Thursday 22 September 2022

சப்த ராத்திரிகள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 071 (47)

Seven Nights | Ayodhya-Kanda-Sarga-071 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஏழு இரவுகளில் பல்வேறு இடங்களைக் கடந்து அயோத்தியை அடைந்த பரதன்; சோபையிழந்த அயோத்தியைக் கண்டு தன் சாரதியிடம் பேசியது; சந்தேக மனத்துடனே தன் தந்தையின் வீட்டிற்குள் நுழைந்தது...

Bharata's route to Ayodhya -approximate

ஒளிமிக்கவனும், ஸ்ரீமானும், இக்ஷ்வாகு குலநந்தனனுமான அந்த ராகவன் {பரதன்}, ராஜகிருஹத்திலிருந்து {கிரிவ்ரஜ ராஜகிருஹபுரத்திலிருந்து} கிழக்கு முகமாக அணிவகுத்துச் சென்றபிறகு, சுதாமம் என்ற நதியையும், அகலமான ஹலாதினி நதியையும் கண்டு, அவற்றைக் கடந்து, கிழக்குத் திசையிலிருந்து பாயும் சதத்ரு நதியையும் கடந்தான்.(1,2) சத்தியசந்தனும், இதயத்தூய்மை கொண்டவனும், ஸ்ரீமானுமான அவன் {பரதன்} அந்த நதியை {சதத்ருவை} ஏலதானத்தில் {ஏலதானம் / ஐலதானம் எனும் கிராமத்தில்} கடந்து, அபரபர்ப்படத்தை {அபரபர்ப்படம் எனும் பகுதியை} அடைந்து,  ஆகுர்வதீ எனும் கல்மலையைக் கடந்து, அக்னி மூலையிலுள்ள {தென்கிழக்கில் உள்ள} சல்யகர்த்தனத்தையும் {சல்யகர்த்தனம் என்ற கிராமத்தையும், கல்லைப் புரட்டித்தள்ளும் தன்மையுள்ள} சிலாவஹத்தையும் {சிலாவஹை என்ற நதியையும்} கண்டு, மஹாசைலங்களைக் கடந்து, சைத்ரரத வனத்தை நோக்கிச் சென்றான்.(3,4) 

பிறகு {பரதன்}, சரஸ்வதி, கங்கை சங்கமத்தை அடைந்து[1], வீரமத்ஸ்யத்திற்கு வடக்கில் உள்ள பாருண்ட வனத்திற்குள் பிரவேசித்தான்.(5) வேகமானதும், மலைகளால் சூழப்பட்டதுமான குலிங்கம் எனும் நதியையும், யமுனையையும் அடைந்து அவற்றைக் கடந்ததும் படைக்கு ஓய்வளித்தான்.(6) வாஜிகளின் {குதிரைகளின்} களைத்துப் போன அங்கங்களுக்குக் குளுமையளித்து, அவற்றைக் குளிப்பாட்டி, தானும் அங்கே ஸ்னானம் செய்துவிட்டு, தாகம் தணிந்து, வழிக்குத் தேவையான நீரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் {பரதன்}.(7) அருளப்பட்டவனான அந்த ராஜபுத்திரன், மாருதன் {வாயு} ஆகாயத்தைக் கடப்பதைப் போல, எவருமற்ற மஹா அரண்யத்தைத் தன் சிறந்த யானத்தில் {ரதத்தில்} கடந்து சென்றான்.(8)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவன் ஸரஸ்வதீ நதியும், ஸிந்து நதியும் ஸந்திக்கிற இடத்திற்குச் சென்று" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "சரஸ்வதி நதி சிந்து நதி இவ்விரண்டின் சங்கம வழியால் சென்று" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் ஆங்கிலப் பதிப்பில், "கங்கா சரஸ்வதி சங்கமம்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி ஆங்கிலப் பதிப்பிலும், "கங்கா சரஸ்வதி சங்கமம்" என்றே இருக்கிறது. பிபேக்திப்ராய் ஆங்கிலப் பதிப்பிலோ, கங்கை, சரஸ்வதி, சிந்து என்ற எந்த நதியின் பெயரும் இங்கே குறிப்பிடப்படவில்லை. சித்திரரத வனத்திற்குப் பிறகு நேரடியாக குலிங்க ஆற்றுக்குச் செல்வதாக இருக்கிறது. தமிழில் பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில் மட்டுமே, "ஸரஸ்வதியெனும் நதியையும், கங்கையெனும் நதியையும் ஸங்கமத்தில் வந்து சேர்ந்தார்" என்றிருக்கிறது. சரஸ்வதியும், சிந்துவும் சங்கமித்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பது மேற்கண்ட வரைபடத்தைக் காணும்போது தெரிகிறது. இது சரஸ்வதியும், கங்கையின் ஏதோவொரு கிளை நதியும் சங்கமிக்கும் இடமாக இருக்க வேண்டும். தொடக்கத்தில் சொல்லப்படும் சுதாமம் என்ற நதியை அடையாளம் காண முடியவில்லை. அது ஒரு வேளை சேனாபாக இருக்கலாம். பாலகாண்டம் 43ம் சர்க்கத்தில், "சிவன் கங்கையை சடையில் பூட்டிய பின் விடுவித்த" கதையில், கங்கையின் முதல் பிரவாஹம் "ஹலாதினி" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் கதையின் படி கங்கையின் ஏழு பிரவாஹங்களில் மூன்றாம் பிரவாஹமாக பிரம்மபுத்திராவும், ஆறாம் பிரவாஹமாக சிந்துவும் சொல்லப்படுகின்றன என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது. ஹலாதினிக்கு அடுத்ததாக இங்கே சொல்லப்படும் நதி சதத்ரு ஆகும். அன்றைய சதத்ருவே இன்றைய சட்லஜ் நதியாக அறியப்படுகிறது. மேலும் ஜீலம், சேனாப், ரவி, சட்லஜ், பியாஸ் ஆறுகளும் சிந்து நதியின் கிளை நதிகளே. இந்த சர்க்கத்தின் 9,10ம் சுலோகத்தில் பரதன் பாகீரதியை அடைவதும், கடப்பதும் சொல்லப்படுகிறது. அதுவே இன்றைய கங்கையாக இருக்க வேண்டும். அயோத்தியிலிருந்து கிரிவ்ரஜ நகரத்திற்கு தூதர்கள் ஒரே நாளில் சென்ற வழியும், கிரிவ்ரஜத்திலிருந்து அயோத்தியாபுரிக்கு பரதன் ஏழு நாட்களில் செல்லும் இந்த நீண்ட வழியும் வெவ்வேறானவை. 

அந்த ராகவன் {பரதன்}, அம்சுதாமமெனும் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பிராக்வடபுரத்தில், கடப்பதற்குக் கடினமான மஹாநதியான பாகீரதியை துரிதமாக நெருங்கினான்.(9) பிராக்வடத்தில் கங்கையைக் கடந்து, குடிகோஷ்டிகத்தை {குடிகோஷ்டிக நதியை} அடைந்து, தன் {படை} பலத்துடன் அதைக் கடந்து, தர்மவர்தனத்தை {தர்மவர்தனம் எனும் நதியை} அடைந்தான்.(10) பிறகு அந்த தசரதாத்மஜன் {தசரதனின் மகனான அந்த பரதன்}, தோரணத்தின் {தோரணம் எனும் பகுதியின்} தென் பகுதியில் ஜம்பூபிரஸ்தத்தை {ஜம்பூப்ரஸ்தம் எனும் கிராமத்தை} அடைந்து, வரூதம் என்றழைக்கப்படும் ரம்மியமான கிராமத்தை அடைந்தான்.(11) அவன், அங்கே ஒரு ரம்மியமான வனத்தில் வசித்த பிறகு, கிழக்கு முகமாகத் திரும்பி கடம்ப மரங்கள் நிறைந்த உஜ்ஜிஹானத்தில் {உஜ்ஜிஹானை எனும் நகரத்தில்} ஒரு உத்யானத்தை {தோட்டத்தை} அடைந்தான்.(12) கடம்ப மரங்களை அடைந்ததும், பரதன் {தன் தேரில்} சீக்கிரமாகச் செல்லும் வாஜிகளை {குதிரைகளைப்} பூட்டிக் கொண்டு, தன் வாஹினியை {படையைத்} தன்னைப் பின்தொடர்ந்து வர அனுமதித்துத் துரிதமாக முன்னே சென்றான்.(13) 

சர்வதீர்த்தத்தில் வசித்துவிட்டு, உத்தாகை நதியையும், விதவிதமான வேறு நதிகளையும், தன் பர்வத துரங்கங்களின் {மலைக் குதிரைகளின்} மூலம்  கடந்து, ஹஸ்திப்ருஷ்டகத்தை {ஹஸ்திப்ருஷ்டகம் எனும் கிராமத்தை} அடைந்து, குடிகையை {குடிகை  எனும் நதியைக்} கடந்து, லோஹித்யத்தில் {லோஹித்யம் / லௌஹித்யம் எனும் நகரில்} கபீவதியை {கபீவதி எனும் நதியைக்} கடந்து சென்றான்.(14,15) மேலும் பரதன், ஏகசாலத்தில் {ஏகஸாலம் எனும் கிராமத்தில்} ஸ்தாணுமதியையும் {ஸ்தாணுமதி நதியையும்}, வினதத்தில் {வினதம் எனும் கிராமத்தில்} கோமதி நதியையும் கடந்தான். தன் வாஹனங்கள் {குதிரைகள்} அதிகம் களைத்துப் போன போது, கலிங்கநகரத்தின் சால வனத்தை {ஆச்சா மரக்காட்டை} அடைந்தான். {சிறிது இளைப்பாறிய} பிறகு சீக்கிரமாகப் புறப்பட்டான்.(16,17அ) இரவிலேயே விரைவாக அந்த வனத்தைக் கடந்து சென்று, மனுராஜாவால் நிர்மாணிக்கப்பட்ட அயோத்தியை அருணோதயத்தில் கண்டான்.(17ஆ,18அ) 

சப்த ராத்திரிகள் {ஏழு இரவுகள்} வழியில் தங்கியபிறகு[2][3], தன்முன்னே அயோத்தியாபுரியைக் கண்ட அந்த புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான பரதன்}, தன் சாரதியிடம் இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(18ஆ,19அ) "சாரதியே, வெள்ளைக் களிமண்ணைக் கொண்டதும், அழகிய உத்யானங்கள் {தோட்டங்கள், பூங்காக்கள்} அமைந்ததும், யஜ்ஞங்கள் பலவற்றைச் செய்தவர்களாலும், நற்குணங்கள் பொருந்தியவர்களாலும், வேதபாரகர்களாலும், பெருஞ்செல்வந்தர்களாலும் நிறைந்ததும், ராஜரிஷியால் பரிபாலிக்கப்படுவதும் {அரசமுனியான தசரதரால் ஆளப்படுவதும்}, பெரும்புகழ்பெற்றதுமான அயோத்தி இந்த தூரத்தில் இருந்து தெளிவாகப் புலப்படவில்லை {மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரியவில்லை}.(19ஆ,20,21அ) 

[2] காலாட்படையின் நடைவேகத்திற்கு இணையான வேகத்தில் செல்ல வேண்டியிருப்பதால் ஏழு நாட்கள் ஆகியிருக்கலாம். பரதன் படைகளுடன் ரதத்தில் சென்றதால் அதற்குரிய சாலைகளைக் கொண்ட இந்த நெடும் வழியில் சென்றிருக்கலாம். தசரதனின் மரணம் அறிவிக்கப்பட்டிருந்தால் தனியாகவோ, இருவராகவோ தூதர்கள் வந்த பாதையிலேயே அவர்களுடன் ஒரே நாளில் பரதன் அயோத்தியை அடைந்திருக்கக்கூடும்.

[3] ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி, ஏழ் பகல் நீந்தி, பின், எந்திரத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை
நூறு பாய் வயல் கோசலம் நண்ணினான்

- கம்பராமாயணம் 2119ம் பாடல்

பொருள்: ஏழு நாள்கள், பயணம் செய்து, ஆறு, காடு, அகன்ற மலை ஆகியவற்றைக் கடந்து கரும்பாலையில் ஊறுகின்ற வெல்லப்பாகு மடை உடைத்து சிறந்த முளையுடைய நாற்றுகள் பொருந்திய வயலில் பாய்வதற்கு இடமாக உள்ள கோசல நாட்டை அடைந்தான்.

பூர்வத்தில் நர, நாரீகளின் ஆரவாரத்துடன் கூடிய மஹத்தான சத்தம் அயோத்தியைச் சுற்றிலும் கேட்டுக் கொண்டிருக்கும். இப்போது நான் அதைக் கேட்கவில்லை.(21ஆ,22அ) சாயங்காலங்களில் அனைத்துத் திசைகளிலும் உள்ள உத்யானங்கள் {பூங்காக்கள்}, அங்கே ஓடியாடி விளையாட வரும் நரர்களால் நிறைந்திருக்கும். {மாலையில் பூங்காவுக்குள் நுழைந்து, இரவு முழுவதும் விளையாடிவிட்டு, காலையில் அவர்கள் செல்வார்கள்}. இப்போது அது வேறாகத் தெரிகிறது.(22ஆ,23அ) காமிபிகளால் {காதலர்களால்} புறக்கணிக்கப்பட்ட இவை {உத்யானங்கள் / தோட்டங்கள் / பூங்காக்கள்} அழகற்றவையாகத் தெரிகின்றன. சாரதியே, எனக்கு இந்நகரமே அரண்யமாக மாறிவிட்டது {காடாகிவிட்டதைப்} போலத் தெரிகிறது.(23ஆ,24அ) 

உண்மையில் பூர்வத்தைப் போல, இங்கே யானங்களிலும் {வண்டிகளிலும்}, வாஜிகளிலும் {குதிரைகளிலும்} நகரத்திற்குள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருக்கும் நரமுக்கியர்கள் {முக்கியமான மனிதர்கள்} காணப்படவில்லை.(24ஆ,25அ) முன்பு உத்யானங்கள் மகிழ்ச்சியையும், களிப்பையும், சாந்தியையும் தருவதாக இருந்தன. ஜனங்களின் ரதிசம்யோகத்திற்கு {காதல் தொடர்புகளுக்கு} மிகச் சிறந்தவையாக இருந்தன.(25ஆ,26அ) இன்று நான் அவை ஆனந்தமற்றவையாகவும், சுற்றிலும் பாதைகளில் இலைகளை உதிர்த்த மரங்களுடன் கூடியவையாகவும் இருக்கும் இந்தத் திகைப்பூட்டும் காட்சியைப் பார்க்கிறேன்.(26ஆ,27அ) இந்த விடியலிலும், அதிமதுரமான மெல்லிசையை வெளிப்படுத்தும் மதம் கொண்ட மிருகபக்ஷிகளின் சப்தத்தைக் கேட்க முடியவில்லை.(27ஆ,28அ)

அகில் மற்றும் சந்தன மணங்கமழும் புகை கலந்த தூய்மையான மங்கலத் தென்றல் முன்பு போல் ஏன் இன்று வீசவில்லை?(28ஆ,29அ) நிற்காமல் கோல்களாலும், உள்ளங்கைகளாலும், விரல்களாலும் இடையறாமல் இசைக்கப்படும் பேரி, மிருதங்கம், வீணை ஆகியவற்றின் சப்தங்கள் முன்புபோல் இல்லாமல் ஏன் இன்று நின்றுவிட்டன.(29ஆ,30அ) விரும்பத்தகாதவையும், அற்பமானவையும், பாபம் நிறைந்தவையுமான விதவிதமான நிமித்தங்கள் {சகுனங்கள்} தென்படுவதால் என் மனம் சோர்வடைகிறது.(30ஆ,31அ) சூதரே, உண்மையில் வருத்தப்படுவதற்கான காரணமேதும் இல்லையென்றாலும் என் ஹிருதயம் வருந்துகிறது. எனவே, என் பந்துக்களில் அனைவரும் குசலம் {நலம்} என்பது துர்லபமே {சாத்தியமற்றதே}" {என்றான் பரதன்}.(31ஆ,32அ)

ஹிருதயஞ்சோர்ந்து, விசனமடைந்தவனும் {மனந்தளர்ந்து, துன்புற்றவனும்}, பேரச்சத்தால் இந்திரியங்கள் பீடிக்கப்பட்டவனுமான பரதன், இக்ஷ்வாகுக்களின் வழித்தோன்றல்களால் ஆளப்பட்ட நகரத்திற்குள்  {அயோத்திக்குள்} விரைவாகப் பிரவேசித்தான்.(32ஆ,33அ) சாந்த வாஹனங்களுடன் கூடியவன் வைஜயந்த துவாரத்திற்குள் {களைத்துப் போன குதிரைகளுடன் கூடிய பரதன், அயோத்தியின் மேற்கு வாயிலான வைஜயந்தம் என்றழைக்கப்பட்ட வாயிலுக்குள்} பிரவேசித்தான். அங்கே நின்று கொண்டிருந்த வாயில்காப்போர் சொன்ன "விஜயமான் {ஜய விஜயீ பவ}" என்ற வாழ்த்தை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து சென்றான்.(33ஆ,34அ)

அந்த ராகவன் {பரதன்}, அங்கே வாயிலில் வாழ்த்திய ஜனங்களிடம் கலங்கிய ஹிருதயத்துடனே பதிலுரைத்து, அசுவபதியின் சூதனிடம் {தன் தாய்வழி தாத்தனான அசுவபதியின் சாரதியிடம் பின்வருமாறு} சொன்னான்:(34ஆ,35அ) "அனகரே {பாவமற்றவரே}, காரணமேதும் இல்லாமல், நான் ஏன் இவ்வளவு துரிதமாக அழைக்கப்பட்டேன்? அசுபத்தைக் குறித்து என் ஹிருதயம் அஞ்சுகிறது. என் சீலம் கெடுகிறது {சக்தி தொலைகிறது}.(35ஆ,36அ) சாரதியே, நிருபதிகளின் விநாசத்தை {மன்னர்களின் அழிவுக்காலத்தைக்} குறித்துப் பூர்வத்தில் நாம் கேட்டிருக்கும் அறிகுறிகள் அனைத்தையும் நான் இங்கே காண்கிறேன்.(36ஆ,37அ) தூற்றப்படாமல் புழுதியுடன் இருக்கின்றவையாகவும், மூடப்படாத கதவுகளைக் கொண்டவையாகவும், சோபையற்றவையாகவும் கோபுரவாயில்களைக் காண்கிறேன்.(37ஆ) 

பூஜையற்றவையாகவும், தூபத்திற்கான பொருட்கள் ஏதும் எரிக்கப்படாதவையும், பலி கர்மங்களில் ஈடுபடாத, ஒளியிழந்த ஜனங்களைக் கொண்டவையாகவும், பாழடைந்தவையாகவும் குடும்பிகளின் வசிப்பிடங்கள் இருப்பதைக் காண்கிறேன்.(38) முன்பு போலல்லாமல் அவை பிரகாசமற்றவையாகவும், துலங்காத பிராகாரங்களை உடையவையாகவும், பாழடைந்தவையாகவும் ஒளியில்லாமல் இருக்கின்றன.(39) தேவாகாரங்கள் {கோவில்கள்} ஒளி இழந்தவையாகவும், மலர் அலங்கார ஒளி இழந்தவையாகவும், முன்புபோலல்லாமல் யஜ்ஞங்களில் பங்கேற்கும் எவரும் இல்லாதவையாகவும் சூன்யமாக {வெறுமையாக} இருக்கின்றன.(40) தேவதா அர்ச்சனைகள் கைவிடப்பட்டிருக்கின்றன. யஜ்ஞ கோஷங்களுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. மாலை விற்பனை செய்யும் நிலையங்கள் {அங்காடிகள்}, விற்பனைக்குரிய மாலைகளால் இன்று  அலங்கரிக்கப்படவில்லை.(41) வியாபாரத்தில் நஷ்டத்தைச் சந்தித்த வணிஜர்களும் {வணிகர்களும்}, முன்பு போலல்லாமல் குழம்பிய எண்ணங்களுடன் கூடிய ஹிருதயங் கொண்டவர்களாக இங்கே காணப்படுகின்றனர்.(42) தேவாயதனங்களிலும் {கோவில்களிலும்}, பெரும் மரங்களிலும் உள்ள பக்ஷிகணங்கள் {பறவைக் கூட்டங்கள்} தீனமாகத் தெரிகின்றன. நகரத்து ஜனங்களில் ஸ்திரீகளும், புருஷர்களும், பலகீனர்களாகவும், சிந்தினையில் ஆழ்ந்தவர்களாகவும், கண்கள் நிறைந்த கண்ணீருடன் தீனமடைந்தவர்களாகவும் தென்படுகிறார்கள்" {என்றான் பரதன்}.(43,44)

பரதன், அயோத்தியில் விரும்பத்தாகவற்றைக் கண்டு, தீன மனத்துடன் அந்த சூதனிடம் இவற்றைச் சொல்லிவிட்டு, ராஜகிருஹத்திற்கு {தசரதமன்னனின் மாளிகைக்குச்} சென்றான்.(45) முன்னர் இந்திரபுரத்தைப் போன்று பிரகாசித்த அந்த நகரின் நெடுஞ்சாலைகள் சூனியமாக இருப்பதையும், வாசற்கதவுகள், அவற்றின் பிடிகள் ஆகியவை தூசி படிந்து சிவந்திருப்பதையும் கண்ட பரதன், பெருந்துக்கத்தால் சம்பூர்ணமாகப் பீடிக்கப்பட்டான்.(46) வேறு எப்போதும் அந்நகரத்தில் காணதவற்றையும், மனத்துக்குப் பிரியமற்றதையும் கண்ட அந்த மஹாத்மா {பரதன்}, தலை கவிழ்ந்தவாறே, மகிழ்ச்சியற்ற தீனமான மனத்துடன், பிதாவின் வேஷ்மத்திற்குள் {தந்தை தசரதனின் மாளிகைக்குள்} பிரவேசித்தான்.(47)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 071ல் உள்ள சுலோகங்கள்: 47

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை