Ashoka garden | Sundara-Kanda-Sarga-14 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அசோகவனத்தில் புகுந்து, சிம்சுபா மரத்தில் ஏறி வனத்தின் அழகைக் கண்டு, சீதையைத் தேடிய ஹனுமான்...
மஹாதேஜஸ்வியான அவன் {ஹனுமான்}, ஒரு முஹூர்த்தம் போல தியானித்து, மனத்தால் அதை {அசோக வனத்தை} அடைந்து, வேஷ்மத்தின் பிராகாரத்தில் இருந்து தாவினான்.(1) சர்வ அங்கங்களிலும் மகிழ்ச்சி பொங்கியவனான அந்த மஹாகபி, வசந்தத்தின் {வசந்த ருதுவின்} ஆதியில் முழுமையாகப் புஷ்பிக்கும் விதவிதமான மரங்களைக் கண்டான்.{2} சாலங்கள் {ஆச்சா மரங்கள்}, அழகிய அசோகங்கள், நன்கு புஷ்பித்த சண்பகங்கள், உத்தாலகங்கள், நாக விருக்ஷங்கள், மாமரங்கள், கபிமுகங்கள் உள்ளிட்ட மரங்களைக் கண்டான்.(2,3) அப்போது அவன், நாண்கயிற்றில் இருந்து ஏவப்பட்ட ஒரு நாராசத்தைப் போல, மாமரங்களால் நிறைந்ததும், நூற்றுக்கணக்கான லதைகளால் {கொடிகளால்} சூழப்பட்டதுமான விருக்ஷவாதிகைக்குள் {மரத்தோப்புக்குள் / சோலைக்குள்} தாவினான்[1].(4)
[1] மாடு நின்றஅம் மணி மலர்ச் சோலையை மருவிதேடி அவ்வழிக் காண்பெனேல் தீரும் என் சிறுமைஊடுகண்டிலெனென்னின் பின் உரியது ஒன்று இல்லைவீடுவேன் மற்றும் இவ்விலங்கல் மேல் இலங்கையை வீட்டி- கம்பராமாயணம் 5069ம் பாடல், காட்சிப்படலம்பொருள்: “பக்கத்தில் நிமிர்ந்திருக்கும் அழகிய மலர்கள் மலர்ந்த சோலையை அடைந்து, அவ்விடத்தில் தேடி {சீதையைக்} கண்டடைந்தால், என் சிறுமை {துன்பம்} நீங்கும், அதற்குள்ளும் காணவில்லையெனில், பிறகு, மலைமீதுள்ள இந்த இலங்கையை நான் பாழாக்கிவிடுவேன்” {என்று நினைத்து அசோக வனத்திற்குள் நுழைந்தான் ஹனுமான்}.
பல்வேறு வண்ணங்களிலான விஹகங்களால் {பறவைகளால்} ஒலிக்கப்பெறும் அதில் {அந்த அசோக வனத்தில்} பிரவேசித்ததும், வெள்ளியாலும் காஞ்சனத்தாலுமான மரங்கள் எங்கும் சூழ்ந்திருப்பதையும்,{5} விசித்திரமான விஹகங்களும் {பறவைகளும்}, மிருகங்களும் நிறைந்த அழகிய கானகங்களுடன், உதிக்கும் ஆதித்யனுக்கு {சூரியனுக்கு} ஒப்பாக அஃது {அசோக வனம்} ஒளிர்வதையும் கபியான {குரங்கான} ஹனுமான் கண்டான்.{6} புஷ்பங்களையும், பழங்களையும் தரும் நானாவிதமான விருக்ஷங்களால் சூழப்பெற்றும், கோகிலங்களாலும் {குயில்களாலும்}, வண்டுகளாலும் நித்தியம் சேவிக்கப்பட்டும்,{7} மிருக, பக்ஷி கூட்டங்களுடன் மனுஜர்களுக்கும் மகிழ்ச்சியை விளைவிக்கும் காலத்தில் {வசந்த ருதுவில்}, நானாவித துவிஜ கணங்களுடன் {பறவைக் கூட்டங்களுடன்} மதங்கொண்ட மயில்களால் ஒலிக்கப்பெற்றும் இருந்தது.(5-8)
அழகிய அங்கங்களைக் கொண்டவளும், நிந்திக்கத்தகாதவளுமான ராஜபுத்திரியை {சீதையைத்} தேடிச் சென்ற வானரன் {ஹனுமான்}, அங்கே சுகமாக உறங்கிக் கொண்டிருந்த விஹங்கங்களை {பறவைகளை} விழிக்கச் செய்தான்.(9) பறக்கும் துவிஜகணங்களின் {பறவைக்கூட்டங்களின்} சிறகுகளால் தாக்கப்பட்ட சாலங்கள் {ஆச்சா மரங்கள்}, விதவிதமான, அனேக வர்ணங்களிலான புஷ்பமாரியைப் பொழிந்தன.(10) மாருதாத்மஜனான ஹனுமான், புஷ்பங்களால் மறைக்கப்பட்டுப் புஷ்பமயமான கிரியைப் போல அசோக வனிகையின் மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(11)
விருக்ஷங்களின் இடையில் நுழைந்து, சர்வதிசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கும் கபியைக் கண்ட சர்வ பூதங்களும் {அனைத்து உயிரினங்களும்}, அவனை {வசந்த காலத்தின் தலைவனான} வசந்தன் என்று நினைத்தன.(12) விருக்ஷங்களில் இருந்து விழுந்த பல்வேறு விதமான புஷ்பங்களால் மறைக்கப்பட்டிருந்த வசுதை {நிலமகள்}, அங்கே நன்கு அலங்கரிக்கப்பட்ட பிரமதையை {பெண்ணைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(13) அப்போது வலிமைமிக்க கபியால், வலிமையுடன் குலுக்கப்பட்ட அந்த மரங்கள், விசித்திரமான மலர்களைப் பொழிந்து கொண்டிருந்தன.(14) புஷ்பங்களும், பழங்களும் விழுந்து, அகன்ற இலைகளுடனும், கிளைகளுடன் கூடிய அந்த மரங்கள், ஆடைகளையும், ஆபரணங்களை {பணயம்} வைத்து தோற்றுப் போன தூர்த்தர்களை {சூதாடிகளைப்} போன்றிருந்தன.(15)
சிறந்த புஷ்பங்களுடன் ஒளிரும் உத்தம மரங்கள், ஹனுமதனால் வேகத்துடன் குலுக்கப்பெற்ற உடனேயே புஷ்பங்களையும், இலைகளையும், பழங்களையும் உதிர்த்தன.(16) விஹங்கம சங்கங்களை {பறவைக் கூட்டங்களை} இழந்த அந்த மரங்கள் அனைத்தும், மாருதத்தால் {காற்றால்} அசைய முடியாதவையாக வெறுமையான கிளைகளை மட்டுமே கொண்ட மரங்களைப் போல இருந்தன.(17) பருகத்தக்க இதழ்களையும், சுபமான {அழகிய} பற்களையும் கொண்டவளும், நகங்களாலும், பற்களாலும் காயமடைந்தவளும், {சந்தனம் உள்ளிட்ட} பூச்சழிந்தவளும், கேசம் கலைந்தவளுமான யுவதியை {இளம்பெண்ணைப்} போல,{18} அவனது {ஹனுமானின்} லாங்கூலத்தாலும் {வாலாலும்}, ஹஸ்தங்களாலும் {கைகளாலும்}, சரணங்களாலும் தாக்கப்பட்டு, முறிந்து போன சிறந்த மரங்களுடன் கூடிய அந்த அசோக வனிகை திகழ்ந்தது[2].(18,19)
[2] இந்த அசோக வனம், இன்றைய இலங்கையில் உள்ள சீதா எலியா (Seetha Eliya) என்ற கிராமத்தில் உள்ளது என்று நம்பப்படுகிறது.
மழைக்காலத்தில் விந்தியத்தின் மேகக்கூட்டங்களை {கலைக்கும்} மாருதியைப் போல அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, தன் வலிமையால் பெருங்கொடிகளின் மாலைகளை அறுத்தான்.(20) அங்கே நடந்து சென்று அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, மணிகள், வெள்ளி ஆகியன பதிக்கப்பட்ட பூமியையும், காஞ்சனம் பதிக்கப்பட்டு மனோஹரமாகத் திகழ்ந்த பூமியையும் கண்டான்.(21)
விதவிதமான வடிவங்களில் ஆங்காங்கே இருந்தவையும், சிறந்த நீருடன் பூரணமாகத் திகழ்ந்தவையும், பெரும் மதிப்புமிக்க மணிகள் {ரத்தினங்கள்} பதிக்கப்பெற்றப் படிகளுடன் கூடியவையுமான வாபிகளில் {நடைக்கிணறுகளில்},{22} மணல் போல முத்துக்களும், பவளங்களும், அடியில் ஸ்படிகங்களும், விலைமதிப்புமிக்க கற்களும், அவற்றின் கரைகளில் அழகிய காஞ்சன வண்ண மரங்களும்,{23} மேற்பரப்பில் பத்ம {தாமரை}, உத்பல {குவளை} வனங்களும் {கூட்டங்களும்} இருந்தன. அருகில் சக்கரவாகங்களால் எதிரொலிக்கப்பெற்றும், நீர்க்கோழிகளால் ஒலிக்கப்பெற்றும், ஹம்சங்கள், சாரஸங்களால் நாதிக்கப்பெற்றும்,{24} நெடும் மரங்களால் சூழப்பெற்றும், தன்னகத்தே அம்ருதத்துக்கு நிகரான நீருடனும், சுற்றிலும் மங்கலமான கால்வாய்களுடனும்,{25} நூற்றுக்கணக்கான லதைகள் {கொடிகள்} அடர்ந்தும், சந்தானக மலர்களால் மறைக்கப்பட்டும், நானாவித குல்மங்களால் {புதர்களால்} சூழப்பெற்றும், மத்தியப் பகுதிகளில் முற்றும் மலர்ந்த அலரிச் செடிகளுடனும் அவை {வாபிகள்} இருந்தன.(22-26)
அதன்பிறகு, மேகங்களுக்கு ஒப்பானதும், உயர்ந்த சிகரங்களையும், விசித்திர கூடங்களையும் {முகடுகளையும்} கொண்ட கிரியுடன் கூடியதும், எங்கும் கூடங்களால் {முகடுகளால்} சூழப்பெற்றதும்,{27} சிலாகிருஹங்கள் {பாறை வீடுகள் / குகைகள்} நிறைந்ததும், நானா வித விருக்ஷங்களால் மறைக்கப்பட்டதும், ஜகத்தில் ரம்மியமானதுமான பர்வதத்தை அந்த கபி சார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்} கண்டான்.(27,28) அந்தக் கபி, பிரியனின் அங்கத்தில் {மடியில்} இருந்து குதித்து விழும் பிரியையைப் போல நகத்திலிருந்து {மலையிலிருந்து} விழுந்து பாயும் நதியைக் கண்டான்.{29} பிரிய பந்துக்களால் தடுக்கப்படும் குரோதங்கொண்ட பிரமதையை {பெண்ணைப்} போலவே, தழைத்தவையும், சாய்ந்த நுனியுடையவையுமான மரங்களினால் {தடுக்கப்பட்டு} அலங்கரிக்கப்பட்டு,{30} மீண்டும் திரும்பும் நீரை, சமரசமடைந்து காந்தனை அடையும் காந்தையைப் போல மீண்டும் அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} கண்டான்.(29-31)
ஹரிசார்தூலனும் {குரங்குகளில் புலியும்}, மாருதாத்மஜனுமான {வாயுவின் மைந்தனுமான} அந்த ஹனுமான், நானாவித துவிஜ கணங்களுடன் {பறவைக் கூட்டங்களுடன்} கூடிய பத்மினியை {தாமரைத் தடாகத்தை} அதன் அருகிலேயே கண்டான்.(32) குளிர்ந்த நீருடன் பூரணமாகத் திகழ்ந்ததும், சிறந்த மணிகள் {ரத்தினங்கள்} பதிக்கப்பட்ட படிகளுடன் கூடியதும், நீண்டதுமான ஒரு செயற்கைத் தடாகம், முத்து போன்ற மணலுடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.{33} விதவிதமான மிருகக்கூட்டங்களுடனும், சித்திர கானகத்துடனும், மஹத்தான பிரசாதங்களுடனும் {மாளிகைகளுடனும்} கூடியதும், விஷ்வகர்மனால் நிர்மாணிக்கப்பட்டதுமான அது {அந்த செயற்கைத் தடாகம்},{34} சுற்றிலும் செயற்கை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(33-35அ) அங்கே என்னென்ன மரங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் புஷ்பங்களுடனும், பழங்களுடனும், குடைகளுடனும், பெரும் படிக்கட்டுகளுடனும், சௌவர்ண வேதிகைகளுடனும் {தங்க மேடைகளுடனும்} கூடியவையாக இருந்தன.(35ஆ,36அ) காஞ்சன வண்ணத்துடன் கூடியதும், ஏராளமான லதைகளால் சூழப்பெற்றதும், ஏராளமான இலைகளுடன் கூடியதும், எங்கும் காஞ்சன வேதிகைகளால் {பொற்பீடங்களால்} சூழப்பெற்றதுமான ஒரு சிம்சுபத்தை[3] ஹரியூதபன் அங்கே கண்டான் {ஒரு சிம்சுபா மரத்தை, குரங்குக் குழுத் தலைவனான ஹனுமான் கண்டான்}.(36ஆ,37)
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “சிம்சபம் என்பது Indian Rosewood {இந்திய கருங்காலி} வகையாகும். உண்மையில் இது {சிம்சுபம் என்றில்லாமல்} சிம்சபம் என்ற எழுத்துக்கோர்வையிலேயே அமைய வேண்டும். அசோக மரத்தைக் குறிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை அதுவே இங்கே பொருளாக இருக்கவுங்கூடும்” என்றிருக்கிறது. இதற்கு கரிமரம் என்றும் கன்னடத்தில் பெயருண்டு என்று ஒரு வலைத்தளத்தில் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. https://agriculturereview.com/hi/how-can-i-propagate-a-simsupa-tree-answered-by-agriculture-review கே.எம்.கே.மூர்த்தி பதிப்பில், சுந்தரகாண்டம் 58ம் சர்க்கம் 54ம் சுலோகத்தின் அடிக்குறிப்பில், "Botanical name: Delbergia sissoo" என்று குறிப்பிடப்படுகிறது. இதன் தமிழ்ப்பெயர், "நூக்கம்" ஆகும்.
பிரஸ்ரவணங்களுடன் {மலையருவிகளுடன்} கூடிய பூமி பாகத்தில், ஒளியில் நெருப்புக்கு நிகரான சுவர்ண விருக்ஷங்கள் சிலவற்றை அவன் கண்டான்.(38) அப்போது அந்த வீர வானரன் {ஹனுமான்}, “மேருவின் பிரபையால் {பொன்வண்ணமடையும்} திவாகரனை {சூரியனைப்} போல, இந்த மரங்களின் பிரபையால் நான் காஞ்சன வண்ணமடைகிறேன்” என்று நினைத்தான்.(39) மாருதத்தால் வீசப்பட்டு, நூற்றுக்கணக்கான கிங்கிணி மணியொலிகளை வெளியிடுபவையும், காஞ்சன வண்ணம் கொண்டவையுமான அந்த மரக்கூட்டங்களுடன் அதை {அந்த சிம்சுபா மரத்தைக்} கண்டான்.(40) மஹாபாஹுவான அவன், புஷ்பித்த நுனிகளைக் கொண்டதும், எழில் மிகுந்ததும், இளந்தளிர்களுடனும், மொட்டுக்களுடனும் கூடியதும், இலைகளால் மறைக்கப்பட்டதுமான அதில் வேகமாக ஏறினான்.(41)
“இராமரைக் காணும் ஏக்கத்தில், துக்கத்துடன், அங்கும் இங்கும் திரிபவளான வைதேஹியை இங்கிருந்து எதேச்சையாகப் பார்க்கலாம்.(42) சம்பகங்களாலும், சந்தனங்களாலும், வகுளங்களாலும் {செண்பக, சந்தன, மகிழ மரங்களாலும்} அலங்கரிக்கப்பட்டதும், துராத்மாவிற்குரியதுமான {ராவணனுக்குரியதுமான} இந்த அசோக வனிகை நிச்சயம் ரம்மியமாகத் திகழ்கிறது.(43) பறவைக்கூட்டங்களால் சேவிக்கப்படும் இந்த நளினியும் {தாமரைக்குளமும்} ரம்மியமாக இருக்கிறது. இராமமஹிஷியான அந்த ஜானகி, நிச்சயம் இங்கே வருவாள்.(44) இராமமஹிஷியும், ராகவரின் பிரியையும், சதீயும் {கற்பிற்சிறந்தவளும்}, ராமையும் {ஈர்ப்பவளும்}, வன சஞ்சாரத்தை {வனத்தில் திரிவதை} நன்கு அறிந்தவளுமான அந்த ஜானகி நிச்சயம் {இங்கே} வருவாள்.(45) அல்லது, இந்த வனத்தை அறிந்த மான்விழியாளான அந்த ஆரியை, ராமனின் சிந்தனையால் மெலிந்தவளாக இந்த வனத்திற்கு வரக்கூடும்.(46) எழில் விழிகளுடன் ராமசோகத்தில் எரிபவளும், நித்திய வனசாரிணியுமான அந்த தேவி, வனவாசத்தை விரும்பி {இங்கே} வரக்கூடும்.(47) ஜனகனின் மகளும், ராமரின் அன்புக்குரிய பாரியையுமான அந்த சதீ {கற்பிற்சிறந்த சீதை}, உண்மையில் வனசரணர்களிடம் {வனத்தில் வசிப்பவர்களிடம் / விலங்குகளிடம்} அன்பு கொண்டவளாவாள்.(48) சியாமையும், வரவர்ணினியும் {இளமை நிறைந்தவளும், சிறந்த நிறம் கொண்டவளும்}, சந்தியாகாலச் சடங்குகளில் விருப்பமுள்ளவளுமான ஜானகி, சந்தியா வேளையில் செய்யும் சடங்கின் பொருட்டு, சுபஜலம் கொண்ட இந்த நதிக்கு நிச்சயம் வருவாள்.(49) பார்த்திபேந்திரரான ராமரின் அன்புக்குரிய சுப பத்தினியானவளுக்கு, சுபமான இந்த அசோக வனிகை ஏற்றதாக இருக்கிறது.(50) தாராதிபனைப் போன்ற முகத்தைக் கொண்ட அந்த தேவி ஜீவித்திருந்தால், சிவ ஜலம் {மங்கல நீர்} கொண்ட இந்த நதிக்கு அவசியம் வருவாள்” {என்று நினைத்தான் ஹனுமான்}.(51)
மஹாத்மாவான ஹனுமான் இவ்வாறு நினைத்தபடியே, மனுஜேந்திரனின் பத்தினிக்காகக் காத்திருந்து, பசுமையாக அடர்ந்திருக்கும் இலைகளுக்குள் மறைந்திருந்து, எங்கும் பார்வையைச் செலுத்தி, யாவற்றையும் பார்த்தான்.(52)
சுந்தர காண்டம் சர்க்கம் – 14ல் உள்ள சுலோகங்கள்: 52
Previous | | Sanskrit | | English | | Next |