Narada briefs Valmiki about Rama and Ramayana in a nutshell | Bala-Kanda-Sarga-01 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : உலகின் உன்னத மனிதனைக் குறித்து நாரதரிடம் கேட்ட வால்மீகி; மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்; பலச்ருதி...
தவசி வால்மீகி, தவத்திலும், வேத கல்வியிலும் ஆழமாக ஈடுபடுபவரும், உரையாடுபவர்களில் சிறந்தவரும், முனிவர்களில் உயர்ந்தவருமான நாரதரிடம்,(1) "இவ்வுலகில் தற்போது சிறந்த குணங்களால் நிறைந்தவனும், ஆற்றல்வாய்ந்தவனும், அறம்வழுவாதவனும், நன்றியறிபவனும், வாய்மைபேசுபவனும், செயலுறுதி கொண்டவனுமாக இருப்பவன் எவன்?(2) நல்லொழுக்கம் கொண்டவனும், அனைத்து உயிரினங்களின் நன்மையில் விருப்பம் கொண்டவனும், திறன்மிக்கவனும், {எதையும் செய்ய} இயன்றவனும், தனித்த எழில் கொண்டவனும்,(3) ஆத்மவானும் {தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும்}, கோபத்தை வென்றவனும், அறிவார்ந்தவனும், பொறாமையற்றவனும், கோபம் தூண்டப்பட்டால் தேவர்களையே பீதியைடையச் செய்பவனுமாக இருப்பவன் எவன்?(4) மஹரிஷியே {நாரதரே}, இத்தகைய மனிதனை நீர் அறியவல்லவர் என்பதால், இவை யாவற்றையும் {உம்மிடம் இருந்து} கேட்க நான் பேராவல் கொண்டுள்ளேன்" என்று கேட்டார்.(5)
மூவுலகங்களையும் அறிந்த நாரதர், வால்மீகியின் சொற்கள் அனைத்தையும் கேட்டு, "கேட்பீராக" என்று சொல்லி, {தன் சொல்லால் வால்மீகியைக்} கவர்ந்திழுத்து, மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார். அவர் {நாரதர்},(6) "{வால்மீகி} முனியே, நீர் புகழ்ந்துரைத்த பல குணங்களையும் கொண்டவர்கள் உண்மையில் அரிதானவர்கள். இவற்றை {இந்த குணங்களைக்} கொண்ட ஒரு மனிதனை {குறித்து பிரம்மரிடம் ஏற்கனவே கேட்டு} அறிந்த பிறகே நான் உம்மிடம் சொல்கிறேன் கேட்பீராக.(7)
{01. பால காண்டம்}
தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், பேராற்றல்வாய்ந்தவனும், தன்னொளியுடன் கூடியவனும், உறுதிமிக்கவனும், புலனடக்கம் கொண்டவனுமான ஒருவன் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்திருக்கிறான். இராமன் என்ற பெயரில் அவன் மக்களால் அறியப்படுகிறான்.(8) அவன் புத்திமானாகவும், நீதிமானாகவும், நாநயமிக்கவனாகவும், எதிரிகளை அழிப்பவனாகவும், விரிந்த தோள்களையும், நீண்ட கைகளையும், கழுத்தில் மூன்று சுருக்கங்களையும் {ரேகைகளையும்}, உயர்ந்த தாடைகளையும் {பருத்த கன்னங்களையும்} கொண்டவனாக இருக்கிறான்.(9) அவன் அகன்ற மார்பைக் கொண்டவனாகவும், நீண்ட வில்லைத் தாங்குபவனாகவும், காறையெலும்பு {கழுத்து பட்டை} மறைக்கப்பட்டவனாகவும், பகைவரை அடக்குபவனாகவும், நீண்ட கரங்களும், உயர்ந்த தலையும், பரந்த அழகிய நெற்றியும், {யானை போன்ற} கம்பீர நடையும் கொண்டவனாக இருக்கிறான்.