Burn the tail | Sundara-Kanda-Sarga-53 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானின் வாலில் தீயிட்டு, லங்கை முழுவதும் அழைத்துச் செல்ல ஆணையிட்ட ராவணன்...
தேசகாலத்திற்கு ஹிதமான அந்த மஹாத்மாவின் {விபீஷணனின்}, அந்த வசனத்தைக் கேட்டு, அவனுடன் பிறந்தவனான தசக்ரீவன் {விபீஷணனுடன் பிறந்தவனும், பத்து கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன், பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகக் கூறினான்:(1) "தூதவதம் நிந்திக்கத்தக்கது என்பதை நீ சரியாகவே சொன்னாய். வதத்தைத் தவிர வேறு நிக்கிரஹம் இவனுக்கு அவசியம் விதிக்கப்படவேண்டும்.(2) கபிக்களுக்கு லாங்கூலமே இஷ்டமான பூஷணம் {குரங்குகளுக்கு வாலே விரும்பத்தக்க ஆபரணம்} என்று சொல்லப்படுகிறது. இவனது லாங்கூலத்திற்கு {வால்} தீயிடப்படட்டும். சீக்கிரமே எரியும் அதனுடன் {வாலுடன் இவன்} செல்லட்டும்.(3) சர்வ பந்துக்களும், மித்ரர்களும், ஞாதிகளும், நண்பர்களும் அங்க ரூபம் சிதைந்த காயத்துடன் கூடிய தீனனாக இவனைப் பார்க்கட்டும்.(4) சந்திகள், வீதிகள் உள்ளிட்ட சர்வ புரத்திலும் {லங்கா நகரம் முழுவதும்}, நன்றாக எரியும் லாங்கூலத்துடன் {வாலுடன்} ராக்ஷசர்கள் {இவனை} இழுத்துச் செல்லட்டும்" என்று ஆணையிட்டான் ராக்ஷசேந்திரன் {ராவணன்}[1].(5)
[1] நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும்கொல்லல் பழுதே போய் அவரைக் கூறிக் கொணர்தி கடிது என்னாதொல்லை வாலை மூலம் அறச் சுட்டு நகரைச் சூழ்போக்கிஎல்லை கடக்கவிடுமின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார்- கம்பராமாயணம் 5921ம் பாடல், சுந்தர காண்டம், பிணிவீட்டு படலம்பொருள்: "நல்லது உரைத்தாய் நல்லவனே, இவன் {அனுமன்} குற்றத்தையே செய்தான் ஆனாலும் கொல்வது குற்றமே ஆகும்" {என்று வீடணனிடம் சொல்லிவிட்டு, அனுமனை நோக்கி}. "அவர்களிடம் {ராமலக்ஷ்மணர்களிடம்} போய்ச் சொல்லி, விரைவாக அழைத்து வருவாயாக" {என்று சொல்லிவிட்டு, அரக்கர்களை நோக்கி}, "தொல்லை தந்த வால் அடியோடு அழியும்படி {நெருப்பால்} எரித்து, நகரைச் சுற்றி இழுத்துச் சென்று, {இந்நகரின்} எல்லைக் கடந்து விரட்டுவீராக" என்று ஆணையிட்டான் {ராவணன்}. அருகே நின்றவர்கள் {அரக்கர்கள்} ஆரவாரம் செய்தபடியே புறப்பட்டனர்.
அவனது {ராவணனின்} அந்த வசனத்தைக் கேட்டுக் கோபத்தால் நிறைந்த ராக்ஷசர்கள், பருத்தியாலான கந்தற்துணிகளால் லாங்கூலத்தை {வாலைச்} சுற்றினர்.(6) வாலில் {கந்தல் துணிகள்} சுற்றப்பட்டபோது, உலர்ந்த கட்டைகளுடன் கூடிய வனத்தைப் பற்றிய ஹுதாசனனை {அக்னியை / நெருப்பைப்} போல மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} ஓங்கி வளர்ந்தான்.(7) பிறகு, தைலம் {எண்ணெய்} தெளித்து, அதில் அக்னியிட்டனர். பாலசூரியனுக்கு ஒப்பான முகம் கொண்ட அவன் {ஹனுமான்}, கோபமடைந்து, எரிந்து கொண்டிருக்கும் தன் லாங்கூலத்தால் {வாலால்} அந்த ராக்ஷசர்களை அடித்துத் தள்ளினான்.(8,9அ) ஸ்திரீகள், பாலர்கள், விருத்தர்கள் சகிதராக நிசாசரர்கள் {இரவுலாவிகளான ராக்ஷசர்கள்}, அந்த ஹனூமதனின் லாங்கூலம் {வால்} எரிவதைக் காணப் பிரீதியுடன் சென்றனர்.(9ஆ,10அ)
வீரனான அந்த ஹரிசத்தமன் {குரங்களில் சிறந்த ஹனுமான்}, மீண்டும் கட்டுண்டு, அந்தக் காலத்திற்குத் தகுந்த மதியை {அந்த நேரத்திற்குத் தகுந்த எண்ணத்தைப் பின்வருமாறு} அமைத்துக் கொண்டான்:(10ஆ,11அ) "நான் கட்டப்பட்டிருந்தாலும், தாங்கள் விரும்பியதைச் செய்வதற்கு {இந்த} ராக்ஷசர்கள் சக்தர்களல்லர். பாசங்களை {கயிறுகளை} அறுத்து, மீண்டும் மேலே பாய்ந்து, இவர்களை என்னால் கொல்ல முடியும்.(11ஆ,12அ) தலைவரின் {ராமரின்} ஹிதத்திற்காகத் திரியும் என்னை, இந்த துராத்மாக்கள், தங்கள் தலைவனின் {ராவணனின்} ஆணைக்கிணங்கக் கட்டினாலும், {இவர்களால்} எள்ளளவு கெடுதியையும் எனக்குச் செய்துவிட முடியாது.(12ஆ,13அ) சர்வ ராக்ஷசர்களும் எதிர்த்து யுத்தம் செய்தாலும், நான் ஈடுகொடுக்கவல்லவன். ஆனால் ராமரின் பிரீதிக்காகவும், மீண்டும் இத்தகைய லங்கையில் திரிந்து பார்க்க வேண்டும் என்பதற்காகவும் நான் {இவற்றை} சகித்துக் கொள்வேன்.(13ஆ,14) ராத்திரியில் லங்கையை நன்றாகப் பார்க்கவில்லை. கோட்டை செயல்படும் விதத்தை பகற்பொழுதில் நிச்சயம் நான் பார்க்க வேண்டும்.(15) இராக்ஷசர்கள் மீண்டும் என்னைக் கட்டி, வாலில் தீயிட்டு, தாங்கள் விரும்பியபடி துன்புறுத்தட்டும். என் மனத்தில் எந்த சிரமமும் உண்டாகாது" {என்று நினைத்தான் ஹனுமான்}.(16)
இராக்ஷசர்கள், {எண்ணங்கள்} அனைத்தையும் மறைத்துக் கொண்டவனும், சத்வவந்தனும், கபிகுஞ்சரனுமான மஹாகபியை {பெருங்குரங்கான ஹனுமானை} அப்போது மகிழ்ச்சியாகப் பிடித்துச் சென்றனர்.(17) குரூர கர்மங்களைச் செய்பவர்களான ராக்ஷசர்கள், சங்குகள், பேரிகள் முழங்க, {ஹனுமானின்} சர்வ கர்மங்களையும் கோஷமிட்டு அறிவித்தபடியே அந்த புரீ {நகரம்} முழுவதும் அவனை இழுத்துச் சென்றனர்.(18) அரிந்தமனான ஹனுமான், ராக்ஷசர்கள் துணையுடன் சுகமாகச் சென்று, ராக்ஷசர்களின் மஹாபுரியில் திரிந்து கொண்டிருந்தான்.(19) அப்போது மஹாகபி {ஹனுமான்}, விசித்திரமான விமானங்களையும், {மதில்களால்} மறைக்கப்பட்ட பூமிபாகங்களையும், அழகாக வகுக்கப்பட்ட நாற்சந்திகளையும் கண்டான்.(20) பவனாத்மஜனான ஹனுமான், கிருஹங்களால் அடர்ந்த வீதிகளையும், நாற்புறங்களிலும் வழிகளுள்ள இடங்களையும், அதேபோல, பெரிய வீதிகளையும், சிறிய வீதிகளையும், கரடுமுரடான சந்துகளையும், சிறு கிருஹங்களையும், மேகம்போன்ற மாளிகைகளையும் கண்டான்.(21,22அ)
சர்வ ராக்ஷசர்களும், நாற்சந்திகளிலும், நான்கு தூண்களைக் கொண்ட சாவடிகளிலும், அதேபோல ராஜமார்க்கங்களிலும் கபியை {குரங்கான ஹனுமானை அழைத்துச் சென்று}, "சாரன் {இவன் ஒற்றன்}" என்று கோஷமிட்டனர்.(22ஆ,23அ) எரியும் லாங்கூலத்துடன் {வாலுடன்} கூடிய அந்த ஹனுமந்தனைக் காணும் ஆவலுடன் ஆங்காங்கேயுள்ள ஸ்திரீகளும், பாலர்களும், விருத்தர்களும் {பெண்களும், சிறுவர்களும், முதியவர்களும்} வெளியே வந்தனர்.(23ஆ,24அ)
அங்கே ஹனூமதனின் லாங்கூல நுனியில் தீ வைக்கப்பட்டபோது, விரூபாக்ஷிகளான {வடிவம் குலைந்த கண்களுடன் கூடிய} அந்த ராக்ஷசிகள், பிரியமற்றதை {விரும்பத்தகாத அந்தச் செய்தியை} தேவியிடம் {சீதையிடம் பின்வருமாறு} அறிவித்தனர்:(24ஆ,25அ) "சீதே, உன்னுடன் பேசிக் கொண்டிருந்த சிவந்த முகம் கொண்ட அந்தக் கபி {குரங்கு}, பற்றி எரியும் லாங்கூலத்துடன் {வாலுடன்} இழுத்துச் செல்லப்படுகிறான்" {என்றனர்}.(25ஆ,26அ)
அந்தக் குரூர வசனத்தைக் கேட்ட வைதேஹி, தான் கடத்தப்பட்டதற்கு ஒப்பான சோக சந்தாபத்துடன் ஹுதாசனனை {அக்னி தேவனை} வழிபட்டாள்.(26ஆ,27அ) அப்போது, அந்த விசாலாக்ஷி {நீள்விழியாளான சீதை}, மஹாகபிக்கு {பெருங்குரங்கான ஹனுமானுக்கு} மங்கலத்தை விரும்பியவளாக, ஹவ்யவாஹனனை {வேள்வியில் இடப்படும் ஹவிஸ்ஸை உரிய தெய்வங்களுக்குச் சுமந்து செல்பவனான அக்னிதேவனை} உபாசித்து {பின்வருமாறு} வழிபட்டாள்:(27ஆ,28அ) "என் பதிக்கு {கணவருக்குத்} தொண்டு செய்த ஏக பத்தினியானால், தபம்புரிந்தவளானால் ஹனூமதனுக்குக் குளிர்ச்சியை அளிப்பாயாக.(28ஆ,29அ) அந்த மதிமிக்கவருக்கு {ராமருக்கு} என்னிடம் ஏதேனும் இரக்கம் உண்டானால், எனக்கான பாக்கியம் {இன்னும்} எஞ்சியிருக்குமானால் ஹனூமதனுக்கு குளிர்ச்சியை அளிப்பாயாக.(29ஆ,30அ) அந்த தர்மாத்மா {ராமர்}, நன்னடத்தையுடையவள் என்றும், தன்னைக் காணும் ஆவலுடன் இருப்பவள் என்றும் என்னை அறிந்திருந்தால் ஹனூமதனுக்குக் குளிர்ச்சியை அளிப்பாயாக.(30ஆ,31அ) ஆரியனும், சத்தியசங்கரனுமான சுக்ரீவனால், இந்தத் துக்கக் கடலில் இருந்து என்னை விடுவிக்கமுடியுமென்றால், ஹனூமதனுக்குக் குளிர்ச்சியை அளிப்பாயாக" {என்று வேண்டினாள் சீதை}[2].(31ஆ,32அ)
[2] தாயே அனைய கருணையான் துணையை ஏதும் தகைவு இல்லாநாயே அனைய வல்அரக்கர் நலியக் கண்டால் நல்காயோநீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில்தூயோன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனைச் சுடல் என்றாள்- கம்பராமாயணம் 5931ம் பாடல், சுந்தர காண்டம், பிணிவீட்டு படலம்பொருள்: "தாய் போன்று அருள் புரிபவருக்கு {ராமருக்குத்} துணைவனை {அனுமனை}, பெருந்தகைமைச் சிறிதுமின்றி, நாய் போல் இழிந்த, கொடிய அரக்கர்களால் துன்புற்றவனை {அனுமனை நீ} கண்டால் அருள்செய்ய மாட்டாயோ? நீயே உலகத்திற்கு சாட்சியாக விளங்குபவன். உனக்கே கற்பு நிலை தெரியும். அதில் {அந்தக் கற்பில்} நான் தூயவளாக இருந்தால், உன்னைத் தொழுகிறேன், எரியே {நெருப்பே}, அவனைச் சுடாதே" என்றாள் {சீதை}.
அப்போது அனலன் {அக்னிதேவன்}, கபிக்கான நன்மையை மான்விழியாளிடம் அறிவிப்பதைப் போலக் கூரிய தழல்களின் சிகை வலப்பக்கம் திரும்பிய நிலையில் ஜ்வலித்தான்.(32ஆ,33அ) ஹநுமஜ்ஜனகனும் {ஹனுமானைப் பெற்றவனும்}, அவனது வாலில் அனலனுடன் {அக்னியுடன்} சேர்ந்திருப்பவனுமான அநிலனும் {வாயு தேவனும்} தேவிக்கு {சீதைக்கு} ஆறுதல் அளிக்கும் வகையில் குளிர்ந்த தென்றலாக வீசினான்.(33ஆ,34அ)
வானரன் {ஹனுமான்}, லாங்கூலம் {தன் வால்} எரிந்து கொண்டிருந்தபோது, {பின்வருமாறு} சிந்தித்தான், "அனைத்துப் பக்கங்களிலும் எரியும் இந்த அக்னி, ஏன் என்னை தஹிக்கவில்லை?(34ஆ,35அ) மஹாஜ்வாலையுடன் காணப்பட்டாலும், என்னைக் காயப்படுத்தவில்லையே. வாலின் நுனி, குளிர்ந்த பனிக்கட்டியில் இருப்பதைப் போலிருக்கிறதே.(35ஆ,36அ) மேலும், நான் {கடலைத்} தாண்டும்போது, ராமரின் பிரபாவத்தால், பர்வதத்துடனும், உததியுடனும் {மலையுடனும், கடலுடனும்} நட்பேற்பட்டதைக் கண்ட ஆச்சரியம் எப்படியோ, அப்படியே இதுவும் என்பது தெளிவாகிறது.(36ஆ,37அ) சமுத்திரனும், மதிமிக்க மைநாகனும் {மைனாக மலையும்} ராமரின் அர்த்தத்திற்காக இத்தகைய ஆர்வத்துடன் செயல்பட்டால், அக்னி ஏன் {உதவி} செய்யமாட்டான்?(37ஆ,38அ) சீதையின் அருளினாலும், ராகவரின் தேஜஸ்ஸினாலும், என் பிதாவிடமுள்ள சக்கியத்தினாலும் {என் தந்தையான வாயு தேவனிடம் கொண்ட நட்பினாலும்} பாவகன் {அக்னி} என்னை தஹிக்காதிருக்கிறான்" {என்று நினைத்தான் ஹனுமான்}.(38ஆ,39அ)
கபிகுஞ்சரனான அந்த மஹாகபி {குரங்குகளில் யானையும், பெரும் குரங்குமான ஹனுமான்}, மீண்டும் {இவ்வாறு} சிந்தனை செய்தபிறகு, வேகமாகக் குதித்து, உரத்த நாதம் செய்தான்.(39ஆ,40அ) பிறகு, ஸ்ரீமான் அநிலாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, சைலசிருங்கத்தை {மலைச் சிகரத்தைப்} போன்று உயரமானதும், ராக்ஷசர்களின் நெருக்கமற்றதுமான புரதுவாரத்தை {நகர வாயிலை} அடைந்தான்.(40ஆ,41அ) அந்த ஆத்மவான் {ஹனுமான்}, சைலத்திற்கு ஒப்பானவனாகி, ஒரு க்ஷணத்திற்குள் மிகச் சிறிய வடிவத்தை அடைந்து, பந்தத்திலிருந்து {கட்டுகளிலிருந்து} விடுபட்டான்.(41ஆ,42அ) விடுபட்டவனான ஸ்ரீமான் {ஹனுமான்}, மீண்டும் பர்வதத்திற்கு ஒப்பான வடிவை அடைந்து, சுற்றிலும் பார்த்தபோது, தோரணத்தின் அருகில் பரிகம் {நுழைவாயிலின் அருகில் இரும்புத்தடி} ஒன்றைக் கண்டான்.(42ஆ,43அ) மஹாபாஹுவான அந்த மாருதி, இரும்பாலான அதை {அந்தத் தடியை} மீண்டும் எடுத்துக் கொண்டு, அந்த ராக்ஷசர்கள் அனைவரையும் கொன்றான்.(43ஆ,44அ) இரணசண்ட விக்கிரமனான அவன், அவர்களை அழித்துவிட்டு, மீண்டும் லங்கையை நோக்கியபடியே, கதிர்களை மாலையாகக் கொண்ட சூரியனைப் போல லாங்கூலத்தில் தழல் {வாலில் நெருப்பு} மாலைகளைச் சூடியவனாக ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(44ஆ,இ,ஈ,உ)
சுந்தர காண்டம் சர்க்கம் – 53ல் உள்ள சுலோகங்கள்: 44
Previous | | Sanskrit | | English | | Next |