் உண்டாகப்போகிறதா சொல்" என்றும் இந்த வாக்கியத்திற்குப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூலங்களில் "மஹத்தான விசனம்" என்பது, "மம விசனம்" என்றிருக்கிறது.

[2] யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன்
கோதை புனையாமுன் உயிர் கொள்ளைபடும் அன்றோ
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய்
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ

- கம்பராமாயணம் 3259ம் பாடல், மாரீசன் வதைப்படலம்

பொருள்: எதையும் முழுதும் அறியாதவன் நீ. எடுத்து சொல்லும் உரையையும் உணர மறுக்கிறாய். உன் பகையாக நீ கருதும் ராமன் போர் புரியத் தும்பை மாலையைச் சூடும் முன் அவன் பகைவர் உயிர் கொள்ளை போகும் அன்றோ? அறியாமை கொண்ட மதியால் இஃது ஒரு பெண்ணுருவம் என்று நீ மதியாதிருக்கிறாய். உண்மையில் அந்த சீதையின் வடிவமே அரக்கர் இழைத்த தீவினையின் {பாவத்தின்} வடிவம் அன்றோ.

கௌசல்யானந்தவர்தனன் {கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான ராமன்} தன் பிதாவால் முழுமையாகக் கைவிடப்பட்டவனல்லன்; மரியாதையற்றவனல்லன்; தீய நடத்தை கொண்டவனல்லன்; லுப்தனல்லன் {தன்னலம் கொண்டவனல்லன்}; க்ஷத்திரியர்களில் இழிந்தவனுமல்லன்; தர்ம குணங்களற்றவனல்லன்; பூதங்களிடம் {உயிரினங்களிடம்} கடுமையாக நடந்து கொள்பவனல்லன்; அவன் சர்வபூத ஹித ரதனாவான் {அனைத்து உயிரினங்களின் நன்மையில் மகிழ்ச்சியடைபவன் ஆவான்}.(8,9) சத்தியவாதியான தன் பிதா {தசரதர்}, கைகேயியால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்ட அந்த தர்மாத்மா {ராமன்}, தன் பிதாவை சத்தியவாதியாக்கவே அங்கிருந்து {அயோத்தியில் இருந்து} வனத்திற்கு வந்தான்.(10) பிதாவான தசரதனுக்காக கைகேயியின் பிரியத்தை நிறைவேற்ற ராஜ்ஜியத்தையும், போகங்களையும் கைவிட்டு, தண்டவனத்திற்குள் அவன் பிரவேசித்தான்.(11) 

தாதா {ஐயா}, ராமன் இரக்கமற்றவனல்லன்; வித்வத்தன்மை யற்றவனல்லன்; அஜிதேந்திரியனல்லன் {புலன்களை வெல்லாதவனல்லன்}; கேட்கப்படாதவையும், பொருத்தமற்றவையுமான இவற்றைப் பேசுவது உனக்குத் தகாது.(12) இராமன் தர்மத்தின் வடிவமாகத் திகழ்பவன்; சாது {நல்லவன்}; சத்திய பராக்கிரமன் {வாய்மையும், வீரமும் கொண்டவன்}; தேவர்களுக்கு வாசவனைப் போல சர்வ லோகங்களின் ராஜா அவன்.(13) சொந்த தேஜஸ்ஸிலேயே வைதேஹியைப் பாதுகாத்து வரும் அவனிடமிருந்து விவஸ்வானிடம் {சூரியனிடம் அபகரிக்கப்படும்} பிரபையைப் போல அவளை வலுக்கட்டாயமாக எவ்வாறு நீ அபகரிக்க விரும்புகிறாய்?(14) 

சரங்களையே தீப்பிழம்புகளாகக் கொண்டதும், வில்லையும், வாளையும் விறகுகளாகக் கொண்டதுமான ரணத்தில் {போரில்} எரியும் மீறவியலாத ராமன் எனும் அக்னிக்குள் திடீரெனப் பிரவேசிப்பது உனக்குத் தகாது.(15) தாதா {ஐயா}, தனுசெனும் அகன்று ஒளிரும் வாயையும், சரமெனும் நாவையும் உடையவனும், பொறுத்துக்கொள்ளப்பட முடியதாவனும், வில்லையும், கூரிய பாணங்களையும் தரித்தவனும், கடுமையானவனும், சத்ரு சேனைகளை அழிப்பவனுமான ராமன் எனும் அந்தகனை {காலனை}, உனக்கு இஷ்டமான ராஜ்யத்தையும், சுகத்தையும், ஜீவிதத்தையும் துறந்து {எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு} நெருங்குவது உனக்குத் தகாது.(16,17) 

அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை} எவனுக்கு உரியவளோ, அந்த அளவற்ற தேஜஸ் படைத்தவனான ராமனின் வில்லால் வனத்தில் பாதுகாக்கப்படும் அவளை அபகரிப்பதற்கு நீ சக்தனல்லன் {உன்னால் அவளை அபகரிக்க இயலாது}.(18) நித்தியம் அவனையே பின்தொடர்பவளான அந்த பாமினி {அழகிய பெண்}, சிங்க மார்பைக் கொண்ட அந்த நரசிம்மனுக்குப் பிராணனைவிடப் பிரியமான பாரியையாவாள்.(19) மைதிலியும் {மிதிலையின் இளவரசியும்}, வலிமைமிக்கவனின் மனைவியும், மெல்லிய இடையைக் கொண்டவளும், கொழுந்து விட்டெரியும் ஹுதாசனனின் {அக்னியின்} சிகையை {தழலைப்} போன்றவளுமான அந்த சீதையைத் தீண்டவும் நீ சக்தனல்லன் {உன்னால் சீதையைத் தீண்டவும் முடியாது}.(20) 

இராக்ஷசாதிபா, வீணான இம்முயற்சியைச் செய்வதால் என்ன விளையும்? உன்னை ரணத்தில் {போரில்} அவன் {ராமன்} கண்டாலே போதும், உன் ஜீவிதம் முடிந்துவிடும்.(21) ஜீவிதமும், ராஜ்ஜியமும் இவ்வாறே சுகமாக இருப்பது மிகவும் துர்லபம். நீண்ட காலம் இன்புற்றிருக்க நீ விரும்பினால், ராமனுக்குப் பிரியமற்றதைச் செய்யாதே.(22) இத்தகையவனான நீ, தர்மிஷ்டனான விபீஷணனை முன்னிட்டுக் கொண்டு, அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து ஆலோசனை செய்து, நீயே நிச்சயம் செய்வாயாக. உனக்கான தோஷகுணங்களையும் {தீமைகளையும், நன்மைகளையும்}, உன் பலாபலங்களையும் {பலங்களையும், பலவீனங்களையும்}, ராகவனின் பலத்தையும் உண்மையில் அறிந்து கொண்டு, உனக்கு ஹிதமானதை {நன்மையானதை} நிச்சயித்துக் கொண்டு தகுந்த செயலைச் செய்வாயாக.(23,24) நிசாசராதிபா {இரவுலாவிகளின் தலைவா}, நீ ரணத்தில் {போரில்} கோசலராஜன் மகனுடன் {ராமனுடன்} மோதுவதை நான் தகுந்ததாகக் கருதவில்லை. உத்தமமானதும், தகுந்ததும், யுக்தமானதுமான {முறையானதுமான} இந்த வாக்கியங்களை மேலும் கேட்பாயாக" {என்றான் மாரீசன்}.(25)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 37ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்