The first encounter | Kishkindha-Kanda-Sarga-12 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கணை எய்வதில் தன் திறனை வெளிப்படுத்திய ராமன்; வாலியுடன் நடந்த முதல் மோதலில் தோல்வியுற்ற சுக்ரீவன்; அடையாளம் காண்பதில் உள்ள சிரமத்தை விளக்கிய ராமன்...
மஹாதேஜஸ்வியான ராமன், நன்கு பேசிய சுக்ரீவனின் அந்தச் சொற்களைக் கேட்டு, நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகத் தன் கார்முகத்தை {வில்லை} எடுத்தான்.(1) மதிப்பை அளிப்பவனான அவன், அந்த பயங்கர தனுவைப் பிடித்து, திசைகள் அனைத்தையும் நாணொலியால் நிறைத்து, ஏக சரத்தைப் பொருத்தி சாலத்தை {ஒரு கணையை வில்லில் பொருத்தி ஆச்சா மரத்தைக்} குறிபார்த்தான்.(2) பலவானால் ஏவப்பட்டதும், சுவர்ணத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டதுமான அந்த பாணம், கிரி பிரஸ்தத்தின் சப்த சாலங்களையும் {மலைத்தாழ்வரையில் இருந்த ஏழு ஆச்சா மரங்களையும்} துளைத்து பூமிக்குள் புகுந்தது.(3) மஹாவேகம் கொண்ட அந்த சாயகம் {கணை}, ஒரு முஹூர்த்தத்தில் சாலங்களைப் பிளந்து வெளியேறி மீண்டும் அவனது தூணிக்குள் வேகமாக பிரவேசித்தது.(4)
வானரபுங்கவன் {சுக்ரீவன்}, ராமனின் சர வேகத்தால் ஆழமாகப் பிளக்கப்பட்ட அந்த சப்த சாலங்களையும் கண்டு வியப்பின் உச்சத்தை அடைந்தான்.(5) பரமபிரீதியுடன் கூடிய அந்த சுக்ரீவன், ராகவனை நோக்கிக் கைக்கூப்பினான். ஒலியெழுப்பும் பூஷணங்களுடன் {ஆபரணங்களுடன்} அவன், பூமியில் தலை தீண்ட விழுந்து வணங்கினான்.(6)
அந்தக் கர்மத்தை {செயலைக்} கண்டு மகிழ்ச்சியடைந்தவன் {சுக்ரீவன்}, சர்வ அஸ்திர நிபுணர்களில் சிறந்தவனும், சூரனும், தன் முன்னிலையில் இருப்பவனுமான அந்த தர்மஜ்ஞனிடம் {தர்மத்தை அறிந்தவனான ராமனிடம்} இதைச் சொன்னான்:(7) "புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, பிரபோ, சமரில் நீர், இந்திரனுடன் கூடிய சர்வ ஸுரர்களையுங்கூட பாணங்களால் கொல்லும் சமர்த்தர் எனும்போது, வாலியைக் குறித்து சொல்வதற்கென்ன?(8) காகுத்ஸ்தரே, எவன் ஏக பாணத்தால் சப்தமஹா சாலங்களையும், கிரியையும், பூமியையும் துளைப்பானோ, அத்தகையவனுக்கு எதிரில் போர் முகப்பில் எவன் நிற்பான்?(9) இன்று மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பான உமது நட்பை அடைந்து என் சோகம் நீங்கியது. இப்போது நான் பரமபிரீதி அடைகிறேன்.(10) காகுத்ஸ்தரே, உடன்பிறந்தான் ரூபத்திலுள்ள வைரியான அந்த வாலியை, இன்றே என் பிரிய அர்த்தத்திற்காக {விருப்பத்திற்கிணங்கக்} கொல்வீராக. நான் இதோ கைக்கூப்புகிறேன்" {என்றான் சுக்ரீவன்}.(11)
அப்போது மஹாபிராஜ்ஞனான {பெரும் நுண்ணறிவு மிக்கவனான} ராமன், பிரிய தரிசனம் தருபவனும் {இனிய தோற்றங்கொண்டவனும்}, லக்ஷ்மணனை அண்டி நிற்பவனுமான சுக்ரீவனைத் தழுவிக் கொண்டு {பின்வரும்} இந்தச் சொற்களில் மறுமொழி கூறினான்:(12) "சுக்ரீவா, இங்கிருந்து சீக்கிரமாக கிஷ்கிந்தைக்குச் செல்வோம். நீ முன் செல்வாயாக. சென்று, பெயரளவில் உடன்பிறந்தானாக இருக்கும் வாலியை அழைப்பாயாக {வாலிக்கு அறைகூவல் விடுப்பாயாக}" {என்றான் ராமன்}.(13)
அவர்கள் அனைவரும் வாலியின் கிஷ்கிந்தாபுரிக்கு துரிதமாகச் சென்று, அடர்த்தியான வனத்தின் விருக்ஷங்களுக்குப் பின்னால் மறைந்து காத்திருந்தனர்.(14) சுக்ரீவனும், {தன் இடைக்கச்சையை} இறுகக் கட்டிக் கொண்டு, வாலியை அழைக்கும் காரணத்திற்காக அம்பரத்தை {வானத்தைப்} பிளப்பதைப் போன்ற பெரும் நாதத்துடன் கோரமாக கர்ஜித்தான்[1].(15) மஹாபலவானான வாலி, உடன்பிறந்தானின் கர்ஜனையைக் கேட்டுக் குரோதமடைந்து, உச்சியில் இருந்து அஸ்தத்திற்கு வரும் பாஸ்கரனை {உச்சியில் இருந்து அஸ்தமலைக்கு வரும் சூரியனைப்} போலப்[2] பெருங்கோபத்துடன் வெளியே வந்தான்.(16) அப்போது வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இடையில், ககனத்தில் புதன், அங்காரக கிரகங்களுக்கிடையில் {வானில் புதன், செவ்வாய் கோள்களுக்கிடையில்} நேர்வதைப் போன்ற ஆரவாரத்துடன் கூடிய கோரமான யுத்தம் நேர்ந்தது.(17) உடன்பிறந்தவர்களான அவ்விருவரும், குரோதத்தில் மூழ்கி, சமரில் அசனிகளுக்கு {இடிகளுக்கு} ஒப்பான உள்ளங்கைகளாலும், வஜ்ரங்களுக்கு ஒப்பான முஷ்டிகளாலும் அன்யோன்யம் {ஒருவரோடு ஒருவர்} மோதினர்.(18)
[1] உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமைவரைத் தடந் தோளினான் மனத்தின் எண்ணினான்சிரித்தனன் அவ்வொலி திசையின் அப்புறத்துஇரித்தது அவ்வுலகம் ஓர் ஏழொடு ஏழையும்- கம்பராமாயணம் 3948ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: சினம் கொண்டவனாகத் தன்னுடன் போர் செய்ய எதிர்த்து வந்திருக்கும் இளவலை {தம்பியான சுக்ரீவனை}, மலை போன்ற தோள்களைக் கொண்டவன் {வாலி} தன் மனத்தில் எண்ணிச் சிரித்தான். அவ்வொலி பதினான்கு உலகங்களையும் கடந்து திசைகளுக்கு அப்பால் ஓடச் செய்தது.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "உரையாசிரியர்களில் சிலர், "இது வாலியின் அஸ்தமனத்தைக் குறிக்கிறது" என்றும், வேறு சிலர், "இந்த முதல் மோதலில் வாலி வீழாததால் இங்கு இது பொருத்தமற்றது" என்றும் வெவ்வேறு வகையில் சொல்கிறார்கள். இதற்குப் பதிலாக, "கரிய மேகத்தின் பின்னால் இருந்து வெளிப்படும் சூரியனைப் போல" என்று சில பழைய பதிப்புகளில் இருக்கிறது" என்றிருக்கிறது.
அப்போது, தனுஷ்பாணியான {கையில் வில்லுடன் கூடிய} ராமன், இரட்டையர்களான அசுவினி தேவர்களைப் போலக் காட்சிக்கு அன்யோன்யம் ஒத்திருக்கும் இரட்டையர்களான அவ்விரு வீரர்களையும் {வாலியையும், சுக்ரீவனையும்} கவனித்தான்.(19) இராகவன், சுக்ரீவனையோ, வாலியையோ அடையாளந் தெரிந்துகொள்ள முடியாததால், {உயிருக்கு} முடிவை ஏற்படுத்தும் சரத்தை ஏவும் புத்தியை அடைந்தானில்லை.(20) இதற்கிடையில் அந்த வாலியால் பங்கம் செய்யப்பட்ட {நன்கு புடைக்கப்பட்ட} சுக்ரீவன், நாதனான ராகவனைக் காணாமல் ரிச்யமூகத்தை நோக்கி ஓடினான்.(21) குரோதத்துடன் கூடிய வாலியால் விரட்டப்பட்டவனும், களைத்தவனும், உதிரத்தால் அங்கங்கள் நனைந்தவனும், தாக்குதல்களால் சிதைந்தவனுமான அவன் {சுக்ரீவன்} மஹாவனத்திற்குள் பிரவேசித்தான்.(22)
மஹாபலவானான அந்த வாலி, வனத்தில் பிரவேசிக்கும் அவனை {சுக்ரீவனைக்} கண்டு, "நீ தப்பினாய்" என்று சொல்லிவிட்டு, {மதங்க முனிவரின்} சாபத்திற்குப் பயந்து அங்கிருந்து திரும்பிச் சென்றான்.(23)
இராகவனும் {ராமனும்}, தன்னுடன் பிறந்தானுடனும் {லக்ஷ்மணனுடனும்}, ஹனுமானுடனும், வானரன் சுக்ரீவன் இருந்த அந்த வனத்திற்குச் சென்றான்.(24) சுக்ரீவன், லக்ஷ்மணனுடன் வரும் அந்த ராமனைக் கண்டு, வெட்கத்தால் வசுதையை {பூமியை} நோக்கியவாறே தீனமாக {பரிதாபகரமாக} இதைச் சொன்னான்:(25) "விக்ரமத்தை வெளிப்படுத்திய நீர், "அழைப்பாயாக" என்று சொன்னீர். வைரியால் புடைக்கப்பட்டேன். நீர் இப்போது என்ன செய்தீர்?(26) இராகவரே, "அந்த வேளையில் வாலியைக் கொல்ல முடியாது" என்று உள்ளபடியே நீர் சொல்லியிருக்க வேண்டும். அப்போது இங்கிருந்து நான் சென்றிருக்க மாட்டேன்" {என்றான் சுக்ரீவன்}.(27)
மஹாத்மாவான அந்த சுக்ரீவன், தீனமான சொற்களைக் கருணை உண்டாகும் வகையில் சொல்லிக் கொண்டிருந்தபோது, ராகவன் மீண்டும் {இவ்வாறு} சொன்னான்:(28) "தாதா {ஐயா}, சுக்ரீவா, எதனால் அத்தகைய இந்த பாணத்தை நான் ஏவவில்லை என்ற காரணத்தைக் கேட்டு உன் குரோதம் நீங்கட்டும்.(29) சுக்ரீவா, அலங்காரம், வேஷம் {தோற்றம்}, பிரமாணம் {உடல் உருவம்} ஆகியவற்றில் நீயும், வாலியும் பரஸ்பரம் காண ஒத்தவர்களாக இருக்கிறீர்கள்.(30) வானரா, ஸ்வரத்தாலும் {குரலாலும்}, பிரகாசத்தாலும், பார்வையாலும், விக்ரமத்தாலும் உங்கள் இருவருக்கிடையிலும் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(31) வானரோத்தமா, எனவே ரூபத்தோற்ற ஒற்றுமையில் மோஹமடைந்ததால் {குழப்பமடைந்ததால்}, மஹாவேகத்துடன் சத்ருவை அழிக்கும் சரத்தை நான் ஏவவில்லை.(32)
{உங்கள் இருவரின்} ஒத்த தோற்றத்தால் நான் சந்தேகமடைந்தேன். "ஜீவிதத்திற்கு முடிவை ஏற்படுத்தவல்ல {கணையை ஏவும்} கோரம், நம்மிருவருக்கிடையாலன மூலத்தை {வேரை} அழித்துவிடக்கூடும்" என்றே நான் {என்று நினைத்தே நான் இவ்வாறு} செயல்பட்டேன்.(33) வீரா, கபீஷ்வரா {குரங்குகளின் தலைவா}, என் அஞ்ஞானத்தாலும், லாகவத்தாலும் {நான் பாணம் எய்து} நீ பீடிக்கப்பட்டால், என்னுடைய அசட்டுத்தனமும், சிறுபிள்ளைத்தனமும் நிறுவப்படும்.(34) அபயம் தரும் பெயரில் வதம் செய்யும் அற்புதம் மஹத்தான பாதகமாகும். நான், லக்ஷ்மணன், வரவர்ணினியான {அழகிய நிறம் படைத்த} சீதை என நாங்கள் அனைவரும் உன் அதீனத்தில் {உன்னைச் சார்ந்தவர்களாக} இருக்கிறோம். இந்த வனத்தில் உன்னைச் சரணடைந்தோம்.(35,36அ)
வானரா, எனவே மீண்டும் சென்று யுத்தம் செய்வாயாக. என்னிடம் சந்தேகம் வேண்டாம். இந்த முஹூர்த்தத்திலேயே போரில் நான் வாலியை ஒரே பாணத்தால் வீழ்த்தி மஹீதலத்தில் {தரையில்} உருளச் செய்வதை நீ பார்ப்பாய்.(36ஆ,37) வானரேஷ்வரா, துவந்த யுத்தத்தில் நீ ஈடுபடும்போது, எதைக் கொண்டு உன்னை அடையாளம் காணமுடியுமோ, அதை உனக்கான அடையாளமாக ஏற்படுத்திக் கொள்வாயாக.(38) இலக்ஷ்மணா, சுப லக்ஷணத்துடன் பூத்திருக்கும் இந்த கஜபுஷ்பியை {கொடிப்பூவைப்}[3] பிடுங்கி, மஹாத்மாவான இந்த சுக்ரீவனின் கண்டத்தில் இடுவாயாக {கழுத்தில் போடுவாயாக}" {என்றான் ராமன்}[4].(39)
[3] மலைந்தபோது இனைந்து இரவி சேய் ஐயன்மாடு அணுகிஉலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம்குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடிப்பூமிலைந்து செல்க என விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும்- கம்பராமாயணம் 3995ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: கடுமையாகப் போர் செய்த பிறகு, சூரியன் மைந்தன் {சுக்ரீவன்} மிக வருந்தி ஐயனை {ராமனை} அணுகி, வருந்திய மனத்துடன் வாட்டமடைந்து பணிந்து நிற்க, "உள்ளம் குலைந்திடேல் {வருந்த வேண்டாம்}. உங்கள் இருவருக்கிடையில் வேற்றுமை தெரியவில்லை. கொடிப்பூவினைச் சூடிச் செல்வாயாக" என்று சொல்லி {ராமன்} அனுப்பினான். {கொடிப்பூ சூடிய சுக்ரீவன்} மீண்டும் வாலியை எதிர்த்துச் சென்றான்.
[4] போருக்குச் செல்லும்போது தங்கள் அடையாளம் தெரிவதற்காக சோழர்கள் ஆத்திப்பூவையும், சேரர்கள் போந்தைப்பூவையும், பாண்டியர்கள் வேப்பம்பூவையும், பல்லவர்கள் தொண்டைப்பூவையும் சூடுவார்கள். மேலும் படையெடுப்பவர் வஞ்சிப்பூவையும், படையெடுப்பைத் தடுப்பவர் காஞ்சிப்பூவையும் அணிவார்கள். பெரும்போர் நிகழ்வதற்கு முன் தும்பைப்பூ அணிவதும், வெற்றி அடைந்த பிறகு வாகைப்பூ சூடுவதும் அக்காலத்தின் வழக்கம்.
அப்போது லக்ஷ்மணன், கிரியின் அடிவாரத்தில் முளைத்திருக்கும் மலர்களுடன் கூடிய அந்த கஜபுஷ்பியைப் பிடுங்கி அவனது கண்டத்தில் இட்டான்.(40) கண்டத்தைச் சுற்றிய லதையுடன் {கொடியுடன்} கூடிய அந்த ஸ்ரீமான் {சுக்ரீவன்}, கொக்குகளின் வரிசையுடன் கூடிய சந்தியா காலத்து மழைமேகத்தைப் போன்ற அழகுடன் திகழ்ந்தான்.(41) ஒளிரும் உடலுடன் கூடிய அவன் {சுக்ரீவன்}, ராமனின் வாக்கியங்களால் சமாஹிதம் {தேற்றம்} அடைந்து, மீண்டும் ராமனுடன் கிஷ்கிந்தைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(42)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 12ல் உள்ள சுலோகங்கள்: 42
Previous | | Sanskrit | | English | | Next |