Monday 26 September 2022

கொடூரியே | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 073 (28)

O, cruel one | Ayodhya-Kanda-Sarga-073 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் கெடுபேற்றை நினைத்து வருந்திய பரதன்; கைகேயியை நிந்தித்தது; ராமனை அயோத்திக்கு மீண்டும் அழைத்து வந்து, அவனுக்குத் தொண்டாற்ற எடுத்த தீர்மானம்...

Bharata and Kaikeyi

பிதா {தசரதர்} குறித்த விருத்தத்தையும் {செய்தியையும்}, உடன்பிறந்தோர் {ராம லஷ்மணர்} நாடு கடத்தப்பட்டதையும் கேட்ட பரதன், துக்கத்தில் மூழ்கியவனாக இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "பிதாவையும், பிதாவுக்கு சமமான உடன்பிறந்தவரையும் இழந்து துக்கத்தால் அழுதுபுலம்பும் எனக்கு இப்போது ராஜ்ஜியத்தால் என்ன பயன்?(2) இராஜரை பிரேதபாவம் {சடல நிலையை} அடையச் செய்தாய். இராமரை தாபஸராக்கிவிட்டாய் {தபஸ்வியாக்கிவிட்டாய்}. இரணத்தில் {புண்ணில்} உப்பிட்டதைப் போல எனக்கு துக்கத்துக்கு மேல் துக்கத்தைக் கொணர்ந்தாய்.(3) காலராத்ரி {பிரளய கால இரவைப்} போல எங்கள் குலத்தை அழிக்க வந்தாய். அங்காரத்தை {செழுந்தீயைக்} கட்டித் தழுவினோம் என்று என் பிதா அறிந்தாரில்லை.(4)

பாபதர்சினியே {பாபத்திலேயே கண்களைக் கொண்டவளே}, என் பிதாவை மிருத்யு {மரணம்} அடையச் செய்தாய். குலபாம்சினியே {குலத்தைக் கெடுக்க வந்தவளே}, உன் மோகத்தால் இந்தக் குலம் சுகமற்றுப் போனது.(5) சத்தியசந்தரும், பெரும்புகழ்பெற்றவரும், என் பிதாவுமான தசரத நிருபர் {மன்னர்}, உன்னை அடைந்து தீவிர துக்கத்தையும், சந்தாபத்தையும் {மனவருத்தத்தையும்} அடைந்து இப்போது மாண்டிருக்கிறார்.(6) தர்மவத்சலரும், என் பிதாவுமான மஹாராஜாவை ஏன் கொன்றாய்? இராமரை ஏன் வனத்திற்கு நாடுகடத்தினாய்?(7) 

புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்ட கௌசல்யையும், சுமித்ரையும், என் ஜனனீயான {என்னைப் பெற்றவளான} உன்னை அடைந்து ஜீவித்திருப்பது {பிழைத்திருப்பது} சாத்தியமில்லை.(8) அந்த தர்மாத்மா {ராமர்}, பெரியோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை அறிந்தவர். அந்த ஆரியர், தன் மாதாவிடம் எவ்வாறு நடந்து கொள்வாரோ அவ்வாறே உன் வழக்கிலும் உன்னத நடத்தையுடன் நடந்து கொண்டார்.(9) அதேபோலவே, தீர்க்கதரிசினியும், தர்மத்தில் நிலைபெற்றவளும், என் ஜேஷ்ட மாதாவுமான {என் பெரியம்மாவுமான} கௌசல்யையும், பாகினியை {உடன்பிறந்தவளைப்} போலவே உன்னிடம் நடந்து கொண்டாள்.(10) பாபியே, கிருதாத்மாவான அவளது புத்திரரை {தூய மனம் கொண்ட கௌசல்யையின் மகனை} மரவுரி உடுக்கச் செய்து, வனவாசம் அனுப்பிவிட்டு நீ வருந்தாமல் இருப்பதேன்?(11) சூரரும், கிருதாத்மாவும் {தன்னடக்கம் கொண்டவரும்} புகழ்பெற்றவருமான அந்த அபாபதர்சனரை {பாபமற்றதிலேயே கண்களைக் கொண்டவரை}, மரவுரி உடுக்கச் செய்து நாடுகடத்தியதற்கு என்ன காரணத்தைக் காண்கிறாய்?(12)

இராமரைக் குறித்து நான் நினைப்பதை லுப்தையான {பேராசைக்காரியான} நீ உண்மையில் அறியமாட்டாய். இராஜ்ஜியத்திற்காக நீ இந்த மஹா அனர்த்தத்தைக் கொண்டு வந்தாய்.(13) புருஷவியாகரர்களான {மனிதர்களிற்புலிகளான} ராமரையும், லக்ஷ்மணனையும் காணாமல், எந்த சக்தி பிரபாவத்தால் என்னால் ராஜ்ஜியத்தை ரக்ஷிக்க {பாதுகாக்க} இயலும்?(14) மஹாபலரும், தர்மாத்மாவுமான மஹாராஜா {தசரதர்}, மேருவனத்தை நம்பியிருந்த மேருவைப் போல நித்தியம் அவரையே {ராமரையே} எதிர்பார்த்திருந்தார்.(15) பெரும்பளுவைச் சுமக்கவல்ல பெருங்காளையின் பாரத்தை சுமக்கப் போகும் இளங்கன்றைப் போல நான் எந்த ஓஜஸால் {திண்மையால்} இந்த பாரத்தை அடைந்து, தாங்கப் போகிறேன்.(16) {சமாதி உபாயங்களாலான} யோகத்தாலோ, {தாரணை முதலியவற்றால் உண்டாகும்} புத்திபலத்தாலோ ஒருவேளை எனக்கு சக்தி இருந்தாலும் புத்திரகர்த்தினியான உன் பேராசையை {பிள்ளையின் நலனில் பேராசை கொண்டவளான உன் பேராசையை} நான் நிறைவேற்றமாட்டேன்.(17) இராமர், சதா உன்னை மாதாவாகப் பார்க்காமல் இருந்திருந்தால், பாபநிச்சயமுள்ள உன்னைத் துறக்கவும் எனக்கு தயக்கமேதும் ஏற்பட்டிருக்காது[1].(18) 

[1] கொடிய வெங்கோபத்தால் கொதித்த கோளரி
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன்
இடி உரும் அனைய வெம்மொழி இயம்புவான்

- கம்பராமாயணம் 2171ம் பாடல்

பொருள்: மிகக் கொடிய கோபத்தால் மனங்கொதித்த சிங்கமான பரதன் கடுஞ்செயல் செய்த அவளைத் தாய் என்று நினைக்கவில்லை என்றாலும் மூத்தவனாகிய ராமன் கோபம் கொள்வான் என்று அஞ்சி நின்றான். பேரிடிக்கு ஒப்பான கொடிய சொற்களை அவன் சொல்லத் தொடங்கினான்.

நன்னடத்தை தொலைந்த பாபதரிசினியே, நம் பூர்வர்களால் {மூதாதையரால்} விலக்கப்பட்ட இந்த புத்தி உன்னில் எழுந்தது எவ்வாறு?(19) குலத்தில் அனைவருக்கும் ஜேஷ்டனே {மூத்தவனே} ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்யப்பட வேண்டும், உடன் பிறந்தவர்களில் எஞ்சியோர் அவனிடம் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.(20) கொடூரியே, ராஜதர்மத்தை நீ மதிக்கவில்லை, அல்லது சாஸ்வத கதியை {நிரந்தர நடைமுறையை} நீ அறியாமல் இருக்கிறாய் என்று நான் நினைக்கிறேன்.(21) இராஜவிருத்தப்படி ஜேஷ்டனே எப்போதும் ராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படுகிறான். இது {இந்த நடைமுறை} ராஜர்கள் அனைவருக்கும் சமமானது; விசேஷமாக {அதிலும் குறிப்பாக} இக்ஷ்வாகுக்களின் வழக்கில் நடைபெறுவது.(22) தர்மத்தை ரக்ஷிப்பவர்களும், குல வழி நன்னடத்தை கொண்டவர்களுமான அவர்களின்  சாரித்ர சௌண்டீர்யம் {இக்ஷ்வாகுக்களின் குலசரித்திரத்தைக் குறித்த அவர்களின் கர்வம்} இங்கே உன்னை அடைந்ததால் தொலைந்தேவிட்டது.(23) 

உன் குல மூதாதையரான ஜனேந்திரர்களும் {மக்கள் தலைவர்களும்} பெருஞ்சிறப்புடையவர்களே. இந்த மதிகேடு உன் புத்தியில் எப்படி உண்டானது?(24) பாபநிச்சயம் கொண்டவளே, என் ஜீவிதாந்தகரமான {என் உயிரையே மாய்க்கும்} விசனத்தை {துன்பத்தை} விளைவித்தவளான உன்னுடைய ஆசையை நான் ஒருபோதும் நிறைவேற்ற மாட்டேன்.(25) நான் உனக்குப் பிரியமற்றதைச் செய்யப் போகிறேன். பாபமற்றவர்களும், ஜனங்களின் பிரியத்திற்குரியவர்களுமான என்னுடன் பிறந்தாரை வனத்தில் இருந்து இப்போதே அழைத்து வரப் போகிறேன்.(26) நான், திடமான அந்தராத்மா கொண்ட ராமரை மீண்டும் அழைத்து வந்து, தேஜஸ்மிக்கவரான அவரது தாசனாகப் போகிறேன் {அடியவனாகப் போகிறேன் / தொண்டனாகப் போகிறேன்}" {என்றான் பரதன்}.(27)

மஹாத்மாவான அந்த பரதன், பிரியமற்ற வாக்கிய கணங்களை {பல வாக்கியங்களை} இவ்வாறு பேசிவிட்டு, பர்வதக் குகைக்குள் இருக்கும் சிம்மத்தைப் போல மீண்டும் மீண்டும் கர்ஜித்துக் கொண்டிருந்தான்.(28)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 073ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை