Monday 2 May 2022

மெய்த்திறத்து விளங்கிழை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 025 (47)

She, who wore truth as an ornament | Ayodhya-Kanda-Sarga-025 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் பாதுகாப்புக்காக தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிய கௌசல்யை; சீதையின் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்ற ராமன்...

Kashalya Rama

பெருந்தகைமையுடைய அந்த மாதா {கௌசல்யை}, தன் ஆயாசத்தை விலக்கி வைத்துவிட்டு[1], உள்ளங்கையில் நீர் பருகி தூய்மையடைந்து, ராமனின் நலத்திற்கான மங்கல காரியங்களைச் செய்து,(1) "இரகோத்தமா {ரகு குல உத்தமனான ராமா}, உன்னைத் தடுக்க முடியாது. இனி சென்று சீக்கிரம் திரும்புவாயாக. சாதுக்களின் வழியில் இசைந்து நடப்பாயாக.(2) இராகவசார்தூலா {ரகு குலப் புலியே}, எந்த தர்மத்தை நீ துணிவுடனும், நியமத்துடனும் வளர்க்கிறாயோ, அந்த தர்மமே உன்னைப் பாதுகாக்கும்.(3) 

[1] இத்திறத்த எனைப் பல வாசம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா
எத்திறத்தும் இறக்கும் இந்நாடு எனா
மெய்த்திறத்து விளங்கிழை உன்னுவாள்.

- கம்பராமாயணம் 1631ம் பாடல்

பொருள்: இவ்வாறு பல வாசகங்களைச் சொன்ன மகனின் சொற்களை மனத்தில் கொண்டு, எப்படியும் இவன் இந்நாட்டைக் கடந்து செல்வான் என்று சத்தியத்தையே அணிகலனாக அணிந்தவள் மனத்தில் கருதினாள்.

புத்திரா, நாற்சந்திகளிலும், ஆலயங்களிலும் நீ வணங்குபவர்களும் {தேவர்களும்}, மஹரிஷிகளும் வனத்தில் உன்னைப் பாதுகாக்கட்டும்.(4) மதிமிக்க விஷ்வாமித்ரரால் கொடுக்கப்பட்ட அஸ்திரங்கள், குணத்தில் நிறைந்திருக்கும் உன்னை எப்போதும் பாதுகாக்கட்டும்.(5) புத்திரா, மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவனே}, பிதாவுக்குச் செய்த தொண்டாலும், மாதாவுக்குச் செய்த தொண்டாலும், சத்தியத்தாலும் பாதுகாக்கப்பட்டு நீ சிரஞ்சீவியாக இருப்பாயாக.(6) 

நரோத்தமா {மனிதர்களில் உத்தமா}, பவித்ரமான அக்னியை வளர்க்கும் சமித்துகளும் {விறகுக் குச்சிகளும்}, தர்ப்பங்களும், தர்ப்பைப் புல் வளையங்களும், வேதிகைகளும் {வேள்விக்குண்டங்களும்}, ஆலயங்களும், தேவபூஜை செய்யும் பற்பல இடங்களும், மலைகளும், மரங்களும், புதர்களும், மடுக்களும், பறவைகளும், பன்னகங்களும் {பாம்புகளும்}, சிம்மங்களும் உன்னைப் பாதுகாக்கட்டும்.(7,8அ) சாத்தியர்களும், விஷ்வதேவர்களும், மருதர்களும், மஹரிஷிகளும் உனக்கு மங்கலத்தை அருளட்டும். தாதா, விதாதா[2] ஆகியோரும் மங்கலத்தை அருளட்டும். பூஷன், பகன், ஆர்யமன் ஆகியோரும், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட சர்வலோகபாலர்களும் மங்கலத்தை அருளட்டும்.(8ஆ,9) ருதுக்களும் {ஆறு பருவகாலங்களும்}, பக்ஷங்களும், மாதங்களும், சம்வத்சரங்களும் {வருடங்களும்}, இரவுகளும், பகல்களும், முஹூர்த்தங்களும் எப்போதும் உனக்கு மங்கலத்தை அருளட்டும்.(10) 

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தாத்ரி {தாதா}, விதாத்ரி {விதாதா} ஆகியோர் அவ்வப்போது ஒரே பொருளில் சொல்லப்படுபவர்களே. தாத்ரிக்கு படைப்பின் பொருளும், விதாத்ரிக்கு விதிக்கும் பொருளும் மொழிபெயர்ப்பாக அமையும். பூஷன், பகன், ஆர்யமன் ஆகியோர் பனிரெண்டு ஆதித்யர்களில் மூவராவர். அவர்களை சூரிய தேவனின் மூன்று அம்சங்களாக {தன்மைகளாகப்} பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.

புத்திரா, ஸ்மிருதிகளும் {வேதங்களும், தக்ஷனின் மகளும், தர்மனின் மனைவியுமான} திருதிஷையும், தர்மனும் எங்கும் உன்னைப் பாதுகாக்கட்டும் {தியானயோகமும், தர்மமும் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து உன்னைப் பாதுகாக்கட்டும்}. பகவானும், தேவனுமான ஸ்கந்தன், சோமன் {சந்திரன்}, பிருஹஸ்பதி ஆகியோரும், சப்தரிஷிகளும், நாரதரும் எங்கும் உன்னை ரக்ஷிக்கட்டும்.(11,12அ) புத்திரா, திசைகளும், என்னால் துதிக்கப்படும் சித்தர்களான திக்குகளின் ஈச்வரர்களும் அந்த வனத்தில் எங்கும் எப்போதும் உன்னைப் பாதுகாக்கட்டும்.(12ஆ,13அ) சைலங்கள் {மலைகள்} அனைத்தும், சமுத்திரங்களின் ராஜனான வருணன், சுவர்க்கம், பிருத்வி {பூமி}, இடையிலுள்ள வெளி, நதிகள் நட்சத்திரங்கள், தேவதைகளுடன் கூடிய கிரகங்கள், பகல், இரவு, சந்திப் பொழுதுகள் ஆகியவை அனைத்தும் வனத்தில் வசிக்கப் போகும் உன்னைப் பாதுகாக்கட்டும்.(13ஆ-15அ) 

புண்ணிய ருதுக்கள் {பருவகாலங்கள்} ஆறும், மாதங்களும், சம்வத்சரங்களும் {வருடங்களும்}, கலை, காஷ்டை ஆகியவையும் உனக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.(15ஆ,16அ) ஆதித்யர்களும் {அதிதியின் மகன்களான தேவர்களும்}, தைத்தியர்களும் {திதியின் மகன்களும்}, மதிமிக்கவனாக முனிவேஷத்தில் மஹாவனத்தில் திரியப்போகும் உனக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.(16ஆ,17அ) புத்திரகா, ரௌத்திரமானவர்களும், குரூர கர்மங்களைச் செய்பவர்களுமான ராக்ஷசர்களிடமும், பிசாசங்கள் அனைத்திடமும், ஊனுண்ணும் விலங்குகள் அனைத்திடமும் உனக்கு பயம் நேராதிருக்கட்டும்.(17ஆ,18அ) 

ஊடுருவ முடியாத அந்தக் கானகத்தில் பிலவகங்கள் {குரங்குகள்}, விருச்சிகங்கள் {தேள்கள்}, காட்டு ஈக்கள், கொசுக்கள், பாம்புகள், பூச்சிகள் ஆகியவை உன்னை பீடிக்காதிருக்கட்டும்.(18ஆ,19அ) புத்திரகா, தந்தங்களுடன் கூடிய பெரும் யானைகள், வியாகரங்கள் {புலிகள்}, ரிக்ஷங்கள் {கரடிகள்}, ரௌத்திரமானவையும், கொம்புகளுடன் கூடியவையுமான மஹிஷங்கள் {எருமைக்கடாக்கள்} ஆகியவை உன்னைப் பகைக்காதிருக்கட்டும்.(19ஆ,20அ) புத்திரா, நரமாமிச போஜனம் செய்யும் ரௌத்திரமான பிற விலங்குகளும், இங்கே என்னால் வழிபடப்பட்டவையாக உன்னை ஹிம்சிக்காதிருக்கட்டும்.(20ஆ,21அ) இராமா, புத்திரகா, நீ செல்லும் பாதைகள் மங்கலமானவையாகட்டும். உன் பராக்கிரமம் சக்திமிக்கதாக இருக்கட்டும். அனைத்தையும் நிறைவேற்றும் ஸ்வஸ்திமானாக {மகிழ்ச்சிமிக்கவனாக} நீ இருப்பாயாக.(21ஆ,22அ) 

தேவர்கள் அனைவரும், அந்தரத்திலும், இங்கும் உன்னை பகைக்கும் யாவரிடம் இருந்து உன்னைப் பாதுகாக்கட்டும்.(22ஆ,23அ) இராமா, என்னால் வழிபடப்படும் குரு, சோமன், சூரியன், தனதன் {தனத்தின் அதிபனான குபேரன்}, யமன் ஆகியோர் தண்டகாரண்யத்தில் வசிக்கப் போகும் உன்னை பாதுகாக்கட்டும்.(23ஆ,24அ) இரகுநந்தனா, அக்னி, வாயு, தூமம் ஆகியவற்றிலிருந்தும், ரிஷிகளின் முகத்தில் {வாயில்} இருந்தும் வெளிப்படும் மந்திரங்கள், நீ நீராடும் நேரத்தில் உன்னைப் பாதுகாக்கட்டும்.(24ஆ,25அ) சர்வலோக பிரபுவும் {சிவனும்}, பிரம்மனும், பூதங்களை {உயிரினங்களை} ஆதரிப்பவனும் {விஷ்ணுவும்}, ரிஷிகளும், எஞ்சிய ஸுரர்களும் {தேவர்களும்} வனவாசியாகப் போகும் உன்னைப் பாதுகாக்கட்டும்" {என்றாள் கௌசல்யை}.(25ஆ,26அ)

நீள்விழிகளைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவள் {கௌசல்யை}, இவ்வாறு சொல்லிவிட்டு, மாலைகள், கந்தங்கள் {சந்தனம்} ஆகியவற்றைக் கொண்டும், துதிக்குத் தகுந்த சொற்களைக் கொண்டும் ஸுரகணங்களை {தேவர்களை} வழிபட்டாள்.(26ஆ,27அ) இராமனுக்கு மங்கலம் உண்டாகும்பொருட்டு, மஹாத்மாவான ஒரு பிராமணரின் வழிகாட்டுதலின்படி முறையாக ஹவிஸை ஊற்றி அக்னியை வளர்த்தாள்.(27ஆ,28அ) சிறந்த பெண்மணியான கௌசல்யை, தெளிந்த நெய், வெண் மாலைகள், சமித்துகள் {விறகுக் குச்சிகள்}, வெண்கடுகு ஆகியவற்றை வரவழைத்தாள்.(28ஆ,29அ) அந்த உபாத்யாயர், பிழையில்லாமல் சாந்தி பூஜையை {அமைதிக்கான ஹோமத்தைச்} செய்து, எஞ்சிய ஹவிஸைக் கொண்டு புறத்தில் செய்ய வேண்டிய பலியை விதிப்படி நடத்தினார்.(29ஆ,30அ) 

சிறப்புமிக்கவளான ராமனின் மாதா {கௌசல்யை}, விரும்பிய தக்ஷிணையை அந்த துவிஜேந்திரருக்குக் கொடுத்து, தேன், அக்ஷதை {நொறுங்காத அரிசி}, தெளிந்த நெய் ஆகியவற்றைத் துவிஜர்களிடம் கொடுத்து நலத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லச் செய்தும், அவர்களின் ஆசிகளைப் பெறச் செய்தும், ராகவனிடம் இதைச் சொன்னாள்:(30ஆ-32அ) "விருத்திரனை அழித்து, சர்வ தேவர்களாலும் நமஸ்கரிக்கப்பட்ட சஹஸ்ராக்ஷனுக்கு {இந்திரனுக்கு} எந்த மங்கலம் உண்டானதோ, அதே மங்கலம் உனக்கும் உண்டாகட்டும்.(32ஆ,33அ) பூர்வத்தில் அம்ருதத்தைக் கொணரச் சென்ற சுவர்ணனுக்கு {கருடனுக்கு} வினதையால் எந்த மங்கலம் விளைவிக்கப்பட்டதோ, அதே மங்கலம் உனக்கும் உண்டாகட்டும். (33ஆ,34அ) {கடலைக் கடைந்து} அம்ருதத்தை உண்டாக்கிய நேரத்தில், தைத்தியர்களைக் கொன்ற வஜ்ரதாரிக்கு {இந்திரனுக்கு} எந்த மங்கலம் உண்டானதோ, அதே மங்கலம் உனக்கும் உண்டாகட்டும்.(34ஆ,35அ) இராமா, மூவடி அளந்த நேரத்தில் அமித {மிதமற்ற} தேஜஸ்வியான விஷ்ணுவுக்கு எந்த மங்கலம் உண்டானதோ, அதே மங்கலம் உனக்கும் உண்டாகட்டும்.(35ஆ,36அ) மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவனே, இயற்கையாகவே} மங்கலத்தை அருளும் ருதுக்கள் {பருவகாலங்கள்}, சாகரங்கள், திவீபங்கள் {கண்டங்கள்}, வேதங்கள், உலகங்கள், திசைகள் ஆகியவை உனக்கு சுபமங்கலத்தை அருளட்டும்" {என்றாள் கௌசல்யை}.(36ஆ,37அ)

நீள்விழியாளும், பாமினியுமான {பெருமைமிக்கவளுமான} கௌசல்யை இதைச் சொல்லிவிட்டு, தன் புத்திரனின் தலையில் அக்ஷதைகளை {நொறுங்கலற்ற அரிசிகளை} இட்டு, ராமனின் மேனியை கந்தத்தால் {சந்தனத்தால்} பூசி, சுபமானதும், எதிர்பார்க்கும் பயனைத் தரவல்லதுமான விசல்யகரணி என்ற ஔஷதத்தை {மூலிகையை} ரக்ஷையாக {மணிக்கட்டில் கட்டப்படும் காப்பாகச்} செய்து, மந்திரங்களைச் சொன்னாள்[3].(37ஆ-39அ) துக்கம் நிறைந்த முகத்தினளாக இருந்த போதிலும், பெரும் மகிழ்ச்சியில் இருப்பவளைப் போல, இதயப்பூர்வமாக இல்லாவிட்டாலும் வாயால் மட்டுமாவது தழதழத்த சொற்களை உதிர்த்துக் கொண்டிருந்தாள்.(39ஆ,40அ)

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கணைகள் அல்லது ஆயுதங்களை அகற்றும் ஏதோவொன்று என்று பொருள் கொள்ளலாம். விசல்யகரணி என்ற மூலிகையுடன் கூடிய ஒரு தாயத்தைக் கௌசல்யை ராமனுக்குக் கட்டினாள் என்பதே இதன் விளக்கமாகும்" என்றிருக்கிறது.

அந்தச் சிறப்புமிக்கவள், அவனைக் குனியச் செய்து, உச்சிமுகர்ந்து, ஆரத்தழுவிக் கொண்டு {பின்வருமாறு} சொன்னாள், "இராமா, என் புத்திரா, சுகமாகச் சென்று காரியத்தை நிறைவேற்றுவாயாக.(40ஆ,41அ) வத்ஸா {மகனே}, ஆரோக்கியத்துடன் சர்வ காரியங்களையும் நிறைவேற்றி, சுகமாக அயோத்திக்குத் திரும்பி, ராஜ பாதையில் நீ நிலைப்பதை நான் காண்பேனாக.(41ஆ,42அ) துக்கம் தீர்ந்த மனத்துடனும், மகிழ்ச்சியில் ஒளிரும் முகத்துடனும் கூடியவளாக, உதிக்கும் பூர்ணச்சந்திரனைப் போல வனத்திலிருந்து திரும்பும் உன்னை நான் காண்பேனாக.(42ஆ,43அ) இராமா, பிதாவின் சொல்லை நிறைவேற்றி, வனவாசத்தில் இருந்து திரும்பி வந்து, இங்கே அற்புத ஆசனத்தில் அமர்ந்திருக்கும் உன்னை நான் காண்பேனாக.(43ஆ,44அ) வனவாசத்திலிருந்து இங்கே வந்து, மங்கலமானவற்றைத் தரித்து, என் மருமகளின் விருப்பங்களையும், என் விருப்பங்களையும் நித்தியம்  பெருகச் செய்வாயாக. ஓ!, நீ செல்வாயாக.(44ஆ,45அ) இராகவா, என்னால் அர்ச்சிக்கப்பட்ட சிவனின் தலைமையிலான தேவகணங்களும், மஹரிஷிகளும், பூதங்களும், மஹாசுரர்களும், உரகர்களும் {பாம்புகளும்}, திசைகளும் வனத்திற்குப் புறப்படும் உன் நலத்தை விரும்பட்டும்" {என்றாள் கௌசல்யை}.(45ஆ-உ)

கண்கள் நிறைந்த கண்ணீருடன் கூடிய அவள் {கௌசல்யை}, இவ்வாறு சொல்லிவிட்டு, ஸ்வஸ்தியயனத்தை {ஆசிகளை இருப்புக்கு அழைக்கும் சடங்கை} விதிப்படி நிறைவேற்றி, இராகவனை பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து}, மீண்டும் மீண்டும் அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.(46) அந்த தேவியால் இவ்வாறு பிரதக்ஷிணம் செய்யப்பட்டதும், பெரும் புகழைக் கொண்ட அந்த ராமன், தன் மாதாவின் சரணங்களை {பாதங்களைப்} பிடித்துத் தன்னொளியால் பிரகாசிப்பவனாக சீதாநிலையத்திற்கு {சீதை இருக்கும் இடத்திற்குச்} சென்றான்.(47)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 025ல் உள்ள சுலோகங்கள் : 47

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை