Plantain | Sundara-Kanda-Sarga-19 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனைக் கண்டு நடுங்கிய சீதை...
அதே காலத்தில், ராஜபுத்திரியும், நிந்தனைக்குத் தகாதவளும், ரூப, யௌவனம் {அழகும், இளமையும்} நிறைந்தவளும், உத்தம பூஷணங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான வைதேஹியின் அழகிய அங்கங்கள், காற்றில் {நடுங்கும்} கதலியை {வாழைமரத்தைப்} போல, ராக்ஷசாதிபதியான ராவணனைக் கண்ட போது நடுங்கின.(1,2) வரவர்ணினியும், விசாலாக்ஷியும் {சிறந்த நிறம்படைத்தவளும், நீள்விழிகளைக் கொண்டவளும்}, தொடைகளால், உதரத்தையும் {வயிற்றையும்}, மார்பகங்களையும் மறைத்தபடியே அங்கே அமர்ந்து, அழுது கொண்டிருப்பவளும்,(3) ஆர்ணவத்தில் {கடலில்} மூழ்கும் நாவத்தை {ஓடத்தைப்} போல, துக்கத்தால் பீடிக்கப்பட்ட தீன நிலையில், ராக்ஷசி கணங்களால் ரக்ஷிக்கப்படுபவளுமான வைதேஹியை தசக்ரீவன் {பத்துக் கழுத்துடைய ராவணன்} கண்டான்.(4)
முறிந்து, பூமியில் விழுந்து கிடக்கும் வனஸ்பதியின் சாகையை {மரத்தின் கிளையைப்} போலிருப்பவளும், கடும் விரதத்துடன் மறைக்கப்படாத தரணியில் {விரிப்புகளேதும் இல்லாத வெறுந்தரையில்} அமர்ந்திருப்பவளும்,(5) புழுதியை ஆபரணமாகக் கொண்ட அழகிய அங்கங்களைக் கொண்டவளும், அலங்காரத்திற்குத் தகுந்தவளாக இருந்தும், அலங்காரமற்றவளும், புழுதியால் மறைக்கப்பட்ட மிருணாலியை {தாமரைத் தண்டைப்} போல ஒளிர்ந்தும் ஒளிராதவளும்,(6) சங்கல்ப ஹயம் பூட்டப்பட்ட மனோரதத்தில் {எண்ணங்களென்னும் குதிரைகள் பூட்டப்பட்ட மனமென்னும் தேரில் சென்று}, விதிதாத்மனும் {எல்லாமறிந்த மதியுடையவனும்}, ராஜசிம்ஹமனுமான ராமனின் சமீபத்தை அடைகிறவளைப் போலிருப்பவளும்,(7) மெலிந்தவளும், அழுது கொண்டிருப்பவளும், சோக எண்ணங்களை தியானித்துத் தனியாக இருப்பவளும், துக்கத்தின் அந்தத்தை {எல்லையைக்} காணாதவளும், ராமனைப் பின்தொடர்பவளும், இனிமையானவளும்,(8) அவஸ்தையில் அகப்பட்டு துடிக்கும் பன்னகேந்திரவதுவை {பாம்புகளின் அரசனுடைய மனைவியைப்} போன்றவளும், தூமகேது என்றழைக்கப்படும் கிரஹத்தால் துன்புறுத்தப்படும் ரோஹிணியை {கேதுவின் புகையால் பீடிக்கப்படும் ரோஹிண நட்சத்திரத்தைப்} போன்றவளும்,(9) தார்மீகமான, ஆசாரம் நிறைந்த, நன்னடத்தையும், சீலமும் கொண்ட குலத்தில் பிறந்து, மீண்டும் சம்ஸ்காரத்தை அடைந்தும் {நல்ல குலத்தில் திருமணம் செய்து கொண்டும்} துஷ்ட குலத்தில் பிறந்தவளைப் போலிருப்பவளும்,(10) போலி அபவாதத்தால் வீழ்ந்துவிட்ட கீர்த்தியைப் போலிருப்பளும், மனத்தால் கற்றதைப் பயன்படுத்தாமல் விட்ட வித்தையை {பயிற்சியின்மையால் அழிந்த கல்வியைப்} போலிருப்பவளும்,(11) மஹாகீர்த்தி சன்னமானதை {பெரும்புகழ் குன்றியதைப்} போலிருப்பவளும், அவமதிக்கப்பட்ட சிராத்தத்தை {நம்பிக்கையைப்} போலிருப்பவளும், தேய்ந்து போன அறிவை {ஞானத்தைப்} போலிருப்பவளும், தடைபட்ட ஆசையைப் போலிருப்பவளும்,(12) மறுக்கப்பட்ட ஆணையைப் போலிருப்பவளும், அழிக்கப்பட்ட வாழ்விடத்தைப் போன்றிருப்பவளும், தீப்பற்றியெரியும் திசையைப் போன்றிருப்பவளும், காலப்போக்கில் பறிபோன பூஜையைப் போலிருப்பவளும்,(13) அழிந்து போன பத்மினியை {தாமரைப் பொய்கையைப்} போலிருப்பவளும், சூரர்கள் கொல்லப்பட்ட சம்முவை {சேனையைப்} போலிருப்பவளும், இருளால் அழிவுண்ட பிரபையை {ஒளியைப்} போலிருப்பவளும், வறண்டு போன ஆபகத்தை {நதியைப்} போலிருப்பவளும்,(14) தூய்மையாக்கப்பட்ட வேதியை {வேள்விப் பீடத்தைப்} போலிருப்பவளும், அணைந்து போன அக்னி சிகையை {நெருப்பின் தழலைப்} போலிருப்பவளும், ராகு கிரஹத்தால் விழுங்கப்பட்ட சந்திரமண்டலத்துடன் கூடிய பௌர்ணமி நிசியை {இரவைப்} போலிருப்பவளும்,(15) ஹஸ்தியின் ஹஸ்தங்களால் {யானைகளின் துதிக்கைகளால்} கலக்கப்பட்டுப் பிடுங்கி எறியப்பட்ட இலைகளையும், கமலங்களையும் {தாமரை மலர்களையும்} உடைய பத்மினியை {தாமரைப் பொய்கையைப்} போலிருப்பவளும்,(16) பதிசோகத்தால் {கணவனான கடலை அடையாத சோகத்தால்} பீடிக்கப்பட்டும், பாயச் செய்யப்படும் வறண்ட நதியைப் போலிருப்பவளும், நல்ல தூய்மையான நீராட்டைப் பெறாத, கிருஷ்ணபக்ஷத்து நிசியை {தேய்பிறை இரவைப்} போலிருப்பவளும்,(17) சுகுமாரியும் {மென்மையானவளும்}, சுஜாதங்கியும் {அழகிய அங்கங்களைக் கொண்டவளும்}, ரத்தின கர்ப்பகிருஹத்தில் {ரத்தினங்களால் இழைக்கப்பட்ட மாளிகையில்} வசிக்கத்தகுந்தவளும், உஷ்ணத்தால் தபிக்கப்படுவதும் {வெப்பத்தால் வாடிக் கொண்டிருப்பதும்}, சற்றுமுன்பே பிடுங்கப்பட்டதுமான மிருணாலியை {தாமரைத் தண்டைப்} போலிருப்பவளும்,(18) யூதபனிடமிருந்து {மந்தைத் தலைவனிடமிருந்து} பிரித்துக் கைப்பற்றி ஸ்தம்பத்தில் கட்டப்பட்டும், துக்கத்தால் பீடிக்கப்பட்டும், பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் கஜராஜன் வதுவை {யானையரசின் மனைவியைப்} போலிருப்பவளும்,(19) நீண்ட ஒற்றைப் பின்னலோடு யத்தனமில்லாமல் சோபிப்பவளும் {ஒப்பனை செய்யப்படாமலேயே ஒளிர்பவளும்}, மழைக்கால முடிவில், நீலமாகும் வனராஜ்ஜியத்துடன் கூடிய மஹீயை {மழைக்கால முடிவில் கருகும் சோலையுடன் கூடிய நிலத்தைப்} போலிருப்பவளும்,(20) உபவாசத்தாலும் {உண்ணாநோன்பினாலும்}, சோகத்தாலும், தியானத்தாலும், பயத்தாலும், மிகவும் நொந்து, அல்ப ஆகாரத்தைக் கொண்டு {சிறிதளவே உணவை உட்கொண்டு} மெலிந்த தபோதனையும் {தபத்தையே செல்வமாகக் கொண்டவளும்},(21) இரகுமுக்கியனிடம் தசக்ரீவன் {பத்துக் கழுத்தைக் கொண்ட ராவணன், ராமனிடம்} தோற்பதை விரும்பும் எண்ணத்தால் கைகளைக் கூப்பி {பிரார்த்தித்துக் கொண்டிருப்பவளும்}, துக்கத்தால் பீடிக்கப்பட்ட தேவதையைப் போலிருப்பவளும்,(22) அழகான இமைகளுடன், சிவந்து, நீண்டு, விரிந்து, வெளுத்த கண்களுடையவளும், அழுது கொண்டிருப்பவளும், சுற்றி மிரண்டு பார்த்துக் கொண்டிருப்பவளும், ராமனையே பின்பற்ற விரதம் கொண்டவளும், நிந்தனைக்கு இடமில்லாதவளும், அனைத்துப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தவளுமான அவளை {சீதையைக்} கொல்லப்போவதாக மிரட்டி ராவணன் ஆசையைத் தூண்டினான்.(23)
சுந்தர காண்டம் சர்க்கம் – 19ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |