For your sake did I do | Ayodhya-Kanda-Sarga-072 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கைகேயியைச் சந்தித்த பரதன். தசரத மன்னன் இறந்ததையும், ராமன் நாடுகடத்தப்பட்டதையும் கேட்டது...
பரதன், பிதாவின் {தசரதரின்} ஆலயத்தில் {தந்தையின் வீட்டில்} பிதாவைக் காணாமல், மாதாவைக் காண மாதாவின் ஆலயத்திற்கு {அன்னையின் வீட்டிற்குச்} சென்றான்.(1) வீட்டைவிட்டுச் சென்றிருந்த தன் சுதன் {மகன்} திரும்பி வந்ததைக் கண்ட கைகேயி, சுவர்ண ஆசனத்தைவிட்டு {தான் அமர்ந்திருந்த பொன்னாசனத்தில் இருந்து} மகிழ்ச்சியுடன் குதித்தெழுந்தாள்.(2) தர்மாத்மாவான அந்த பரதன், மகிமையற்றிருந்த தன் கிருஹத்திற்குள் {வீட்டிற்குள்} பிரவேசித்ததும், தன் ஜனனீயின் சுப சரணங்களை {தன்னைப் பெற்றவளின் மங்கலப் பாதங்களைப்} பற்றிக் கொண்டான்.(3)
புகழ்பெற்றவனான அந்த பரதனின் உச்சந்தலையை முகர்ந்தவள் {அந்தக் கைகேயி}, அவனை அணைத்துக் கொண்டு, தன் மடியில் ஏற்றி {அமர்த்திக்} கொண்டு விசாரிக்கத் தொடங்கினாள்:(4) "உன் ஆர்யக வேஷ்மத்தில் புறப்பட்டதிலிருந்து {உன்னத வீட்டான உன் தாய்வழி தாத்தனின் வீட்டில் புறப்பட்டதிலிருந்து} இன்று வரை எத்தனை ராத்திரிகள் ஆகின? ரதத்தில் சீக்கிரமாக வந்த உனக்குப் பயண சிரமம் இல்லையா?(5) புத்திரா, உன் ஆரியகரும் {தாய்வழி தாத்தனும்}, உன் மாதுலர் {தாய்மாமன்} யுதாஜித்தும் குசலமாக இருக்கின்றனரா? வீட்டைவிட்டுச் சென்றதில் சுகமாக இருந்தாயா? உண்மையில் சர்வத்தையும் எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டாள் கைகேயி}.(6)
கைகேயி இவ்வாறு பிரியத்துடன் கேட்டதும், ராஜீவலோசனனும் {தாமரைக் கண்ணனும்}, பார்த்திவ நந்தனனுமான {ராஜனின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான) பரதன், தன் மாதாவிடம் சர்வத்தையும் சொன்னான்:(7) "ஆர்யக வேஷ்மத்தில் {உன்னதரான என் தாத்தாவின் வீட்டில்} புறப்பட்டதிலிருந்து இந்த ராத்திரி சப்தமியாகும் {ஏழாவது இரவாகும்}. என் அம்பாவின் தாதையும் {அம்மாவின் தந்தையும்}, என் மாதுலர் {தாய்மாமன்} யுதாஜித்தும் குசலமாக இருக்கின்றனர்.(8) பரந்தபரான அந்த ராஜா {கேகயர் அசுவபதி} எனக்கு தத்தம் செய்த தனங்களும், ரத்தினங்களும், வழியில் {நம் படையினரைக்} களைப்படையச் செய்ததால், நான் {அவர்களுக்கு} முன்பாகவே இங்கே வந்துவிட்டேன்.(9) இராஜவாக்கியத்தைக் கொண்டு வந்த தூதர்கள் அவசரப்படுத்தியதால் நான் துரிதமாக வந்தேன். கேட்க விரும்பும் எனக்கு, உண்மையில் சொல்ல வேண்டியவற்றை என் அம்பா {அம்மா} சொல்லட்டும்.(10)
சயனத்திற்குரியதும், ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதுமான உன்னுடைய இந்தப் பரியங்கம் சூன்யமாக {மஞ்சம் வெறுமையாக} இருக்கிறது. இக்ஷ்வாகு ஜனங்களான {இக்ஷ்வாகு குலத்தவரான} இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.(11) இராஜா {தசரதர்} பெரும்பாலும் அம்பாவின் நிவேசனத்தில்தான் {கைகேயி அம்மாவின் வீட்டில்தான்} இருப்பார். நான் இப்போது அவரைக் காணவில்லை. அவரைக் காண விரும்பியே நான் இங்கே வந்தேன்.(12) அம்பா, நான் என் பிதாவின் சரணங்களை {என் தந்தையின் பாதங்களைப்} பற்றிக் கொள்ள வேண்டும். கேட்கும் எனக்கு அவரைக் குறித்துச் சொல்வாயாக. அல்லது அனைவருக்கும் ஜேஷ்டையான {மூத்தவளான} கௌசல்யையின் நிவேசனத்தில் {வீட்டில்} அவர் இருக்கிறாரா?" {என்று கேட்டான் பரதன்}.(13)
ராஜ்ஜிய லோபத்தில் மோகமடைந்தவளும் {நாட்டின் மீது கொண்ட பேராசையில் மயங்கியவளும்}, அனைத்தையும் நன்றாக அறிந்தவளுமான கைகேயி, ஏதுமறியாத அவனிடம் கோரமானதும், பிரியமற்றதுமான செய்தியைப் பிரியமானதுபோலச் சொன்னாள்:(14) "மஹாத்மாவும், தேஜஸ்வியும், அடிக்கடி யஜ்ஞங்களைச் செய்பவரும், நல்லவர்களின் கதியாக இருந்தவரும், உன் பிதாவுமான ராஜா {தசரதன்}, சர்வபூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} எந்த கதியை அடையுமோ, அந்த கதியை அடைந்துவிட்டார்" என்றாள் {கைகேயி}.(15)
தர்மவித்தும், நேர்மையாளனுமான பரதன், அந்த வாக்கியத்தைக் கேட்ட உடனேயே பித்ரு சோக பலத்தால் {தந்தை இறந்த பெருஞ்சோகத்தால்} பீடிக்கப்பட்டவனாக பூமியில் விழுந்தான்.(16) மஹாபாஹுவான அந்த வீரியவான், பரிதாபகரமாக, "ஹா, நான் கெட்டேன்" என்ற தீனச் சொற்களை எழுப்பி, தன் கைகளை உயர்த்தியவாறே {மீண்டும்} கீழே விழுந்தான்.(17)
அப்போது சோகத்தில் மூழ்கியவனும், சித்தங்கலங்கியவனுமான அந்த மஹாதேஜஸ்வி {பரதன்}, பிதாவின் மரணத்தால் உண்டான துக்கத்தில் பீடிக்கப்பட்டவனாக {பின்வருமாறு} அழுதுபுலம்பினான்:(18) "என் பிதாவின் இந்த அழகிய சயனம், மழைக்கால ராத்திரியில், சசியுடன் கூடிய அமல ககத்தைப் போல {சந்திரனால் பிரகாசிக்கும் களங்கமற்ற வானத்தைப் போல} பூர்வத்தில் அழகுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது.(19) அந்த மதிமிக்கவர் இல்லாத இஃது {சயனம் / மஞ்சம்} இன்று சசியில்லாத {சந்திரனில்லாத} வானம் போலவும், நீர் ஆவியாகி வற்றிப் போன சாகரத்தைப் போலவும் ஒளியில்லாமல் இருக்கிறது" {என்றான் பரதன்}.(20)
ஜயசாலிகளில் சிறந்தவனான அவன், கண்ணீரால் தடைபட்ட தன் கண்டத்தை {தொண்டையை} சரி செய்து கொண்டும், தன் ஆத்மாவில் அதிகம் பீடிக்கப்பட்டவனாக, வஸ்திரத்தால் தன் அழகிய வதனத்தை மறைத்துக் கொண்டும் அழுது புலம்பினான்.(21)
தேவனுக்கு ஒப்பானவனும், வனத்தில் பரசால் வெட்டப்பட்ட சாலமரக்கிளையைப் போல {கோடரியால் வெட்டப்பட்ட ஆச்சா மரக்கிளையைப் போலப்} புவியில் விழுந்தவனும், துன்புற்றவனும், மத்தமாதங்கத்தை {மதங்கொண்ட யானையைப்} போன்றவனும், சந்திரனையும், சூரியனையும் போலத் தெரிபவனும், சோகத்தால் பீடிக்கப்பட்டவனுமான தன் சுதனை {மகனைப்} புவியில் இருந்து தூக்கியவள் {கைகேயி}, இந்த வசனங்களைச் சொன்னாள்:(22,23) "புகழ்வாய்ந்த ராஜபுத்திரா, எழு, எழுவாயாக. ஏன் படுத்துக் கிடக்கிறாய். சபையில் கௌரவிக்கப்படும் உன்னைப் போன்ற சந்தர்கள் {நல்லவர்கள்} வருந்தமாட்டார்கள்.(24) புத்திசாலியே, சீலத்தையும் {ஒழுக்கத்தையும்}, ஸ்ருதிகளையும் {வேத வாக்கியங்களையும்} பின்பற்றுவதும், தானம் அளிப்பதிலும், யஜ்ஞம் செய்வதிலும் ஊக்கமுடையதுமான உன் புத்தி, அர்க்க மந்திரப் பிரபையைப் போல {சூரியனின் வசிப்பிடத்தில் உள்ள பிரகாசத்தைப் போல} பிரகாசிக்கிறது" {என்றாள் கைகேயி}.(25)
எண்ணற்ற சோகங்களால் சூழப்பட்டு நீண்ட நேரம் அழுது, புவியில் புரண்டு கொண்டிருந்தவன் {பரதன்}, தன் ஜனனீயிடம் {தன்னைப் பெற்றவளான கைகேயியிடம்} இந்த மறுமொழியைச் சொன்னான்:(26) இராஜா {தசரதர்}, ராமருக்கான அபிஷேகத்தையோ, ஒரு யஜ்ஞத்தையோ {வேள்வியையோ} செய்யப் போகிறார் என்ற ஒரு சங்கல்பத்தை {தீர்மானத்தை} அடைந்தே மகிழ்ச்சியுடன் யாத்திரை செய்தேன்.(27) இவை யாவும் வேறு வகையில் ஆகிவிட்டன. என் பிரியங்களிலும், ஹிதங்களிலும் நித்தியம் அக்கறையாக {என் விருப்பங்களிலும், நன்மையிலும் எப்போதும் அக்கறையாக} இருந்த பிதாவைக் காணாமல், என் மனம் துண்டு துண்டாக உடைகிறது.(28)
அம்பா {அம்மா}, நான் திரும்பி வருவதற்குள் எந்த வியாதியால் ராஜா இறந்தார்? பிதாவின் ஸம்ஸ்கிருதத்தை ஸ்வயமாகச் செய்த {நற்காரியத்தை / தூய்மைச் சடங்குகளைத் தாங்களே செய்த} ராமரும், அவருடன் இருந்தவர்களும் தன்யர்கள் {பாக்கியவான்கள் / நற்பேறு பெற்றவர்கள்}.(29) கீர்த்திமானான மஹாராஜா நான் வந்திருப்பதை நிச்சயம் அறியமாட்டார். தாதை {என் தந்தை என் வரவை அறிந்திருந்தால்} துரிதமாக வந்து, என் உச்சியைத் தாழ்த்தி முகர்ந்திருப்பார்.(30) புழுதி படிந்திருக்கும் என்னை மீண்டும் மீண்டும் துடைத்து, இனிய ஸ்பரிசத்துடன் களைப்பில்லாமல் செயல்படும் என் தாதையின் கைகள் எங்கே?(31)
களைப்பில்லாமல் செயல்படுபவரும், எனக்குப் பிதாவும், பந்துவும், என்னுடன் பிறந்தவரும் எவரோ, நான் யாருக்கு தாசனோ {அடியவனோ} அந்த ராமருக்கு என்னைக் குறித்து {என் வரவை} சீக்கிரம் அறிவிப்பீராக.(32) தர்மத்தை அறிந்த ஆரியனுக்கு ஜேஷ்டர் பிதாவே ஆகிறார் {அறமறிந்த நல்லவனுக்கு ஓர் அண்ணன் தந்தையே ஆகிறான்}. நான் அவரது பாதங்களைப் பற்றிக் கொள்வேன். உண்மையில் இப்போது அவரே எனக்கு கதி[1].(33) தர்மவித்தும், நித்திய தர்மவானும், சத்தியசந்தரும், திடவிரதரும், சத்தியவிக்ரமரும் {உண்மையான துணிவைக் கொண்டவரும்}, ஆரியரும், என் பிதாவுமான ராஜா என்ன சொன்னார்?(34) {என் தந்தை எனக்குச் சொன்ன} இறுதி செய்தியை நான் கேட்க விரும்புகிறேன்" {என்றான் பரதன்}.
[1] எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்சிந்தை வெங்கொடுந்துயர் தீர்கலாது என்றான்- கம்பராமாயணம் 2159ம் பாடல்பொருள்: என் தந்தையும், தாயும், என் தெய்வமும், என் அண்ணனும் எல்லையற்ற பெருங்குணாளனான இராமனே ஆனதால் அவனது பாதங்களை வணங்காமல் என் மனத்தின் இந்தக் கொடுந்துயர் தீராது என்றான்.
இவ்வாறு கேட்கப்பட்டதும், கைகேயி நடந்தவற்றை உள்ளது உள்ளபடியே இந்த வாக்கியங்களில் சொன்னாள்:(35) "நற்கதி அடைபவர்களில் முதன்மையானவரும், மஹாத்மாவுமான அந்த ராஜா {தசரதர்}, "இராமா, சீதா, லக்ஷ்மணா" என்று சொல்லி அழுதவாறே பரலோகத்தை அடைந்தார்.(36) பாசத்தால் {கயிற்றால்} கட்டப்பட்ட மஹாகஜத்தைப் போல, கால, தர்மத்தில் கட்டுண்ட உன் பிதா இந்த இறுதிச் சொற்களையே சொன்னார்:(37) "இராமனும், சீதையும், மஹாபாஹுவான லக்ஷ்மணனும் திரும்பிவருவதைக் காணப்போகும் நரர்களே சித்தார்த்தர்கள் {தங்கள் நோக்கம் நிறைவேறியவர்கள்}", {என்ற இறுதிச் சொற்களையே உன் தந்தை சொன்னார்}", {என்றாள் கைகேயி}.(38)
பிரியமற்ற அந்த இரண்டாவது செய்தியைக் கேட்டு, நிலைகுலைந்து, வதனம் வாடியவன் {பரதன்}, மீண்டும் தன் மாதாவிடம் {பின்வருமாறு} கேட்டான்:(39) "தர்மாத்மாவான அந்த கௌசல்யாநந்தவர்தனர் {கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் ராமர்}, சீதையோடும், தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனனோடும் இப்போது எங்கே இருக்கிறார்?" {என்று கேட்டான் பரதன்}.(40)
இவ்வாறு கேட்கப்பட்ட அவனது மாதா {கைகேயி}, பெரிதும் பிரியமற்ற வாக்கியங்களை பிரியத்திற்குரியவை போன்ற உணர்வுடன், உள்ளது உள்ளபடியே {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினாள்:(41) "புத்திரா, அந்த ராஜசுதன் {ராஜகுமாரனான ராமன்}, மரவுரி உடுத்திக் கொண்டு, லக்ஷ்மணனும், சீதையும் பின்தொடர மஹாவனமான தண்டகத்திற்குச் சென்றான்" {என்றாள் கைகேயி}.(42)
இதைக் கேட்ட பரதன், தன்னுடன் பிறந்தவனின் {ராமனின்} ஒழுக்கத்தில் ஏற்பட்ட சந்தேகத்தால் அச்சமடைந்து, தன் வம்ச மஹாத்மியத்தையும் நினைத்து, {தன் மாதாவிடம் பின்வருமாறு} கேட்கத் தொடங்கினான்:(43) "இராமர், பிராமண தனம் {பிராமணர்களின் செல்வம்} எதையும் அபகரிக்கவில்லை என்று நம்புகிறேன். அவர் பாபமற்றவர்களான எந்த தனவானுக்காவது, தரித்திரருக்காவது தீங்கிழைக்கவில்லை என்றும் நான் நம்புகிறேன்.(44) இராஜபுத்திரர் {ராமர்}, பரதாரங்களை {மாற்றான் மனைவியரை} ஒருபோதும் விரும்பியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன். என்னுடன் பிறந்த ராமர், கருவைக் கொன்றவரைப் போல் ஏன் தண்டகாரண்யத்திற்கு விரட்டப்பட்டார்?" {என்று கேட்டான்}.(45)
அப்போது, ஸ்திரீ பாவத்தினால் சபலையான {பெண்களில் இயல்பால் நிலையற்றவளான} அவனது மாதா, உள்ளது உள்ளபடியே தான் செய்த செயலைச் சொல்லத் தொடங்கினாள்.(46) மஹாத்மாவான பரதன் இவ்வாறு சொன்னதும், அந்த மூடக் கைகேயி, தன்னை பண்டிதையாக நினைத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் {பின்வரும்} இந்தச் சொற்களைச் சொன்னாள்:(47) "இராமன் எந்த பிராமண தனத்தையும் சிறிதளவேனும் பறிக்கவில்லை. பாபமற்றவர்களான எந்த தனவானுக்காவது, தரித்திரருக்காவது அவன் தீங்கிழைக்கவில்லை.{48} பரதாரங்களை ராமன் தன் கண்ணாலும் பார்க்கமாட்டான்.(49அ) புத்திரா, ராமனின் அபிஷேகத்தைக் குறித்துக் கேட்ட உடனேயே, நான் உன் பிதாவிடம் உனக்கு ரஜ்ஜியத்தையும், ராமனை நாடுகடத்தவும் யாசித்தேன்.(49ஆ,50அ) உன் பிதா, தன் வாக்குக்கு அடிபணிந்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார். இராமனும், சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, சீதையும் இங்கிருந்து அனுப்பப்பட்டனர்.(50ஆ,51அ)
பெரும்புகழ்பெற்ற மஹீபாலர் {பூமியைக் காப்பவரான தசரதர்}, பிரியத்திற்குரிய தன் புத்திரனைக் காணாமல், புத்திரசோகத்தில் பரிதபித்தவாறே பஞ்சத்வத்தை {மரணம்} அடைந்தார்.(51ஆ,52அ) தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, ராஜத்வத்தை {அரசாட்சியை} இப்போதே நீ ஏற்பாயாக. இவ்வாறான இவை யாவற்றையும் உனக்காவே நான் செய்தேன்.(52ஆ,53அ) புத்திரகா {மகனே}, சோகத்திலும், சந்தாபத்திலும் {துக்கத்திலும்} மூழ்காதே. தைரியத்தை அடைவாயாக. இந்த நகரமும், அனாமயமான {இடையூறற்ற} இந்த ராஜ்ஜியமும் உனக்கே அதீனம் {உரியதாகும்}.(53ஆ,54அ) எனவே, இந்தப் பூமியில் உரிமையுள்ள நீ, விதிகளை அறிந்த வசிஷ்டரையும், முக்கிய துவிஜேந்திரர்களையும் {இருபிறப்பாளர்களின் முக்கிய தலைவர்களையும்} சந்தித்து, {தசரத} ராஜருக்குரிய சடங்குகளைச் செய்துவிட்டு உன் அபிஷேகத்தை {பட்டாபிஷேகத்தை} செய்து கொள்வாயாக" {என்றாள் கைகேயி}.(54ஆ-உ)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 072ல் உள்ள சுலோகங்கள்: 54
Previous | | Sanskrit | | English | | Next |