Take me with you | Ayodhya-Kanda-Sarga-024 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன்னையும் வனத்திற்கு அழைத்துச் செல்ல ராமனிடம் வேண்டிய கௌசல்யை; கணவனுக்குத் தொண்டு செய்வதே மனைவியின் உயர்ந்த தர்மம் என்று சொல்லி கௌசல்யையைத் தடுத்த ராமன்; ராமனைப் புறப்பட அனுமதித்த கௌசல்யை...
அவன் {ராமன்}, பிதாவின் {தசரதனின்} ஆணையைக் காக்கும் உறுதியுடன் இருப்பதைக் கண்டவள் {கௌசல்யை}, தர்மம் பொதிந்த இந்தச் சொற்களைத் தடைபட்டக் குரலுடன் சொன்னாள்:(1) "தசரதரால் என்னிடம் பிறந்தவனும், சர்வ பூதங்களிடமும் {அனைத்து உயிரினிங்களிடமும்} பிரியத்துடன் பேசுபவனும், துக்கத்தைக் காணாதவனுமான தர்மவானே {ராமா}, உஞ்சவிருத்தியால் {நிலத்தில் உதிரும் தானியங்களை உண்டு} எவ்வாறு நீ பிழைத்திருப்பாய்?(2) சார்ந்திருப்பவர்களும், தாசர்களும் {பணியாட்களும்} சுவைமிக்க அன்னத்தைப் புசித்திருக்கையில், {அவர்களின்} நாதன் கனிகளையும், கிழங்குகளையும் எவ்வாறு வனத்தில் புசித்திருப்பான்?(3) அன்புக்குரியவனும், குணவானுமான ராகவன், இவ்வாறு ராஜரால் நாடு கடத்தப்படுகிறான் என்பதைக் கேட்டால் எவன் தான் நம்புவான்? எவனிடம்தான் பயம் உண்டாகாது?(4)
இராமா, உலத்திற்கு இனியவனான நீ வனத்திற்குச் சென்றால், பலம்மிக்க விதியாலேயே அனைத்தும் ஆகின்றன என்ற நிச்சயம் உண்டாகிறது.(5) குமாரா {மகனே}, உன் இன்மை என்ற காற்றாலும் {நீ இல்லாத வெற்றிடத்தில் உண்டாகும் காற்றாலும்}, அழுகையெனும் சமித்தாலும் {விறகாலும்}, கண்ணீரெனும் ஆகுதியினாலும், என்னில் தூண்டப்படுவதும், தனித்தன்மை வாய்ந்ததுமான இந்த சோகாக்னியானது {துன்பு நெருப்பானது}, முழு உடலிலும் பரவி, நீ திரும்பி வருவாயோ என்ற துன்பப் புகையை மூட்டி, குளிர்கால நெருப்பால் எரியும் விறகைப் போல இங்கே தனியாக இருக்கப் போகும் என்னை எரிக்கப் போகிறது[1].(6,7,8) புத்திரா, பசு தன் கன்றைப் பின்தொடர்ந்து செல்லாதோ? நீ செல்லும் இடத்திற்கு நானும் உன்னைப் பின்தொடர்ந்து வருவேன்" என்றாள் {கௌசல்யை}.(9)
[1] வி.வி.சுப்பாராவ் ஆங்கிலப் பதிப்பில், "மகனே, நீ புறப்பட்டுச் சென்ற பிறகு நீ இல்லாததால் உண்டாகும் காற்றால் தூண்டப்பட்டு, சோர்வான பெருமூச்சுகளுடன் ஒப்பிடப்படமுடியாத துக்க நெருப்பு என் உடலில் இருந்து வெடிக்கும். நான் அழும் கண்ணீர் அதற்கு ஆகுதியாகும். என் கவலை ஆவிபறக்கச் செய்யும் பெரும்புகையாகும். இந்த துக்க நெருப்பு என்னை மிகவும் சோர்வடையச் செய்து கோடையில் பட்டுப்போன மரங்களுடன் கூடிய காட்டையோ, காய்ந்த புற்குவியலையோ எரிப்பதைப் போல என்னை எரித்துவிடும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "புதல்வனே, இனி நீ என்னை விட்டுப் பிரிவதனால் எனது சரீரத்தில் சோகாக்னியொன்று உண்டாகும். நீ என் கண்களுக்குப் புலப்படாமையே அவ்வக்னி படர்ந்து எரியச் செய்யுங்காற்று. கூக்குரலிட்டு அழும்படியான இந்தத் துக்கமே அதற்குக் கட்டைகள். எனது அழுகைக் கண்ணீர்களே அதில் ஹோமஞ் செய்யும் ஆஹுதி. உன்னைக் காணாத சிந்தனையினால் மனத்தில் வளர்ந்து வருகின்ற வெப்பமே அதற்குப் பெரும்புகை. பெருமூச்செறிகையே அது வளர்ந்து வருவதற்காக நான் செய்யும் புருஷகாரம். இங்ஙனம் ஒப்பின்றி அப்பெரும் சோகாக்னி எனது சரீரத்தில் பிறந்து சிசிரருதுவின் பனிஜலம் பட்டு நனைந்திருக்கும் புதரைக் காட்டுத் தீபடர்ந்து வந்து கிரமமாக வாடச் செய்து பின் தஹிப்பது போல, நெருப்பைத் தணிக்கவல்ல ஜலம் போன்ற உன்னை விட்டுப் பிரிந்து இங்கு வருந்தியிருக்கின்ற என்னை வாடி வதங்கச் செய்து தஹிக்கப் போகின்றது பிள்ளாய்" என்றிருக்கிறது.
புருஷரிஷபனான ராமன், மாதாவால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த வாக்கியத்தைக் கேட்டுப் பெரிதும் துக்கமடைந்து தன் மாதாவிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(10) "கைகேயியால் ராஜா வஞ்சிக்கப்பட்டிருக்கிறார். நான் அரண்யத்திற்குச் சென்றதும், உன்னாலும் கைவிடப்பட்டால் அவர் நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டார்.(11) ஸ்திரீ தன் பர்த்தாவைக் கைவிடுவது நிச்சயம் கொடூரச் செயலே. கேவலமான அந்தத் தீச்செயல் மனத்தாலும் உன்னால் செய்யப்படக்கூடாது.(12) ஜகத்பதியும், என் பிதாவுமான காகுத்ஸர் {தசரதர்} எதுவரை ஜீவித்திருப்பாரோ, அது வரையில் அவருக்கு நீ தொண்டாற்ற வேண்டும். அதுவே சநாதன தர்மமாகும்" {என்றான் ராமன்}.(13)
இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மங்கலத் தோற்றம் கொண்ட கௌசல்யை பெரிதும் மகிழ்ந்து, சளைக்காமல் செயல்புரியும் ராமனுக்குத் தன் சம்மதத்தைத் தெரியச் செய்தாள்[2].(14) தர்மத்தை நிலைநிறுத்துவோரில் சிறந்தவனான ராமன், இவ்வாறு பேசிவிட்டு, பெருந்துக்கத்தில் இருந்த தன் மாதாவிடம் மீண்டும் {இவ்வாறு} பேசினான்:(15) "பிதாவின் வசனங்கள் என்னாலும், உன்னாலும் செய்யத்தகுந்தனவே. அனைவருக்கும் அவரே ராஜாவும், ஊட்டமளிப்பவரும், குருவும், சிரேஷ்டரும் {சிறந்தவரும்} ஈச்வரரும், பிரபுவும் ஆவார்.(16) இந்த நவபஞ்ச வருஷங்களும் {பதினான்கு ஆண்டுகளும்} மஹா அரண்யத்தில் திரிந்து வந்த பிறகு, நான் பரமபிரீதியுடன் உன் வசனத்தின்படியே நிற்பேன்" {என்றான் ராமன்}.(17)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அந்த ராமனைப் பார்த்து, "நீ சொன்னபடியே செய்கிறேன்" என்றனள்" என்றிருக்கிறது. ஆனால், இவ்வாறு சொல்லிவிட்டு 19ம் சுலோகத்தில் "வனத்திற்கு அழைத்துச் செல்" என்று மீண்டும் சொல்வது முரணாகிறது. எனவே இங்கே குறிப்பிடப்படும் சம்மதத்தைத் தலையசைத்துத் தெரியச் செய்திருப்பாள்.
இவ்வாறு சொல்லப்பட்டதும், புத்ரவத்சலையான {மகனிடம் அன்பு கொண்டவளான} கௌசல்யை, பரம துயரத்தில் கண்ணீர் நிறைந்த முகத்துடன், தன் பிரியத்திற்குரிய புத்ரனிடம் இவ்வாறு சொன்னாள்:(18) "இராமா, சக்களத்திகளின் மத்தியில் என்னால் வசிக்க இயலாது. காகுத்ஸா, பிதாவின் விருப்பப்படி செல்ல நீ தீர்மானித்தால் வனத்திற்குரிய பெண் மானைப் போன்ற என்னையும் வனத்திற்கு அழைத்துச் செல்வாயாக[3]" என்றாள்.(19)
[3] ஆகின் ஐய அரசன்தன் ஆணையால்ஏகல் என்பது யானும் உரைக்கிலென்சாகலா உயிர் தாங்க வல்லேனையும்போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள்- கம்பராமாயணம் 1623ம் பாடல்பொருள்: அப்படியானால் ஐயா, அரசன் இட்ட ஆணையை மறுத்துப் போகாதே என நானும் உரைக்கவில்லை. நீ போனால், சாகாமல் உயிர் தாங்க வல்லவளாக இருக்கும் என்னையும் உன்னோடு அழைத்துப் போ என்றாள்.
இராமன், இவ்வாறு அழுது புலம்பியவளிடம், "ஒரு ஸ்திரீ ஜீவித்திருக்கும் வரையில் அவளுக்கு பர்த்தாவே தைவமும், பிரபுவுமாவான் {கணவனே தெய்வமும், தலைவனுமாவான்}.(20) பிரபுவான ராஜாவே உன்னிடமும், என்னிடமும் அதிகாரம் கொண்டவர். மதிமிக்கவரும், லோகநாதருமான ராஜா இருக்கையில், நாம் அநாதர்களாக {நாதனற்றவராக} மாட்டோம்.(21) தர்மாத்மாவும், சர்வபூதங்களிடமும் {உயிரினங்கள் அனைத்திடமும்} பிரியமாகப் பேசுபவனும், எப்போதும் தர்மத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான பரதனும் உன்னை அனுசரித்தே இருப்பான்.(22) நான் சென்ற பிறகு, பார்த்திபர் {தசரதர்} புத்திர சோகத்தால் சிறு சிரமமும் அடையாதவாறு, நீ கவனத்துடன் நடப்பாயாக.(23) பயங்கரமான இந்த சோகம் விருத்தரான ராஜாவை அழித்துவிடாமல் இருக்கும் வகையில், நீ அவரது நலத்திற்காக எப்போதும் மன அடக்கத்துடன் நடப்பாயாக.(24)
விரத, உபவாசங்களில் விருப்பமுள்ளவளும், பரம உத்தமியுமான எந்த நாரீயும் {பெண்ணும்}, தன் பர்த்தாவைக் கவனித்துக் கொள்ளவில்லையென்றால் பாபகதியையே அடைவாள்.(25) தேவ பூஜையைத் தவிர்ப்பவளும், அத்தகைய நமஸ்காரத்தைச் செய்யாதவளுமான எந்த நாரீயும் {பெண்ணும்}, தன் பர்த்தாவுக்குத் தொண்டு செய்வதால் {மட்டுமே கூட} உத்தம ஸ்வர்க்கத்தை அடைந்துவிடுவாள்.(26) அவள் பர்த்தாவின் அன்புக்கும், நலத்துக்கும் அர்ப்பணிப்புடன் இருந்து தொண்டாற்ற வேண்டும். பூர்வத்திலிருந்து உலகத்தில் காணப்படும் இதுவே {இந்தத் தொண்டே} வேதங்களிலும் கேட்கப்படுகிறது, தர்மம் என்றும் சொல்லப்படுகிறது.(27) தேவி, அக்னி காரியங்களின் {ஹோமங்களின்} மூலமும், மலர்களின் மூலமும் தேவதைகளையும், நல்ல விரதங்களைக் கொண்ட பிராமணர்களையும் எப்போதும் எனக்காக பூஜிப்பாயாக.(28) நான் திரும்பி வருவதை விரும்பி, நியமங்களைப் பின்பற்றி, உணவுக் கட்டுப்பாட்டுடனும், பர்த்தாவின் தொண்டில் அர்ப்பணிப்புடனும் {நான் திரும்பிவரும்} அந்தக் காலத்திற்காகக் காத்திருப்பாயாக.(29) தர்மத்தைப் பாதுகாப்பவர்களில் சிறந்தவர் {தசரதர்}, நான் திரும்பி வரும்வரையில் ஜீவிதத்தைத் தக்க வைத்திருந்தால் {உயிருடனிருந்தால்} நீ விரும்பிய ஆசையை அடைவாய்" {என்றான் ராமன்}.(30)
இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், புத்திர சோகத்தில் பீடிக்கப்பட்ட கௌசல்யை, கண்கள் நிறைந்த கண்ணீருடன் இராமனிடம் இந்தச் சொற்களைப் பேசினாள்:(31) "வீரா, புத்திரா, புறப்படுவதில் நிச்சயமடைந்த உன் புத்தியை மாற்ற என்னால் இயலவில்லை. நிச்சயம் காலத்தைப் புரிந்து கொள்வது கடினமானதே.(32) புத்திரகா, நீ கலங்காமல் செல்வாயாக. விபுவே {வலிமைமிக்கவனே}, நீ எப்போதும் பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. நீ மீண்டும் திரும்புகையில் நான் புத்துணர்ச்சியடைவேன்.(33) காரியத்தை நிறைவேற்றும் விரதசாரியும், பிதாவுக்கான கடனில் இருந்து விடுபட்ட சிறந்தவனுமாக நீ திரும்பி வரும்போது நான் பரம சுகத்தை அடைவேன்.(34) புத்திரா, ராகவா, எது என் சொற்களைப் புறந்தள்ளிவிட்டுப் புறப்படுவதற்கு உன்னைத் தூண்டுகிறதோ, அந்த விதியே எப்போதும் பூமியில் ஊகிக்க முடியாதது.(35) மஹாபாஹுவே {நீண்ட கரங்களைக் கொண்டவனே}, இப்போதே செல்வாயாக. புத்திரா, க்ஷேமமாக மீண்டும் திரும்பி வந்து கருத்தொற்றுமையாலும், இனிய வாக்கியங்களாலும் என்னை மகிழ்விப்பாயாக.(36) புத்திரகா, ஜடாதாரியாகவும், மரவுரி தரித்தவனாகவும் வனத்திலிருந்து திரும்பி வரும் உன்னை நான் காணப்போகும் அந்தக் காலம் இப்போதே வந்திடாதோ?" {என்றாள் கௌசல்யை}.(37)
அந்த தேவி {கௌசல்யை}, வனம் செல்லத் தீர்மானித்த ராமனை இவ்வாறே கண்டு, மங்கலச் சொற்களைச் சொல்வதன் மூலம் தீமையைத் தவிர்க்க விரும்பி, மிகச் சிறந்த மனத்துடன் கூடியவளாக, மங்கல குணங்களைக் கொண்ட ராமனிடம் {பின்வருமாறு} பேசினாள்.(38)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 024ல் உள்ள சுலோகங்கள் : 38
Previous | | Sanskrit | | English | | Next |