Saturday 4 May 2024

தூதனைக் கொல்லாதீர் என்ற விபீஷணன் | சுந்தர காண்டம் சர்க்கம் - 52 (27)

Messenger not to be killed - Vibhishana said | Sundara-Kanda-Sarga-52 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தூதனை வதம் செய்வது தகாது என்று ராவணனுக்கு அறிவுரை கூறிய விபீஷணன்...

Vibhishana speaking to Ravana not to kill Hanuman

மஹாத்மாவான அந்த வானரனின் அந்த வசனத்தைக் கேட்டு, குரோதத்தில் மூர்ச்சித்த {கோபத்தில் தன்னை மறந்த} ராவணன், ஹனுமானை வதம் செய்ய ஆணையிட்டான்.(1) துராத்மாவான ராவணன், அவனை வதம் செய்ய உத்தரவிட்டபோது, தூதனைக் கொல்வதை விபீஷணன் ஏற்கவில்லை.(2) காரியங்களின் விதங்களில் உறுதியுடன் இருப்பவனான அவன் {விபீஷணன்}, அந்த ரக்ஷோதிபதி {ராவணன்} குரோதமடைந்திருப்பதையும், எழுந்திருக்கும் அந்தக் காரியத்தையும் அறிந்து, செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்துச் சிந்தித்தான்.(3)

சத்ருக்களை வெல்பவனும், வாக்கியவிசாரதனுமான அவன் {வாக்கியங்களை அமைத்துப் பேசுவதில் திறம்பெற்றவனுமான விபீஷணன்}, ஒரு நிச்சயத்தை அடைந்து, பூஜிக்கத்தகுந்த ஆக்ரஜனிடம் {தன் அண்ணனிடம்}, அர்த்தம் பொதிந்த ஹிதமான வாக்கியத்தை {பின்வருமாறு} மெதுவாகச் சொன்னான்:(4) "இராக்ஷசேந்திரரே, கோபத்தைக் கைவிட்டுப் பொறுமை காப்பீராக[1]. அருள்கூர்ந்து என்னுடைய இந்த வாக்கியத்தைக் கேட்பீராக. சந்தர்களும் {பெரியோரும்}, நன்மை, தீமைகளை அறிந்தவர்களுமான வசுதாதிபேந்திரர்கள், தூதனை வதம் செய்ய மாட்டார்கள்.(5) வீரரே, இந்தக் கபியை {குரங்கைக்} கொல்வது, ராஜதர்மத்திற்கு விரோதமானது; உலக வழக்கில் கண்டனத்திற்குரியது; உமக்குத் தகாதது.(6) நீர் தர்மத்தை அறிந்தவர்; கிருதஜ்ஞர் {நன்றிமறவாதவர்}; ராஜதர்மவிசாரதர் {ராஜதர்மங்களில் நிபுணர்}; பூதங்களின் {உயிரினங்களின்} நன்மை தீமைகளை அறிந்தவர்; பரம அர்த்தத்தை {உயர்ந்த உண்மையை} அறிந்தவர்.(7) உம்மைப் போன்ற பண்டிதர்களே, கோபத்தால் கிரஹிக்கப்பட்டால், பிறகு, சாஸ்திரங்களில் பாண்டித்தியம் பெறுவது வெறும் சிரமத்தையே தரும் என்றாகிவிடும்.(8) எனவே, ராக்ஷசேந்திரரே, சத்ருக்களை அழிப்பவரே, வெல்லப்படமுடியாதவரே, அருள்கூர்ந்து, பொருத்தமானதையும், பொருத்தமற்றதையும் நிச்சயித்துக் கொண்டு தூதனுக்கான தண்டனையை விதிப்பீராக" {என்றான் விபீஷணன்}.(9)

[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "உரையாசிரியர், "(ஹனுமானைக் கொல்லும்) உன் ஆணையைக் கைவிட்டு, கோபம் தணிவாயாக என்பதே இந்த வாசகத்தின் பொருள்" என்று சொல்கிறார்" என்றிருக்கிறது.

இராக்ஷசேஷ்வரன் ராவணன், விபீஷணனின் சொற்களைக் கேட்டு, மஹத்தான கோபத்தை அடைந்து, {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(10) "சத்ருசூதனா {பகைவரை அழிப்பவனே, விபீஷணா}, பாபிகளை வதைப்பதில் பாபமேதும் இல்லை. எனவே, பாபசாரியான இந்த வானரத்தை வதம் செய்ய விரும்புகிறேன்" {என்றான்}.(11)

புத்திமான்களில் சிறந்தவனான விபீஷணன், பெருங்கோபத்தையும், அதர்மத்தையும் மூலமாகக் கொண்டதும், அநாரியர்களுக்கு ஏற்புடையதுமான வசனத்தைக் கேட்டு, பரம அர்த்த தத்துவத்துடன் கூடிய {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(12) "இராக்ஷசேந்திரரே, லங்கேஷ்வரரே, தர்மத்துடனும், அர்த்தத்துடனும் கூடிய வசனத்தை அருள்கூர்ந்து கேட்பீராக. இராஜரே, சர்வ சமயங்களிலும், சர்வ இடங்களிலும் தூதர்கள் வதைக்கப்படக்கூடாது என்று சந்தர்கள் {பெரியோர்கள்} சொல்கின்றனர்.(13) இவன் பெரும் சத்ரு என்பதில் சந்தேகமில்லை. இவன் பிரியமற்றவற்றை அளவில்லாமல் செய்திருக்கிறான். சந்தர்கள் தூதவதம் குறித்து சொல்வதில்லை. தூதனுக்கான பல தண்டனைகள் இருக்கின்றன.(14) அங்கரூபம் சிதைத்தல், கசையால் அடித்தல், மொட்டையடித்தல், உடலில் முத்திரையிடுதல் ஆகியவற்றை தூதர்களுக்கான தண்டனைகளாகச் சொல்கின்றனர். தூதனை வதம் செய்வது குறித்து நாம் கேள்விப்பட்டதில்லை.(15) 

தர்மம், அர்த்தங்களில் பயிற்சியுள்ள புத்தியையும், காரணம், விளைவு ஆகியவற்றில் சரியான நிச்சயத்தையும் கொண்ட உம் விதமானவர்கள் எவ்வாறு கோபவசமடையலாம்? சத்வந்தர்கள் {நீதி வழுவாதவர்கள்} தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.(16) வீரரே, தர்மத்தைக் குறித்து வாதம் செய்வதில் உமக்குத் துல்லியமானவர்கள் எவருமில்லை; உலக நடைமுறைகளிலும் இல்லை {உலக நடைமுறைகள் குறித்து வாதம் செய்வதிலும் உமக்குத் துல்லியமானவர்கள் எவரும் இல்லை}; சாஸ்திரங்களை புத்தியில் கிரஹித்துக் கொள்வதிலும் இல்லை {சாஸ்திரங்களை புத்தியில் கிரஹித்துக் கொண்டு, வாதம் செய்வதிலும் உமக்குத் துல்லியமானவர்கள் எவரும் இல்லை}. சர்வ ஸுராஸுரர்களில் உத்தமர் நீரே {இக்காரியங்கள் அனைத்திலும், தேவர்கள், அசுரர்கள் அனைவரிலும் சிறந்தவர் நீரே}.(17)

நிசாசரேந்திரரே {இரவுலாவிகளின் தலைவரே}, சூரரும், வீரருமான உம்மை ஸுராஸுரர்களாலும் வெல்ல முடியாது. செருக்கு நிறைந்த ஸுர, தைத்திய சங்கத்தினரையும் {தேவ அசுர கூட்டத்தாரையும்}, நரேந்திரர்களையும் {மனிதர்களின் தலைவர்களையும்} யுத்தங்களில் பலமுறை நீர் வென்றிருக்கிறீர்.(18) இந்தக் கபியைக் கொல்வதில் எந்த குணத்தையும் நான் பார்க்கவில்லை. எவர்கள் இந்தக் கபியை அனுப்பினரோ அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படட்டும்.(19) பகைவர்களால் அனுப்பப்பட்டவனான இவன் சாதுவோ? இல்லையோ? பிறனைச் சார்ந்திருப்பவனும், பிறருக்காகப் பேசுபவனுமான தூதன் வதைக்கப்படத் தகாதவன்[2].(20)

[2] அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய்
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது
வந்தெனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய்

- கம்பராமாயணம் 5916ம் பாடல், சுந்தர காண்டம், பிணிவீட்டு படலம்

பொருள்: ஆதிகாலத்தில் மூவுலகையும் தர்மத்தின் பலம் கொண்டு படைத்த அந்தணனின் {பிரம்மனின்} அன்புக்கு அமைந்த தவவழியை அறிந்தவனே, {அறிவு ஆற்றல்களில்} தகுதி உடையவனே, இந்திரனின் பணியைச் செய்யும் தலைவன் நீ. "தூது வந்தேன்" என்று சொன்ன பின்பும் கொல்வாயோ?" {என்று கேட்டான் வீடணன்}.

மேலும், ராஜரே, இவன் கொல்லப்பட்டால், வானத்தில் சஞ்சரித்து இங்கே வந்து, மீண்டும் மஹோததியின் {பெருங்கடலின்} மறுகரையை அடையக்கூடிய வேறு எவனையும் நான் காணவில்லை.(21) எனவே, பரபுரஜயரே {பகைவரின் நகரங்களை வெற்றி கொள்பவரே}, இவனை வதம் செய்யும் காரியத்தில் யத்னம் {முயற்சி} செய்ய வேண்டாம். இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடம் உமது யத்னத்தை வலுப்படுத்துவதே தகும்[3].(22) யுத்தபிரியரே, இவன் அழிந்துபோனால், துர்வினீதர்களும் {தீயவர்களும்}, நெடுந்தொலைவில் இருப்பவர்களுமான அந்த நர ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் யுத்தம் செய்யத் தூண்டக்கூடிய வேறு எந்தத் தூதனையும் நான் காணவில்லை.(23)

[3] பிபேக்திப்ராய் பதிப்பில், "எனவே, இவனைக் கொல்ல முயற்சிக்காதீர். இந்திரன் உள்ளிட்ட தேவர்களின் பணியை எளிதாக்கும் முயற்சிகளில் ஈடுபடாதீர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இராவணனைக் கொல்ல முயற்சிப்பவர்கள் {உம்மைக் கொல்ல முயற்சிக்கும் இந்திரன் உள்ளிட்ட தேவர்களின் பணியை எளிதாக்காதீர்}" என்றிருக்கிறது.

நைர்ருதர்களின் {ராக்ஷசர்களின்} மனங்களை ஆனந்தமடையச் செய்பவரே, பராக்கிரமசாலிகளும், துணிவும், சக்தியும் கொண்டவர்களுமான ஸுராஸுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும்} வெல்லப்படமுடியாதவரான உமக்கு, யுத்தம் தொடங்கும் காரியத்தை நாசம் செய்வது பொருத்தமானதல்ல.(24) நன்கு பராமரிக்கப்பட்டவர்களும், உமது ஹிதத்தில் ஆசையுள்ளவர்களும், சூரர்களும், சமாஹிதமுடையவர்களும், மஹாகுணங்களுடன் கூடியவர்களும், நற்குலத்தில் பிறந்தவர்களும், துணிவுமிக்கவர்களும், சஸ்திரங்களைத் தரித்தவர்களில் சிறந்தவர்களுமான போர்வீரர்கள் கோடி பேர் இருக்கின்றனர்.(25) {அவர்களில்} சிலர், உமது ஆணையை ஏற்று, படையில் ஒரு பகுதியை அழைத்துக் கொண்டு, மூடர்களான ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் நிக்ரஹம் செய்யட்டும் {அடக்கட்டும்}. உமது பிரபாவத்தைப் பகைவர்கள் அறியட்டும்" {என்றான் விபீஷணன்}.(26)

மஹாபலவான்களில் முக்கியனும், நிசாசரர்களின் அதிபனும், ஸுரலோக சத்ருவுமான ராக்ஷசராஜன் {ராவணன்}, புத்தியுள்ள தம்பி விபீஷணன் சொன்ன ஏற்புடைய உத்தம வாக்கியத்தைப் புரிந்து கொண்டான்.(27)

சுந்தர காண்டம் சர்க்கம் – 52ல் உள்ள சுலோகங்கள்: 27


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை