Hanuman beheld Seetha | Sundara-Kanda-Sarga-15 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அசோகவனத்தில் சீதையைத் தேடிய ஹனுமான்; அரக்கிகளால் சூழப்பட்ட ஓர் அபலையைக் கண்டது; சில அடையாளங்களின் மூலம் சீதையைக் கண்டுகொண்ட ஹனுமான்...
அங்கிருந்து {மரத்திலிருந்து} பார்வையைச் செலுத்தி, மைதிலியை {சீதையைத்} தேடிக்கொண்டிருந்தவன் {ஹனுமான்}, அந்த மஹீ {நிலம்} முழுவதையும் சுற்றுமுற்றும் பார்த்தான்.(1)
அங்கே சந்தானகக் கொடிகளுடன் ஒளிர்ந்து கொண்டிருப்பவையும், திவ்ய கந்தமும், ரசமும் கொண்டவையுமான {சந்தானக} மரங்களால் எங்கும் அலங்கரிக்கப்பட்டதும்,{2} {இந்திரனின்} நந்தனத்திற்கு ஒப்பானதும், மிருகபக்ஷிகளால் சூழப்பெற்றதும், நெடும் மாளிகைகள் நிறைந்ததும், கோகிலங்களின் {குயில்களின்} ஓசையால் ஒலிக்கப்பெற்றதும்,{3} காஞ்சன உத்பலங்களுடனும், பத்மங்களுடனும் கூடிய வாபிகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டதும், ஏராளமான ஆசனங்களுடனும், ஆடம்பர விரிப்புகளுடனும், பல்வேறு பூமி கிருஹங்களுடனும் {நிலவறைகளுடனும்} கூடியதும்,{4} சர்வ ருதுக்களுக்கும் உரிய மலர்களையும், பழங்களையும் கொண்ட மரங்களுடன் ரம்மியமாகத் திகழ்வதும், சூரியோதயப் பிரபையுடனும், முற்றும் மலர்ந்த மகிமையுடனும் கூடிய அசோகங்களுடனும்,{5} {நெருப்பில் சுடப்பட்டு} ஒளிர்வதைப் போலிருக்கும் வனத்தை அந்த மாருதி {ஹனுமான்} உற்று நோக்கினான். அடிக்கடி வரும் பறவைகளால், இலைகளற்ற கிளைகளுடன் கூடியவையாகச் செய்யப்பட்டது போல் இருந்தவையும்,{6} நூற்றுக்கணக்கான அழகிய மலர்களையே தலையலங்காரமாகக் கொண்டவையும், சோகத்தை அழிப்பவையும், வேர் வரை பரவியிருக்கும் மலர்களுடன் கூடியவையுமான அசோகங்கள் இலைகளை இவ்வாறு உதிர்த்துக் கொண்டிருந்தன.{7} புஷ்பபாரத்தால் மேதினியைத் தொடுவது போலத் தோன்றும் முற்றும் மலர்ந்த கர்ணீகாரங்களும் {கொன்றை மரங்களும்}, கிம்சுகங்களும் {புரச மரங்களும்} அங்கே பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.(2-8)
அவற்றின் பிரபையால் அந்த தேசம் {அந்த மரங்களின் பிரகாசத்தால் அவ்விடம்} எங்கும் ஒளிர்வதைப் போல் இருந்தது. பெருத்த வேர்களுடன் கூடியவையும், நன்கு புஷ்பித்தவையுமான புன்னாகங்கள், சப்தபர்ணங்கள் {ஏழிலைப்பாலைகள்}, அதேபோல சம்பகங்கள், உத்தாலகங்கள் {நறுவிலி மரங்கள்} ஆகியனவும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(9,10அ) அங்கே இருந்த ஆயிரக்கணக்கான அசோகங்களில் பொன்னுக்கு ஒப்பாக சிலவும், அக்னிக்கு நிகராக சிலவும், நீலம், அஞ்சனம் {கரிய மை} ஆகியவற்றுக்கு ஒப்பாக சிலவும் {ஒளிர்ந்து கொண்டு} இருந்தன.(10ஆ,11அ) {இந்திரனின்} நந்தனம் போன்றதும், {குபேரனின்} சைத்ரரதம் போன்றதுமான அந்த தெய்வீகத் தோட்டம் {அசோக வனம்},{11ஆ} அனைத்தையும் விஞ்சியதாக, சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக, திவ்யமானதாக, ரம்மியமானதாக, மகிமை நிறைந்ததாக, ஜோதி கணம் {நட்சத்திரக்கூட்டம்} போன்ற புஷ்பங்களுடன் கூடிய இரண்டாவது ஆகாசத்தைப் போன்றதாக,{12} சித்திரமான நூற்றுக்கணக்கான ரத்தினங்களைப் போன்ற மலர்களுடன் கூடிய இரண்டாவது சாகரத்தைப் போன்றதாக, சர்வ ருதுக்களுக்கும் உரிய புஷ்பங்களுடனும், மதுகந்தத்துடனும் கூடியதாக இருந்தது.{13} இரம்மியமானவையும், மிருககணங்களுடன் கூடியவையுமான மரங்கள் படர்ந்ததாக, நானாவித பறவைகளின் ஒலியுடன் கூடியதாக, அநேக கந்தம் பரவியதாக, மனத்தைக் கொள்ளை கொள்ளும் புண்ணிய கந்தம் நிறைந்ததாகவும் அஃது இருந்தது.(11ஆ-14)
அந்த வானரபுங்கவன் {வானரர்களில் மேன்மையான ஹனுமான்}, சைலேந்திரத்தை {மலைகளின் மன்னனான இமயத்தைப்} போன்றதும், கந்தம் நிறைந்ததும், இரண்டாவது கந்தமாதனத்தைப் போன்றதுமான அந்த அசோக வனிகையின்{15} அருகிலேயே ஓர் உயர்ந்த சைத்யபிராசாதத்தை {கோவிலைக்} கண்டான். மத்தியில் ஆயிரம் ஸ்தம்பங்களைக் கொண்டு நின்றிருப்பதும், கைலாசத்தைப் போன்று வெண்மையானதும்,{16} பவளங்களால் செய்யப்பட்ட படிகளுடனும், தப்த காஞ்சன வேதிகைகளுடனும் {புடம்போட்ட பொன்மேடைகளுடனும்} கூடியதும், கண்களைக் கவர்வது போல மகிமையில் ஒளிர்வதும்,{17} விமலமானதும், அம்பரத்தை {வானத்தைத்} தொட்டுவிடுவதைப் போல நெடிதுயர்ந்திருப்பதுமாக அது {அந்தக் கோவில்} திகழ்ந்தது.(15-18அ)
அப்போது {அந்த ஹனுமான்}, மலின {அழுக்கடைந்த} ஆடை அணிந்திருந்தவளும், ராக்ஷசிகளால் சூழப்பட்டவளும்,{18ஆ} உபவாசத்தால் மெலிந்தவளும், தீனமானவளும், மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவளும், சுக்ல பக்ஷத்தின் {வளர்பிறையின்} தொடக்கத்தில் தோன்றும் அமல சந்திர ரேகையை {துவிதியைத் திதியின் தெளிவான நிலவுப் பிறையைப்} போன்றவளுமான ஒருத்தியைக் கண்டான்[1].(18ஆ,19)
[1] வன்மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்கல்மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணாநல்மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கைமென்மருங்கு போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள்- கம்பராமாயணம் 5071ம் பாடல், காட்சிப்படலம்பொருள்: கல்லின் அருகில் தோன்றி எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி வருவதையும் அறியாத நல்ல மருந்தை {மூலிகையைப்} போல, பருத்த இடையுடைய கொடிய அரக்கியர் துன்புறுத்த, உடல்நலமும், மனநலமும் இல்லாமல் வாடும் அந்நங்கையானவள் {சீதையானவள்}, தன் மெல்லிய இடையைப் போல, வேறு அங்கங்களும் மெலிந்து அங்கே இருந்தாள்.
தூமஜாலத்தால் {புகைச்சுருளால்} மறைக்கப்பட்ட அழகிய பிரபையுடன் கூடிய விபாவசுவின் சிகையை {நெருப்பின் தழலைப்} போல மந்தமாக வெளிப்படும் ரூபத்துடன் கூடியவளும்,(20) பத்மங்களற்ற, புழுதியுடன் கூடிய பத்மினியைப்[2] போல அலங்காரமற்றவளும், கசங்கியதும், மஞ்சள் நிறம் கொண்டதுமான ஒரே உத்தம வஸ்திரத்தால் {பட்டாடையால்} மறைக்கப்பட்டவளும்,(21) வெட்கமடைந்தவளும், துக்க சந்தாபத்தால் பீடிக்கப்பட்டவளும், களைத்தவளும், அங்காரகனென்னும் {செவ்வாய்} கிரஹத்தால் பீடிக்கப்பட்ட ரோஹிணியை போன்ற தபஸ்வினியும்,(22) கண்ணீர் நிறைந்த முகத்துடன் தீனமான நிலையில் இருந்தவளும், உண்ணாமல் மெலிந்தவளும், பரம சோகத்தில் தியானித்துக் கொண்டிருப்பவளும், துக்கத்தில் வீழ்ந்து, நித்தியம் தீனமாக இருப்பவளும்,(23) தன் கூட்டத்தை இழந்து, நாய்க்கூட்டத்தால் சூழப்பட்ட மிருகீயை {பெண்மானைப்} போல, பிரிய ஜனங்களைப் பாராமல், ராக்ஷசி கணங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவளும்,(24) மழைக்காலத்தின் முடிவில், வனராஜ்ஜியங்களுடன் நீலமாகத் திகழும் மஹீயை {அடர்ந்த மரங்களுடன் கரும்பச்சையாகத் திகழும் நிலத்தைப்} போலவும், நீலநாகத்தின் {கருநாகத்தின்} பிரகாசத்துடனும் பின்பாகம் வரை நீளும் ஒற்றைப் பின்னலுடன் கூடியவளும்,{25} சுகத்திற்குத் தகுந்தவளும், துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், விசனத்திற்குப் பழக்கப்படாதவளும்,(25,26அ) விசாலாக்ஷியும் {நீள்விழியாளும்}, அதிகம் அழுக்கடைந்தவளும், மெலிந்தவளுமான அவளைக் கண்டதும், பொருத்தமான காரணங்களை நிறுவிக் கொண்டு, “இவளே சீதை” என அவன் {அந்த ஹனுமான்} ஊகித்தான்.(26ஆ,27அ) “காமரூபியான {விரும்பிய வடிவை ஏற்கவல்ல} அந்த ராக்ஷசனால் அபகரிக்கப்பட்டபோது, எந்த ரூபத்தில் காணப்பட்டாளோ, அதே ரூபத்தில் இந்த அங்கனை {பெண்} இருக்கிறாள்” {என்று ஹனுமான் நினைத்தான்}.(27ஆ,28அ)
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “பத்மினி என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் உள்ளன. 1) தாமரை {தாமரைத்தடாகம்} 2) லக்ஷ்மி அல்லது செல்வத்தின் தேவி. பொதுவாக செல்வத்தின் தேவி தாமரையில் அமர்ந்திருப்பதாகவே வர்ணிக்கப்படும். எனவே, இந்த வாக்கியத்திற்கு இருவகை பொருள்கள் இருக்கின்றன” என்றிருக்கிறது.
பூர்ணச் சந்திரனைப் போன்ற முகத்துடனும், அழகிய புருவங்களுடனும், அழகிய திரண்ட மார்பகங்களுடனும்,{28ஆ} தன் பிரபையால் அனைத்துத் திசைகளையும் இருளற்றவையாகச் செய்யும் தேவியைப் போன்றவளும், நீலகேசியும் {கருங்கூந்தலைக் கொண்டவளும்}, பிம்பத்தை {கோவைக்கனியைப்} போன்ற உதடுகளைக் கொண்டவளும், நல்லிடையுடனும், உறுதியான நடையுடனும் கூடியவளும்,{29} பத்ம இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், மன்மதனின் ரதியைப் போன்றவளுமான சீதையைக் கண்டான்.(28ஆ-30அ)
பூர்ணச் சந்திர பிரபையைப் போல சர்வ ஜகத்திற்கும் இஷ்டமானவளும், பூமியில் நியதத்துடன் {கட்டுப்பாட்டுடன்} கூடிய தாபஸ்வியைப் போன்ற நல்லுடல் கொண்டவளும்,(30ஆ,31அ) பயத்திலிருக்கும் புஜகேந்திரனின் வதுவை {பாம்புகளின் மன்னனுடைய மனைவியைப்} போன்று பெருமூச்சுவிட்டுக் கொண்டிருப்பவளும், மஹத்தான, பெரிய சோக ஜாலத்தால் பிரகாசிக்காதவளும்,(31ஆ,32அ) தூமஜாலத்துடன் கலந்த விபாவசுவின் சிகையை {புகைச்சுருளுடன் கூடிய நெருப்பின் தழலைப்} போன்றவளும், சந்தேகங்களுடன் கூடிய ஸ்மிருதியைப் போன்றவளும், கைவிடப்பட்ட செல்வத்தைப் போன்றவளும்,(32ஆ,33அ) தடைபட்ட சிராத்தத்தைப் போன்றவளும், நிறைவேறாத ஆசையைப் போன்றவளும், தடைகளுடன் கூடிய சித்தியை {வெற்றியைப்} போன்றவளும், தூய்மையற்ற மனத்தைப் போன்றவளும்,(33ஆ,34அ) போலி அபவாதத்தால் {அவதூறால்} வீழ்ந்த கீர்த்தியைப் போன்றவளும், ராமனால் உண்டான வியாதியால் பீடிக்கப்பட்டவளும், ராவணன் அபகரித்ததால் மெலிந்தவளும்,(34ஆ,35அ) பரிபூரணமாகக் கண்ணீர் நிறைந்த கண்களுடன் கூடிய பெண் மானைப் போன்றவளும், கரியவையும், வளைந்தவையுமான புருவங்களுடனும், உற்சாகமற்ற முகத்துடனும் அங்கேயும், இங்கேயும் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த அபலையும்,(35ஆ,36) அழுக்குப் படிந்த உடை தரித்தவளும், அலங்காரத்திற்குத் தகுந்தவளாக இருந்தும் அலங்காரமற்றவளும், கால மேகத்தால் மறைக்கப்பட்ட நக்ஷத்திர ராஜாவின் {சந்திரனின்} பிரபையைப் போன்றவளும்,(37) பயிற்சியின்மையால் குன்றிப்போன வித்தையைப் போன்றவளுமான சீதையைக் கண்ட அவனது {ஹனுமானின்} புத்தி {சந்தேகத்தால்} மீண்டும் மீண்டும் கலவரமடைந்தது.(38)
சம்ஸ்காரம் {இலக்கணப்பண்பு} அமையாமல், வேறு அர்த்தம் அடையும் வசனத்தைப் போலவே, சீதையும் அலங்காரமில்லாமல் துக்கத்துடன் இருப்பதை ஹனுமான் தெரிந்து கொண்டான்.(39) நிந்திக்கத்தகாதவளும், விசாலாக்ஷியுமான {நீள்விழியாளுமான} அந்த ராஜபுத்திரியைக் கண்டு, காரணங்களை நிச்சயம் செய்து கொண்டு, “இவளே சீதை” என்றவன் உறுதியை அடைந்தான்.(40) இராமன் வைதேஹியின் அங்கங்களில் என்னென்ன {ஆபரணங்கள்} இருந்தன என்று சொன்னானோ, அவை அந்தந்த அங்கங்களை அலங்கரிப்பதை அவன் கவனித்தான்.{41} நன்கு செய்யப்பட்டு, அழுந்திப் படிந்திருந்த காதணிகளும், ஸ்வதம்ஷ்டிரங்களும்[3], மணி, பவளங்களால் அழகாகச் செய்யப்பட்ட அணிகலன்களும், கைகளில் உள்ள ஆபரணங்களும்,{42} நீண்ட காலம் அவற்றைப் பூண்டதால் உண்டான கரிய படிமங்களும் {அவனுக்குத்} தெரிந்தன.(41-43அ)
[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “காதுகளில் அணியப்படும் ஒரு வகை அணிகலனாகும்” என்றிருக்கிறது.
“இராமர் என்னென்ன சொன்னாரோ, அவையே இவையாவும் என்று நினைக்கிறேன். அவற்றில் எவையெல்லாம் களையப்பட்டனவோ, அவற்றை நான் காணவில்லை. எவற்றை அவள் களையவில்லையோ, அவை இவையே. இதில் சந்தேகமில்லை.(43ஆ,44) சுபமானதும், கனகப்பட்டாபத்துடன் {பொற்தகட்டுடன்} கூடியதும், மஞ்சள் நிறம் கொண்டதுமான அந்த உத்தரீய வஸ்திரம் {மேலாடை} வீசப்பட்டு மரத்தில் விழுந்ததைப் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} கண்டனர்.(45) அவளால் தரணீதலத்தில் வீசப்பட்டவையும், மஹத்தானவையும், முக்கியமானவையுமான பூஷணங்களும் {ஆபரணங்களும்} ஒலியுடன் விழுவதும் காணப்பட்டது.(46) நீண்டகாலம் பூண்டிருக்கும் இந்த வஸ்திரம் கசங்கியிருந்தாலும், நிச்சயம் {வானரர்கள் கண்ட} அந்த மகத்தான மேலாடையைப் போன்ற அதே வர்ணத்தில் இருக்கிறது.(47) சதீயான {கற்பிற்சிறந்தவளான} எவள் காணப்படவில்லை என்றாலும், அவரின் மனத்தில் இருந்து நீங்கவில்லையோ, அந்தக் கனக வர்ண அங்கம் கொண்ட இவளே ராமரின் பிரிய மஹிஷியாக இருக்க வேண்டும்.(48)
இராமர், காருண்யம் {இரக்கம்}, கொடுமையின்மை {அன்பு}, சோகம், மதனேனம் {காமனால் ஏற்படும் பேரார்வம்} என்ற நான்கினால் எவளுக்காக பரிதபிக்கிறாரோ அவளே இவள்;{49} {அதாவது}, ஸ்திரீ தொலைந்து போனாள் என்ற காருண்யமும், தன்னைச் சார்ந்தவள் என்ற கொடுமையின்மையும் {அன்பும்}, பத்தினியை இழந்துவிட்டோம் என்ற சோகமும், பிரியை {அன்புக்குரிய காதலி} என்ற மதனேனமும் {ராமரைப் பரிதபிக்கச் செய்யும் நான்கு காரணங்களாகும்}.(49,50) இந்த தேவியின் ரூபமும், அங்க, பிரத்யங்க நளினமும் எப்படியோ, அப்படியே ராமருடையனவும் இருக்கின்றன. அவரது ரூபம் எப்படியோ, அப்படியே இந்த கரியவிழியாளுடையதும் இருக்கிறது.(51) இந்த தேவியின் மனம் அவரிடமும், அவருடையது இவளிடமும் உறுதியாக இருப்பதனாலேயே இவளும், அந்த தர்மாத்மாவும் ஒரு முஹூர்த்தமாவது ஜீவிக்க முடிகிறது {இந்தக் கொஞ்ச காலமாவது பிழைத்திருக்க முடிகிறது}.(52) இவளை இழந்தும் பிரபு ராமர், செய்வதற்கரிய காரியத்தைச் செய்திருக்கிறார். அதனாலேயே தன் தேஹத்தைத் தரித்திருக்கிறார்; அதனாலேயே சோகத்தால் மனஞ்சோர்ந்துவிடாமல் இருக்கிறார்.(53) மஹாபாஹுவான எவர், இத்தகைய மத்தகாசினியான {மயக்கும் காந்தியுடன் கூடிய} சீதையை இழந்தும், முஹூர்த்தமாவது {இந்தக் கொஞ்சகாலமாவது} ஜீவித்திருந்தாரோ, அந்த ராமரே செய்வதற்கரியவற்றைச் செய்கிறார்” {என்று ஹனுமான் நினைத்தான்}.(54)
இவ்வாறு சீதையைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பிறகு, பவனசம்பவன் {வாயுமைந்தனான ஹனுமான்}, மனத்தால் ராமனிடம் சென்று, பிரபுவென அவனைக் கொண்டாடினான்.(55)
சுந்தர காண்டம் சர்க்கம் – 15ல் உள்ள சுலோகங்கள்: 55
Previous | | Sanskrit | | English | | Next |