Seetha’s request | Sundara-Kanda-Sarga-39 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன்னை மீட்பதற்கு ராமனையும், லக்ஷ்மணனையும் தூண்டுமாறு ஹனுமானை வேண்டிய சீதை; ஆறுதல் சொன்ன ஹனுமான்...
சீதை, அந்த மணியை {சூடாமணியைக்} கொடுத்துவிட்டு ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னாள், “உண்மையில் ராமர் அறிந்த அடையாளம் இது.(1) வீரரான ராமர் மணியைக் கண்டதும், என் ஜனனியையும் {என்னைப் பெற்றவளையும்}, என்னையும், தசரத ராஜாவையும் என எங்கள் மூவரை நினைவுகூர்வார்.(2) ஹரிசத்தமா {குரங்குகளில் வலிமைமிக்கவனே}, இந்தக் காரியத்தின் தொடக்கத்தில், மீண்டும் உற்சாகத்தால் தூண்டப்பட்டவனாக எதைச் செய்ய வேண்டும் என்பதைச் சிந்திப்பாயாக.(3) ஹரிசத்தமா, இந்தக் காரியத்தின் நிறைவேற்றத்திற்கு நீயே பிரமாணம் {பொறுப்பு}. ஹனுமனே, துக்கங்களை அழிக்க யத்னம் {முயற்சி} செய்வாயாக. எவ்வகை யத்னங்களைச் செய்தால் துக்கங்களை அழிக்க முடியும் என்பதைச் சிந்திப்பாயாக” {என்றாள் சீதை}.(4,5அ)
பீம விக்கிரமனான அந்த மாருதி {ஹனுமான்}, “அவ்வாறே ஆகட்டும்” என்று பிரதிஜ்ஞை செய்து, வைதேஹியை சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டுப் புறப்படத் தொடங்கினான்.(5ஆ,6அ) மாருதாத்மஜன் புறப்படுவதை அறிந்த மைதிலி, கண்ணீர் அடைத்த குரலில் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினாள்:(6ஆ,7அ) “ஹனுமான், ராமலக்ஷ்மணர்கள் இருவரிடமும் நீ குசலம் விசாரிப்பாயாக.{7ஆ} வானரசிரேஷ்டா, அமைச்சர்களுடன் கூடிய சுக்ரீவனிடமும், விருத்தர்களான சர்வ {முதிர்ந்த அனைத்து} வானரர்களிடமும் தர்மத்திற்கு இணக்கமாக குசலத்தை விசாரிப்பாயாக.(7ஆ,8) மஹாபாஹுவான அந்த ராகவர், இந்த துக்கக்கடலில் இருந்து எப்படி என்னைத் தப்புவிப்பாரோ, அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதே உனக்குத் தகும்.(9) ஹனுமனே, கீர்த்திமானான ராமர், நான் ஜீவித்திருக்கும்போதே என்னைத் தேற்றும் வகையில் எப்படிச் சொல்லப்பட வேண்டுமோ அப்படிச் சொல்வாயாக. உன் சொற்களின் மூலம் தர்மத்தை அடைவாயாக.(10) உன்னால் சொல்லப்படும் உற்சாகம் ததும்பும் சொற்களைக் கேட்டு, என்னை மீட்கும் வகையில் தாசரதரின் பௌருஷம் {தசரதரின் மகனான ராமரின் ஆண்மை} நித்தியம் பெருக வேண்டும்.(11) வீரரான ராகவர், என் சந்தேசத்துடன் {செய்தியுடன்} கூடிய உன் சொற்களைக் கேட்டால், பராக்கிரமத்தை வெளிப்படுத்துவதற்கான முறையான ஏற்பாட்டைச் செய்வார்” {என்றாள் சீதை}.(12)
மாருதாத்மஜனான ஹனுமான், சீதையின் வசனத்தைக் கேட்டு, சிரத்திற்கு மேல் தன் உள்ளங்கையைக் குவித்துப் பின்வரும் வாக்கியத்தைச் சொன்னான்:(13) “போரில் பகைவரை வீழ்த்தி உன் சோகத்தைப் போக்குபவர் எவரோ, அந்தக் காகுத்ஸ்தர், சிறந்த ஹரிக்களுடனும், ரிக்ஷங்களுடனும் {குரங்குகளுடனும், கரடிகளுடனும்} சீக்கிரமே வருவார்.(14) யுத்தத்தில் அவரால் ஏவப்படும் பாணங்களை எதிர்த்து நிற்கத்துணியும் எவனையும் மனிதர்களிலோ, அமரர்களிலோ, அசுரர்களிலோ நான் காணவில்லை.(15) போரில், விசேஷமாக உனக்காக {உனக்கான போரில்} அவர், அர்க்கனையோ {சூரியனையோ}, பர்ஜன்யனையோ {இந்திரனையோ}, வைவஸ்தனான யமனையோகூட சகித்துக் கொள்ளக்கூடிய சக்தராவார்.(16) அவர் சாகரம் வரையுள்ள மஹீயை ஆளத்தகுந்தவராவார். ஜனகநந்தினி {ஜனகனின் மகளே}, உண்மையில் உன் நிமித்தமாக ராமர் ஜயம் பெறுவார்” {என்றான் ஹனுமான்}.(17)
ஜானகி, சத்தியத்துடனும், நல்லமுறையிலும் சொல்லப்பட்ட அவனது வசனத்தைக் கேட்டுப் பெரும்மதிப்படைந்தாள். பிறகு, {பின்வரும்} இந்த வசனத்தையும் சொன்னாள்.(18) அவன் புறப்பட்டுச் செல்லும்போது, நல்லிதயத்துடன் மீண்டும் மீண்டும் பார்த்த சீதை, பர்த்தாவிடம் கொண்ட சினேகத்தை அனுமானிக்கும்படியான {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள்:(19) “வீரா, அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, மனமுண்டானால், ஏதேனும் ஒரு மறைவான தேசத்தில் {இடத்தில்} ஒரு நாள் வசித்து, ஓய்வெடுப்பாயாக. நாளை புறப்படுவாயாக.(20) வானரா, அற்ப பாக்கியம் கொண்டவளான எனக்கு, நீ அருகினில் இருக்கையில், இந்த மஹத்தான சோகத்திலிருந்து ஒரு முஹூர்த்தமாவது விமோசனம் உண்டாகும்.(21) ஹரிசார்தூலா {குரங்குகளில் புலியே}, நீ புறப்பட்டுத் திரும்பி வரும்போது, என் பிராணன்களின் இருப்பில் கூட சந்தேகம் இருக்கும். இதில் சந்தேகம் இல்லை.(22)
வானரா, துக்கத்திற்கு மேல் துக்கத்தால் பீடிக்கப்படும் எனக்கு, உன்னைக் காணாத சோகம், எரியும் தழலைப் போல மீண்டும் என்னைப் பீடிக்கும்.(23) ஹரீஷ்வரா {குரங்குகளில் தலைவா}, வீரா, ஹரி ரிக்ஷர்களிலுள்ள உன்னுடைய சகாயர்களின் {குரங்குகள், கரடிகளில் உள்ள உன் துணைவர்கள்} விஷயத்திலும் இந்த மஹத்தான சந்தேகம் என் முன் நிற்கிறது.(24) ஹரிரிக்ஷ {குரங்குகளும், கரடிகளும் நிறைந்த} சைனியத்தாலோ, அந்த நரவராத்மஜர்கள் {மனிதர்களில் சிறந்த தசரதரின் மகன்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவராலோ, கடப்பதற்கரிய மஹோததியை {பெருங்கடலை} உண்மையில் எப்படி கடக்க முடியும்?(25) வைனதேயன் {கருடன்}, அல்லது நீ, அல்லது மாருதன் {வாயு தேவன்} ஆகிய மூன்று பூதங்கள் {உயிரினங்கள்} மட்டுமே இந்த சாகரத்தை லங்கனம் {தாண்டும்} செய்யும் சக்தி படைத்தவர்களாக இருக்கிறீர்கள்.(26)
வீரா, இவ்வாறு கடப்பதற்கரியதாக இருக்கும் இந்தக் காரியத்தை நிறைவேற்ற நீ காணும் சமாதானம் என்ன? நீ காரியவிதங்களை நிறைவேற்றுபவர்களில் சிறந்தவனாக இருக்கிறாய்.(27) பகைவீரர்களை அழிப்பவனே, விருப்பத்துடன் செயல்படும் நீ ஒருவனே, இந்தக் காரியத்தை நிறைவேற்றக்கூடியவன். பலனை அடைவதில் நீ புகழ்பெற்றவனாகத் திகழ்கிறாய்.(28) போரில், படைகள் அனைத்துடன் கூடிய ராவணனை வென்று, விஜயீயாக {வெற்றியாளராகத்} தன் புரத்திற்கு {நகரத்திற்கு} என்னை அழைத்துச் சென்றால்தான், அஃது அவருடைய பெருமைக்குத் தகுந்ததாக இருக்கும்.(29) பகைவரின் படைகளை அழிப்பவரான காகுத்ஸ்தர் {ராமர்}, லங்கையைச் சரங்களால் நிறையச் செய்து, என்னை அழைத்துச் சென்றால்தான், அஃது அவருடைய பெருமைக்குத் தகுந்ததாக இருக்கும்.(30) எனவே, போரில் சூரரான அந்த மஹாத்மாவின் {ராமரின்} விக்ராந்தத்திற்கு {வல்லமைக்கு} ஏற்றவகை எப்படியோ அப்படியே நீ செயல்படுவாயாக” {என்றாள் சீதை}.(31)
அர்த்தம் பொதிந்ததும், காரணங்கள் பொருந்தியதுமானதுமான அந்த வாக்கியத்தைப் பணிவுடன் கேட்ட ஹனுமான், எஞ்சியவற்றை {பின்வரும்} வாக்கியத்தில் பதிலளித்தான்:(32) “தேவி, ஹரி ரிக்ஷ சைனியங்களின் ஈஷ்வரரும், பிலவதாம்வரரும், சத்வசம்பன்னருமான {குரங்கு, கரடிப் படைகளின் தலைவரும், தாவிச் செல்பவர்களில் சிறந்தவரும், வலிமை நிறைந்தவருமான} சுக்ரீவர், உன் அர்த்தத்தில் {உனக்காக} நிச்சயம் செயல்படக்கூடியவராக இருக்கிறார்.(33) வைதேஹி, அவர் {சுக்ரீவர்} ஆயிரங்கோடி வானரர்களுடன் கூடியவராக சீக்கிரமே வந்து ராக்ஷசர்களை அழிக்கப் போகிறார்.(34) விக்ரமசம்பன்னர்களும், சத்வவந்தர்களும், மஹாபலவான்களும், மனசங்கல்பசம்பாதர்களுமான ஹரயர்கள் {ஆற்றல் நிறைந்தவர்களும், வலிமைமிக்கவர்களும், பெரும்பலம் வாய்ந்தவர்களும், மனத்தில் நினைப்பதை நிறைவேற்றக்கூடியவர்களுமான குரங்குகள்} அவருடைய ஆணைக்காகக் காத்து நிற்கின்றனர்.(35)
அமிததேஜஸ்விகளான எவர்களின் கதிக்கு உபரியிலோ, அதஸ்தானத்திலோ {அளவற்ற ஆற்றல்வாய்ந்தவர்களான எவர்கள் செல்வதற்கு மேலேயோ, கீழேயோ}, குறுக்கிலோ தடையில்லையோ, அவர்கள் மஹத்தான கர்மங்களை நிறைவேற்றாமல் இருக்கமாட்டார்கள்.(36) மஹா உற்சாகம் கொண்டவர்களும், வாயு மார்கத்தை அனுசரிப்பவர்களுமான அவர்கள், சாகர தராதரங்களுடன் {கடல்கள், மலைகளுடன்} கூடிய பூமியைப் பலமுறை பிரதக்ஷிணஞ் செய்திருக்கிறார்கள் {வலம் வந்திருக்கின்றனர்}.(37) அங்கே சுக்ரீவரின் முன்னிலையில் உள்ள வனௌஸர்களில் என்னைவிட உயர்ந்தவர்களும், எனக்குத் துல்லியமானவர்களும் இருக்கிறார்களேயன்றி, என்னிலும் குறைந்த சிறப்புடையவர் எவரும் இல்லை.(38) நானே இங்கு வந்துவிட்டேன் எனும்போது மஹாபலவான்களான அவர்களைக் குறித்து என்ன சொல்வது? {தூது செல்ல} மேலானவர்கள் அனுப்பப்படுவதில்லை. பிற ஜனங்களே அனுப்பப்படுவார்கள்.(39) எனவே தேவி, பரிதபித்தது போதும்; உன் சோகம் நீங்கட்டும். அந்த ஹரியூதபர்கள் ஒரே பாய்ச்சலில் லங்கையை அடைவார்கள்.(40)
மஹாசத்வர்களான அந்த நிருசிம்ஹர்கள் {பெரும் வலிமைமிக்கவர்களும், மனிதர்களில் சிங்கங்களுமான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், உதிக்கும் சந்திரசூரியர்களைப் போல என் பிருஷ்டத்தில் அமர்ந்து உன்னிடம் வருவார்கள்.(41) அப்போது, நரவரர்களும் {மனிதர்களிற்சிறந்தவர்களும்}, வீரர்களுமான ராமலக்ஷ்மணர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்தவர்களாக வந்து, லங்காம்நகரீயை தங்கள் சாயகங்களால் {கணைகளால்} ஊதித் தள்ளுவார்கள்.(42) நல்லிடையாளே, ரகுநந்தனரான ராகவர், கணங்களுடன் {தன்னைச் சேர்ந்தவர்களுடன்} கூடிய ராவணனை ஹதம் செய்து {கொன்று}, உன்னை அழைத்துக் கொண்டு, தன் புரீக்கு {அயோத்தி நகருக்குத்} திரும்புவார்.(43) எனவே, ஆசுவாசம் அடைவாயாக. நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. {உரிய} காலத்திற்காகக் காத்திருந்தால், ஜ்வலிக்கும் அனலனை {அக்னியைப்} போன்ற ராமரை விரைவிலேயே தரிசிப்பாய்.(44) புத்திரர்கள், அமைச்சர்கள், பந்துக்களுடன் {உறவினர்களுடன்} கூடிய இந்த ராக்ஷசேந்திரன் கொல்லப்படும்போது, சசாங்கனை {சந்திரனைச் சந்திக்கும்} ரோஹிணி போல் ராமரை நீ சந்திப்பாய்.(45) தேவி, மைதிலி, நீ சீக்கிரமே சோகத்தின் கரையை அடையப் போகிறாய். இராமரால் ராவணன் கொல்லப்படுவதைக் குறுகிய காலத்திலேயே நீ தரிசிக்கப் போகிறாய்” {என்றான் ஹனுமான்}.(46)
மாருதாத்மஜனான ஹனுமான், இவ்வாறு வைதேஹியை ஆசுவாசப்படுத்திவிட்டுப் புறப்படுவதற்குத் தன் மதியை அமைத்துக் கொண்டபோது, வைதேஹியிடம் மீண்டும் {பின்வருமாறு} பேசினான்:(47) “அரிந்தமர்களும், கிருதாத்மர்களுமான {பகைவரைக் கொல்பவர்களும், செயல்களை சாதிப்பவர்களுமான} அந்த ராகவரும், லக்ஷ்மணரும், தனுஷ்பாணிகளாக {கையில் வில்லேந்தியவர்களாக} சீக்கிரமே லங்காத்வாரத்தை {லங்காபுரியின் நுழைவாயிலை} அடையுமாறு பார்த்துக் கொள்வேன்.(48) நகங்களையும், பற்களையும் ஆயுதங்களாகக் கொண்ட வீர வானரர்களும், சிம்ஹசார்தூல விக்கிரமர்களும் {சிங்கங்கள், புலிகள் போன்ற வெற்றி நடை கொண்டவர்களும்}, வாரணேந்திரனுக்கு {யானைகளின் தலைவனுக்கு} ஒப்பானவர்களும் ஒன்றுசேர்ந்து வரப்போவதை சீக்கிரமே நீ காண்பாய்.(49)
ஆரியையே, சைலங்களுக்கும், அம்புதங்களுக்கும் {மலைகளுக்கும், மேகங்களுக்கும்} ஒப்பான கபி முக்கியர்களுடன் கூடிய அநேக யூதங்கள் {குரங்குக்குழுக் கூட்டங்கள்}, லங்காமலய ஸானுக்களில் {இலங்கையின் மலய மலைச் சிகரங்களில்} முழங்கப் போகிறார்கள்.(50) மன்மதனின் கணைகளால் மர்மங்களில் {முக்கிய அங்கங்களில்} தாக்கப்பட்ட அந்த ராமர், சிம்ஹத்தால் பீடிக்கப்பட்ட த்வீபத்தை {யானையைப்} போல மகிழ்ச்சியை அடையாமல் இருக்கிறார்.(51) தேவி, சோகத்தால் அழாதே. பிரியமற்றவை எதனையும் உன் மனம் கொள்ளாதிருக்கட்டும். சக்ரனை {இந்திரனைப்} பதியாகக் கொண்ட சசியை {இந்திராணியைப்} போல, உண்மையில் பர்த்தாவை {தலைவனைக்} கொண்ட நாதவதீயாக {தலைவியாக} நீ இருக்கிறாய்.(52) இராமரைவிட உயர்ந்தவன் வேறு எவன் இருக்கிறான்? சௌமித்ரிக்கு சமமானவன் எவன்? அக்னிக்கும், மாருதனுக்கும் {வாயுதேவனுக்கும்} நிகரான அந்தப் பிராதாக்கள் {உடன்பிறந்தவர்கள்} உன்னை ஆதரிப்பவர்கள்.(53) தேவி, அதிரௌத்திரமானதும், ராக்ஷச கணங்கள் அதிகம் நிறைந்ததுமான இந்த தேசத்தில் {இடத்தில்} நீ நெடுங்காலம் இருக்கமாட்டாய். உன் பிரியரின் வரவு தாமதமாகாது. சந்திக்கும் மாத்திரம் {ராமர் இங்கே வரும் வரை} நீ பொறுமையுடன் இருப்பாயாக” {என்றான் ஹனுமான்}.(54)
சுந்தர காண்டம் சர்க்கம் – 39ல் உள்ள சுலோகங்கள்: 54
Previous | | Sanskrit | | English | | Next |