Saturday, 26 March 2022

வரங்கள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 011 (29)

Boons | Ayodhya-Kanda-Sarga-011 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வரங்களைத் தருமாறு தசரதனைக் கேட்ட கைகேயி; பரதன் நாடாள்வதையும், ராமன் காட்டுக்குச் செல்வதையும் வேண்டுவது...

Dasharatha consoles Kaikeyi

கைகேயி, மன்மதனின் சரங்களால் தாக்கப்பட்டவனும், காமவேகத்திற்கு வசப்பட்டவனுமான அந்தப் பிருத்வீபாலனிடம் {தசரதனிடம்} இந்தக் கொடுஞ்சொற்களைச் சொன்னாள்:(1) "தேவா, எனக்கு எவரும் தீங்கிழைக்கவில்லை, எவரும் என்னை அவமதிக்கவும் இல்லை. ஆனால் நிச்சயம் எனக்கு உம்மால் நிறைவேற்றப்படவேண்டிய ஆசை இருக்கிறது.(2) நீர் செய்ய விரும்பினால் பிரஜ்ஞை செய்வீராக {ஆணையிடுவீராக}. அதன்பிறகு என் வேண்டுதலை நான் சொல்வேன்" {என்றாள் கைகேயி}.(3)

மஹாதேஜஸ்வியும், காமவசப்பட்டவனுமான அவன் {தசரதன்}, மெல்லச் சிரித்தவனாக, நன்கு புன்னகைத்துக் கொண்டிருந்த கைகேயியின் கூந்தலை தன் கரங்களால் கோதியவாறே அவளிடம்:(4) "கர்வமுள்ளவளே, மனிதர்களில் சிறந்த ராமனைத் தவிர, எனக்கு உன்னைவிடப் பிரியத்திற்குரிய வேறு எந்த மனிதரும் இல்லை என்பதை நீ அறியமாட்டாயா?(5) வெல்லப்பட முடியாதவனும், முக்கியனும், ஜீவித்திருக்கத் தகுந்தவனும், மஹாத்மாவுமான அந்த ராகவனின் மேல் ஆணையாக உறுதியளிக்கிறேன், நீ விரும்பியதைச் சொல்வாயாக.(6) கைகேயி, எவனைக் காணாமல் என்னால் ஒரு முஹூர்த்தமும் ஜீவித்திருக்க முடியாதோ, அந்த ராமன் மேல் ஆணையாக நீ சொல்வதை நிறைவேற்றுவேன்.(7) கைகேயி, அந்த மனுஜரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்} நலமாக இருக்க நான் விரும்புகிறேன். என்னிலும், பிறரிலும், எஞ்சிய என் மகன்களிலும் ராமனையே தேர்ந்தெடுக்கும் நான், அவன் மீது ஆணையாக உன் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன்.(8) பத்ரையே {மங்கலமான பெண்ணே, அறியாமையில் மூழ்கியிருக்கும்} என் இருதயத்தை உன் தீண்டலின் மூலம் எழுப்புவாயாக. கைகேயி, இதைக் கண்டு {இதைக் கருத்தில் கொண்ட பிறகு} நலமென நீ நினைப்பதை எனக்குச் சொல்வாயாக.(9) என் மீதான உன் பலத்தை {செல்வாக்கை} நீ அறிவாயென்பதால் ஐயங்கொள்ளாதே. {நான் செய்த} புண்ணியத்தின் மீதும் ஆணையேற்கிறேன். நீ விரும்புவதை நான் செய்வேன்" {என்றான் தசரதன்}.(10)

மனத்தில் ஆசை கொண்ட அந்த தேவி {கைகேயி}, அந்த அபிப்ராயத்தை வெளிப்படுத்தும் வகையில், பேசத்தகாததும், சார்புடையதுமான சொற்களை மகிழ்ச்சியாகப் பேசினாள்.(11) அவனது வாக்கியத்தால் மகிழ்ச்சியடைந்தவள், திடீரென வரும் அந்தகனை {மரணத்தைப்} போல, தன் மனத்தில் இருந்த மஹாகோரமான அபிப்ராயத்தை {பின்வருமாறு} சொன்னாள்:(12) "வரிசையான சபதங்களுடன் எனக்கு அளிக்கப்படும் இந்த வரம் குறித்து அக்னியை முன்னிட்ட முப்பத்துமூன்று தேவர்களும் கேட்பாராக.(13) சந்திர, ஆதித்யர்களும், ஆகாயமும், கிரஹங்களும், ராத்திரி, பகல்களும், திசைகளும், கந்தர்வ, ராக்ஷசர்களுடன் கூடிய ஜகமும், இந்தப் பூமியும், பூதங்களும், இரவுலாவிகளும், கிருஹதேவதைகளும், கிருஹங்களில் {வீடுகளில்} உள்ள பிற பூதங்களும் உமது சொற்களை அறிவாராக.(14,15) சத்தியசந்தரும், மஹாதேஜஸ்வியும், தர்மம் அறிந்தவரும், பற்றற்ற உள்ளச்சமநிலை கொண்டவருமான இவர், எனக்கு அளிக்கப் போகும் வரத்தை தேவர்கள் எனக்காகக் கேட்பாராக[1]" {என்றாள் கைகேயி}.(16)

[1] ஆன்றவன் அவ்வுரை கூற, ஐயமில்லாள்,
தோன்றிய பேரவலம் துடைத்தலுண்டேல்
சான்று இமையோர்குலம் ஆக, மன்ன நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள்

- கம்பராமாயணம் 1502ம் பாடல்

அந்த தேவி {கைகேயி}, பெரும் வில்லாளியான அவனை {தசரதனைப்} புகழ்ந்து பீடித்த {தன் வசப்படுத்திக் கொண்ட} பிறகு, காமமோஹத்தில் வரமளிக்க இருந்தவனிடம் இதைச் சொன்னாள்:(17) "இராஜரே, பூர்வத்தில் நேரிட்ட தைவாசுரப் போரின் போது நிகழ்ந்தவற்றை நினைவில் கொள்வீராக. சத்ரு உமது ஜீவிதத்தைத் தவிர அனைத்தையும் அழித்தான்.(18) தேவா, அங்கே நான் உம்மைக் காத்தேன். {அவ்வாறு} ஜாக்கிரதையாக உம்மைக் காத்ததன் காரணமாக நீர் எனக்கு இரு வரங்களை அளிக்க முன்வந்தீர்.(19) தேவா, பிருத்வீபாலரே, சத்தியசங்கரரே {சத்தியத்தைக் காப்பவரே}, உம்மால் கொடுக்கப்பட்டும், உம் வசத்திலேயே ஒப்படைக்கப்பட்ட நிக்ஷேபமான {புதையலான} அந்த வரங்கள் இரண்டையும் இப்போதுதான் வேண்டுகிறேன்.(20) எனவே தர்மப்படி உறுதியளிக்கப்பட்ட என் வரத்தை நீர் கொடுக்காமல் போனால் இப்பொழுதே ஜீவிதத்தைக் கைவிடுவேன்" {என்றாள் கைகேயி}.(21)

தன் சொற்களாலேயே கைகேயியின் வசமடைந்த அந்த ராஜா, ஒரு மான் தன் அழிவுக்காகவே விழுவதைப் போல பாசத்தில் {வலையில்} வீழ்ந்தான்.(22) அதன்பிறகு, காமமோஹிதமடைந்த அந்த வரதனிடம் {வரமளிக்கத் தயாராக இருந்த தசரதனிடம்} இதைச் சொன்னாள்: "தேவா, மஹீபதியே, அப்போது உம்மால் தத்தம் செய்யப்பட்ட அந்த வரங்களையே இப்போது கேட்கப் போகிறேன். என் சொற்களைக் கேட்பீராக.(23,24அ) இராகவனின் அபிஷேகத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த அபிஷேக ஏற்பாடுகளைக் கொண்டே என் பரதன் அபிஷேகிக்கப்பட வேண்டும்.(24ஆ,25அ) தைவாசுர யுத்தத்தின்போது எனக்கு உம்மால் பிரீதியுடன் கொடுக்கப்பட்ட இரண்டாம் வரத்தைக் கேட்பதற்கான காலம் இப்போது வந்திருக்கிறது.(25ஆ,26அ) இராமன், ஜடாதாரியாக, மரவுரியும், மான்தோலும் உடுத்திய தபஸ்வியாகி, நவபஞ்ச {பதினான்கு} வருஷங்கள் தண்டகாரண்யத்தில் வசிக்க வேண்டும்[2].(26ஆ,27அ) இப்போதே பரதன் அகண்டக யௌவராஜ்யத்தை அடைய வேண்டும் {பகைவரற்ற நாட்டின் இளவரசனாக வேண்டும்}. இதுவே என் பரம ஆசை. முன்னர் தத்தம் செய்யப்பட்டதை இப்போது கேட்கிறேன். இராமன் வனத்திற்குப் பிரயாணிப்பதை நான் காண வேண்டும்.(27ஆ,28) இராஜராஜரான நீர், சத்தியசங்கரராகி {சத்தியத்தைக் காத்து}, உம் குலத்தையும், சீலத்தையும் {குணவொழுக்கத்தையும்}, ஜன்மத்தையும் ரக்ஷித்துக் கொள்வீராக. நிருபர்கள் சத்திய வசனம் {மனிதர்கள் உண்மையைப்} பேசுவது, பரத்துவ வாசத்திற்கு {மறுமை வாழ்விற்கு} இதமானதும், உத்தமமானதுமாகும் என தபோதனர்கள் சொல்வார்கள்" {என்றாள் கைகேயி}.(29)

[2] ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசாள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

- கம்பராமாயணம் 1504ம் பாடல்

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 011ல் உள்ள சுலோகங்கள் : 29

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை