Tuesday, 13 June 2023

இரண்டாம் அறைகூவல் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 14 (22)

The second challenge | Kishkindha-Kanda-Sarga-14 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனிடம் மீண்டும் வேண்டிய சுக்ரீவன்; சுக்ரீவனுக்கு உறுதியளித்து, வாலிக்கு அறைகூவல் விடுக்குமாறு கேட்டுக் கொண்ட ராமன்...

Sugriva challenging Vali

அவர்கள் அனைவரும் வாலியின் கிஷ்கிந்தாபுரிக்குத் துரிதமாகச் சென்று, அடர்ந்த புதர்களுடன் கூடிய வனத்தின் விருக்ஷங்களுக்கு மத்தியில் தங்களை மறைத்துக் கொண்டு காத்திருந்தனர்.(1) கானகப் பிரியனும், அகன்ற கழுத்தைக் கொண்டவனுமான சுக்ரீவன், கானகம் எங்கும் பார்வையைச் செலுத்தி, பயங்கரக் குரோதத்தை அடைந்தான்.(2) பரிவாரங்கள் சூழ இருந்தவன் {சுக்ரீவன்}, அம்பரத்தை {வானத்தைப்} பிளப்பது போன்ற பெரும் நாதம் செய்து, வாயு வேகத்தால் தூண்டப்பட்ட மஹா மேகத்தைப் போல, கோர கர்ஜனை செய்து யுத்த அறைகூவல் விடுத்தான்.(3,4அ) 

பிறகு, பால அர்க்கனை {சூரியனைப்} போன்றவனும், பெருமைமிக்க சிங்கத்தின் நடை கொண்டவனும், காரியங்களைச் செய்வதில் நிபுணனுமான சுக்ரீவன், ராமனைக் கண்டு, இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(4ஆ,5அ) "ஹரிக்களை {பகை விலங்குகளை / குரங்குகளைப்} பிடிக்கும் வலைகளால் நிறைந்ததும், தப்த காஞ்சன {புடம்போட்ட தங்கத்} தோரணங்களுடன் கூடியதும், துவஜங்களாலும் {கொடிகளாலும்}, யந்திரங்களாலும் {பொறிகளாலும்} நிறைந்ததுமான வாலியின் கிஷ்கிந்தாபுரியை வந்தடைந்தோம்.(5ஆ,6அ) வீரரே, வாலியை வதம் செய்வதாக நீர் பூர்வத்தில் பிரதிஜ்ஞை செய்திருக்கிறீர் {உறுதிமொழி ஏற்றிருக்கிறீர்}. சீக்கிரமாக நல்ல பழங்களை விளைவிக்கும் லதையை {கொடியைப்} போல அதற்கான {அந்த பிரஜ்ஞை பலிப்பதற்கான} காலமும் வாய்த்திருக்கிறது[1]" {என்றான் சுக்ரீவன்}.(6ஆ,7அ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இத்தருணத்தில் தளிர் துளிர்ப்பது, அல்லது பழம் விளைவது என்பது, சுக்ரீவன், 'தான் சார்ந்து வளர ஏதாவது உறுதியான மரத்தை வேண்டும் கொடியின் இலையில்லா மெல்லிய தளிரைப் போன்றவன்' என்பதை விளக்கச் சொல்லப்படுகிறது. "லத, கவித, வனித ந ஷோ²ப⁴தே ஆஷ்²ரயம் வினா" என்று சொல்லப்படுகிறது. அதாவது, "லதையும் {கொடியும்}, கவிதையும், வனிதையும் ஆதரவின்றி செழிப்பதில்லை" என்று சொல்லப்படுகிறது. எனவே, சுக்ரீவன், லக்ஷ்மணனைப் போல ராமனின் ஆதரவிற்கான கைங்கர்யம் என்ற அளவில் தன்னை ராமனிடம் ஒப்படைத்துக் கொள்கிறான்" என்றிருக்கிறது.

சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், தர்மாத்மாவும், சத்ருசூதனனுமான {பகைவரை அழிப்பவனுமான} அந்த ராகவன் அவனிடம் {சுக்ரீவனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(7ஆ,8அ) "இலக்ஷ்மணன் எதைப் பறித்து உன் கண்டத்தில் {கழுத்தில்} சூட்டினானோ, அந்த கஜமலர் மாலையைக் கொண்டு உன்னை அடையாளங் காண முடியும்.(8ஆ,9அ) வீரா, நீ கண்டத்தில் சூடியிருக்கும் லதையால் {கொடியால்}, ஆகாசத்தில் நக்ஷத்திர மாலையுடன் கூடிய விபரீத சூரியனைப் போல அதிகமாகப் பிரகாசிக்கிறாய்[2].(9ஆ,10அ) வானரா, இதோ மோதலில் ஏக பாணம் விட்டு {ஒரே கணையை ஏவி}, வாலியிடம் கொண்ட பயத்திலும், வைரத்திலும் இருந்து நான் உன்னை விடுவிக்கப் போகிறேன்.(10ஆ,11அ) சுக்ரீவா, உடன்பிறந்தவனின் ரூபத்திலுள்ள வைரியை {அண்ணனின் வடிவிலான பகைவனை} எனக்குக் காட்டியதும், வாலி கொல்லப்பட்டு வனத்தின் புழுதியில் புரள்வான்.(11ஆ,12அ) {என்} பார்வைக் கோட்டில் வாய்த்தும் அவன் {வாலி} ஜீவனுடன் திரும்பினால், அப்போது நீ நான் செய்த தோஷத்திற்காக உடனே என்னை நிந்திக்கலாம்.(12ஆ,13அ) உன் முன்னிலையில் நான் பாணத்தால் சப்த சாலங்களைப் பிளந்தேன். எனவே இப்போது என் பலத்தால் வாலி கொல்லப்படுவான் என்பதை நீ அறிவாய்.(13ஆ,14அ) 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், ""விபரீதம்", "சூரியன்" என்ற சொற்களின் பயன்பாட்டுக்கு பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. (1) "பரீதம்" என்பது பகல், "விபரீதம்" என்பது இரவு. நடு இரவில் உலவும் சந்திரனும், சூரியன் என்று அழைக்கப்படலாம். எனவே, நக்ஷத்திர மாலையுடன் கூடிய இரவுச் சூரியன் என்பது ஆகுபெயரின் வெளிப்பாடாகும். (2) சுக்ரீவன், இரவின் நக்ஷத்திரங்களை மாலையாகக் கொண்ட வானத்துச் சூரியனைப் போன்றவன் என்பது சாத்தியமற்றது. எனவே, இஃது அபூத உபமம் மிகைநவிற்சி என்று கொள்ளப்படவேண்டும். (3) சூரியக் கதிர்களை கிரஹித்தே சந்திரன் இரவுக்கு ஒளியூட்டுகிறான். எனவே, விபரீத சூரியனைப் போல என்பதில் சந்திரனை சூரியன் என்று உவமையாகச் சொல்லப்படுவதால் இது "பிம்ப பிரதிபிம்ப நியாயம்" என்று கொள்ளப்பட வேண்டும். (4) எந்தக் காலத்தில் கெடுமுடிவு நேரும் என முன்கணிக்கப்படுகிறதோ, அது விபரீத காலம் என்று சொல்லப்படுகிறது. எனவே, "இரவில் நக்ஷத்திரங்களுடன் ஒளிரும் சூரியனைப் போல சுக்ரீவனும் ஒளிர்ந்தான்" என்று பொருள் கொள்ள வேண்டும். இதற்கு சோதிடம் பின்வருமாறு சொல்கிறது: "இரவில் வானவில் தோன்றுவது, பகலில் நக்ஷத்திரங்கள் தோன்றுவது ஆகிய அந்த ராஷ்டிரத்தின் நாதன் நாசமடையப் போகிறான் என்பதை முன்னறிவிக்கின்றன" என்று கர்க்கர் சொல்கிறார். இங்கே சுக்ரீவன், கஜபுஷ்பி மாலையை அணிந்து, இரவு நேர நக்ஷத்திரங்களை மாலையாகக் கொண்டு பிரகாசிக்கும் சூரியனைப் போலத் தெரிவதால், கிஷ்கிந்தையின் நாதனான வாலி அழியப் போவதை ராமன் முன்கணிக்கிறான். மேலும் சுக்ரீவன் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவன். {உரையாசிரியர்களான} கோவிந்தராஜரும், மஹேஷ்வர தீர்த்தரும் இந்தக் கடைசி விளக்கத்தை ஏற்கின்றனர்" என்றிருக்கிறது.

தர்மலோபத்தில் {தர்மம் செய்யும் விருப்பத்தில்} கட்டப்பட்டு, நெடுங்காலம் துன்பத்தை அடைந்தாலும், பூர்வம் முதல் நான் பொய் சொன்னதில்லை, இனியும் ஒருபோதும் சொல்லப் போவதுமில்லை.(14ஆ,15அ) சதக்ரதுவின் {நூறு வேள்விகளைச் செய்த இந்திரனின்} மழையால் பலனடையும் நெல்வயலைப் போல நான் பிரதிஜ்ஞையை நிறைவேற்றுவேன். கலக்கத்தை ஒழிப்பாயாக.(15ஆ,16அ) எனவே சுக்ரீவா, ஹேமமாலை {பொன்னாரம்} பூண்ட வாலியை அழைப்பதன் நிமித்தம், அந்த வானரன் வெளியே வரும் வகையிலான அந்த சப்தத்தை எழுப்புவாயாக.(16ஆ,17அ) ஜிதகாசியும் {வெற்றியில் பெருமிதங்கொள்பவனும்}, ஜயசிலாகியும் {வெற்றியை சிலாகிப்பவனும்}, உன்னால் வீழ்த்தப்பட முடியாதவனும், போரில் விருப்பங்கொண்டவனுமான அந்த வாலி, புரத்தில் {நகரில்} இருந்து விரைந்து வெளியே வருவான்.(17ஆ,18அ) சுய வீரியத்தை அறிந்தவன், போரில், விசேஷமாக ஸ்திரீகளின் முன்னிலையில் ரிபுக்களின் {பகைவரின்} அறைகூவலைக் கேட்டுப் பொறுத்துக் கொள்ளமாட்டான்" {என்றான் ராமன்}.(18ஆ,19அ)

ஹேம பிங்களனான {பொன் மஞ்சள் நிறம் கொண்டவனான} அந்த சுக்ரீவன், ராமனின் சொற்களைக் கேட்டு அம்பரத்தை {வானைப்} பிளப்பதைப் போன்ற குரூர நாதத்துடன் கர்ஜித்தான்.(19ஆ,20அ) அங்கே சப்தத்தைக் கேட்டுப் பேரச்சமடைந்து, தங்கள் பிரபையை இழந்த கோக்கள் {பசுக்கள்}, ராஜனின் தோஷத்தால் {அரசனின் தவறால்} படையெடுத்து வரும் அன்னியர்களின் தீண்டலுக்குள்ளாகும் குலஸ்திரீகளைப் போலப் பெருங்கலக்கத்துடன் ஓடின.(20ஆ,21அ) இரணத்தில் பங்கமடைந்த ஹயங்களை {போரில் தோல்வியடைந்த குதிரைகளைப்} போல, மிருகங்கள் {மான்கள்} சீக்கிரமாகத் தப்பி ஓடின. புண்ணியம் தீர்ந்த கிரகங்களைப் போல பறவைகளும் பூமியில் விழுந்தன.(21ஆ,இ) அப்போது, மேகத்தைப் போன்ற முழக்கத்திற்காக நன்கு அறியப்பட்டவனும், சௌரியத்தால் {வல்லமையால்} மீண்டும் விருத்தியடைந்த தேஜஸ்ஸுடன் {வலிமையுடன்} கூடியவனுமான சூரியாத்மஜன் {சூரியனின் மகனான சுக்ரீவன்}, அநிலனால் {காற்றால்} சஞ்சலமடையும் அலைகளுடன் கூடிய சரித்பதியின் {ஆறுகளின் தலைவனான பெருங்கடலைப்} போலப் பெரும் முழக்கமிட்டான்[3].(22)

[3] வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேனினான் மகன்
நீர்த் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே
வேர்த்து மண்உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல்
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே

- கம்பராமாயணம் 3945ம் பாடல், வாலி வதைப் படலம்

பொருள்: {இராமன் கூறிய} வார்த்தையை உள்ளபடியே கேட்டு, வானில் இடைவிடாமல் செல்லும் தேரை உடையவனின் மகன் {சூரியனின் மகன் சுக்ரீவன்}, நீர் நிறைந்த அலைகளைக் கொண்ட கடல் அஞ்சும்படியும், நீல மேகம் வெட்கமடையும்படியும், மண்ணில் உள்ளோர் வியர்த்து ஓடும்படியும் விண்ணில் உள்ளோர் {தேவர்கள் / பறவைகள்} விம்மும்படியும் பேராரவாரம் செய்த ஓசை ஈசன் {திருமால்} உண்ட அண்டம் முழுவதையும் விஞ்சி ஒலித்தது.

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 14ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்