The Hermitage of the Seven | Kishkindha-Kanda-Sarga-13 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கிஷ்கிந்தைக்குச் செல்லும் வழியில் அமைந்த இயற்கை; சப்தரிஷிகளின் ஆசிரமத்தையும், அவர்களின் தபசக்தியையும் குறித்து விவரித்த சுக்ரீவன்...
தர்மாத்மாவான அந்த லக்ஷ்மணாக்ரஜன் {லக்ஷ்மணனின் அண்ணன்} ராமன், காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட மஹத்தான வில்லையும், ஆதித்யனுக்கு {சூரியனுக்கு} ஒப்பாக ஒளிர்பவையும், ரணத்தில் {போரில்} சாதகமானவையுமான சரங்களையும் எடுத்துக் கொண்டு, சுக்ரீவனுடன் சேர்ந்து ரிச்யமூகத்திலிருந்து வாலியின் விக்ரமத்தால் பாலிக்கப்படும் கிஷ்கிந்தைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(1,2) மஹாத்மாவான அந்த ராமனுக்கு முன்பு, கடினமான கிரீவத்தை {கழுத்தைக்} கொண்ட சுக்ரீவனும், மஹாபலவானான லக்ஷ்மணனும் நடந்து சென்றனர்.(3) அவர்களின் {அந்த மூவரின்} பின்னே வீர ஹனுமானும், வீரியவான்களான நளனும், நீலனும், மஹாதேஜஸ்வியும், ஹரியூதபர்களின் யூதபனுமான {குரங்குக்குழு தலைவர்களின் தலைவனுமான} தாரனும் சென்றனர்.(4)
அவர்கள், புஷ்ப பாரத்தால் {பூக்களின் சுமையால்} சாய்ந்திருக்கும் விருக்ஷங்களையும் {மரங்களையும்}, இனிமையான நீரைச் சுமந்து சாகரத்திற்குச் செல்லும் சரிதங்களையும் {ஆறுகளையும் பார்த்தபடியே சென்றனர்}.(5) கந்தரங்கள் {வீடு போன்ற குகைகள்}, சைலங்கள் {மலைகள்}, நிர்தரங்கள் {கற்பிளவுகள்}, குகைகள், முக்கிய சிகரங்கள், பிரிய தரிசனந்தரும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றையும் {பார்த்தபடியே சென்றனர்}.(6) வைடூரியம் போன்றத் தெளிந்த நீருடனும், அந்த ஜலத்தில் பிரகாசிக்கும் பத்ம மலர்மொட்டுகளுடனும் கூடிய தடாகங்களையும் தங்கள் மார்க்கத்தில் கவனித்தபடியே சென்றனர்.(7) காரண்டங்கள் {வாத்துகள்}, சாரஸங்கள் {கொக்குகள்}, ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, வஞ்சுளங்கள் {கரிக்குருவிகள்}, ஜலகுக்குடங்கள் {நீர்க்கோழிகள்}, சக்கரவாகங்கள், இன்னும் பிற பறவைகள் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன.(8)
மிருதுவான புல் நுனிகளை உண்டு, பயமில்லாமல் வனத்தில் திரிபவையான ஹரிணங்கள் {மான்கள்}, சர்வ ஸ்தலங்களிலும் திரிந்து கொண்டும், {ஆங்காங்கே} நின்று கொண்டும் இருப்பதைக் கண்டனர்.(9) தடாக வைரிகளும், வெண் தந்தங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், கோரமானவையும், தனிமையில் திரிபவையுமான துவிரதங்கள் {இரு தந்தங்களைக் கொண்ட யானைகள்} கரைகளைத் தகர்த்துக் கொண்டிருந்தன.(10) அசையும் பர்வதங்களைப் போன்றவையும், மழைதரும் மேகங்களுக்கு ஒப்பானவையும், மஹீரேணுவால் {மண்புழுதியால்} பூசப்பட்டவையுமான மத்த வாரணங்கள் {மதங்கொண்ட யானைகள்}, கிரித் தடங்களைத் தகர்த்துக் கொண்டிருந்தன.(11) சுக்ரீவனின் வசப்பட்டவர்கள், வனத்தில் திரியும் பிறவற்றையும் {மற்ற விலங்குகளையும்}, மேலே திரியும் விஹங்கமங்களையும் {பறவைகளையும்} பார்த்தவாறே துரிதமாகச் சென்றனர்[1] [2].(12)
[1] மேற்கண்ட 10, 11, 12ம் சுலோகங்கள் வி.வி.சுப்பாராவ், பீ.கீர்வானி பதிப்பில் இருந்து பொருள் கொள்ளப்பட்டிருக்கின்றன. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் படி பார்த்தால், இவற்றின் பொருள், "கோரமானவையும், கரைகளை அழிக்கும் தடாக வைரிகளும் {கரைகளை அழித்துத் தடாகங்களுக்குப் பகைவராய் இருப்பவையும்}, வெண் தந்தங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தனிமையில் திரிபவையுமான வன துவிரதங்கள் {காட்டு யானைகள்},(10) அசையும் பர்வதங்களைப் போல மண்புழுதி பூசப்பட்டவையாக கிரிகளின் முகடுகளில் ஆர்ப்பரித்தன {பிளிறிக் கொண்டிருந்தன}. மத்த துவிரதத்தின் {மதங்கொண்ட காட்டு யானையின்} தன்மையுடன் கூடிய வானரர்களும்,(11) சுக்ரீவனின் வசப்பட்டவர்களும், வனத்தில் திரியும் பிறவற்றையும், மேலே திரியும் விஹங்கமங்களையும் {பறவைகளையும்} பார்த்தவாறே துரிதமாகச் சென்றனர்.(12)" என்றிருக்கும். "வாரணம்" என்ற சொல்லுக்கும், "வானரம்" என்ற சொல்லுக்கும் உள்ள வேறுபாடே, இவ்விரு பதிப்புகளின் வாக்கிய வேறுபாட்டுக்குக் காரணமாக அமைகிறது.
[2] இரண்டாம் மோதலுக்குச் செல்லும்போது சொல்லப்படும் இந்த வர்ணனைகள் முதல் மோதலுக்கு முன் வந்திருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கம்பராமாயணத்தில் முதல் மோதலும், இரண்டாம் மோதலும் உடனே அடுத்தடுத்த நடக்கின்றன. இந்த சர்க்கம் இடைச்செருகல் என்று கருதுவதற்கு இடம் இருந்தாலும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் இந்த சர்க்கம் தவிர்க்கப்படவில்லை.
அவர்கள் துரிதமாகச் சென்று கொண்டிருந்தபோது, ரகுநந்தனனான ராமன், அங்கே மரங்கள் அடர்ந்த வனத்தைக் கண்டு, சுக்ரீவனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(13) "மேகசங்கத்தைப் போலப் படர்ந்திருப்பவையும், சுற்றிலும் கதலிகளால் {வாழைமரங்களால்} சூழப்பட்டவையுமான இந்த அடர்ந்த விருக்ஷங்கள் {மரங்கள்}, ஆகாச மேகங்களைப் போலப் பிரகாசிக்கின்றன.(14) சகாவே, என்ன இஃது என்று அறிய விரும்பும் நான் குதூஹகலமடைகிறேன். அந்தக் குதூஹலத்தை நீ தணிக்க விரும்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(15)
சுக்ரீவன், மஹாத்மாவான அந்த ராகவன் சொன்ன சொற்களைக் கேட்டபிறகு, நடந்து கொண்டே அந்த மஹத்தான வனத்தைக் குறித்து {பின்வருமாறு} கூறினான்:(16) "இராகவரே, விஸ்தீர்ணமானதும், சிரமத்தை அகற்றுவதுமான இந்த ஆசிரமத்தில், சுவை நிறைந்த கிழங்குகள், பழங்கள், நீர் ஆகியவற்றைக் கொண்ட ஏராளமான உத்யானவனங்கள் {பூங்காக்கள்} உள்ளன.(17) இங்கே, கடும் விரதங்களைப் பின்பற்றியவர்களும், தலைகீழாக ஜலத்தில் இருந்தவர்களும், நியதத்துடன் {விழிப்புடன்} கூடியவர்களும், சப்தஜனம் என்ற பெயரைக் கொண்டவர்களுமான ஏழு முனிவர்கள் வசித்திருந்தனர்.(18) சப்த ராத்திரிகளும் {ஏழு இரவுகளும்}, வாயுவை ஆகாரமாகக் கொண்டு, எழுநூறு ஆண்டுகள் சலனமில்லாமல் வசித்திருந்த அவர்கள் {அந்த ஏழு முனிவர்கள்}, தங்கள் உடல்களுடன் திவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றனர்.(19) மரங்களே பிராகாரங்களாக {வேலிகளாக / மதில்களாகச்} சூழ்ந்திருக்கும் இந்த ஆசிரமம், அவர்களின் {அந்த ஏழு முனிவர்களின்} பிரபாவத்தால், இந்திரனுடன் கூடிய ஸுராஸுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும்} நுழைய முடியாததாக இருக்கிறது.(20)
பக்ஷிகளும் {பறவைகளும்}, பிற வனசாரிகளும் {வனத்தில் திரியும் பிற விலங்குகளும்} இதை {இந்த ஆசிரமத்தைத்} தவிர்த்து விடுகின்றன. மோஹத்தால் {அறியாமையால்} இங்கே நுழைபவையும் கூட இங்கிருந்து திரும்பிப் போவதில்லை.(21) இராகவரே, இங்கே சகல அக்ஷரங்களுடன் கூடிய பூஷண {ஆபரண} ஒலிகளும், தூரியங்கள், கீதங்கள் ஆகியவற்றின் ஸ்வனமும் {தொனியும்} கேட்கும்; திவ்ய கந்தமும் {நறுமணமும்} இருக்கும்.(22) திரேதாக்னிகள் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். புறா அங்கம் அடர்ந்து சிவந்திருப்பதைப் போன்ற தூமம் {புகை}, விருக்ஷங்களின் உச்சிகளைச் சுற்றிக் கொண்டு காணப்படும்.(23) தூமத்துடன் இணைந்த உச்சிகளைக் கொண்ட விருக்ஷங்கள் மேகஜாலத்தால் மறைக்கப்பட்ட வைடூரிய கிரிகளை {மரகதமலைகளைப்} போல இதோ பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.(24) தர்மாத்மாவே, ராகவரே, உடன் பிறந்த லக்ஷ்மணருடன் சேர்ந்து அவர்களை {அந்த சப்த ஜனங்களை} உத்தேசித்து, ஒரே மனத்துடன் கைகளைக் குவித்துப் பணிவாக வணக்கஞ் செலுத்துவீராக.(25) இராமரே, புனித ஆத்மாக்களான அந்த ரிஷிகளுக்கு யாவர் வணக்கம் செலுத்துவார்களோ, அவர்களின் சரீரங்களில் {வியாதி முதலிய} அசுபம் ஏதும் தோன்றாது" {என்றான் சுக்ரீவன்}.(26)
அப்போது ராமன், தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனுடன் சேர்ந்து கைகளைக் கூப்பி, மஹாத்மாக்களான அந்த ரிஷிகளை உத்தேசித்து வணக்கஞ் செலுத்தினான்.(27) தர்மாத்மாவான ராமனும், அவனுடன் பிறந்த லக்ஷ்மணனும், சுக்ரீவனும், வானரர்களும் {இப்படி} வணங்கிய பிறகு, மனத்தில் மகிழ்ச்சியடைந்தவர்களாகப் புறப்பட்டுச் சென்றனர்.(28) அவர்கள் அந்த சப்தஜன ஆசிரமத்தில் இருந்து செல்லும் வழியில் நீண்ட தூரம் கடந்த பிறகு, வாலியால் பாலிக்கப்படுவதும், வெல்வதற்கரியதுமான அந்த கிஷ்கிந்தையைக் கண்டனர்.(29) அப்போது உதித்த உக்கிர தேஜஸ்ஸுடன் ராமானுஜனும் {ராமனின் தம்பியான லக்ஷ்மணனும்}, ராமனும், அந்த வானரர்களும், சத்ரு வதத்திற்காக {பகைவனைக் கொல்வதற்காகத்} தங்கள் சஸ்திரங்களை எடுத்துக் கொண்டு, சுரேஷாத்மஜனின் {தேவர்களின் தலைவன் இந்திரனின் மகனான வாலியின்} வீரியத்தால் பாலிக்கப்படும் புரியை {கிஷ்கிந்தையை} மீண்டும் அடைந்தனர்[2].(30)
[2] பின் வரும் கம்பராமாயணப் பாடலில் ரிச்யமூகத்திலிருந்து கிஷ்கிந்தை வரையுள்ள தொலைவு பத்து யோஜனைக்கும் மேல் என்ற குறிப்புள்ளது. அதாவது கௌடில்யரின் அர்த்தசாஸ்திர அளவுகோல்படி இங்கே குறிப்பிடப்படும் தொலைவு 90.9 மைல்கள் / 136.35 கி.மீ. ஆகும்.அன்னது ஆய குன்றின் ஆறுசென்ற வீரர் ஐந்தொடு ஐந்துஉன்னல் ஆய யோசனைக்கும்உம்பர் ஏறி இம்பரில்பொன்னின் நாடு இழிந்தது அன்னவாலி வாழ் பொருப்பு இடம்துன்னினார்கள் செய்வது என்னைஎன்று நின்று சொல்லுவார்- கம்பராமாயணம் 3943ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: அத்தன்மைவாய்ந்த குன்றின் வழியில் சென்ற அந்த வீரர்கள் ஐந்தும் ஐந்தும் {பத்து} என்று எண்ணுதற்குரிய யோசனை தூரத்திற்கும் மேலாக ஏறிச் சென்று இவ்வுலகில் தேவலோகமே இறங்கி வந்தாற்போல வாலி வாழும் மலையின் இடத்தை அடைந்து, "இனி செய்வது என்ன?" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 13ல் உள்ள சுலோகங்கள்: 30
Previous | | Sanskrit | | English | | Next |