Sunday, 11 February 2024

இராவணனின் வேண்டுகோள் | சுந்தர காண்டம் சர்க்கம் - 20 (36)

Ravana’s request | Sundara-Kanda-Sarga-20 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: செல்வம், ரத்தினங்கள், முதல்மஹிஷி என்ற கௌரவம் ஆகியவற்றைக் காட்டி சீதையை மயக்க முயற்சித்த ராவணன்...

Ravana enticing Seetha

அந்த ராவணன், ஆனந்தமற்ற தீன நிலையில் {ராக்ஷசிகளால்} சூழப்பட்டவளும், தபஸ்வினியுமான அவளிடம் {சீதையிடம்}, பேராவலுடன் கூடிய  இனிமையான வாக்கியங்களை {பின்வருமாறு} வெளியிட்டான்:(1) “நாகநாசியை {யானையின் துதிக்கையைப்} போன்ற தொடைகளுடன் கூடியவளே, என்னைக் கண்டதும், ஸ்தனங்களையும், உதரத்தையும் {வயிற்றையும்} மறைத்துக் கொள்கிறாய். ஆத்மபயத்தால் நீ புலப்படாதவளாக இருக்க விரும்புகிறாய்.(2) விசாலாக்ஷியே {நீள்விழியாளே}, சர்வாங்க குண சம்பன்னையே, சர்வலோக மனோஹரியே உன்னை விரும்புகிறேன் {அனைத்து அங்கங்களிலும் அழகில் மிளிர்பவளே, உலகத்தார் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்பவளே, உன்னை நான் விரும்புகிறேன்}. பிரியே, என்னை மதிப்பாயாக.(3) சீதே, இங்கே மனுஷ்யர்களோ, காமரூபிகளான {விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவர்களான} ராக்ஷசர்களோ எவரும் இல்லை. என்னில் விளையும் உன் பயம் நீங்கட்டும்.(4) பீரு {பயந்தவளே}, பரஸ்திரீகளை {அந்நிய பெண்களை} அடைவதும், பலவந்தமாக {அவர்களை} அபகரிப்பதும், சந்தேகமில்லாமல் எல்லா வகையிலும் ராக்ஷசர்களின் ஸ்வதர்மமே {குலநெறியே ஆகும்}.(5) 

மைதிலி, இஃது இப்படியிருக்கையில், காமத்தை {ஆசையைப்} பொறுத்தவரையில், என் சரீரத்தில் காமம் எப்படி வேண்டுமானாலும் விளையட்டும். ஆனால் காமமில்லாத {என் மேல் ஆசையற்ற} உன்னை நான் ஸ்பரிசிக்கமாட்டேன் {தொடமாட்டேன்}.(6) தேவி, இதில் பயத்திற்கான காரியம் ஏதும் இல்லை. பிரியே, என்னிடம் விசுவாசம் {நம்பிக்கை} வைப்பாயாக. உண்மையான அன்பைக் கொள்வாயாக. இப்படி சோகத்தில் மூழ்கும் நிலையை அடையாதே.(7) 

ஒற்றைச் சடை, தரையில் படுக்கை, தியானம், மலின அம்பரம் {அழுக்கடைந்த ஆடை}, பொருத்தமற்ற இடத்தில் உபவாசம் {பட்டினி} இவையாவும் உனக்குப் பயனளிக்கக் கூடியவையல்ல.(8) விசித்திரமான மாலைகள், சந்தனங்கள், அகருக்கள் {அகில்}, விதவிதமான வஸ்திரங்கள், திவ்ய ஆபரணங்கள்,{9} {பருகுவதற்கான} மிகச் சிறந்த பானங்கள், சயனங்கள் {படுக்கைகள்}, ஆசனங்கள் {இருக்கைகள்}, கீதம், நிருத்தம் {நாட்டியம்}, வாத்தியங்கள் ஆகியவற்றை, மைதிலியே, என்னை ஏற்றுப் பெற்றுக் கொள்வாயாக.(9,10) ஸ்திரீ ரத்தினமே, நீ இப்படி இராதே. அங்கங்களில் ஆபரணங்களைப் பூட்டுவாயாக. நல்லுடல் கொண்டவளே, என்னை அடைந்த பிறகு, எப்படி நீ இவற்றுக்குத் {ஆடம்பரங்களுக்குத்} தகாதவளாக இருக்க முடியும்?(11) 

Ravana trying to tempt Seetha

அழகாகப் பிறந்திருக்கும் இந்த உன் இளமை கடந்து போகிறது. நீரோட்டத்தைப் போல எது சீக்கிரம் பாய்ந்து செல்லுமோ, அது மீண்டும் திரும்பாது[1].(12) சுபத் தோற்றம் கொண்டவளே, ரூப கர்த்தாவான அந்த விஷ்வகிருத் {வடிவங்களை வடிப்பவனும், உலகைச் செய்தவனுமான பிரம்மன்}, உன்னைச் செய்ததும் {அத்தொழிலை} நிறுத்திவிட்டான் என்று நினைக்கிறேன். உன் ரூபத்திற்கு ஒப்பானவர்கள் வேறு யாரும் இல்லை.(13) வைதேஹி, சாக்ஷாத் பிதாமஹனாகவே {அவன் பிரம்மனாகவே} இருந்தாலும், ரூப, யௌவனசாலினியான {அழகும், இளமையும் நிறைந்தவளான} உன்னை அடைந்த எந்த புமான் {மனிதன், உன்னை மதிக்காமல்} கடந்து செல்வான்?(14) சீதாம்ஷனை {குளிர்ந்த சந்திரனைப்} போன்ற முகத்தோற்றம் கொண்டவளே, பிருதுஷ்ரோணியே {பருத்த பிருஷ்டமுடையவளே}, உன்னுடைய எந்த காத்திரத்தை {அங்கத்தைக்} கண்டாலும், என் கண்கள் ஆங்காங்கேயே பதிந்து {கட்டப்பட்டுக்} கிடக்கின்றன.(15) 

[1] ஈண்டு நாளும், இளமையும் மீண்டில
மாண்டு மாண்டுபிறிது உறும் மாலைய
வேண்டு நாள்வெறிதே விளிந்தால் இனி
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ

- கம்பராமாயணம் 5176ம் பாடல், காட்சிப்படலம்

பொருள்: இவ்வுலகில் ஆயுளும், இளமையும் திரும்பி வராதவை. அழிந்து, அழிந்து வேறு இயல்பை அடையும் தன்மை உடையவை. விரும்பிய பருவம் வீணாக அழிந்தால், இனி எக்காலத்தில் வாழ்க்கை நடத்துவது? துன்பத்தால் உழன்று அதில் மூழ்கிவிடுவாயோ?

மைதிலி, இந்த மோஹத்தை {அறியாமையைக்} கைவிட்டு, என் பாரியை {மனைவி} ஆவாயாக. ஆங்காங்கே இருந்து கொண்டுவரப்பட்ட என் உத்தம ஸ்திரீகள் பலருக்கும் முதன்மை மஹிஷியாக விளங்குவாயாக. பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக.(16,17அ) பீரு {பயந்தவளே}, எந்த உலகங்களில் இருந்தும் பலவந்தமாகக் கொண்டுவரப்பட்ட ரத்தினங்கள் அத்தனையும், என்னுடைய இந்த ராஜ்ஜியமும், நானும் உனதே {உனக்கே உரிமை}.(17ஆ,18அ) அழகிய பெண்ணே, நானாவித நகரங்களை மாலையாகக் கொண்ட சர்வ பிருத்வியையும் வென்று, உனக்காக ஜனகனிடம் கொடுப்பேன்.(18ஆ,19அ)

இந்த உலகத்தில் எனக்கு நிகரான வேறு எவனையும் நான் காணவில்லை. போரில் ஒப்பற்ற என் மஹத்தான வீரியத்தை நீ பார்ப்பாயாக.(19ஆ,20அ) ஸுராஸுரர்களும் (சூர-அசூரர்களும்), என்னால் முறிக்கப்பட்ட துவஜங்களுடன் {கொடிகளுடன்}, பலமுறை யுத்தத்தில் பங்கமடைந்தவர்களே; என்னை எதிர்த்து நிற்க சக்தியற்றவர்களே.(20ஆ,21அ) என்னை இச்சிப்பாயாக. உத்தம பிரதிகர்மத்தை {அலங்காரத்தைச்} செய்வாயாக.{21ஆ} உன் அங்கங்களில் நல்ல பிரபையுடன் கூடிய பூஷணங்களை {ஆபரணங்களைப்} பூட்டுவாயாக. பிரதிகர்மத்திற்குப் பொருத்தமான {அலங்காரத்துடன் கூடிய} உன் ரூபத்தை நான் நல்ல விருப்பத்துடன் பார்ப்பேன்.(21ஆ,22)

சிறந்த முகம் கொண்டவளே, பீரு {பயந்தவளே}, அலங்காரம் செய்து கொண்டு, கருத்துடன் போகங்களை அனுபவிப்பாயாக; விரும்பியபடி குடிப்பாயாக. இன்பமாக இருப்பாயாக.(23) உன் விருப்பத்திற்கேற்ப எனக்கு பிருத்வியையோ, தனத்தையோ தானம் செய்வாயாக. என் விஷயத்தில், தயக்கமில்லாத நம்பிக்கையுடன், அச்சமில்லாமல் ஆணையிடுவாயாக.(24) என் அருளால் நீ இன்புறுவதைப் போல, உன் பந்துக்களும் {உறவினரும்} இன்புறட்டும். பத்ரையே {மங்கலமானவளே}, என் செல்வத்தையும், என் புகழையும் நீ பார்ப்பாயாக.(25) 

அழகிய பெண்ணே, வெற்றியில் நம்பிக்கையிழந்து, செல்வத்தைத் தொலைத்து, மரவுரி உடுத்திய ராமனுடன் நீ என்ன செய்யப் போகிறாய்? வனத்தில் திரியும் விரதம் அனுசரித்துத் தரையில் உறங்கும் ராமன் ஜீவிக்கிறானோ? இல்லையோ? சந்தேகம்தான்.(26,27அ) வைதேஹி, முன்னே நாரைகளுடன் கூடிய கரிய மேகங்களால் மறைக்கப்பட்ட நிலவொளியைப் போல, உண்மையில் ராமன் உன்னை தரிசிக்கும் வாய்ப்பைக்கூடப் பெறமாட்டான்.(27ஆ,28அ) இந்திரனின் கைகளில் பெற்ற ஹிரண்யகசிபுவின் கீர்த்தியைப் போல, என் கைகளில் இருந்து ராகவன் உன்னைப் பெற மாட்டான்.(28ஆ,29அ) 

அழகிய புன்னகையைக் கொண்டவளே, அழகிய பற்களை உடையவளே, அழகிய நேத்திரங்களை {கண்களைக்} கொண்டவளே, அழகியே, பயந்தவளே, சுபர்ணனால் பன்னகத்தை {கருடனால் கொள்ளையிடப்படும் பாம்பைப்} போல என் மனத்தைக் கொள்ளையிடுகிறாய்.(29ஆ,30அ) சிதைந்த பட்டாடை உடுத்தி, மெலிந்து, அலங்காரமில்லாமல் இருந்தும் உன்னைக் கண்ட என்னால் என் தாரங்களிடம் மகிழ்ச்சியை அடையமுடியவில்லை.(30ஆ,31அ) ஜானகி, என் அந்தப்புரத்தில் வாழும் சர்வ குணங்களும் பொருந்திய எந்த ஸ்திரீயாக இருந்தாலும், அவர்கள் அனைவரின் ஐஷ்வர்யத்தையும் நீ அடைவாயாக.(31ஆ,32அ) கரிய கேசமுடையவளே, என்னுடைய அந்த ஸ்திரீகளும், திரிலோகங்களிலும் சிறந்த அப்சரஸ்களும், ஸ்ரீயை {லட்சுமியைப்} போல உனக்குத் தொண்டாற்றுவார்கள்.(32ஆ,33அ) 

ஸுஷ்ரோணியே {நல்லிடையைக் கொண்டவளே}, அழகிய புருவங்களை உடையவளே, மூவுலகங்களிலும் வைஷ்ரவணனுக்கும் {குபேரனுக்கும்}, எனக்கும் உரிய யாவற்றிலும் எந்த ரத்தினத்தையும், தனத்தையும் உன் சுகத்திற்கேற்ப அனுபவிப்பாயாக.(33ஆ,34அ) தேவி, ராமன் தபத்தில் எனக்கு நிகரானவனல்லன்; பலத்திலும் அல்லன், விக்கிரமத்திலும் அல்லன், தனத்திலும், தேஜஸ்ஸிலும், புகழிலும் அல்லன்.(34ஆ,35அ) இனியவளே, தனக்குவியலையும், மேதினியையும் நான் தருவேன். நீ குடி; உலவு; விளையாடு; போகங்களை அனுபவி; சுகத்திற்கு ஏற்ப என்னுடன் விளையாடு; உன் பந்துக்களும் {உறவினர்களும்} உன்னுடன் சேர்ந்து இன்புறட்டும்.(35ஆ,இ,ஈ,உ) பீரு {பயந்தவளே}, கனகமயமானவையும், களங்கமற்றவையுமான ஹாரங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களுடன், வண்டுகள் மொய்க்கும் மலர்ந்த மரங்கள் நிறைந்தவையும், சமுத்திரக்கரையில் பிறந்தவையுமான கானகங்களில் {தோட்டங்களில்} என்னுடன்  உலவுவாயாக” {என்றான் ராவணன்}.(36) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 20ல் உள்ள சுலோகங்கள்: 36


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை