Thursday 2 May 2024

கடும் எச்சரிக்கை | சுந்தர காண்டம் சர்க்கம் - 51 (46)

Stern warning | Sundara-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நல்ல ஆலோசனை வழங்கவும், அவனைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்த ஹனுமான்...

Hanuman warns Ravana

சத்வவானான ஹரிசத்தமன் {பலம்நிறைந்தவனும், குரங்குகளில் சிறந்தவனுமான ஹனுமான்}, பெரும்பலம் கொண்ட அந்த தசானனனை {பத்து முகம் கொண்ட ராவணனைக்} கண்டு, அவனிடம் அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வாக்கியத்தைத் தயக்கமின்றி சொன்னான்:(1) "இராக்ஷசேந்திரா, சுக்ரீவரின் ஆணையின் பேரில் நான் இங்கே உன் ஆலயத்திற்கு {வசிப்பிடத்திற்கு} வந்தேன். உன் சகோதரரான ஹரீசர் {குரங்குகளின் தலைவர் சுக்ரீவர்}[1], உன் குசலத்தை {நலத்தை} விசாரித்தார்.(2) உன் சகோதரரான மஹாத்மா சுக்ரீவர் அனுப்பிய செய்தியும், இம்மையிலும், மறுமையிலும் தர்மத்தையும், அர்த்தத்தையும் ஈட்டுவதில் நன்மை பயக்கக்கூடியதுமான வாக்கியத்தைக் கேட்பாயாக.(3)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சகோதரன் என்ற சொல் அன்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே இங்கே பயன்படுத்தப்படுகிறது" என்றிருக்கிறது.

இரத, குஞ்சர, வாஜிகளை {தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக்} கொண்டவரும், உலகத்தாருக்குப் பிதாவைப் போன்றவரும், ஸுரேஷ்வரனுக்கு {தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு} சமமான ஒளி கொண்டவருமான தசரதர் என்ற பெயருடைய ராஜா இருந்தார்.(4) மஹாபாஹுவும், பிரியத்திற்குரியவற்றைத் தருபவரும், பிரபுவுமான ராமன் என்ற பெயரைக் கொண்ட அவரது ஜியேஷ்ட புத்திரன் {மூத்தமகன்}, தன் பிதாவின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, தர்மத்தின் பாதையில் சென்று, உடன்பிறந்த லக்ஷ்மணருடனும், பாரியையான சீதையுடனும் தண்டகவனத்திற்குள் பிரவேசித்தார்.(5,6) 

அவரது பாரியையும் {ராமரின் மனைவியும்}, பதிவிரதையும், மஹாத்மாவான வைதேஹன், ராஜா ஜனகனின் மகளுமான சீதை, வனத்தில் காணாமல் போனாள்.(7) அனுஜன் {தம்பி} சகிதரான அந்த ராஜபுத்திரர் {ராமன்}, அந்த தேவியை {சீதையைத்} தேடி, ரிச்யமூகத்தை {ரிச்யமூக மலையை} அடைந்து, சுக்ரீவரைச் சந்தித்தார்.(8) அவர் {சுக்ரீவர்} சீதையைத் தேடுவதாக அவரிடம் {ராமரிடம்} பிரதிஜ்ஞை செய்தார். இராமரும், ஹரிராஜ்ஜியத்தை {குரங்குகளின் ராஜ்ஜியத்தை} சுக்ரீவருக்கென அறிவித்தார்.(9) அதன்பிறகு, அந்த ராஜபுத்திரர், போரில் வாலியைக் கொன்றார். சுக்ரீவர், ஹரி, ரிக்ஷங்களின் கணேஷ்வரராக {குரங்கு, கரடிக் கூட்டங்களின் தலைவராக} ராஜ்ஜியத்தில் ஸ்தாபிக்கப்பட்டார்.(10) வானரபுங்கவரான வாலியை நீ பூர்வத்திலேயே அறிந்திருப்பாய். போரில் ஏகசரத்தால் {ஒரே கணையால்} அந்த வானரரை ராமர் கொன்றார்.(11) 

