Soliloquy | Sundara-Kanda-Sarga-13 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விரக்தியில் தனக்குத் தானே பேசிக் கொண்ட ஹனுமான்; தேடுதலைத் தொடர அசோகவனத்தை நோக்கிச் சென்றது...
ஹரியூதபனான {குரங்குக் குழுத் தலைவனான} ஹனுமான், விமானத்தில் இருந்து பிராகாரத்தில் {மதிலில்} குதித்து, மேகத்தின் மத்தியிலுள்ள மின்னலைப் போன்ற வேகத்தை அடைந்தான்.(1)
கபியான {குரங்கான} ஹனுமான், ராவணனின் நிவேசனத்திலிருந்து தொலைவாகச் சென்றும், ஜானகியான சீதையைக் காணாமல் {இந்த} வசனத்தைச் சொன்னான்:(2) “இராமரின் பிரியத்தைச் செய்யும் முயற்சியில் லங்கையெங்கும் தேடப்பட்டது. சர்வாங்க சோபனையும், வைதேஹியுமான சீதையை என்னால் காண முடியவில்லை.(3) பல்வலங்கள் {குட்டைகள்}, தடாகங்கள், ஸரஸ்கள் {ஓடைகள்}, ஸரிதங்கள் {சிற்றாறுகள்}, நதிகள் {பேராறுகள்}, நீர் நிறைந்த உபவனங்கள் {கழிக்கரைச் சோலைகள்}, தரணீதரங்கள் {மலைகள்}, துர்கங்கள் {கடப்பதற்கரிய பகுதிகள்} உள்ளிட்ட சர்வ வசுதையிலும் {பூமியிலும்} அலைந்து திரிந்தாலும், ஜானகியை என்னால் பார்க்க முடியவில்லை.(4,5அ) சீதை, ராவணனின் நிவேசனத்தில் இருப்பதாக கிருத்ரராஜர் சம்பாதி சொல்லியிருந்தாலும், என்னால் இங்கே அவளைப் பார்க்க முடியவில்லை.(5ஆ,6அ) ஒருவேளை, வைதேஹியும் {விதேஹ நாட்டு இளவரசியும்}, மைதிலியும் {மிதிலையில் பிறந்தவளும்}, ஜனகாத்மஜையுமான {ஜனகரின் மகளுமான} சீதை, வசமற்ற {ஆதரவற்ற} நிலையில் துஷ்டசாரியான {தீய நடத்தை கொண்டவனான} ராவணனின் அடிபணிந்திருப்பாளா?(6ஆ,7அ)
இராமபாணங்களின் மீது கொண்ட பயத்தால் அந்த ராக்ஷசன் {ராவணன்}, சீதையை எடுத்துக் கொண்டு சீக்கிரமாக ஓடும்போது, வழியில் எங்கேனும் அவள் விழுந்திருப்பாள் என்று நினைக்கிறேன்.(7ஆ,8அ) அல்லது, சித்தர்களால் சேவிக்கப்படும் பாதையில் அபகரித்துச் செல்லப்பட்ட ஆரியையின் {சீதையின்} ஹிருதயம், சாகரத்தைக் கண்டதும் நொறுங்கி விழுந்திருக்கும் {நின்றிருக்கும்} என்று நினைக்கிறேன்.(8ஆ,9அ) ராவணனுடைய தொடைகளின் வேகத்தினாலும், புஜங்களாலும் பீடிக்கப்பட்ட விசாலாக்ஷியான {நீள்விழியாளான} அந்த ஆரியை {உன்னத சீதை} தன் ஜீவிதத்தைக் கைவிட்டிருப்பாள் என்று நினைக்கிறேன்.(9ஆ,10அ) சாகரப்பரப்பின் மேல் சென்று கொண்டிருக்கும்போது, துடித்துக் கொண்டிருந்த ஜனகாத்மஜை, நிச்சயம் சாகரத்திற்குள் விழுந்திருப்பாள்.(10ஆ,11அ) அஹோ, தபஸ்வினியான சீதை, பந்துக்களற்ற நிலையில், தன் சீலத்தை ரக்ஷித்துக் கொள்ளும்போது, இழிந்தவனான இந்த ராவணனால் பக்ஷிக்கப்பட்டிருப்பாளோ?(11ஆ,12அ) அல்லது, துஷ்டையாக இல்லாதவளும், கரிய கண்களைக் கொண்டவளுமான அவள் {சீதை}, துஷ்டபாவம் கொண்ட ராக்ஷசேந்திரனின் பத்தினிகளால் பக்ஷிக்கப்பட்டிருப்பாளோ?(12ஆ,13அ) {எப்படியிருப்பினும்}, சம்பூர்ணச் சந்திரனுக்கு ஒப்பானவளும், பத்ம இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளுமான அந்தக் கிருபைக்குரியவள், ராமரின் முகத்தை தியானித்துக் கொண்டிருக்கும்போதே பஞ்சத்வத்தை அடைந்திருப்பாள் {இறந்திருப்பாள்}.(13ஆ,14அ)
வைதேஹியும், மைதிலியுமான அவள் {சீதை}, “ஹா ராமரே, ஹா லக்ஷ்மணரே, ஹா அயோத்தியே” என்று பெரிதும் அழுது கொண்டே தன் தேஹத்தைக் கைவிட்டிருப்பாள்.(14ஆ,15அ) அல்லது, ராவணனின் நிவேசனத்தில் அடைக்கப்பட்ட சீதை, கூண்டிலடைக்கப்பட்ட சாரிகத்தை {மைனாவைப்} போல நிச்சயம் அழுது கொண்டிருப்பாள்.(15ஆ,16அ) அழகிய இடையைக் கொண்டவளும், உத்பல {குவளை மலர்} இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், ஜனகனின் மகளும், ராமரின் பத்தினியுமான சீதை எவ்வாறு ராவணனின் வசத்தை அடைந்திருக்கக்கூடும்?(16ஆ,17அ) ஜனகாத்மஜை காணாமல் போனாலும், புலப்படாமல் போனாலும், மரித்திருந்தாலும் ராமரிடம், அவரது பிரிய பாரியையைக் குறித்துத் தெரிவிப்பது நல்லதல்ல.(17ஆ,18அ) தெரிவித்தாலும் தோஷமாகும், தெரிவிக்காவிட்டாலும் தோஷமாகும் எனும்போது எப்படி கர்த்தவ்யத்தை {கடமையைச்} செய்வேன்? எனக்கு {இரண்டும்} விஷமமாகவே தோன்றுகிறது.(18ஆ,19அ) இந்தக் காரியம் இந்த கதியில் செல்கையில் வாய்க்கும் பிராப்த காலத்தில் எது நல்லது?” என்ற மதத்துடன் {கருத்துடன் பின்வருமாறு} ஹனுமான் நினைத்துப் பார்த்தான்:(19ஆ,20அ)
“சீதையைக் காணாமல் இங்கிருந்து வானரேந்திரபுரிக்கு {கிஷ்கிந்தைக்கு} நான் சென்றால், அதிலிருந்து என்ன புருஷார்த்தம் உண்டாகும்? {அதனால் விளையப்போகும் நன்மை என்ன?}(20ஆ,21அ) நான் இவ்வாறு சாகரத்தைக் கடந்தது, லங்கைக்குள் பிரவேசித்தது, ராக்ஷசர்களை தரிசித்தது ஆகியவை {எல்லாம்} வீணாகப் போகும்.(21ஆ,22அ) நான் கிஷ்கிந்தையை அடைந்தால் சுக்ரீவரும், அங்கிருக்கும் வானரர்களும், அந்த தசரதாத்மஜர்களும் {தசரதரின் மகன்களான ராமலக்ஷ்மணர்களும்} என்ன சொல்வார்கள்?(22ஆ,23அ) நான் காகுத்ஸ்தரிடம் {ராமரிடம்} சென்று, “சீதை காணப்படவில்லை” என்று பரம பிரியமற்ற வகையில் சொன்னால், அவர் ஜீவிதத்தையே கைவிட்டுவிடுவார்.(23ஆ,24அ) கடுமையானதும், கொடியதும், கூர்மையானதும், இந்திரியங்களை தஹிக்கச் செய்வதுமான சீதை நிமித்தமான துர்வாக்கியத்தைக் கேட்டால், அவர் {உயிருடன்} இருக்க மாட்டார்.(24ஆ,25அ) பேரன்புடன் கூடியவரும், மேதாவியுமான லக்ஷ்மணர், துன்பநிலையை அடைந்தவரும், பஞ்சத்வத்தை {மரணம்} அடையும் மனத்துடன் கூடியவருமான அவரை {ராமரைக்} கண்டு {உயிருடன்} இருக்க மாட்டார்.(25ஆ,26அ) உடன்பிறந்தோர் நாசமடைந்ததைக் கேட்டு பரதரும் மரிப்பார்; பரதர் மரித்ததைக் கண்டு, சத்ருக்னரும் {உயிருடன்} இருக்க மாட்டார்.(26ஆ,27அ) புத்திரர்கள் மரிப்பதைக் காணும்போது, மாதாக்களான கௌசல்யையும், சுமித்ரையும், கைகேயியும் {உயிருடன்} இருக்க மாட்டார்கள். இதில் சந்தேகமில்லை.(27ஆ,28அ)
கிருதஜ்ஞரும் {நன்றி மறவாதவரும்}, சத்தியசந்தரும், பிலவகாதிபருமான {தாவிச் செல்பவர்களின் தலைவரான} சுக்ரீவர், ராமர் இவ்வாறு சென்றதைக் கண்டபிறகு, தன் ஜீவிதத்தைக் கைவிடுவார்.(28ஆ,29அ) தபஸ்வினியான ருமை, பர்த்தா {கணவர்} குறித்த சோகத்தால் பீடிக்கப்பட்ட துர்மனத்தால், வியாதியடைந்து, தீனமடைந்து, ஆனந்தமிழந்து ஜீவிதத்தைக் கைவிடுவாள்.(29ஆ,30அ) வாலி நிமித்தம் ஜனித்த துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், சோகத்தால் மெலிந்தவளுமான தாரையும், ராஜர் {சுக்ரீவர்} பஞ்சத்வத்தை அடையும்போது {உயிருடன்} இருக்க மாட்டாள்.(30ஆ,31அ) மாதா {தாரை}, பிதா {வாலி}, சுக்ரீவர் ஆகியோர் குறித்த விசனத்தால் குமாரன் அங்கதனும் நாசமடைவானேயன்றி ஏன் ஜீவிதம் தரிக்கப் போகிறான்?(31ஆ,32அ) தலைவன் குறித்த துக்கத்தால் பீடிக்கப்படும் வனௌகசர்கள் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்கள்} உள்ளங்கைகளாலும், முஷ்டிகளாலும் தங்கள் சிரசுகளில் அடித்துக் கொள்வார்கள்.(32ஆ,33அ) புகழ்பெற்றவரான கபிராஜரால் {குரங்குகளின் மன்னரான சுக்ரீவரால்} நற்சொற்களின் மூலமும், சிறு தானங்களின் மூலமும், மதிப்பின் மூலமும் லாலிதம் செய்யப்பட்ட {அன்புபாராட்டப்பட்ட} வானரர்கள், தங்கள் பிராணன்களைக் கைவிடுவார்கள்.(33ஆ,34அ)
கபிகுஞ்சரர்கள் {குரங்குகளில் யானைகள்}, ஒன்றுசேர்ந்தவர்களாக வனங்களிலும், சைலங்களிலும், மறைவான தேசங்களிலும் விளையாடமாட்டார்கள்.(34ஆ,35அ) தலைவன் குறித்த விசனத்தால் பீடிக்கப்பட்டவர்கள், புத்திர்களுடனும், தாரங்களுடனும், அமாத்யர்களுடனும் {அமைச்சர்களுடனும்} சமமான, சமமற்ற இடங்களில் இருந்து ஒன்றுகூடி, சைலங்களின் உச்சிகளில் இருந்து விழுவார்கள்.(35ஆ,36அ) அல்லது விஷம், உத்பந்தனம் {சுருக்கிட்டுக் கொள்ளல்}, அல்லது ஜுவலனப்ரவேசம் {நெருப்பில் நுழைதல்}, உபவாசம் {பட்டினி கிடத்தல்}, அல்லது சஸ்திரங்கள் {ஆயுதங்கள்} ஆகியவற்றால் அதை நிறைவேற்றிக் கொள்வார்கள் {உயிர்த்துறப்பார்கள்}.(36ஆ,37அ) நான் திரும்பிச் சென்றால், இக்ஷ்வாகு குலம் நாசமடையும், வனௌகசர்கள் நாசமடைவார்கள்; அங்கே கோரமான ஆரோதனம் {பயங்கர ஓலம்} உண்டாகும் என்று நினைக்கிறேன்.(37ஆ,38அ) மைதிலி இல்லாமல் நான் சுக்ரீவரை தரிசிப்பதற்கான சாத்தியமில்லை என்பதால் நான் இங்கிருந்து கிஷ்கிந்தா நகருக்குப் போகமாட்டேன்.(38ஆ,39அ) நான் இங்கிருந்து செல்லாமல் இருந்தால், தர்மாத்மாக்களும், மஹாரதர்களுமான இருவரும் {ராமலக்ஷ்மணர்களும்} நம்பிக்கையுடன் இருப்பார்கள்; வானரர்களும் தைரியமாக இருப்பார்கள்.(39ஆ,40அ)
கையில் கிடைப்பனவற்றையும், வாய்க்கு வாய்ப்பனவற்றையும் நியதமாகக் கொண்டு {கட்டுப்பாட்டுடன் உண்டு} விருக்ஷங்களின் மூலத்தில் {மரங்களின் அடியில் இருப்பேன்};{40ஆ} ஜனகாத்மஜையைக் காணாத வானப்ரஸ்தனாக, ஏராளமான நீருடனும், பழங்களுடனும், கிழங்குகளுடனும் சாகரத்தின் அருகில் அமைந்துள்ள தேசத்தில் {இந்த இடத்தில்} இருப்பேன்.(40ஆ,41) சிதையை உண்டாக்கி, ஒளிரும் அரணீஸுதனில் {அரணிக்கட்டைகளில் பிறந்த நெருப்பில்} பிரவேசிப்பேன். அல்லது லிங்கின சாதனை செய்து {சாகும் வரை பட்டினி கிடந்து} சரீரத்தைக் காக்கைகளுக்கும், இரைதேடும் விலங்குகளுக்கும் உண்ணக் கொடுப்பேன்.(42,43அ) இதுவே மஹரிஷிகள் கண்ட நிர்யாணம் {உடலைவிட்டு வெளியேறும் முறை} என்று நான் கருதுகிறேன். நான் ஜானகியைப் பார்க்கவில்லையெனில் ஒழுங்குடன் நீரில் பிரவேசிப்பேன்.(43ஆ,44அ) சீதையைப் பார்க்கவில்லையெனில், நீண்டகாலமாக உறுதியான அடித்தளத்துடனும், அழகுடனும், புகழுடனும் விளங்கும் என் கீர்த்திமாலைக்கு பங்கமேற்படும்.(44ஆ,45அ) அந்தக் கருவிழியாளின் தரிசனம் கிட்டவில்லையெனில், இங்கிருந்து போகாமல், விருக்ஷங்களின் மூலத்தை {மரத்தடியை} நாடும் நியதமுடன் {கட்டுப்பாட்டுடன்} கூடிய தபஸ்வியாக ஆவேன்.(45ஆ,46அ) அந்த சீதையைக் குறித்து அறியாமல், இங்கிருந்து நான் திரும்பிச் சென்றால், சர்வவானர்களுடன் கூடியவனான அங்கதன் {உயிருடன்} இருக்க மாட்டான்.(46ஆ,47அ) நாசத்தில் பல தோஷங்கள் இருக்கின்றன. ஜீவனுடன் இருப்பவனே நன்மைகளைப் பார்க்கிறான். எனவே, நான் பிராணன்களைத் தரித்திருப்பேன். ஜீவித்திருப்பவர்கள் நிச்சயம் சுகமடைவார்கள்” {என்று நினைத்தான் ஹனுமான்}.(47ஆ,48அ)
இவ்வாறு பலவிதமான துக்கங்களை மீண்டும் மீண்டும் மனத்தில் தரித்து, சோகத்தின் மறுகரையை எட்ட முடியாத அந்தக் கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்}, (48ஆ,49அ) “அல்லது, மஹாபலத்தைப் பயன்படுத்தி, தசக்ரீவனான ராவணனைக் கொல்வேன். அபகரித்துச் செல்லப்பட்ட சீதைக்கு என்ன நேர்ந்திருந்தாலும், அதற்குப் பழிதீர்த்ததாக இஃது இருக்கும்[1].(49ஆ,50அ) அல்லது அவனை சாகரத்தின் மேல் கொண்டு சென்று, பசுபதியிடம் பசுவைப் போல {விலங்குகளின் தலைவனிடம் ஒப்படைக்கப்படும் விலங்கைப் போல} ராமரிடம் ஒப்படைக்கப் போகிறேன்.” {என்று நினைத்தான் ஹனுமான்}.(50ஆ,51அ)
[1] வடித்து ஆய்பூங் குழலாளை வான் அறியமண் அறியப்பிடித்தான் இவ்வடலரக்கன் எனும்மாற்றம் பிழையாதால்எடுத்து ஆழி இலங்கையினை இருங்கடலிட்டு இன்று இவனைமுடித்தாலே யான் முடிதல் முறைமன்ற என்றுணர்வான்.- கம்பராமாயணம் 5067ம் பாடல், ஊர் தேடு படலம்பொருள்: சீவிப் பூ அணிந்த கூந்தலுடையவளை {சீதையை}, இந்த வலிமைமிக்க அரக்கன் {ராவணன்}, வான் அறியவும், மண் அறியவும் கொண்டு வந்தான் என்று பேசப்படும் மொழி தவறாது, கடல் நடுவிலுள்ள இலங்கையைப் பெயர்த்தெடுத்து, பெருங்கடலினுள் இட்டு இவனை அழித்தால்தான் நான் அழிவதற்கான உறுதியான நியாயம் பிறக்கும் என்று நினைத்தான் {ஹனுமான்}.
சீதையைக் காணாத அந்த வானரன் {ஹனுமான்}, இவ்வாறு கவலையை அடைந்து, சோகத்தில் பரிதவித்த ஆத்மாவுடன் {பின்வருமாறு} தியானித்தான்,(51ஆ,52அ) “எங்கே ராமபத்தினியும், புகழ்பெற்றவளுமான சீதையைப் பார்ப்பேனோ, அதுவரை இந்த லங்காபுரியில் மீண்டும் மீண்டும் நான் தேடுவேன்.(52ஆ,53அ) சம்பாதியின் வசனத்தால் ராமரை நான் அழைத்துவந்தால், தன் பாரியையை {மனைவியைக்} காணாத ராகவர், சர்வ வானரர்களையும் எரித்துவிடுவார்.(53ஆ,54அ) நியதமான {கட்டுப்பாடான} ஆஹாரத்துடனும், இந்திரியங்களுடனும் நான் இங்கேயே வசித்திருப்பேன். என் செயலால் அந்த நரர்களும், வானரர்களும் நாசமடையாமல் இருக்கட்டும்.(54ஆ,55அ) பெரும் மரங்களுடன் கூடிய இந்த அசோக வனத்தில் எவை தெரிகின்றனவோ, அவற்றை அடைவேன். இஃது {இன்னும்} என்னால் தேடப்படவில்லை.(55ஆ,56அ) {எட்டு} வசுக்களையும், {பதினோரு} ருத்திரர்களையும், அதேபோல {பனிரெண்டு} ஆதித்யர்களையும், அசுவினிகள் இருவரையும், {ஏழு} மருத்துகளையும் நமஸ்கரித்து, ராக்ஷசர்களின் சோகத்தை அதிகரிக்கப் போகிறேன்.(56ஆ,57அ) சர்வராக்ஷசர்களையும் வென்று, தபஸ்வியிடம் சித்தியை {தபஸ்வியிடம் கொடுக்கப்படும் தபத்தின் பலனைப்} போல, இக்ஷ்வாகு குலநந்தினியை {இக்ஷ்வாகு குலத்தின் ஆனந்தத்தை அதிகரிப்பவளான சீதையை} ராமரிடம் கொடுப்பேன்” {என்று தீர்மானித்தான் ஹனுமான்}.(57ஆ,58அ)
மஹாதேஜஸ்வியும், மாருதாத்மஜனுமான அந்த ஹனுமான், ஒரு முஹூர்த்தம் போல சிந்தனையில் கட்டுண்ட புலன்களுடன் {இவ்வாறு} தியானித்துவிட்டு, எழுந்து,(58ஆ,59அ) “இலக்ஷ்மணருடன் கூடிய ராமரை வணங்குகிறேன்; தேவியான அந்த ஜனகாத்மஜையையும் {சீதையையும்} வணங்குகிறேன்; ருத்திரன், இந்திரன், யமன், அனிலன் {வாயு}, சந்திரன், அர்க்கன் {சூரியன்} ஆகியோரையும், மருத்கணங்களையும் வணங்குகிறேன்” {என்று சொல்லி வணங்கினான்}.(59ஆ,இ,ஈ,உ) அந்த மாருதி, அவர்கள் அனைவரையும், சுக்ரீவனையும் நமஸ்கரித்து, சர்வதிசைகளையும் நோக்கிவிட்டு, அசோக வனத்திற்குச் சென்றான்.(60)
மாருதாத்மஜனான அந்த வானரன், முன்பே மனத்தால் அசோக வனத்தை அடைந்து, அடுத்துச் செய்ய வேண்டியது குறித்து {பின்வருமாறு} சுபமாக சிந்திக்கத் தொடங்கினான்,(61) “புண்ணியமானதும், சர்வசம்சாரங்களாலும் சம்ஸ்கிருதமாக {அனைத்து நற்பண்புகளாலும் நன்றாக} அலங்கரிக்கப்பட்டதும், மரங்கள் நிறைந்ததுமான அசோக வனத்தில் நிச்சயம் ராக்ஷசர்கள் பலர் இருப்பார்கள்.(62) அங்கே நிர்ணயிக்கப்பட்ட மரங்களைக் காவலர்கள் நிச்சயம் ரக்ஷித்துக் கொண்டிருப்பார்கள். சர்வாத்மாவான பகவானும் {வாயுவும்} வலுவின்றி வீசிக் கொண்டிருப்பார்.{63} என்னால் இந்த ஆத்மா {உடல்}, ராமரின் நிமித்தம், ராவணனுக்காக {ராவணனைத் தவிர்ப்பதற்காகச்} சுருக்கப்பட்டிருக்கிறது.(63,64அ) இரிஷிகணங்களுடன் கூடிய தேவர்கள், இங்கே எனக்கு சித்தியை {காரிய வெற்றியை} அருளட்டும். ஸ்வயம்பூவான பகவான் பிரம்மனும், தேவர்களும், அக்னியும், வாயுவும், வஜ்ரதாரியான புருஹூதனும் {இந்திரனும்}, பாசஹஸ்தனான {கையில் சுருக்குக் கயிற்றுடன் கூடிய} வருணனும், அதேபோல சோமனும், ஆதித்யனும், அஸ்வினிகளும், மஹாத்மாக்களான மருத்களும், சர்வனும் {சிவனும்} எனக்கு சித்தியை {காரிய வெற்றியை} அருளட்டும். சர்வபூதங்களும், பூதங்களின் பிரபுவும், பாதையில் புலப்படாமல் இருக்கும் வேறு எவரும் எனக்கு சித்தியை {காரிய வெற்றியை} அருளட்டும்.(64ஆ-67) உயர்நாசி, வெண்பற்கள், தூய புன்னகை, பத்ம இதழ் கண்கள், தெளிவான தாராதிபனுக்குத் துல்லியமான தரிசனம் {முழு நிலவுக்கு இணையான தோற்றம்} ஆகியவற்றுடன் கூடிய ரணமற்ற {காயங்களற்ற} அந்த ஆரியையின் வதனத்தை எப்போது நான் தரிசிப்பேன்?(68) பயங்கரமாக அலங்காரத்துடன் கூடிய வேஷந்தரித்தவனும், அற்பனும், கொடுஞ்செயல் புரிபவனுமான பாபியால் {ராவணனால்} பலவந்தமாகக் கடத்தப்பட்டவளும், தபஸ்வினியுமான அந்த அபலை {சீதை}, என் பார்வையில் எப்படி அகப்படப்போகிறாள்?” {என்று நினைத்தான் ஹனுமான்}.(69)
சுந்தர காண்டம் சர்க்கம் – 13ல் உள்ள சுலோகங்கள்: 69
Previous | | Sanskrit | | English | | Next |