(10) சமச்சீரான அங்கங்கள், பருத்த மார்பு, நீண்ட விழி, அழகிய நிறம் உட்பட நெடிதாகவோ, குட்டையாகவோ அல்லாத நல்ல விகிதத்தில் அமைந்த உடற்கட்டுடன் கூடிய அவன், மங்கல அம்சங்கள் அனைத்துடன் செழித்தவனாக இருக்கிறான்.(11) அவன் அறமறிந்தவனாகவும், வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவனாகவும் {சத்தியசந்தனாகவும்}, குடிமக்களின் நன்மையில் நாட்டமுள்ளவனாகவும், புகழ்பெற்றவனாகவும், விவேகமுள்ளவனாகவும், ஒழுக்கத்தில் தூய்மையானவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும், கவனம் நிறைந்தவனாகவும் இருக்கிறான்.(12)
பிரஜாபதிக்கு {பிரம்மருக்கு} இணையான தாதாவும் {அண்டத்தை ஆதரிக்கும் விஷ்ணுவும்), ஸ்ரீயுடன் கூடியவனுமான அவன் {ராமன்}, பகைவரை அழித்து, உயிரினங்களின் உலகைக் காத்து, அறத்தை முழுமையாகப் பாதுகாக்கிறான்.(13) அவன் தன்னறம் பாதுகாப்பவனாகவும் {மன்னர்களின் கடமைகளை வழுவறச் செய்பவனாகவும்}, தன் மக்களின் வெற்றிவீரனாகவும், வேத வேதாங்கங்களில் அறிஞனாகவும், தனுர்வேதத்தில் திறன்மிக்கவனாகவும் இருக்கிறான்.(14) அவன் சாத்திரங்கள் அனைத்தின் உண்மைப் பொருளையும், அவற்றின் சாரத்தையும் அறிந்தவனாகவும், சிறந்த நினைவுத்திறனும், அறிவாற்றலும் கொண்டவனாகவும், உலகங்கள் அனைத்தினாலும் விரும்பப்படுகிறவனாகவும், மென்மையானவனாகவும், கலங்காத ஆத்மாவைக் கொண்டவனாகவும், {சரியான நேரங்களில் சரியான செயல்களைச் செய்யும்} தெளிந்த சிந்தை கொண்டவனாகவும் இருக்கிறான்.(15)
அவன், ஆறுகளால் அடையப்படும் பெருங்கடலைப் போலவே, தெளிந்த மனம் கொண்டவர்களால் எப்போதும் அணுகப்படக்கூடிய ஆரியனாக {உன்னதனாக} இருக்கிறான்; அனைவரையும் சமமாக நடத்தும் அவன், எப்போதும் காண்பதற்கு இனியவனாக இருக்கிறான்.(16) கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனும், உன்னதக் குணங்கள் அனைத்தையும் கொண்டவனுமான அவன், அளவற்ற ஆழம் கொண்ட பெருங்கடலைப் போல, கம்பீரமிக்கவனாகவும், ஹிமவானை {இமய மலையைப்} போன்ற உறுதி {தைரியம்} கொண்டவனாகவும் இருக்கிறான்.(17) அவன் விஷ்ணுவுக்கு ஒப்பான ஆற்றலையும், சோமனை {சந்திரனைப்} போன்ற இனிய தோற்றத்தையும், காலாக்னிக்கு ஒப்பான கோபத்தையும், பிருத்விக்கு {பூமிக்கு} இணையான பொறுமையையும் கொண்டிருக்கிறான். மேலும் அவன், தனதேனனுக்கு {குபேரனுக்கு} இணையாக ஈகை செய்பவனாகவும், தர்மனை {யமனைப்} போன்ற ஒப்பற்ற வாய்மை நிறைந்தவனாகவும் இருக்கிறான்.(18.19அ)
{02. அயோத்யா காண்டம்}