சத்தியசங்கரரான {சத்தியத்தைப் பின்பற்றுபவரான} அந்த ஹரீஷ்வரர் சுக்ரீவர், சீதையைத் தேடும் நோக்கில் ஹரீக்களை {குரங்குகளை} சர்வ திசைகளிலும் அனுப்பினார்.(12) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான ஹரீக்கள் {குரங்குகள்}, சர்வ திக்குகளிலும், கீழேயும், மேலேயும், அம்பரத்திலும் {வானத்திலும்} அவளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.(13) அவர்களில் மஹாபலம் பொருந்திய ஹரிவீரர்கள் சிலர் வைநதேயனுக்கு {வினதையின் மகனான கருடனுக்கு} சமமானவர்கள். சிலர் தடையின்றி சீக்கிரமாகச் செல்வதில் அநிலனுக்கு {வாயுவுக்கு} ஒப்பானவர்கள்.(14) 

சீதைக்காக, அவளைக் காண விரும்பி, நூறு யோஜனை அகல சமுத்திரத்தைத் துரிதமாகக் கடந்து வந்தவனும், மாருதனின் ஔரச {வாயு தேவனின் மடியில் பிறந்த} மகனுமான நானோ, ஹனுமான் என்ற பெயருடையவன்.(15,16அ) {இங்கே} உலாவிக் கொண்டிருந்த நான், உன் கிருஹத்தில் ஜனகாத்மஜையை {ஜனகனின் மகளான சீதையைக்} கண்டேன். தர்ம அர்த்தங்களை நீ அறிவாய். நீ தபங்களைச் செய்து அவற்றில் ஆளுமை கொண்ட மஹாபிராஜ்ஞன் {அனைத்தையும் அறிந்தவன்}. எனவே, பரதாரத்தை {மாற்றான் மனைவியை} நாடுவது உனக்குத் தகாது.(16ஆ,17) உன்னைப் போன்ற புத்திமான்கள், தர்மத்திற்கு விரோதமானவையும், ஆபத்தானவையும், {ஒருவனின்} மூலத்தையே {வேரையே} அழிப்பவையுமான கர்மங்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.(18) இராமர் கோபப்பட்டதும், லக்ஷ்மணரால் ஏவப்படும் சரங்களின் முன்பு நிற்பதற்கு தேவாசுரர்கள் மத்தியிலும் எவன் சக்தன்?(19) 

இராஜனே, ராகவருக்குத் தீங்கைச் செய்துவிட்டு, சுகத்தை ஈட்டக் கூடியவன் மூவுலகங்களிலும் எவனும் இல்லை.(20) எனவே, முக்காலத்திற்கும்[2] ஹிதமானதும் {நன்மையைத் தருவதும்}, தர்மத்திற்கு இணக்கமானதும், அர்த்தத்தையும், மதிப்பையும் கொடுக்கவல்லதுமான என் வாக்கியத்தை ஏற்றுக் கொண்டு, நரதேவரிடம் ஜானகியை {மனிதர்களில் தேவரான ராமரிடம் ஜனகனின் மகளான சீதையைத்} திருப்பிக் கொடுப்பாயாக.(21) இந்த தேவியை {சீதையை} நான் கண்டுவிட்டேன். எது அரிதானதோ அஃது இங்கே அடையப்பட்டது. எந்தக் கர்மம் இன்னும் எஞ்சியிருக்கிறதோ, அது ராகவரின் நிமித்தமாக இருக்கிறது {ராமர் செய்யவேண்டியது}.(22) எவளைக் கைப்பற்றியும், ஐந்து தலை பன்னகியைப் {பெண்பாம்பைப்} போன்றவள் என்று அறியாதிருக்கிறாயோ, இந்த சீதையை சோகத்தில் மூழ்கியிருப்பவளாக நான் கண்டேன்.(23)

[2] மன்மதநாததத்தர் பதிப்பில், "முற்காலம், தற்காலம், எதிர்காலம்" என்றிருக்கிறது.

விஷங்கலந்ததும், அதிகமாக உண்ணப்பட்டதுமான அன்னத்தைப் போல, அசுரர்களுடன் கூடிய அமரர்களாலும் கூட ஓஜஸ்ஸால் {ஒளியால்} இவளை {சீதையை} ஜீரணித்துவிட முடியாது.(24) தபங்களைப் பயின்று அடையப்பட்டதும், நீ செய்த தர்மத்தின் பலனுமான அத்தகைய உன் பிராணன்களைத் தக்க வைத்துக் கொள்ளாமல் நாசம் செய்வது நியாயமில்லை.(25) {நீ செய்த} தபங்களின் காரணமாக தேவர்களாலும், அசுரர்களாலும் வதைக்கப்பட முடியாதவனாக உன்னை நீ கருதினாலும், {பின்வரும்} இந்த மஹத்தான காரணம் இருக்கிறது.(26) இந்த சுக்ரீவர் உண்மையில் தேவரோ, அசுரரோ, ராக்ஷசரோ, தானவரோ, கந்தர்வரோ, யக்ஷரோ, பன்னகரோ அல்ல. எனவே, ராஜனே, எவ்வாறு {அவரிடமிருந்து} உன் பிராணன்களை பாதுகாத்துக் கொள்வாய்?[3](27,28அ) 

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராவணன் தேவாஸுரயக்ஷ பன்னகாதிகளால் சாவில்லாதிருக்கும்படி ப்ரஹ்மாவிடம் வரம் பெற்றானன்றி மனுஷ்யாதிகள் மிகுதியும் ஹீனர்களாகையால் அவர்களால் சாவில்லாமையை வேண்டவில்லை. ஸுக்ரீவன், எவரால் ராவணன் சாவில்லாமையை வேண்டவில்லையோ அப்படிப்பட்ட மனுஷ்யாதிகளிற் சேர்ந்தவனாகையால் ராவணனை வதிக்கக்கூடுமென்று சொல்வதாகத் தெரிகிறது" என்றிருக்கிறது.

Hanuman advising Ravana

தர்மத்தின் முடிவானது {தர்மத்தின் பலனான சுகமானது}, அதர்மத்தின் பலனுடன் சேர்ந்து விளையாது. {அதர்மத்தின்} அந்த பலனேதான், தர்மத்தை அனுசரித்து அதர்மத்தை நாசம் செய்யும்.(28ஆ,29அ) தர்மத்தின் பலனை நீ ஏற்கனவே அடைந்துவிட்டாய். இதில் ஐயமில்லை. சீக்கிரமே நீ அதர்மத்தின் பலனையும் அடைவாய்[4].(29ஆ,30அ) ஜனஸ்தான வதத்தை அறிந்து கொண்டும், வாலிவதத்தையும், ராமசுக்ரீவரின் நட்பையும் அறிந்து கொண்டும், உனக்கான ஹிதத்தை {நன்மையைத்} தெரிந்து கொள்வாயாக.(30ஆ,31அ) நான் ஏகனாகவே {ஒருவனாகவே கூட}, வாஜி, ரத, குஞ்சரங்களுடன் {குதிரைகள், தேர்கள், யானைகளுடன்} கூடிய லங்கையை நாசம் செய்ய வல்லவன். இருப்பினும், இஃது அவருடைய நிச்சயமல்ல {ராமரின் தீர்மானமல்ல}.(31ஆ,32அ) எவரால் சீதை துன்புறுத்தப்பட்டாளோ, அந்த அமித்ரர்களை {பகைவரை} அழிக்கப் போவதாக ஹரிரிக்ஷகணங்களின் {குரங்கு, கரடிக் கூட்டத்தினர்} முன்னிலையில் ராமர் பிரதிஜ்ஞை செய்திருக்கிறார்.(32ஆ,33அ) இராமருக்குத் தீமை செய்தவன், சாக்ஷாத் புரந்தரனேயானாலும் {இந்திரனேயானாலும்}, அந்நியனானாலும் {வேறு எவனானாலும்} சுகத்தை அடையமுடியாது. உன்விதமான ஜனம் குறித்து என்ன சொல்ல?(33ஆ,34அ) 

[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ந து த⁴ர்ம உபஸம்ஹாரம் அத⁴ர்ம ப²ல ஸம்ஹிதம் || தத் ஏவ ப²லம் அந்வேதி த⁴ர்ம꞉ ச அத⁴ர்ம நாஷ²ந꞉ | ப்ராப்தம் த⁴ர்ம ப²லம் தாவத் ப⁴வதா ந அத்ர ஸம்ஷ²ய꞉ || ப²லம் அஸ்ய அபி அத⁴ர்மஸ்ய க்ஷிப்ரம் ஏவ ப்ரபத்ஸ்யஸே | என்று மூலம். இதற்கு மற்றொரு பொருள் - முன்பு நான் ஸம்பாதித்திருக்கும் பெரிய தர்மம் என்னைப் பாதுகாக்காதா? ரோகமும் ராஜ்யமும் ஒன்றாக நேருவதுபோல் தர்மபலனும் அதர்மபலனும் ஒன்றாகக் கலந்து அனுபவத்திற்கு வருவதுண்டாகையால் அதர்ம பலத்தினால் ஆத்ம நாசம் உண்டாயினும் கலந்து வரும் தர்மத்தினால் ஆத்ம ரக்ஷணமும் உண்டாகக்கூடும். அல்லது - அதர்மத்தை அழித்து, தர்ம பலனே அனுபவத்திற்கு வரக்கூடும் - என்னும் இரண்டு விகல்பங்களை எடுத்து அவற்றில் முதல் விகல்பம் ஸம்பவிக்காதென்கிறான். (ந து த⁴ர்ம உபஸம்ஹாரம் அத⁴ர்ம ப²ல ஸம்ஹிதம்) தர்ம பலனாகிய ஸுகம் அதர்ம பலத்துடன் கலந்து வராது. அதர்ம பலத்துடன் கலந்து ஒரே காலத்தில் அனுபவத்திற்கு வராதென்கை. உன்னுடைய கொடுந்தவமாகிய தர்மத்திற்கும் நீ செய்த பரதாராபஹரணமாகிற அதர்மத்திற்கும் பலன்களாகிய வத்யத்வ அவத்யத்வங்களாகிற சாவும் சாவின்மையும் ஒன்றாகக் கலந்து வருவது விருத்தமாகையால் ரோகமும் ராஜ்யமும்போல் ஒன்றாகக் கலந்து அனுபவத்திற்கு வரமாட்டா. அதர்மத்தினால் ஆத்மநாசம் உண்டாயினும் அத்தோடு தர்மமும் கலந்து வருகையால் ஆத்ம ரக்ஷணமும் ஸம்பவிக்குமென்று சங்கிக்க வேண்டாமென்று கருத்து. இரண்டாவது விகல்பமும் நேராதென்கிறான். (தத் ஏவ ப²லம் அந்வேதி த⁴ர்ம꞉ ச அத⁴ர்ம நாஷ²ந꞉) தர்மம் தர்ம பலத்தையே பின்செல்லுமன்றி அதர்மத்தை நாசஞ்செய்யாது. தர்மபலன் தர்மத்தோடு கூடவே இருக்குமன்றி அதர்மத்தைக் கெடுத்துத் தான் அனுபவத்திற்கு வராதென்று கருத்து. அல்லது - எவரால் நான் சாவில்லாமையை வேண்டவில்லையோ, அவரிடத்தினின்று நான் ஸம்பாதித்த புண்ய சமூஹம் என்னை ரக்ஷிக்காதாவென்று ராவணன் சங்கிக்க, அப்படியாயின் அதே ந்யாயத்தினால் நீ செய்த பாப ஸமூஹமும் உன்னை நசிக்கச் செய்யுமென்கிறான். (ந து த⁴ர்ம உபஸம்ஹாரம்... த⁴ர்ம꞉ ச அத⁴ர்ம நாஷ²ந꞉) தர்ம்பலமாகிய ஸுகம் அதர்ம பலனாகிய துக்கத்தோடு கலப்பதன்று. அது ஸுகத்தையே தொடரும். அப்படியே அதர்மபலமாகிய துக்கமும் தர்ம பலத்துடன் கூடாது. துக்கத்தையே தொடரும். தர்மம் அதர்மத்தை நாசஞ்செய்யாதா? என்னில் - அதில்லையென்கிறான். (த⁴ர்ம꞉ ச அத⁴ர்ம நாஷ²ந꞉) முன் செய்த தர்மம் இப்பொழுதுள்ள அதர்மத்தை நாசஞ்செய்யாது. அங்ஙனமே அதர்மமும் தர்மத்தை நாசஞ்செய்யாது. தர்மாதர்மங்கள் அனுபவித்தே நசிக்க வேண்டியவை. ஆயினும் பெரிய புண்ய பலன் அனுபவித்துத் தீர்ந்த பின்பு அதர்ம பலன் அனுபவத்திற்கு வருமாக - என்ன (ப்ராப்தம் - ப்ராப்ஸ்யஸே) என்கிறான். தர்ம்பலனெல்லாம் பூர்ணமாக அனுபவித்தாய் விட்டது. இனி ஸீதையை அபஹரித்த அதர்மத்தின் பலனையே த்வரையில் அனுபவிக்கப்போகிறாய் என்று மஹஷ்வரதீர்த்தர் {சொல்கிறார்}" என்றிருக்கிறது.

நீ எவளை சீதை என்று அறிகிறாயோ, எவள் உன் வசத்தில் இருக்கிறாளோ, அவளை சர்வ லங்காநாசினியான {மொத்த இலங்கையையும் அழிக்கப் போகிறவளான} காளராத்ரியாக அறிந்து கொள்வாயாக.(34ஆ,35அ) எனவே, நீயே உன் கழுத்தில் சுற்றிக்கொண்ட சீதாவிக்கிரக ரூபத்திலான {சீதையைப் போன்ற வடிவில் வந்திருக்கும்} காலபாசத்தால் ஆனது {உனக்கு உண்டான தீமை} போதும். உன் க்ஷேமத்தை {நலத்தைக்} குறித்துச் சிந்திப்பாயாக.(35ஆ,36அ) சீதையின் தேஜஸ்ஸால் எரிந்திருக்கும் இந்த புரீயை {நகரத்தைப்} பார். இராமரின் கோபத்தால் பீடிக்கப்பட்டு, கடைத்தெருக்களுடனும், வீதிகளுடனும் சேர்ந்து இஃது {இந்த லங்கை} எரியப் போகிறது.(36ஆ,37அ) உன் சொந்த மித்ரர்களையும் {நண்பர்களையும்}, மந்திரிகளையும், ஞாதிகளையும் {உற்றார் உறவினர்களையும்}, சகோதரர்களையும், மகன்களையும், ஹிதங்களையும், போகங்களையும், தாரங்களையும், லங்கையையும் நாசத்தை நோக்கி கொண்டு செல்லாதே.(37ஆ,38அ)

இராக்ஷசேந்திரா {ராக்ஷசர்களின் தலைவா, ராவணா}, ராமதாஸனும், தூதனும் {ராமரின் அடியவனும்,[5] அவரது தூதனும்}, விசேஷமாக வானரனுமான என் சத்திய வசனத்தைக் கேட்பாயாக.(38ஆ,39அ) பெரும் புகழ்பெற்றவரான ராமர், பூதங்களுடனும், சராசரங்களுடனும் {அசைவன, அசையாதனவற்றுடன்} கூடிய சர்வலோகத்தையும் முற்றாக அழிக்கவும், மீண்டும் முன்பு போலவே உருவாக்கவும் வல்லவர்.(39ஆ,40அ) தேவாசுர நரர்களிலோ {தேவர்களிலோ, அசுரர்களிலோ, மனிதர்களிலோ}, யக்ஷ, ராக்ஷச கணங்களிலோ,{40ஆ} சர்வ வித்யாதரர்களிலோ, கந்தர்வர்களிலோ, உரகர்களிலோ, சித்தர்களிலோ, கின்னரேந்திரர்களிலோ, சர்வ பறவைகளிலோ,{41} சர்வ பூதங்களிலோ விஷ்ணுவுக்குத் துல்லியமான பராக்கிரமம் கொண்ட ராமருடன் பிரதியுத்தம் செய்யவல்லவர் சர்வ இடங்களிலும், சர்வகாலங்களிலும் எவருமில்லை.(40ஆ-42) சர்வலோகேஷ்வரரும், ராஜசிம்ஹருமான ராமருக்கு இவ்வாறான பெரும் தீங்கைச் செய்துவிட்டு, நீ ஜீவிப்பது துர்லபமே {நீ உயிரோடு வாழ்வது அரிதானதே}.(43) நிசாசரேந்திரா {இரவுலாவிகளின் தலைவா, ராவணா}, தேவர்களோ, தைத்தியர்களோ, கந்தர்வ, வித்யாதர, நாக, யக்ஷர்களோ அவர்கள் அனைவரும் திரிலோகநாயகரான ராமரின் முன் சமரில் {போரில்} நிற்கும் சக்தர்களல்லர்.(44) சதுர்முகனும், ஸ்வயம்பூவுமான பிரம்மனோ, திரிபுராந்தகனும், முக்கண்ணனுமான ருத்திரனோ, ஸுரர்களின் இந்திரனான மஹேந்திரனோ, யுத்தத்தில் ராமரால் வதைக்கப்படக் கூடியவர்களைக் காக்க வல்லவர்களல்லர்" {என்றான் ஹனுமான்}.(45)

[5] அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன்
நன்னுதல் தன்னைத் தேடி நாற்பெருந்திசையும் போந்த
மன்னரில் தென்பால் வந்த தானைக்கு மன்னன் வாலி
தன் மகன் அவன்தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான்.

- கம்பராமாயணம் 5886ம் பாடல், சுந்தர காண்டம், பிணிவீட்டு படலம்

பொருள்: "அவனுக்கு {ராமனுக்கு} அடிமைத் தொழில் செய்பவன் நான், பெயரும் அனுமன் என்பேன்.  நல்ல நெற்றியை உடையவளை {சீதையைத்} தேடி, நான்கு பெரும் திசைகளில் சென்ற தலைவர்களில், தென் திசையில் வந்த சேனைக்குத் தலைவன் வாலியின் மகன் {அங்கதன்}. அவனது தூதனாக நான் தனியாக இங்கு வந்தேன்" என்றான் {ஹனுமான்}. வால்மீகியில், "ராமனின் தாசனும், அவனது தூதனும் நான்" என்று ஹனுமான் சொல்வதாக வருகிறது. கம்பனில், "ராமனின் அடிமையான நான், வாலி மைந்தன் அங்கதனின் தூதனாக வந்திருக்கிறேன்" என்று ராவணனிடம் சொல்கிறான் ஹனுமான்.

ஒப்பற்றவனான அந்த தசானனன் {பத்துமுகங்களைக் கொண்ட ராவணன்}, பெரும் சாதுரியத்துடன் கூடியதும், பிரியமற்றதும், அச்சமில்லாமல் சொல்லப்பட்டதுமான கபியின் {குரங்கான ஹனுமானின்} சொற்களைக் கேட்டு, அந்த மஹாகபியை {பெருங்குரங்கான ஹனுமானை} வதம் செய்ய ஆணையிட்டான்.(46)

சுந்தர காண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள்: 46


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை