Lankini | Sundara-Kanda-Sarga-03 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலங்கையின் தேவியான லங்கினியை எதிர்கொண்ட ஹனுமான்; லங்கா நகரியை வீழ்ந்தது...
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு |
மேதாவியும், மாருதாத்மஜனுமான {வாயு மைந்தனுமான} அந்த ஹனுமான், துணிவைத் திரட்டிக் கொண்டு, {லம்ப} உயர்ந்த சிகரங்களுடனும், மேகங்களுக்கு நிகரான உயரத்துடனும் {லம்பத்துடனும்} கூடிய லம்பத்தில் {லம்ப மலையில்} நின்று கொண்டிருந்தான்[1].{1} மஹாசத்வனான {பெரும் வலிமைமிக்க} கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்}, ரம்மியமான கானகங்களாலும், நீர்நிலைகளாலும் நிறைந்ததும், ராவணனால் பாலிதம் செய்யப்பட்டதுமான லங்காம்புரீக்குள் நிசியில் {இரவில்} நுழைந்தான்.(1,2)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "லம்பம் என்ற சொல், நீண்டது என்ற பொருளைக் கொண்டது. இங்கே வார்த்தை விளையாட்டு நடைபெறுகிறது" என்றிருக்கிறது.
சரத்கால மேகங்களுக்கு ஒப்பான பவனங்களால் {மாளிகைகளால்} ஒளிர்வதும், சாகரத்திற்கு ஒப்பான கோஷத்துடன் கூடியதும், சாகரத்தின் அநிலனால் {கடற்காற்றால்} சேவிக்கப்படுவதும், அழகாயிருப்பதும்{3} விடபாவதியை {குபேரனின் தலைநகரான அளகாபுரியைப்} போல வலிமைமிக்க படைகள் மிகுந்ததும், அழகிய வெண்தோரண வாயில்களைக் கொண்டதும், அத்தோரணவாயில்களில் யானைகளைக் கொண்டதும்,(3,4) புஜகங்கள் {பாம்புகள்} சஞ்சரித்துப் பாதுகாக்கும் சுபமான {நாகத்தலைநகரம்} போகவதியைப் போலக் காவல் மிகுந்ததும், முக்கியமானதும், மின்னல்களுடன் கூடிய மேகங்களைப் போல ஜோதி மார்க்கம்வரை {நட்சத்திரங்கள் இருக்கும் வானம் வரை} பரவியுள்ளதும்,{5} இந்திரனின் அமராவதியைப் போல், மந்தமாருதம் வீசப்பெற்றதுமானது {இளந்தென்றல் வீசப்பெற்றதுமான லங்கை}, பொன்வண்ணமான மஹத்தான பிராகாரங்களால் {மதிற்சுவர்களால்} சூழப்பட்டிருந்தது.{6} மகிழ்ச்சியடைந்தவன் {அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஹனுமான்}, கிங்கிணி ஜாலகோஷங்களுடன் கூடிய பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டப் பிராகாரத்தை உடனே அடைந்தான்[2].(5-7)
[2] மகிழ்ச்சியான மனத்துடன் கூடிய ஹனுமான், மணிவரிசைகளின் ஒலியுடன் கூடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட மதிற்சுவற்றின் மீது விரைவாக ஏறினான்.
