Thursday 19 October 2023

சுக்ரீவன் சொன்ன வடக்கு | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 43 (62)

North as said by Sugreeva | Kishkindha-Kanda-Sarga-43 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அடுத்த படையை வடக்குத் திசையில் அனுப்பிய சுக்ரீவன்; அத்திசையில் உள்ள இடங்களின் வர்ணனை...

Sugreeva commanding

பிறகு, வானரேஷ்வரனான சுக்ரீவன், தன் மாமனாரை பஷ்சிமதிசையில் {மேற்குத்திசையில்} அனுப்பினான். சதபலி என்ற பெயரைக் கொண்ட வானர வீரனிடம்,(1) சர்வ வானரசத்தமனும் {அனைத்து வானரர்களிலும் உயர்ந்தவனும்}, சர்வஜ்ஞனுமான ராஜா {அனைத்தையும் அறிந்தவனுமான அரசன் சுக்ரீவன்}, அப்போது ஆத்மஹிதத்திற்காகவும், ராமனின் ஹிதத்திற்காகவும் {தனக்கான நன்மைக்காகவும், ராமனின் நன்மைக்காகவும் பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(2) “உன் விதமான வன ஓகஸர்கள் நூறாயிரம் {ஒரு லக்ஷம்} பேர் சூழவும், வைவஸ்வத சுதர்கள் {யமனின் மகன்கள்} உள்ளிட்ட சர்வ மந்திரிகளுடனும் சேர்ந்து செல்வாயாக.(3) விக்கிராந்தா {வெற்றிநடை கொண்ட சதபலியே}, ஹிம சைலத்தை {பனிமலையை / இமய மலையைத்} தன் மகுடமாகக் கொண்ட உதீசீம் திசையில் {வடக்குத் திசையில்} சுற்றுமெங்கும், யஷஸ்வினியான ராமபத்தினியை {புகழ்பெற்றவளும், ராமனின் மனைவியுமான சீதையைத்}தேடுவீராக.(4) அர்த்தவிதம்வரா {அர்த்தத்தின் விதங்களை அறிந்தவர்களில் சிறந்தவனே}, இந்தக் காரியம் நிறைவேறினால், தாசரதியின் பிரியத்தை {தசரதரின் மகனான ராமரின் விருப்பத்தைச்} செய்யும் கடனில் இருந்து விடுபட்டு நாம் கிருதார்த்தர்களாவோம் {காரியம் நிறைவேறியவர்களாவோம்}.(5) நமக்கான பிரிய காரியத்தைச் செய்த மஹாத்மாவுக்குப் பிரதிகாரம் {ராமருக்குக் கைம்மாறு} செய்வதால், நம் ஜீவிதமே {வாழ்க்கையே} பலனடையும்.(6) 

எவன், செயலேதும் செய்யாமல் வேண்டுபவனின் காரியத்தை நிறைவேற்றுவானோ, அவனது ஜன்மம் பலனடைந்ததாகும் எனும்போது, பூர்வத்தில் காரியங்களைச் செய்தவரைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(7) இத்தகைய புத்தியை அடைந்து, நம் பிரியத்தையும், ஹிதத்தையும் விரும்புகிறவர்களான நீங்கள் அனைவரும், ஜானகியை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டுமோ அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வீராக.(8) நரசத்தமரும் {மனிதர்களில் உயர்ந்தவரும்}, பரபுரஜயருமான {அந்நிய நகரங்களை வெற்றி கொள்பவருமான} இந்த ராமர், சர்வபூதங்களையும் {அனைத்து உயிரினங்களையும்} மனத்தில் கொண்டு நம்மிடம் பிரீதி அடைந்திருக்கிறார்.(9) புத்தி, விக்கிரமம் {வீரம்} என்ற செல்வங்களைக் கொண்டவர்களான நீங்கள் அனைவரும், கடப்பதற்கரிய இந்த நதிகளிலும், சைலங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் முழுமையாகத் தேடுவீராக.(10) அங்கே மிலேச்சர்களின் புலிந்தம், அதே போல சூரசேனம், பிரஸ்தாலம், பரதம், மத்திரகம் {மத்ரம்}, குரு {குருஜாங்கலம்},{11} காம்போஜம், யவனம், சகம் முதலிய பட்டணங்களிலும், ஹிமவந்தத்தில் உள்ள தரதத்திலும் தேடுவீராக[1].(11,12) லோத்ரம் {வெள்ளொலுத்தி}, பத்மகம் {சந்தனம்}, தேவதாரு {உள்ளிட்ட மரங்கள்} நிற்கும் வனங்களிலும் ஆங்காங்கே ராவணனையும், வைதேஹியையும் தேடுவீராக.(13) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “மிலேச்ச மாகாணங்கள் என்பன இந்தியாவிற்கு வடமேற்கில் உள்ளன என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. “மாட்டிறைச்சி உண்பவர்கள், கெட்டவார்த்தை பேசுபவர்கள், தர்மங்களென ஏதுமற்றவர்கள் ஆகியோரே மிலேச்சர்கள் என்று அறியப்படுகிறார்கள். யவனம், சகம் முதலிய இந்தப் பெயர்களைக் காணும் சிலர், கிரேக்கம் இந்தியாவின் மீது படையெடுத்த பிறகே ராமாயணம் எழுதப்பட்டது என்ற கருத்தை அடைகின்றனர்” என்றிருக்கிறது. மேற்கண்ட இரண்டு சுலோகங்களில் உள்ள பட்டியலே மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்புகளில் இருக்கின்றன. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி ஆகியோரின் பதிப்பில் வேறு சில நாடுகளும் இந்தப் பட்டியலில் {பின்வருமாறு} இடம்பெறுகின்றன: “மிலேச்சம், புலிந்தம், ஷூரஸேனம், ப்ரஸ்தலம், பரதம், மத்ரகம், குரு, காம்போஜம், யவனம், சகம், ஆரட்டகம், பாஹ்லீகம், ரிஷிகம், பௌரவம் டங்கணம், சீனம், பரமசீனம், நீஹாரம், தரதம் ஆகியவற்றிலும், ஹிமவந்தத்திலும் மீண்டும் மீண்டும் தேடுவீராக” என்றிருக்கிறது. இதே பட்டியலே ஆங்கிலத்தில் பிபேக்திப்ராய் பதிப்பிலும், தமிழில் தர்மாலயப்பதிப்பிலும், நரசிம்மாசாரியர், தாதாசாரியர் ஆகியோரின் பதிப்புகளிலும் இருக்கின்றன.

பிறகு, தேவ, கந்தர்வர்களால் சேவிக்கப்படும் சோமாசிரமத்திற்கு {சந்திரனின் ஆசிரமத்திற்குச் சென்று}, பெருஞ்சிகரங்களையும், காலம் என்ற பெயரையும் கொண்ட அந்த பர்வதத்திற்கு {காலமலைக்குச்} செல்வீராக.(14) அந்த மஹத்தான சைலத்தின் பர்வதங்களிலுள்ள குகைகளில் மஹாபாக்கியவதியும், நிந்தனைக்கு அப்பாற்பட்டவளுமான ராமபத்தினியை {ராமனின் மனைவியான சீதையைத்} தேடுவீராக.(15) 

ஹேமகர்ப்பமும் {தங்கத்தைக் கருவாகக் கொண்டதும்}, சைலேந்திரமுமான {மலைத்தொடர்களில் தலைமையுமான} அந்த மஹாகிரியைக் கடந்ததும், சுதர்சனம் என்ற பெயரில் உள்ள பர்வதத்திற்கு நீங்கள் செல்வீராக.(16) பதகாலயமும் {சிறகுகள் படைத்த பறவைகளின் ஆலயமும்}, பல்வேறு பக்ஷிகள் {பறவைகள்} நிறைந்திருப்பதும், விதவிதமான மரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், தேவசகம் என்ற பெயரைக் கொண்டதுமான பர்வதம் {தேவசகமலை} அங்கே இருக்கிறது.(17) அங்கேயுள்ள கானகப் பகுதிகளிலும், அருவிகளிலும், குகைகளிலும், ஆங்காங்கே ராவணனையும் வைதேஹியையும் தேடுவீராக.(18) அதை {தேவசக மலையைக்} கடந்ததும், பர்வதங்கள், நதிகள், விருக்ஷங்களென ஏதுமற்றதும், சர்வ சத்வதர்களாலும் புறக்கணிக்கப்பட்டதும், முற்றிலும் சதயோஜனை {நூறு யோஜனைகள் அளவு கொண்டதுமான} ஆகாசம் இருக்கிறது.(19) உரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்தும் அந்த காந்தாரத்தை சீக்கிரமே கடந்து, வெண்கைலாசத்தை அடைந்ததும் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்[2].(20)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “கைலாச மலையானது, மத்திய ஆசியாவின் பனித்தொடரில் பாதுகாப்பை அளிப்பவனும், இமயத்தின் வடக்கே இருப்பவனுமான சிவனின் வசிப்பிடம் என்றும், குபேரனின் செல்வம் இமயத்திற்கு வடக்கே இருந்ததெனவும் நம்பப்படுகிறது. இது வடக்கை நோக்கி நீண்டு சென்று, அல்த்தாய் மலைத்தொடருடன் சேரும் குன்லூன் மலைத்தொடர் {திபெட் - சிங்சியாங் நெடுஞ்சாலைக்கு மேற்கே இருக்கும் மலைத்தொடர்} என நம்பப்படுகிறது. கைலாசத்தைக் கடக்கும்போது மேற்கில் இருக்கும் பாலைவனத்தின் தென்பகுதியே இங்கே குறிப்பிடப்படும் மார்க்கமாக இருக்கலாம்” என்று ஏன்ஷியன்ட் ஜியோகரஃபி குறிப்பிடுகிறது. இது தற்போதைய திபெத்தில் இருக்கிறது” என்றிருக்கிறது.

அங்கே {கைலாசத்தில்} விஷ்வகர்மனால் நிர்மாணிக்கப்பட்டதும், வெண்மேகத்தைப் போன்றதும், ஜாம்பூநதத்தின் {தங்கத்தின்} பிரகாசத்தைக் கொண்டதும், ரம்மியமானதுமான குபேரனின் பவனம் {வசிப்பிடம்} இருக்கிறது.(21) கமலங்களும் {தாமரைகளும்}, உத்பலங்களும் {நீலோத்பலங்களும்}, ஹம்சங்களும் {அன்னப்பறவைகளும்}, காரண்டவங்களும் {வாத்து முதலிய நீர்க்கோழிகளும்} நிறைந்ததும், அப்சரஸ் கணங்களால் சேவிக்கப்படுவதும், விசாலமானதுமான அந்த நளினியிலே {தடாகத்திலே},(22) யக்ஷராஜனும், ஸ்ரீமானும், தனதந்தனும் {செல்வத்தைக் கொடுப்பவனும்}, குஹ்யர்களின் ராஜாவுமான வைஷ்ரவணன் {குபேரன்}, சர்வபூதங்களாலும் நமஸ்கரிக்கப்பட்டவனாக {அனைத்து உயிரினங்களாலும் வணங்கப்படுபவனாக} மகிழ்ச்சியாக இருக்கிறான்.(23) சந்திரனின் ஒளிக்கு ஒப்பான அதன் பர்வதங்களிலும், குகைகளிலும் ஆங்காங்கே ராவணனையும், வைதேஹியையும் தேடுவீராக.(24) 

கிரௌஞ்ச கிரியைக் அடைந்ததும், கடப்பதற்கரிய அதன் பிலங்களில், கவனமாகப் பிரவேசிக்க வேண்டும். அது பிரவேசிக்க முடியாதது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.(25) சூரியனுக்கு சமமான பிரபையைக் கொண்டவர்களும், தேவரூபமானவர்களும், மஹாத்மாக்களுமான மஹரிஷிகள், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கே வசித்து வருகின்றன.(26) கிரௌஞ்சத்திலுள்ள வேறு குகைகள், தாழ்வரைகள், சிகரங்கள், மலையருவிகள், நிதம்பங்கள் {பின்புறங்கள்} ஆகியவற்றிலும் தேடுவீராக.(27) விருக்ஷங்களற்ற காம சைலத்திலும், விஹகாலயமான {பறவைகளின் வசிப்பிடமான} மானஸத்திலும் {மானஸ சரஸிலும்} தேடுவீராக. அங்கே பூதங்களுக்கு கதியில்லை; தேவர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் இல்லை {வேறு உயிரினங்களும், தேவர்களும், ராக்ஷசர்களும் அங்கே செல்ல முடியாது}.(28) அதன் புல்வெளிகள், பிரஸ்தங்கள் {மலைச்சாரல்கள்}, பூதரங்கள் {மலைகள்} முழுவதிலும் தேடுவீராக. 

கிரௌஞ்ச கிரியைக் கடந்ததும் மைனாகம் என்ற பெயரில் ஒரு பர்வதம் இருக்கிறது[3].(29) அங்கே மய தானவன், தானே ஒரு பவனத்தைக் கட்டியிருக்கிறான். முகடுகளுடனும், பிரஸ்தங்களுடனும், காந்தாரங்களுடனும் கூடிய மைனாக மலையில் தேடுவீராக. அஷ்வமுகங்களைக் கொண்ட ஸ்தீரிகள் அங்கே இருக்கின்றனர்[4].(30,31அ) 

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சுந்தரகாண்டத்தில் ஹனுமான் கடலைக் கடக்கும்போது விருந்தோம்பல் செய்ய விரும்பிய மலை அல்ல இது. இந்த மைனாகம் வேறு” என்றிருக்கிறது.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “அஷ்வமுகீ என்ற சொல், யக்ஷர்கள், சாரணர்கள் போன்ற வனம்சார்ந்த கிம்புருஷ வகையினரைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாக எடுத்துக் கொள்ளபடுகிறது. சிலர் இவர்களை குதிரை முகம் கொண்ட உயிரினங்களாகக் கருதுகின்றனர்” என்றிருக்கிறது.

அந்த தேசத்தைக் கடந்ததும், சித்தர்களால் சேவிக்கபடும் ஆசிரமம் இருக்கிறது. சித்தர்கள், வைகானசர்கள், வாலகில்யர்கள், தபஸ்விகள் ஆகியோர் அங்கிருக்கின்றனர்.(31ஆ,32அ) அங்கே தபத்தால் களங்கங்களில் இருந்து விடுபட்ட சித்தர்களை வணங்கிவிட்டு, பணிவுடன் சீதையைக் குறித்து {அவர்களிடம்} கேட்பீராக.(32ஆ,33அ) அங்கே ஹேமபுஷ்கரங்களால் {பொற்றாமரைகளால்} மறைக்கப்பட்டதும், இளம் ஆதித்யனின் ஒளியைக் கொண்டதும், சுபமான ஹம்சங்கள் {அழகிய அன்னப்பறவைகள்} திரிவதுமான வைகானஸ சரஸ் இருக்கிறது.(33ஆ,34அ) சர்வபௌமன் என்று ஸ்மிருதிகளில் அறியப்படுவதும், குபேரனை சுமப்பதுமான கஜம் {யானை}, கரேணங்களுடன் {பெண் யானைகளுடன்} சதா அந்த தேசத்திலேயே {அவ்விடத்திலேயே} திரிந்து கொண்டிருக்கிறது.(34ஆ,35அ) 

அந்த சரஸைக் கடந்ததும், சந்திரனும், திவாகரனும் {சூரியனும்} இல்லாததும், நக்ஷத்திர கணங்கள் இல்லாததும், மேகங்கள் இல்லாததும், நாதமற்றதுமான வியோமம் {ஒலியற்றதும், ஆதியந்தமற்றதுமான வானம் / வெட்டவெளி} இருக்கிறது.(35ஆ,இ) தேவர்களைப் போன்றவர்களும், தன்னொளியுடன் கூடியவர்களும், ஓய்ந்திருப்பவர்களும், தபத்தில் சித்தியடைந்தவர்களும் அந்த தேசத்தில் அர்க்கனின் {சூரியனின்} கதிர்களைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர்.(36) 

அந்த தேசத்தைக் கடந்ததும் சைலோதம் என்ற பெயரைக் கொண்ட ஆறு ஆழத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதன் இரு தீரங்களிலும் {இரு கரைகளிலும்} கீசகம் என்ற பெயரைக் கொண்ட வேணுக்கள் {மூங்கில்கள்} இருக்கின்றன. அவை {அந்த கீசகங்கள்} சித்தர்களை பரதீரத்திற்கு {அக்கரைக்குக்} கொண்டு சென்று திரும்பக் கொண்டு வருகின்றன[5].(37,38அ) 

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “கீசகம் என்ற பதம், “மூங்கிலுக்குள் காற்றை ஊதும்போது இன்னொலி பிறக்கும்” என்பதைக் குறிக்கும். இவ்வகை மூங்கில்களே புல்லாங்குழல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. மூங்கில்களைக் கட்டி ஏற்படுத்தப்படும் பாலத்தின் மூலம் மறுகரைக்குப் பயணப்படலாம். ஆற்றில் விழும் எவரும், அல்லது எதுவும் உறைந்து போய் கல்லாக நேரிடும் என்பதால், இந்தக் குரங்குகள் அந்நதியில் விழாதிருக்க அந்தப் பாலங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது செய்தி” என்றிருக்கிறது.

அங்கே புண்ணியத்தை அடைந்தோர் வசிக்கும் உத்தர குரவங்கள் {வட குரு தேசங்கள்} இருக்கின்றன.{38ஆ} அங்கே காஞ்சன பத்மங்களுடன் {பொற்றாமரைகளுடன்} கூடியவையும், நீல, வைடூரிய இலைகள் நிறைந்தவையுமான பத்மினிகளில் {ஓடைகளில்} இருந்து நீரைப் பெறும், ஆயிரக்கணக்கான நதிகள் இருக்கின்றன.{39} அவ்விடம் ஹிரண்யமயமான சிவந்த உத்பல வனங்களால் {செங்கழுநீர் கூட்டங்களால்} சூழப்பட்டிருக்கிறது.(38ஆ-40அ) அந்த தேசமெங்கும் மஹா மதிப்பு வாய்ந்த மணிபத்ரங்களையும் {நீலமணி போன்ற இலைகளையும்}, காஞ்சனப் பிரபையுடன் கூடிய கேசரங்களையும் {இழைகளையும்} கொண்டவையும், சித்திரமானவையுமான நீலோத்பல வனங்களுடனும், இளம் ஆதித்யனின் ஒளியுடனும் கூடிய ஜலாஷ்யங்கள் {நீர்க் கொள்ளிடங்கள்} சூழ அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(40ஆ,41) அங்கே எடைமிக்க முத்துக்களுடனும், மஹாதனமான மணிகளுடனும் ஆழமாகப் பாயும் நதிகளில், ஜாதரூபம் {தங்கம்} கலந்த மணற்திட்டுகள் இருக்கின்றன.(42) சித்திரமானவையும், சர்வ ரத்தினமயமானவையும், ஜாதரூபமயமானவையும், ஹுதாசனனுக்கு {அக்னிக்கு} சமமான பிரபையுடன் கூடியவையுமான உத்தம மலைகள் இடையிடையே இருக்கின்றன.(43) 

அங்கே நித்தியம் புஷ்பிப்பவையும், பழங்களுடன் கூடியவையுமான மரங்களில் பத்ரரதங்கள் {சிறகுகள் கொண்ட தேர்களான பறவைகள்} கூவிக் கொண்டிருக்கும். திவ்ய கந்த, ரச, ஸ்பரிசம் {தெய்வீக நறுமணமும், சுவையும், தீண்டலும்} கொண்டவையும், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவையான வேறு உத்தம மரங்கள், நானாவித வடிவங்களிலான ஆடைகளையும், பழங்களையும் தருகின்றன.(44,45அ) முத்து, வைடூரியங்களைப் போல சித்திரமான பூஷணங்களையும் {ஆபரணங்களையும்}, ஸ்திரீகளுக்கும், புருஷர்களுக்கும் தகுந்தவையும்,{45ஆ,இ} அதேபோல, சர்வ ருதுக்களில் சுகத்தைத் தருபவையுமான ஆபரணங்களை வேறு உத்தம மரங்கள் விளைவிக்கின்றன. மதிப்புமிக்கவர்களுக்கானவையும், சித்திரமானவையும், மணிகளுடன் கூடியவையுமான ஆபரணங்களை வேறு உத்தம மரங்கள் விளைவிக்கின்றன.(45ஆ,இ,46) சித்திரமான விதானங்களையும், சயனங்களையும், மனத்தை மயக்கும் மாலைகளையும் அங்கே வேறு மரங்கள் விளைவிக்கின்றன. மேலும் பெரும் சிறப்புமிக்க பானங்களையும், விதவிதமான பக்ஷணங்களையும் அவை விளைவிக்கின்றன.(47,48அ) 

அங்குள்ள ஸ்திரீகள் குணம் நிறைந்தவர்களாகவும், ரூப, யௌவனம் {நல்ல வடிவமும், இளமையும்} கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒளிமிக்க பிரபையுடன் கூடிய கந்தர்வ, கின்னர, சித்த, நாகர்களும், அதேபோல வித்யாதரர்களும் அங்கே நாரீகளுடன் {பெண்களுடன்} திளைத்திருக்கின்றனர்[6].(48ஆ,49) அனைவரும் நற்கர்மங்களைச் செய்பவர்களாகவும், அனைவரும் மனத்திருப்தியுடன் செயல்படுபவர்களாகவும், அனைவரும் காம, அர்த்தங்களுடன் கூடியவர்களாக யோசிதைகளுடன் {இன்பத்துடனும், பொருளுடனும் கூடியவர்களாகப் பெண்களுடன்} அங்கே வசித்திருக்கின்றனர்.(50) உற்சாகத்துடன் கூடிய சிரிப்பொலிகளும், சர்வ பூத மனோஹரமான கீத, வாத்தியங்களின் கோஷங்களும் {அனைத்து உயிரினங்களின் மனத்தையும் கொள்ளை கொள்ளும் பாட்டொலிகளும், இசைக்கருவிகளின் ஒலிகளும்} அங்கே சதா கேட்டுக் கொண்டே இருக்கும்.(51) அங்கே மனத்திருப்தி இல்லாதவர் எவருமில்லை, அசத்பிரியர்கள் {பொய்மையை விரும்புகிறவர்கள்} எவருமில்லை. அங்கே நாளுக்கு நாள் மனோஹரமான {மனத்தைக் கொள்ளை கொள்ளும்} குணங்கள் வளர்கின்றன.(52)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே “பிரசூயந்தே” என்ற ஒரு சொல்லை சேர்த்து இந்தப் பெண்களும் அதே மரங்களில் இருந்து பிறந்தனர் என்று சொல்கின்றனர். எனினும், “இவர்கள் மண்ணின் பெண்கள்” என்று எடுத்துக் கொள்வதே சிறந்ததாகும்” என்றிருக்கிறது.

அதைக் கடந்ததும், உத்தர பய்ஸாம் நதி இருக்கிறது {உத்தர குரு தேசங்களின் உத்தம மலைகளைக் கடந்ததும், பொக்கிஷக் குவியல்களைக் கொண்ட வடக்கு நீர் [கடல்] இருக்கிறது}. அதன் மத்தியில் ஹேமமயமானதும், மஹத்தானதும், சோமகிரி என்ற பெயரைக் கொண்டதுமான சைலேந்திரம் {மலை} இருக்கிறது.(53) யாவர் இந்திரலோகத்திற்குச் செல்வார்களோ, யாவர் பிரம்மலோகத்திற்குச் செல்வார்களோ, அத்தகைய தேவர்கள், திவத்தை {சொர்க்கத்தை / வானத்தை} அடைந்ததும், அந்த கிரிராஜனை {சோமகிரியைத்} தெளிவாகக் காண்பார்கள்.(54) அந்த தேசம், சூரியனற்றதாக இருந்தாலும், தஹிக்கும் விவஸ்வதனை {சூரியனைப்} போல, சூரிய ஒளியுடன் புலப்படும் அதன் {சோமகிரியின்} ஒளியாலேயே பிரகாசிக்கிறது.(55) விஷ்வாத்மாவும் {நீக்கமற நிறைந்திருக்கும் ஆத்மாவான விஷ்ணுவும்}, ஏகதச ஆத்மகனான சம்புவும் {பதினோரு ஆத்மாக்களுடன் [ருத்திரர்களுடன்] கூடிய சிவனும்}, தேவர்களின் ஈசனான பிரம்மனும், பிரம்மரிஷிகளின் பரிவாரங்கள் சூழ அங்கே வசித்திருக்கின்றனர்.(56) குருக்களுக்கு {உத்தர குரு தேசங்களுக்கு} வடக்கே எந்தச் சூழ்நிலையிலும் செல்லக்கூடாது. வேறு பூதங்களுக்கும் {உயிரினங்களுக்கும்} கூட அங்கே செல்வதற்கான கதி கிடையாது.(57) சோமகிரி என்ற பெயரைக் கொண்ட அது {அந்த மலை}, தேவர்களாலும் கடக்க முடியாததாக இருக்கிறது. அதைக் கண்டதும் அங்கிருந்து சீக்கிரம் திரும்பிவருவதே உங்களுக்குத் தகும்.(58)

வானர புங்கவர்களே, அதுவரையே வானரர்கள் செல்வது சாத்தியமாகும். பாஸ்கரனில்லாமல், எல்லையற்றதாக இருக்கும் அதற்கப்பால் இருப்பதை நாம் அறியோம்.(59) நான் புகழ்ந்து சொன்ன இடங்கள் அனைத்தையும் முழுமையாகத் தேடுவீராக. நான் சொல்லாத பிறவற்றிற்கும் செல்ல உங்கள் மதியை ஆயத்தம் செய்வீராக.(60) அநிலனுக்கும் {வாயுவுக்கும்}, அநலனுக்கும்  {(அனல்/அனலனுக்கும்/ அக்னிக்கும்} ஒப்பானவர்களே, அங்கே விதேஹத்தில் பிறந்தவளை {வைதேஹியைக்} கண்டு, தாசரதியின் பிரியத்திற்குரிய மஹத்தான கர்மங்களைச் செய்து, அதன் மூலம் எனக்கும் உயர்ந்த பிரிய காரியங்களைச் செய்தவராவீராக.(61) பிலவங்கமர்களே {தாவிச் செல்லும் குரங்குகளே}, காரியம் நிறைவேறிய பிறகு, ஹிதர்களுடனும், பந்துக்களுடனும், மனோகரமான சர்வ குணங்களாலும் {நன்மைகளாலும்} என்னால் அர்ச்சிக்கப்பட்டவர்களாக {வழிபடப்பட்டவர்களாக}, சத்ருக்கள் சாந்தமடைந்தவர்களாக, பூத தரர்களாக உர்வியில் திரிவீராக {உயிரினங்களைத் தாங்குபவர்களாகப் பூமியில் திரிவீராக}” {என்றான் சுக்ரீவன்}.(62)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 43ல் உள்ள சுலோகங்கள்: 62

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை