I'll go to the forest, where lightning glows | Ayodhya-Kanda-Sarga-019 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கைகேயி சொன்னதைக் கேட்டுக் கலங்காத ராமன்; கானகம் செல்ல முடிவெடுத்தது; கௌசல்யையைச் சந்திக்கச் சென்றது...
பகைவரை அழிப்பவனான ராமன், மரணத்திற்கு ஒப்பான இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்டும் கலக்கமில்லாமல் கைகேயியிடம் இதைச் சொன்னான்:(1) "அவ்வாறே ஆகட்டும். நான் இராஜரின் {தசரதனின்} பிதிஜ்ஞையை நிறைவேற்றுவேன். இங்கிருந்து வனம் சென்று ஜடையும், மான்தோலும் தரித்து அங்கே வசித்திருப்பேன்.(2) மீறக்கூடாதவரும், பகைவரை அடக்குபவருமான மஹீபதி {நிலத்தின் தலைவரான தசரதர்}, முன்பு போல் ஏன் என்னை வரவேற்கவில்லை என்பதை மட்டும் நான் அறிய விரும்புகிறேன்.(3) தேவி, கோபமடைய வேண்டாம். மரவுரியும், ஜடையும் தரித்து வனம் செல்வேனென உன் முன்னிலையில் நான் சொல்கிறேன். மகிழ்ச்சியடைவாயாக.(4) ஹிதம் செய்பவரும், குருவும், நிருபருமான பிதாவுக்குப் பிரியமானதை நான் நம்பிக்கையுடன் செய்ய மாட்டேனா?(5)
பரதனின் அபிஷேகத்தை என்னிடம் ராஜா தானே சொல்லவில்லையே என்ற ஒரே மனக்குறையால் என் ஹிருதயம் தஹிக்கிறது.(6) கேட்காமல் நானே கூட, சீதையுடன் கூடிய ராஜ்ஜியத்தையும், பிராணனையும், இஷ்டத்திற்குரியனவற்றையும், தனத்தையும் என்னுடன் பிறந்த பரதனுக்கு மகிழ்ச்சியுடன் கொடுத்திருப்பேன்[1].(7) மனுஜேந்திரரான என் பிதா ஏற்ற பிரதிஜ்ஞைக்குக் கீழ்ப்படிந்து, உன் விருப்பத்திற்குரிய ஆசையை நிறைவேற்றுவேன். இன்னும் நான் வேறென்ன சொல்ல?[2](8) எனவே நீ இவரைத் தேற்றுவாயாக. மஹீபதி ஏன் இங்கே வசுதையில் {பூமியில்} நிலைத்த கண்களுடன் மெல்லக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்?(9) நிருபசாசனத்தின் {அரச ஆணையின்} பேரில் தூதர்கள் இப்போதே குதிரையில் சென்று மாதுலகுலத்தாரிடம் {தாய்மாமன் வீட்டாரிடம்}இருந்து பரதனை சீக்கிரம் அழைத்து வரட்டும்.(10) பிதாவின் வாக்கியத்தை {என் தந்தை சொன்னாரா? சொல்லவில்லையா என்பதைக்} குறித்துச் சிந்தியாமல், உடனே தண்டகாரண்யத்தில் சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வசிக்க விரைந்து செல்வேன்" {என்றான் ராமன்}.(11)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதையையாயினும் கொடுத்துவிடுவேன் - தனுர்ப்பங்கஞ் செய்தபொழுது பரதன் அபேக்ஷிப்பானாயின், அவனுக்குச் சீதையைக் கொடுத்து விவாஹஞ் செய்விப்பேனென்று கருத்து" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ஒருவர் சொல்லாவிடினும் நானே பரதாழ்வான் பொருட்டுச் சீதையையும், ராஜ்ஜியத்தையும், உயிரையும், பொருள்களையும், மகிழ்ந்தளிப்பேன்" என்றிருக்கிறது.
[2] மன்னவன் பணி அன்றாகின் நுன்பணி மறுப்பெனோ என்பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோஎன் இனி உறுதி அப்பால் இப்பணி தலை மேல் கொண்டேன்மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்- கம்பராமாயணம் 1604ம் பாடல்பொருள்: அரசனின் ஆணை இல்லையென்றாலும் உன் ஆணை மறுப்பேனோ? என் தம்பி பெற்ற செல்வம் நான் பெற்றதன்றோ? இந்த உறுதிக்கப்பால் இனிமையானது வேறென்ன? இப்பணியை என் தலைமேல் கொண்டேன்; மின்னல் ஒளிரும் கானகத்திற்கு இன்றே செல்வேன்; உன்னிடம் விடையும் பெற்றேன்.
இராமனின் வாக்கியத்தைக் கேட்ட கைகேயி, மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அடைந்தவளாக இராகவன் புறப்படுவதைத் துரிதப்படுத்தும் வகையில்,(12) "அவ்வாறே ஆகட்டும். மாதுலகுலத்திடம் {தாய்மாமன் வீட்டில்} இருந்து பரதனை அழைத்துவர தூதர்கள் குதிரையில் சீக்கிரம் செல்லட்டும்.(13) ஆனால், {காட்டுக்குச் செல்வதில்} உற்சாகமுள்ள நீ, மேலும் தாமதிப்பது தகுந்ததல்ல என நான் நினைக்கிறேன். எனவே ராமா, நீ இங்கிருந்து சீக்கிரமாக வனத்திற்குச் செல்வதே தகுந்தது.(14) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே, ராமா}, நாணத்தால் நிருபர் {மன்னர் தசரதர்} உன்னிடம் பேசவில்லை என்பது இங்கே ஒன்றுமில்லை. இந்த வேதனையை {மனக்குறையை} நீ விலக்குவாயாக.(15) இராமா, உன் பிதா {தந்தை} நீ வனத்திற்கு விரைந்து செல்லும் வரை ஸ்நானமும், போஜனமும் செய்ய மாட்டார் {நீராடவும் மாட்டார், உண்ணவும் மாட்டார்}" {என்றாள் கைகேயி}.(16)
இராஜா {தசரதன்}, பெருமூச்சுவிட்டபடியே, "சீ! சீ! கஷ்டம்" என்று சொல்லி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த மஞ்சத்தில் சோகத்துடன் மூர்ச்சித்து விழுந்தான்.(17) அந்த ராஜனைத் தூக்கிய ராமன், சாட்டையால் அடிக்கப்பட்ட குதிரையைப் போலக் கைகேயியால் தூண்டப்பட்டவனாக வனத்திற்குச் செல்ல அவசரப்பட்டான்.(18)
கொடுமையானதும், கடுமையானதுமான அந்த அநாரியையின் வசனத்தைக் கேட்ட ராமன் கலக்கமடையாமல் அந்தக் கைகேயியிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(19) "தேவி, எனக்குச் செல்வம் ஒரு பொருட்டல்ல. உலக வாசத்தை உற்சாகத்துடன் நான் ஏற்கிறேன். தர்மத்தை மட்டுமே பின்பற்றும் ரிஷிகளுக்கு இணையானவனாக என்னை நீ அறிவாயாக.(20) என் மதிப்புக்குரியவரின் {தந்தையின்} விருப்பத்திற்குரிய செயலை என்னால் எவ்வகையிலேனும் செய்ய முடியுமென்றால், பிராணனை {உயிரைத்} துறந்தேனும் அதை நான் செய்வேன்.(21) பிதாவுக்கோ, அவரது வசனத்தின்படி செயல்படுவதற்கோ தொண்டாற்றுவதை விட மேலான தர்மம் {கடமை} வேறேதும் இல்லை.(22) எங்கள் மதிப்பிற்குரியவரால் {என்னிடம்} சொல்லப்படவில்லையெனினும், உன் வசனத்தின்படியே நான் ஜனங்களற்ற வனத்தில் சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வாசம் செய்வேன்.(23) கைகேயி {கேகயன் மகளே}, எனக்கு ஆணையிடும் அதிகாரம் உனக்கிருந்தும் நிச்சயம் என்னிடம் எந்தக் குணத்தையும் காணாததாலேயே நீ ராஜனிடம் இதைச் சொல்லியிருக்கிறாய்.(24) மாதாவிடம் {கௌசல்யையிடம்} விடைபெற்றுக் கொண்டு, சீதைக்கு ஆறுதலளித்துவிட்டு இன்றே நான் மகத்தான தண்டகாவனம் செல்வேன்.(25) பரதன் ராஜ்ஜிய பரிபாலனத்தையும், பிதாவுக்கான தொண்டையும் செய்வதை உறுதி செய்வது உன் கடப்பாடு; இதுவே சநாதன தர்மம்" {என்றான் ராமன்}.(26)
இராமனின் வசனத்தைக் கேட்ட அந்தப் பிதா {தசரதன்}, துக்கத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டவனாக, சோகத்தால் பேச இயலாதவனாகப் பேரொலியுடன் அழுதான்.(27) மதிமிக்கவனான ராமன், மயக்கமடைந்தவனான பிதாவின் பாதங்களையும், அநாரியையான கைகேயியின் பாதங்களையும் வணங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.(28) இராமன், தன் பிதாவையும், கைகேயியையும் பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து}, அந்தப்புரத்திலிருந்து வெளியேறி தன் நண்பர்களைக் கண்டான்.(29) சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான லக்ஷ்மணன், கண்ணீரால் பரிபூரணமாக நிறைந்த கண்களுடனும், பரம கோபத்துடனும் கூடியவனாக ராமனின் பின்னால் தொடர்ந்து சென்றான்.(30)
இராமன், அபிஷேகத்திற்கெனத் திரட்டப்பட்ட பாந்தங்களை {பொருட்களைப்} பிரதக்ஷிணஞ்செய்து {வலம் வந்து}, விலக்கமேதுமின்றி மதிப்புடன் அவற்றைப் பார்த்தவாறே மெதுவாக நகர்ந்து சென்றான்.(31) காந்தவானும் {விரும்பத்தக்க ஆளுமை கொண்டவனும்}, உலகத்தால் விரும்பப்படுபவனுமான அவனது மகத்தான காந்தியானது, ராஜ்ஜியம் கிட்டாதபோதும் நிலவின் ஒளியுடன் கூடிய இரவைப் போல மங்காதிருந்தது.(32) சர்வலோகத்தையும் துறந்த துறவியிடம் {காணப்படாத} சித்தவிக்ரியம் {மனக்குழப்பம்} போலவே வசுந்தரையை {பூமியை} விட்டுப் புறப்பட்டுச் செல்பவனும், வனம் செல்லத் தீர்மானித்தவனுமான அவனிடமும் அது {மனக்குழப்பம்} காணப்படவில்லை.(33)
அந்த ஆத்மவான் {ராமன்}, சுபமான குடையையும், அலங்காரமான சாமரங்களையும் மறுத்து, தன் ஜனங்களையும் {நண்பர்களையும்}, ரதத்தையும், நகரவாசிகளையும் அனுப்பிவிட்டு, இந்திரியங்களை அடக்கி, துக்கத்தைத் தன் மனத்திலேயே வைத்துக் கொண்டு, விரும்பத்தகாத செய்தியைச் சொல்ல தன் மாதாவின் {கௌசல்யையின்} வீட்டிற்குள் பிரவேசித்தான்.(34,35) சத்தியவாதியும், ஸ்ரீமானுமான ராமனின் முகத்தில், ஸ்ரீமான்களும், அண்மையிலுள்ளவர்களுமான சர்வஜனங்களாலும் எந்தச் சிறு மாறுதலையும் காணமுடியவில்லை.(36) கூதிர் காலச் சந்திரன் தன் தீர்க்க அம்சங்களை {நெடுங்கதிர்களை} இழக்காததைப் போலவே, அந்த மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்ட ராமனும்}, வழக்கமான தன் மகிழ்ச்சியையும், தேஜஸ்ஸையும் இழந்தானில்லை. (37) தீர ஆத்மா கொண்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான ராமன், அந்த ஜனங்களை மதிக்கும் வகையில் மதுரவாசகங்களைச் சொல்லிக் கொண்டே தன் மாதாவின் சமீபத்தில் பிரவேசித்தான் {அன்னை கௌசல்யையின் அருகில் சென்றான்}.(38)
{இராமனுக்கு இணையான} சம குண பிராப்தம் கொண்டவனும், விபுலவிக்ரமனும் {பெரும் வீரமும், துணிவும் கொண்டவனும்}, உடன் பிறந்தவனுமான சௌமித்ரி {சுமித்ரையின் மகன் லக்ஷ்மணன்}, துக்கத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டே ராமனுடன் சென்று கொண்டிருந்தான்.(39) பெரும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த அந்த வீட்டிற்குள் ராமன் பிரவேசித்தபோது, உண்மையில் நேரப்போகும் விபத்தை உணர்ந்தும், அதன் காரணமாகத் தன் நண்பர்களுக்கு ஏற்படப்போகும் அதிர்ச்சியைப் புரிந்து கொண்டும் விக்ரியமடைந்தானில்லை {மனக்குழப்பமடையவில்லை}[3].(40)
[3] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ராமன் மாளிகைக்குச் சென்று அங்குத் தனக்கு அபிஷேகம் நடக்கப் போகிறதென்று மிகுந்த ஸந்தோஷத்தோடு கூடியிருக்கின்ற ஜனங்களைக் கண்டு, அப்பொழுது தனக்கு நேரிட்டிருக்கிற ராஜ்யநாசத்தையும் சிந்தித்து, அதனால் அவஸ்யமாக மனவருத்தம் உண்டாக வேண்டியதாயிருப்பினும் தான் வருத்தப்படுவது கண்டால் தனக்கு ஹிதர்களாகிய ஜனங்கள் ப்ராணனை விட்டுவிடுவார்களென்று சங்கைப்பட்டுத் துயரத்தையெல்லாம் உள்ளேயே அடக்கிக் கொண்டு வெளிக்கு ஒன்றும் பொலப்படாதிருக்கும்படி சிறிதும் விகாரமுறாதிருந்தனன்" என்றிருக்கிறது.
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 019ல் உள்ள சுலோகங்கள் : 40
Previous | | Sanskrit | | English | | Next |