வியப்படைந்த ஹிருதயத்துடன் சுற்றிலுமுள்ள புரீயைக் கண்டவன் {லங்கா நகரைக் கண்ட ஹனுமான்}, ஜாம்பூநதமயமான துவாரங்களுடனும் {பொன்மயமான வாயில்களுடனும்}, வைடூரியங்களால் இழைக்கப்பட்ட வேதிகைகளுடனும்,{8} மணி {வஜ்ரம் / வைரம்}, ஸ்படிகம், முத்து ஆகியவற்றாலும், மணிகளாலும் {ரத்தினங்களாலும்} அலங்கரிக்கப்பட்ட தரைகளுடனும், புடம்போட்ட பொன்னால் செய்யப்பட்ட யானைகளுடனும், களங்கமற்ற வெண்வெள்ளியாலான கோபுரத்துடனும் கூடியதும்,{9} வைடூரியங்களால் சோபிக்கும் படிகளையும், மாசற்ற ஸ்படிகங்களால் செய்யப்பட்ட அழகான முற்றங்களையும் கொண்ட வரிசையான சுபமான வீடுகளுடன் கூடியதும்,{10} கிரௌஞ்சம் {அன்றில்}, மயில் ஆகியவற்றின் ஒலிகளால் நிறைந்ததும், சுபமான ராஜஹம்சங்களால் {அன்னப்பறவைகளால்} சேவிக்கப்படுவதும், எங்கும் தூரியங்கள் {இசைக்கருவிகள்}, ஆபரணங்களின் ஒலிகளால் ஒலிக்கப்பெறுவதும்,{11} வஸ்வௌகசாரத்திற்கு ஒப்பானதுமான அந்த {இந்திரனின் தலைநகருக்கு ஒப்பான லங்கா} நகரைக் கண்டான். வானத்தை நோக்கி எழுவதைப் போன்றிருந்த அந்த லங்கையைக் கண்டு, கபியான ஹனுமான் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(8-12)
அந்த வீரியவான் {ஹனுமான்}, ராக்ஷசாதிபதியின் அந்த உத்தம புரியானது, செழிப்பாகவும், சுபமாகவும், ரம்மியமாகவும் இருப்பதைக் கண்டு {பின்வருமாறு} சிந்தித்தான்:(13) “உயர்த்தப்பட்ட ஆயுதங்கள் தரித்த ராவண பலத்தால் {ராவணனின் படைகளால்} ரக்ஷிக்கப்படும் இந்த நகரை {லங்காபுரியை}, பலத்தால் வேறு எவரும் எதிர்கொள்வது சாத்தியமில்லை.(14) குமுதன், அங்கதன், மஹாகபியான சுஷேணன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் இந்த பூமி அடையத்தக்கது.(15) விவஸ்வத தனூஜர் {சூரியனின் தனயனான சுக்ரீவர்}, குசபர்வன் என்ற ஹரயன் {குரங்கு}, கபிமுக்கியனான {குரங்குகளில் முக்கியனான} கேதுமாலன், ரிக்ஷன் {கரடியான ஜாம்பவான்} ஆகியோராலும், என்னாலும் இதை அடைய முடியும்” {என்று நினைத்தான்}.(16)
அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, மஹாபாஹுவான ராகவனின் பராக்கிரமத்தையும், லக்ஷ்மணனின் விக்கிராந்தத்தையும் கருத்தில் கொண்டு பிரீதிமான் ஆனான்.(17) இரத்தினங்களையே மேல் வஸ்திரமாகவும், சேமிப்புக் கிடங்குகளையே காதணிகளாகவும் பூண்டு, யந்திரசாலைகளையே ஸ்தனங்களாகப் பெற்று, செழிப்பால் அலங்கரிக்கப்பட்ட பிரமதையை {ஒரு பெண்ணைப்} போல,{18} ஒளிமிகுந்து பிரகாசிக்கும் மஹாகிருஹங்களால் {பெரும் வீடுகளால்} இருள் தொலைந்து போன அந்த ராக்ஷசேந்திரனின் நகரத்தை அந்த மஹாகபி {ஹனுமான்} கண்டான்.(18,19)
அப்போது, சொந்த ரூபத்துடன் கூடிய அந்த நகரிகை {லங்கா நகரமானவள்}, ஹரிசார்தூலனும் {குரங்குகளில் புலியும்}, மஹாபலம் பொருந்தியவனுமான பவனாத்மஜன் {வாயுவின் மகன் ஹனுமான்} பிரவேசிப்பதைக் கண்டாள்.(20) இராவணனால் பாலிதம் செய்யப்படுபவளான அந்த லங்கை, அந்த ஹரிவரனை {குரங்குகளில் சிறந்த ஹனுமானைக்} கண்டு, விகார முகத்துடனும், கண்களுடனும், தானாக உதித்தெழுந்தாள்[3].(21) கபிவரனான வாயுமைந்தனின் முன்பு நின்று, மஹாநாதத்தை வெளியிட்டபடியே, அந்த பவனாத்மஜனிடம் {வாயு மைந்தன் ஹனுமானிடம், பின்வருமாறு} பேசினாள்:(22) “வனாலயா {வனத்தில் வாழ்பவனே}, நீ யார்? என்ன காரியத்தோடு இங்கே வந்தாய்? உன் பிராணன்களைத் தரித்திருக்கும் வரை, இங்கே தத்துவம் {உண்மை} எதுவோ அதைச் சொல்வாயாக.(23) வானரா, அனைத்துப் பக்கங்களிலும் காவல்காக்கப்படுவதும், ராவணபலத்தால் {ராவணனின் படைகளால்} ரக்ஷிக்கப்படுவதுமான இந்த லங்கைக்குள் பிரவேசிப்பது நிச்சயம் உனக்கு சாத்தியம் இல்லை” {என்றாள்}.(24)
[3] எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல்மூதூர்நல்லாள் அவ்வூர் வைகுறை ஒக்கும் நயனத்தாள்நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையாமுன்வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான்- கம்பராமாயணம், 4915ம் பாடல், ஊர் தேடு படலம்பொருள்: எல்லாவற்றுக்கும் பயத்தை உண்டாக்கும் கடலால் சூழப்பட்ட பழைய ஊரான லங்கைக்கு வலிமையை உண்டாக்கி நன்மை செய்பவளும், அந்த ஊரிலேயே நிலைத்திருக்கும் உறை போன்ற கண்களைக் கொண்டவளுமானவள் {லங்கினி}, “நில்லாய், நில்லாய்” என்று முழங்கி, நினைப்பதற்கு முன்னே வேகமாகச் சென்றாள். அதை மாருதி {ஹனுமான்} கண்டான். “வருக” என்றான்.
அப்போது வீர ஹனுமான், தன் எதிரில் நின்று கொண்டிருந்தவளிடம் {அந்த லங்கினியிடம் பின்வருமாறு} பேசினான், “நீ என்னிடம் எதைக் கேட்கிறாயோ அதன் தத்துவத்தை {அதை உள்ளபடியே} நான் உனக்குச் சொல்கிறேன்.(25) புரதுவாரத்தில் நின்று கொண்டிருக்கும் விரூபநயனையே {நகரத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் விகாரக் கண்களையுடையவளே}, நீ யார்? பயங்கரமானவளே, என்ன அர்த்தத்திற்காக என்னைத் தடுத்துப் பயமுறுத்துகிறாய்?” {என்று கேட்டான்}.(26)
காமரூபிணியான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளான} அந்த லங்கை, ஹனுமதனின் வசனத்தைக் கேட்டுக் குரோதமடைந்து, பவனாத்மஜனிடம் கடுமையான சொற்களில் {பின்வருமாறு} பேசினாள்:(27) “மஹாத்மாவான ராக்ஷசராஜா ராவணனின் ஆணையை ஏற்பவளும், வெல்லப்பட முடியாதவளுமான நானே இந்த நகரை ரக்ஷித்துவருகிறேன்.(28) என்னை அவமதித்து, நகருக்கு பிரவேசிப்பது உனக்கு சாத்தியமில்லை. இப்போது என்னால் கொல்லப்பட்டு, பிராணன்களைவிட்டு, பெருந்துயில் கொள்ளப் போகிறாய்.(29) பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, நானே அனைத்துப் பக்கங்களிலும் லங்கா நகரைப் பாதுகாக்கிறேன். இதை நான் உன்னிடம் {ஏற்கனவே} சொல்லியிருக்கிறேன்” {என்றாள்}.(30)
ஹரிசிரேஷ்டனான மாருதாத்மஜன் {குரங்குகளில் சிறந்தவனும், வாயுமைந்தனுமான ஹனுமான்}, லங்கையின் வசனத்தைக் கேட்டு, யத்னவானாக {முயற்சியுடையவனாக}, இரண்டாம் சைலத்தை {மலையைப்} போல {அசையாமல்} நின்றான்.(31) பிறகு, மேதாவியும், சத்வானும் {வலிமைமிக்கவனும்}, பிலவகரிஷபனும் {தாவிச் செல்பவர்களில் காளையும்}, வானரபுங்கவனுமானவன் {வானரர்களில் மேன்மையானவனுமான ஹனுமான்}, விகாரமான ஸ்திரீரூபத்தில் இருப்பவளைக் கண்டு {பின்வருமாறு} பேசினான்:(32) “ஸாட்டங்கள், பிராகாரங்கள், தோரணங்கள் {கோட்டைகள், மதிற்சுவர்கள், நுழைவாயில்கள்} ஆகியவற்றுடன் கூடிய லங்கா நகரத்தை தரிசிக்க விரும்புகிறேன். நான், இந்த அர்த்தத்திற்காகவே பரம கௌதூஹலத்துடன் {பேராவலுடன்} இங்கே வந்திருக்கிறேன்.(33) வனங்கள், உபவனங்கள், கானகங்கள், சுற்றிலுமுள்ள முக்கிய கிருஹங்கள் ஆகியவற்றுடன் கூடிய லங்கையை தரிசிக்கவே இங்கே நான் வந்திருக்கிறேன்” {என்றான் ஹனுமான்}.(34)
காமரூபிணியான லங்கை, அவனது அந்த வசனத்தைக் கேட்டு, முன்பைவிட வலிய கடுஞ்சொற்களுடன் மீண்டும் {பின்வருமாறு} பேசினாள்:(35) “துர்ப்புத்தியுடன் கூடிய வானராதமா {வானரர்களில் இழிந்தவனே}, என்னை வெல்லாமல், ராக்ஷசேஷ்வரனால் பாலிக்கப்படும் இந்தப் புரியை {லங்கா நகரை} தரிசிப்பது, இப்போது உனக்கு சாத்தியமில்லை” {என்றாள்}.(36)
அப்போது, அந்த கபிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்}, அந்த நிசாசரியிடம் {இரவுலாவியிடம், பின்வருமாறு} பேசினான், “பத்ரையே {மங்கலமானவளே}, இந்தப் புரியைக் கண்டபிறகு, நான் வந்தபடியே திரும்பிச் செல்வேன்” {என்றான்}.(37)
அப்போது அந்த லங்கை, பயத்தை உண்டாக்கும் வகையில் மஹாநாதத்தை எழுப்பியபடியே தன் உள்ளங்கையால் வேகமாக வானரசிரேஷ்டனை {குரங்குகளில் சிறந்த ஹனுமானைத்} தாக்கினாள்.(38) கபிசார்தூலனும் {குரங்குகளில் புலியும்}, வீரியவானும், பவனாத்மஜனுமானவன் {வாயு மைந்தனுமான ஹனுமான்}, லங்கையால் தாக்கப்பட்டதும், பெரும் மஹாநாதத்தை வெளியிட்டான் {கர்ஜித்தான்}.(39) அப்போது, குரோதத்தால் மூர்ச்சித்தவனான {கோபத்தில் தன்னை மறந்த} அந்த ஹனுமான், இடது கையின் விரல்களை மடக்கி, முஷ்டிகளால் அவளைத் தாக்கிவிட்டு,{40} “இவள் ஸ்திரீ {பெண்}” என்று மனத்தில் நினைத்து, அதிகுரோதத்தில் தானாக ஏதும் செய்யாதிருந்தான்.(40,41அ) விகார அங்கங்களுடனும், விகார முகத்துடனும் கூடிய அந்த நிசாசரி {இரவுலாவி}, இவ்வாறு தாக்கப்பட்ட உடனேயே பூமியில் விழுந்தாள்.(41ஆ,42அ)
அப்போது, பிராஜ்ஞனும் {உள்ளதை உள்ளபடியே அறிபவனும்}, தேஜஸ்வியுமான ஹனுமான், அவள் விழுவதைக் கண்டு, ஸ்திரீயென மனத்தில் நினைத்து அவளிடம் கிருபை கொண்டான்.(42ஆ,43அ) பிறகு, பெரிதும் கலக்கமடைந்த அந்த லங்கை, தழுதழுத்த அக்ஷரங்களுடன் கூடிய வாக்கியத்தைப் பிலவங்கமனான ஹனூமந்தனிடம் கர்வம் இல்லாமல் {பின்வருமாறு} சொன்னாள்:(43ஆ,44அ) “மஹாபாஹுவே, ஹரிசத்தமா {பெருந்தோள்களைக் கொண்டவனே, குரங்குகளில் மேன்மையானவனே}, கருணையுடன் என்னைக் காப்பாயாக. சௌம்யா, சத்வவந்தர்களான மஹாபலவான்கள் {வலிமையும், மஹாபலமும் கொண்டவர்கள்}, சமயத்தின்படியே {நியாயநெறிகளின்படியே} நிற்பார்கள்.(44ஆ,45அ) பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, நானே லங்காநகரிகை ஆவேன். மஹாபலவானே, வீரா, உன் விக்கிரமத்தால் நான் வெல்லப்பட்டேன்.(45ஆ,46அ)
ஹரேஷ்வரா {குரங்குகளின் தலைவா}, பூர்வத்தில் ஸ்வயம்பூ {பிரம்மன்} எனக்கு ஒரு வரதானதத்தம் செய்தார். இந்த தத்துவத்தை {அந்த வரதானம் குறித்து உள்ளபடியே} நான் சொல்கிறேன் கேட்பாயாக.(46ஆ,47அ) “எப்போது வானரன் எவனும், தன் விக்கிரமத்தால் உன்னை வசப்படுத்துவானோ, அப்போது, ராக்ஷசர்களுக்கு பயம் உண்டாகும். இதை நீ அறிவாயாக” {என்றான் பிரம்மன்}[4].(47ஆ,48அ) சௌம்யா {மென்மையானவனே}, உன் தரிசனத்தால் இப்போது அந்த சமயம் {நேரம்} எனக்கு வாய்த்திருக்கிறது. ஸ்வயம்பூவின் விதி சத்தியமானது {பிரம்மன் விதித்தது உண்மையானது}. அதற்கு மாற்று வேறேதும் இல்லை.(48ஆ,49அ)
[4] எத்தனை காலம் காப்பென் யான் இந்த மூதூர் என்றுமுத்தனை வினவினேற்கு முரண்வலிக் குரங்கு ஒன்று உன்னைக்கைத்தலம் அதனால் தீண்டிக் காய்ந்த அன்று என்னைக் காண்டிசித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான்.- கம்பராமாயணம், 4928ம் பாடல், ஊர் தேடு படலம்பொருள்: "நான் இந்தப் பழைய ஊரை {லங்கையை} எத்தனை காலம் காப்பேன்?" என்று பிரம்மதேவனை வினாவிய என்னிடம், "பெரும் வலிமைபெற்ற குரங்கு ஒன்று உன்னைத் தன் கைகளால் தொட்டு சினம் கொண்ட காலத்தில் என்னைக் காண்பாய். பிறகு, சித்திர நகரம் {அழகிய இலங்கை நகரம்} அழிவது உறுதி" என்றான்.
துராத்மாவான ராவணனும், சர்வ ராக்ஷசர்களும் சீதையின் நிமித்தம் நாசமடையப் போகிறார்கள்.(49ஆ,50அ) எனவே, ஹரிசிரேஷ்டா, ராவணனால் பாலிதம் செய்யப்படும் புரீக்குள் {லங்கா நகருக்குள்} பிரவேசித்து, சர்வ காரியங்களையும், இங்கே நீ விரும்பிய எதையும் செய்வாயாக.(50ஆ,51அ) ஹரேஷ்வரா {குரங்குகளின் தலைவா}, சுபமானதும், ராக்ஷச ராஜாவால் பாலிதம் செய்யப்படுவதும், சாபத்தால் பீடிக்கப்பட்டதுமான {லங்கா} புரீக்குள் யத்ருச்சையாக {விருப்பம்போல்} பிரவேசித்து, சுகமாக எங்கும் சென்று, சதீயான ஜனகாத்மஜையை {கற்பிற்சிறந்தவளும், ஜனகனின் மகளுமான சீதையைத்} தேடுவாயாக” {என்றாள் லங்கினி}.(51ஆ,இ,ஈ,உ)
சுந்தர காண்டம் சர்க்கம் – 03ல் உள்ள சுலோகங்கள்: 51
Previous | | Sanskrit | | English | | Next |