பூமியின் தலைவனான தசரதன், அன்புடனும், மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கிலும், இத்தகைய உன்னதக் குணங்களுடன், உண்மையான ஆற்றலையும், மக்களின் நன்மையில் விருப்பத்தையும் கொண்ட தன் அன்புக்குரிய மூத்த மகன் ராமனை யுவராஜனாக்க {இளவரசனாக்க} விரும்பினான்.(19ஆ,20,21அ) {தசரதனின்} மனைவியான கைகேயி தேவி, {ராமனின் இளவரசு பட்ட} அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைக் கண்டு, முன்னர் {சம்பராசுரனுடனான போரில்} உறுதியளிக்கப்பட்ட வரங்களை அப்போது வேண்டும் வகையில், ராமனை நாடு கடத்தவும், பரதனுக்கு அபிஷேகம் {பட்டாபிஷேகம்} செய்யவும் அவனிடம் {தசரதனிடம்} வரங்களைக் கேட்டாள்.(21ஆ,22) அறக்கயிற்றில் {தர்மபாசத்தில்} கட்டுண்ட ராஜா தசரதன், தன் சொல்லை மெய்ப்பிப்பதற்காகத் தன் அன்புக்குரிய மகனான ராமனை நாடு கடத்தினான்.(23) அந்த வீரன் {ராமன்}, கைகேயியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும், தன் தந்தை கொடுத்த உறுதிமொழியைக் காப்பதற்காகவும் காட்டுக்குச் சென்றான்.(24)
பணிவுள்ளவனும், அன்புக்குரிய தம்பியும், தமையனின் அன்புக்குரியவனும், சுமித்ரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனுமான லக்ஷ்மணன், தன் தமையன் {ராமன்} நாட்டைவிட்டுச் செல்லும்போது, உடன்பிறந்த பற்றை வெளிப்படுத்தும் வகையில், அன்புமிக்கவனாக அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(25, 26அ) {தசரதனின்} மருமகளும், ராமனின் உயிருக்கு இணையானவளும், {ராமனின்} அன்புக்குரிய மனைவியும், எப்போதும் நல்ல மனம் கொண்டவளும், ஜனகனின் குலத்தில் பிறந்தவளும், தேவ மாயையால் வடிவமைக்கப்பட்டவளைப் போல அனைத்து நற்குறிகளும் பொருந்தியவளும், பெண்களில் சிறந்தவளுமான சீதையும், சசியுடன் {சந்திரனுடன்} கூடிய ரோஹிணியைப் போல ராமனைப் பின்தொடர்ந்து சென்றாள்.(26ஆ,27,28அ)
(Chitrakoot) சித்திரகூட், சத்னா மாவட்டம், மபி |
குடிமக்களாலும், தந்தையான தசரதனாலும் நீண்ட தொலைவுக்குப் பின்தொடரப்பட்டவனும், தர்மாத்மாவுமான ராமன், கங்கைக் கரையில் உள்ள சிருங்கிபேரபுரத்தில் தன் மீது அன்பு கொண்ட நிஷாதிபதியான {நிஷத நாட்டு மன்னனான} குகனை அடைந்தான். பிறகு அவன், குஹன், லக்ஷ்மணன், சீதை ஆகியோருடன் சேர்ந்து தன் தேரோட்டிக்கு {சுமந்திரனுக்கு} விடைகொடுத்து அனுப்பினான்.(28ஆ,29,30அ) அவர்கள் காடுவிட்டுக் காடு சென்று, நீர் நிறைந்த ஆறுகளைக் கடந்து, பரத்வாஜரின் ஆணையால் சித்திரகூடத்தை அடைந்து, அழகிய வசிப்பிடத்தை {பர்ணசாலையை} அமைத்துக் கொண்டு, அந்த அழகிய வனத்தில் தேவர்களைப் போலவும், கந்தர்வர்களைப் போலவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.{30ஆ,31,32அ) இவ்வாறு ராமன் சித்திரகூடத்திற்குச் சென்றதும், ராஜா தசரதன் புத்திரசோகத்தால் துன்புற்று தன் மகனுக்காக அழுதவாறே சொர்க்கத்தை அடைந்தான்.(32ஆ,33அ)
அவன் {தசரதன்} இறந்ததும், வசிஷ்டராலும், பிற முக்கியத் துவிஜர்களாலும் {இருபிறப்பாளர்களாலும்} பரதன் ராஜாவாக நியமிக்கப்பட்டாலும், மஹாபலனான அந்த வீரன் {பரதன்}, ராஜ்யத்தை விரும்பாமல் ராமனின் பாதத்தை வழிபட வனத்திற்குச் சென்றான்.(33ஆ,34) ஆரியனைப் போல {ராமனே மன்னனாக நிறுவப்பட வேண்டுமென்ற கருத்தைக் கொண்ட உன்னதனாகச்} சிந்தித்த அவன், ராமனிடம் சென்று, மஹாத்மாவும், உண்மையான ஆற்றலைக் கொண்டவனுமான தன் தமையன் ராமனிடம், இவ்வகையான சொற்களில், "அறமறிந்த நீர் மட்டுமே மன்னராக முடியும்" என்றான்.(35,36அ)
இராமன், கருணையுள்ளவனாகவும், அருள் பொருந்தியவனாகவும், உயர்ந்த புகழைக் கொண்டவனாகவும், பெரும்பலம் படைத்தவனாகவும் இருந்தாலும், தன் தந்தையுடைய ஆணையின் காரணமாக ராஜ்ஜியத்தை விரும்பாதிருந்தான்.(36ஆ,37அ) அதன்பிறகு மீண்டும் மீண்டும் பரதனைத் திருப்பியனுப்பிய தமையன் {ராமன்}, {தனக்கு மாற்றாக} ராஜ்ஜியத்தில் நியமிக்கத் தன் பாதுகைகளைப் பரதனிடம் கொடுத்தான்.(37ஆ,38அ) இவ்வாறு விருப்பம் நிறைவேறாதவன் {பரதன்}, ராமனின் பாதுகைகளைத் தீண்டி, ராமனின் வரவை எதிர்பார்த்து, நந்திக்கிராமத்தில் இருந்து {அந்தக் கோசல} ராஜ்யத்தை ஆண்டான்.(38ஆ,39அ) வாய்மைக்குக் கட்டுப்பட்டவனும், புலன்களை வென்றவனும், அற்புதனுமான அந்த ராமன், பரதன் சென்றாலும் குடிமக்கள் மீண்டும் மீண்டும் {சித்திரகூடத்திற்கு} வருவார்கள் என்றெண்ணி, {குவிந்த கவனத்துடன்} தனித்திருப்பதற்காகத் தண்டக வனத்திற்குள் நுழைந்தான்.(39ஆ,40)
{03. ஆரண்ய காண்டம்}
தாமரைக்கண்ணனான ராமன், அந்தப் பெரும் வனத்திற்குள் நுழைந்து, ராட்சசனான விராதனைக் கொன்று, சரபங்கர், சுதீக்ஷ்ணர், அகஸ்தியர், அகஸ்தியரின் தம்பி {சுதர்சனர்} ஆகியோரைக் கண்டான்.(41,42அ) அகஸ்தியர் சொன்னதைக் கேட்டு, இந்திரன் கொடுத்த வில், வாள், எப்போதும் வற்றாத கணைகளைக் கொண்ட இரு தூணிகள் ஆகியவற்றை அவன் {ராமன்} பெரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.(42ஆ,43அ)
இராமன், அந்த வனத்தில் {தண்டகாரண்யத்தில் சரபங்க முனிவரின் ஆசிரமத்தில்} வசித்த போது, ரிஷிகள் அனைவரும் வனவாசிகளுடன் சேர்ந்து, அசுரர்களையும், ராட்சசர்களையும் கொல்வதற்காக அவனை அணுகினர்.(43ஆ,44அ) அவன் {ராமன்} அதைக் கேட்டு, ராட்சச வனத்தில் {தண்டகாரண்யத்தில்} வசிப்பவர்களும், அக்னிக்கு நிகரானவர்களுமான ரிஷிகளிடமும், தண்டகாரண்யவாசிகளிடமும், போரில் ராட்சசர்களைக் கொல்வதாக உறுதிமொழி அளித்தான்.(44ஆ,45)
இராமன் அங்கே வசித்து வந்த போது, {தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான} ஜனஸ்தானத்தில் வசிப்பவளும், {விரும்பிய வடிவை ஏற்கவல்ல} காமரூபிணியும், ராட்சசியுமான சூர்ப்பணகை அவனால் வடிவங்குலைக்கப்பட்டாள்.(46) அதன்பிறகு, சூர்ப்பணகையின் சொற்களால் தூண்டப்பட்டு, ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் போரிட்ட கரன், திரிசிரன், தூஷணன் உள்ளிட்ட ராட்சசர்கள் அனைவரையும், அவர்களின் தொண்டர்களையும் ராமன் கொன்றான்.(47,48அ) அந்த வனத்தில் அவன் வசித்திருந்த போது, ஜனஸ்தானவாசிகளான பதினான்காயிரம் ராட்சசர்கள் கொல்லப்பட்டனர்.(48ஆ,49அ)
அப்போது ராவணன்[1] தன் உற்றார் உறவினர் கொல்லப்பட்டதைக் கேட்டு, கோபத்தால் உடல் துடித்து, மாரீசன் என்ற பெயர் படைத்த ராட்சசனின் உதவியை நாடினான்.(49ஆ,50அ) அந்த மாரீசன் இராவணனிடம், "இராவணா, அந்தப் பலவானைப் பகைப்பது உனக்குத் தகாது" என்று சொல்லிப் பல முறை தடுத்தான்.(50ஆ,51அ) காலத்தால் தூண்டப்பட்ட ராவணன், அந்தப் பேச்சை அலட்சியம் செய்து, மாரீசனுடன் சேர்ந்து, {ராமன் இருந்த} அந்த ஆசிரமத்திற்குச் சென்றான்.(51ஆ,52அ) அந்த மாயாவி {மாரீசன்}, மன்னனின் மகன்களை {தசரதனின் மகன்களான ராமனையும், லக்ஷ்மணனையும்} நெடுந்தொலைவுக்கு அழைத்துச் சென்ற பிறகு, ராமனின் மனைவி {சீதை, ராவணனால்} அபகரிக்கப்பட்டாள்; கழுகான ஜடாயுவும் கொல்லப்பட்டான்.(52ஆ,53அ) வீழ்ந்து கிடக்கும் கழுகை {ஜடாயுவைக்} கண்ட ராகவன் {ராமன்}, மைதிலி {சீதை} அபகரிக்கப்பட்டதைக் கேட்டு, சோகத்துடன் குமுறி, புலன்கள் கலங்கி அழுதான்.(53ஆ,54அ) அந்தச் சோகநிலையில் கழுகான ஜடாயுவை எரியூட்டி {தகனம் செய்து}, வனத்தில் சீதையைத் தேடிக் கொண்டிருந்தபோது, வடிவம் குலைந்த பயங்கரத் தோற்றத்தையும், கபந்தன் என்ற பெயரையும் கொண்ட ராட்சசனைக் கண்டான்.(54ஆ,55) பெருந்தோள்களைக் கொண்டவன் {ராமன்}, அவனைக் கொன்று எரியூட்டியதும், அவன் {அந்த கபந்தன்} சொர்க்கத்தை அடைந்தான். அவன் {கபந்தன், சொர்க்கத்தை அடைவதற்கு முன்}, "ஓ! ராகவா, அறமொழுகுபவளும், அறத்தை நன்கறிந்தவளும், பக்தையுமான சபரியிடம் நீ செல்வாயாக" என்றான்.(56,57அ) பேரொளி படைத்தவனும், பகைவரை அழிப்பவனும், தசரதனின் மகனுமான அந்த ராமன், சபரியை அடைந்து, அந்தச் சபரியால் முழுமையாகப் பூஜிக்கப்பட்டான்.(57ஆ,58அ)
[1] இவன் பெயர் தசக்ரீவன் என்பதாகும். பத்து தலைகளைக் கொண்டவன் என்பது அதன் பொருள். வன்முறையால் மக்களைக் கதறச் செய்பவன் என்ற பொருளில் அமைந்த பெயர் ராவணன் என்பதாகும். விஷ்ரவசு என்ற பெயர் படைத்தவனின் மகன் என்றும் அதற்குப் பொருள் சேரும்.
{04. கிஷ்கிந்தா காண்டம்}
அவன் {ராமன்}, வானரனான ஹனுமானுடன் பம்பைக் கரையில் சேர்ந்து, அந்த ஹனுமானின் சொல்லால் சுக்ரீவனைச் சந்தித்தான்.(58ஆ,59அ) பெரும்பலவானான ராமன், நடந்தவை அனைத்தையும், குறிப்பாகச் சீதை குறித்தும் சுக்ரீவனிடமும், {ஹனுமானிடமும்} தொடக்கத்தில் இருந்து விரிவாகச் சொன்னான்.(59ஆ,60அ) வானரனான சுக்ரீவனும், ராமன் சொன்னவை அனைத்தையும் முழுமையாகக் கேட்டு, அக்னியை {மங்கல நெருப்பை} சாட்சியாகக் கொண்டு {ராமனுடன்} மகிழ்ச்சியாக நட்பை ஏற்படுத்திக் கொண்டான்.(60ஆ,61அ) பிறகு அந்த வானரராஜன் {சுக்ரீவன்} {வாலியுடனான} தன் பகை குறித்த அனைத்தையும் துயரத்துடனும், நட்புடனும் ராமனிடம் சொன்னான்.(61ஆ,62அ) அப்போது ராமன், வாலியைக் கொல்வதாக உறுதிமொழியேற்றான். இதனால், அந்த வானரன் {சுக்ரீவன்}, வாலியின் பலத்தையும் விளக்கிச் சொன்னான்.(62ஆ,63அ) ஆனாலும் ராகவனின் ஆற்றலில் சுக்ரீவன் எப்போதும் ஐயம் நிறைந்தவனாகவே இருந்தான். ராகவனிடம் நம்பிக்கை கொள்வதற்காக அந்தச் சுக்ரீவன், பெரும் மலை போலக் கிடந்த துந்துபியின் பேருடலை ராகவனிடம் காண்பித்தான்.(63ஆ,64) பெருந்தோள்களைக் கொண்ட அந்தப் பெரும்பலவான் {ராமன்}, அந்த எலும்புக் குவியலைக் கண்டு புன்னகைத்து, அவற்றை {அந்த எலும்புக்குவியலைத்} தன் பாதத்தின் பெருவிரலைக் கொண்டு முழுமையாகப் பத்து யோஜனை தொலைவில் விழச் செய்தான்.{65) பிறகும் அவன் {ராமன்}, ஒரே பெருங்கணையை ஏவி {சுக்ரீவனின் மனத்தில்} நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, ஏழு சால மரங்களையும் {மராமரங்களையும்}, ஒரு மலையையும், அதன் தொடர்ச்சியாக {பூமியின் அடியில் இருக்கும்} ரஸாதலத்தையும் {அந்த ஒரே கணையால்} துளைத்தான்.(66)
அந்தப் பெருங்குரங்கானவன் {சுக்ரீவன்}, இதனால் {ராமனின் செயலால்} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், {ராமனின் பலத்தில்} நம்பிக்கையுடனும், குகை போன்றிருக்கும் கிஷ்கிந்தைக்கு அந்த ராமனுடன் சேர்ந்து சென்றான்.(67) அதன்பிறகு, குரங்குகளில் சிறந்தவனும், பொன்னிறம் கொண்டவனுமான சுக்ரீவன் பெருமுழக்கம் செய்தான். அந்தப் பேரொலியால் குரங்குகளின் மன்னன் {வாலி} வெளியே வந்தான்.(68) {தன் மனைவியான} தாரையை ஏற்கச் செய்து, சுக்ரீவனை {போரில்} சந்தித்தவன் {வாலி}, ராகவனின் ஒரே கணையால் அங்கே கொல்லப்பட்டான்.(69) சுக்ரீவனுடைய முறையீட்டின் பேரில், போரில் வாலியைக் கொன்ற ராகவன், அந்த ராஜ்யத்தில் {கிஷ்கிந்தையில்} சுக்ரீவனையே {மன்னனாக} நிறுவினான்.(70) வானரர்களில் சிறந்தவனான அவன் {சுக்ரீவன்}, வானரர்கள் அனைவரையும் அழைத்து, ஜனகனின் மகளை {சீதையைக்} கண்டுபிடிப்பதற்காக {அவர்களைப்} பல்வேறு திசைகளில் அனுப்பினான்.(71)
{05. சுந்தர காண்டம்}
அப்போது பலமிக்கவனான ஹனுமான், கழுகான சம்பாதியின் சொல்லைக் கேட்டு, நூறு யோஜனைகள் பரந்திருக்கும் லவணச் சமுத்திரத்தின் {உப்புப் பெருங்கடலின்} மேல் கடந்து சென்றான்.(72) அவன் ராவணனால் ஆளப்படும் லங்காபுரியை அடைந்து, அசோகவனத்தில் தியானித்துக் கொண்டிருக்கும் சீதையைக் கண்டான்.(73) {ராமனின் மோதிரம் எனும்} அடையாளத்தைக் கொடுத்து, {ராமனின்} ஏற்பாடுகளையும் சொல்லி, வைதேஹிக்கு {சீதைக்கு} ஆறுதலளித்து {அசோக வனத்தில் இருந்த} தோரணத்தை {கோட்டைவாயில் கோபுரத்தை} அழித்தான்.(74) மேலும் அவன், சேனாதிபதிகள் {படைத்தலைவர்கள்} ஐவரையும், மந்திரிகுமாரர்கள் எழுவரையும் கொன்று, சூரனான அக்ஷனை நொறுக்கி, {இந்திரஜித்தின் கணையில்} கட்டுண்டான்.(75) அந்தப் பெருங்குரங்கானவன் {ஹனுமான்}, பிதாமஹரின் {பிரம்மரின்} வரத்தால் அஸ்திரத்தில் {கட்டில்} இருந்து விடுபட்டதை அறிந்தும், தன் விருப்பத்தின் பேரில் ராட்சசர்களின் கட்டுகளைப் பொறுத்துக் கொண்டு, மிதிலையின் சீதையை {நெருப்பில் இருந்து} தவிர்த்து, லங்காபுரியை எரித்துவிட்டு, அந்த இனிய செய்தியை ராமனுக்குச் சொல்லத் திரும்பினான்.(76,77) அளவற்ற புத்தியைக் கொண்ட அவன் {ஹனுமான்}, மஹாத்மாவான ராமனை அடைந்து, அவனை வலம் வந்து, "கண்டேன் சீதையை" எனச் சுருக்கமாகச் சொன்னான்.(78)
{06. யுத்த காண்டம்}
அதன்பிறகு அவன் {ராமன்}, சுக்ரீவனுடன் பெருங்கடலுக்குச் சென்று, ஆதித்யனுக்கு {சூரியனுக்கு} ஒப்பான கணைகளால் சமுத்திரத்தைக் கலங்கடித்தான்.(79) {அப்போது}, ஆறுகளின் தலைவனான சமுத்திரன், தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். அவனது {சமுத்திரனின்} சொல்லின் படி, நளன் {கடலின் மீது} ஒரு பாலத்தை அமைத்தான்.(80) அதன் {அந்தப் பாலத்தின்} மூலம் லங்காபுரிக்குச் சென்ற ராமன், போரில் ராவணனைக் கொன்ற பிறகு, சீதையைத் திரும்பி அழைக்க வெட்கி நின்றான் {தடுமாற்றம் அடைந்தான்}.(81) அப்போது ராமன், மக்கள் கூட்டத்தின் முன்பு அவளிடம் கடுமையாகப் பேசினான். கணவனிடம் அர்ப்பணிப்புமிக்கச் சீதை, அதை {ராமனின் சொற்களைப்} பொறாமல் எரியும் தழலுக்குள் புகுந்தாள்.(82) அக்னி சொன்ன சொல்லால், சீதை பாவமற்றவள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த ராமன், அப்போது தேவர்களால் பூஜிக்கப்பட்டவனாக ஒளிர்ந்து கொண்டிருந்தான். மஹாத்மாவான ராகவன் செய்த அருஞ்செயலின் மூலம் மூவுலகங்களும், அனைத்து உயிரினங்களும், தேவகணங்களும், ரிஷிகணங்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(83,84)
ராமன், லங்கையில் விபீஷணனை ராட்சசேந்திரனாக {ராட்சசர்களின் இந்திரன்/மன்னனாக} நியமித்ததால், கவலையில் இருந்து விடுபட்டு, உண்மையில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(85) இராமன், {இறந்து போன} வானரர்களைத் தேவர்களிடம் வரம்பெற்று உயிர்ப்பித்து, நல்லிதயம் கொண்டோரால் சூழப்பட்டவனாக, புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} அயோத்திக்குச் சென்றான்.(86) உண்மையான ஆற்றல் படைத்தவனான அந்த ராமன், பரத்வாஜ ஆசிரமத்திற்குச் சென்று, {நந்திக்கிராமத்தில் உள்ள} பரதனிடம் ஹனுமானை அனுப்பினான்.(87) சுக்ரீவனுடன் கூடிய அவன் {ராமன்}, புஷ்பகத்தில் ஏறி, {காடுகளில் தான் வாழ்ந்து கழித்த} பழைய வரலாற்றை மீண்டும் சொன்னபடியே நந்திக்கிராமத்திற்குச் சென்றான்.(88) பாவமற்றவனான ராமன், தன் தம்பிகள் அனைவருடன் கூடியவனாக நந்திக்கிராமத்தில் தன் சடாமுடியை நீக்கினான். சீதையை மீட்டு வந்த பிறகு, {இவ்வாறு} அவன் தன் ராஜ்யத்தை மீண்டும் அடைந்தான்.(89)
{07. உத்தர காண்டம்}
{அந்த ராமராஜ்யத்தில்} இனி இந்த உலகம், பெரும் மகிழ்ச்சியுடன் இன்புற்று, நிறைவுடனும், அனைத்தையும் மிகுதியாக அடைந்தும், அறம் வளர்த்து, நலம் விளைவித்து, பிணியற்று, பஞ்சமெனும் அச்சத்தில் இருந்து விடுபட்டிருக்கும்.(90) மனிதர்கள் எங்கும், எப்போதும் {தங்கள் வாழ்நாளில்} தங்கள் பிள்ளைகளின் மரணத்தைக் காணமாட்டார்கள். பெண்கள், விதவையாகாமல், எப்போதும் பதிவிரதைகளாக {கணவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக} இருப்பார்கள்.(91) அங்கே {ராமராஜ்யத்தில்} அக்னி பயமோ, புயல்பயமோ, வெள்ளத்தில் கால்நடைகள் மூழ்கிப் போகும் என்ற பயமோ, பிணி பயமோ, பசி பயமோ, கள்வர் பயமோ ஒருபோதும் இருக்காது.(92,93அ) நகரங்களிலும், ராஷ்டிரங்களிலும் {மாநிலங்களிலும்} தனமும் {செல்வமும்}, தானியங்களும் பெருகியிருக்கும். கிருத யுகத்தில் இருப்பது போல, {குடிமக்கள் அனைவரும்} எப்போதும் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.(93ஆ,94அ) அந்தப் பெருஞ்சிறப்புமிக்கவன் {ராமன்}, நூறு அஷ்வமேதங்களைச் செய்து, விதிப்படி பிராமணர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஏராளமான பொன்னையும், கோடிக்கணக்கான பசுக்களையும், கணக்கிடப்பட முடியாத செல்வத்தையும் கொடையளிப்பான்.(94ஆ,95) ராகவன், நான்கு வர்ணத்தாரையும், தங்கள் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்து, இவ்வுலகில் நூற்றுக்கணக்கான ராஜவம்சங்களை நிறுவுவான்.(96) அந்த ராமன், பத்தாயிரம் வருடங்களும், இன்னும் ஓராயிரம் வருடங்களும் {மொத்தமாகப் பதினோராயிரம் வருடங்கள்} தன் ராஜ்யத்திற்குத் தொண்டு செய்த பிறகு, பிரம்மலோகத்தை அடைவான்.(97)
{பலச்ருதி}
இந்த ராம சரிதம், பவித்ரமானதும், பாவத்தை அழிப்பதும், புண்ணியத்தை அளிப்பதும், வேதங்களை உள்ளடக்கியதுமாகும். இதைப் படிக்கும் எவனும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் உண்மையில் விடுபடுவான்.(98) இந்த ராமாயணம் நீண்ட ஆயுளை அளிக்கும். இதை உண்மைப் பொருளுடன் படிக்கும் மனிதர்கள் பிள்ளைகளாலும், பேரப்பிள்ளைகளாலும் அருளப்படுவார்கள். அவர்கள் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைந்து, உற்றார் உறவினர்களால் வழிபடப்படுவார்கள்.(99) இதைப் படிப்பதன் மூலம் ஒரு பிராமணன் வாக்கில் சிறந்தவனாவான், ஒரு க்ஷத்திரியன் பூமியின் தலைமையை அடைவான், ஒரு வைசியன் வணிகத்தில் பெரும்லாபம் ஈட்டுவான், ஒரு சூத்திரன் மிகச் சிறந்த நிலையை அடைவான்" என்றார் {நாரதர்}[2].(100)
[2] இராமாயணத்தின் சுருக்கமாக அமைந்திருக்கும் இந்த முதல் சர்க்கம் சம்க்ஷேப ராமாயணம் என்றும், பால ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது. நீண்ட ஆயுளைப் பெறுவதற்காகவும், ராமனைப் போன்ற மிகச் சரியான ஆளுமைத்தன்மையை அடைவதற்காகவும் இந்த அத்தியாயத்தைத் தினந்தோறும் ஓதுமாறு இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பாலகாண்டம் சர்க்கம் – 01ல் உள்ள சுலோகங்கள்: 100
Previous | | Sanskrit | | English | | Next |