Vishvamitra's curse | Bala-Kanda-Sarga-59 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: முனிவர்களை வேள்விக்கு அழைத்த விஷ்வாமித்ரர்; மஹோதயர் உள்ளிட்ட வசிஷ்டரின் மகன்களைச் சபித்த விஷ்வாமித்ரர்...
{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இவ்வாறு பேசியவனும், சாக்ஷாத் சண்டாள கதியை அடைந்தவனுமான அந்த ராஜனிடம் {திரிசங்குவிடம்} கிருபை கொண்ட குசிகாத்மஜர் {விஷ்வாமித்ரர்} இந்த மதுரமான வாக்கியத்தைச் சொன்னார்:(1) "இக்ஷ்வாகுவத்சா {இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலே}, ஸ்வாகதம் {நல்வரவு}. நீ தார்மிகன் என்பதை அறிவேன். நிருபபுங்கவா {மன்னர்களில் உயர்ந்தவனே}, அஞ்சாதே, நான் உனக்குப் புகலிடம் அளிப்பேன்.(2) புண்ணியக் கர்மங்களைச் செய்யும் மஹாரிஷிகள் அனைவரையும் யஜ்ஞ காரியங்களில் உதவிக்கு நான் அழைப்பேன். இராஜாவே, அப்போது நீ சுகமாக யாகஞ் செய்யலாம்.(3) குரு சாபத்தால் எந்த ரூபத்தை அடைந்தாயோ அதே ரூபத்துடன் கூடிய இந்தச் சரீரத்துடனேயே நீ {சுவர்க்கம்} செல்வாய்.(4) நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா}, புகலிடம் அளிக்கும் இந்தக் கௌசிகனை {குசிகனை/ விஷ்வாமித்ரனை} சரணமடைந்த உனக்கு, சுவர்க்கம் கையருகிலேயே இருக்கிறது என நினைக்கிறேன்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(5)
அந்த மஹாதேஜஸ்வி இவ்வாறு சொல்லிவிட்டு, பரமதார்மிகர்களும், அதிபுத்திசாலிகளுமான தமது மகன்களிடம் யஜ்ஞ சம்பாரங்களை {வேள்விக்குத் தேவையான பொருட்களைத்} திரட்டும்படி ஆணையிட்டார்.(6) பிறகு அவர் தமது சிஷ்யர்கள் அனைவரையும் அழைத்து இந்த வாக்கியத்தைச் சொன்னார்: "வத்சர்களே {குழந்தைகளே}, சிஷ்யர்கள், நண்பர்கள், ரித்விக்குகளுடன் கூடியவர்களும், நற்கேள்வி கொண்டவர்களுமான ரிஷிவரர்கள் அனைவரையும் என் ஆணையின் பேரில் அழைப்பீராக.(7,8அ) நீங்கள் அழைப்பவர்களில், என் வாக்கிய பலத்தால் தூண்டப்பட்டு எந்த வசனத்தை எவர் சொன்னாலும் அவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(8ஆ,9அ)
{சிஷ்யர்கள்} அவரது வசனத்தைக் கேட்டு, அந்த ஆணையின்பேரில் திசைகள் அனைத்திற்கும் சென்றனர். அனைத்து தேசங்களில் இருந்தும் பிரம்மவாதிகளும் வரத்தொடங்கினர்.(9ஆ,10அ) சிஷ்யர்கள் அனைவரும் தேஜஸில் ஜொலிக்கும் {விஷ்வாமித்ர} முனிவரிடம் திரும்பிவந்து, பிரம்மவாதிகள் அனைவரின் வசனங்களையும் {மறுமொழிகளையும்} சொன்னார்கள்:(10ஆ,11அ) "உமது வசனத்தைக் கேட்டுத் துவிஜர்கள் அனைவரும் வந்து கொண்டிருக்கின்றனர். மஹோதயரைத் தவிரப் பலதேசங்களில் உள்ள மற்ற யாவரும் {வெகுவாக} வந்து விட்டனர்.(11ஆ,12அ) முனிபுங்கவரே, நூறு வாசிஷ்டர்களில் அனைவரும் எழுத்துகள் தெறித்து மறையும் குரோதத்துடன் சொன்ன வசனங்கள் யாவையும் நீர் கேட்பீராக.(12ஆ,13அ) "யாஜகன் {யஜ்ஞம் செய்விப்பவன்} ஒரு க்ஷத்திரியன், அதில் விசேஷமோ ஒரு சண்டாளனுக்காக அதைச் செய்வது. இத்தகைய சதஸில் {சபையில்} ஸுரர்களும் {தேவர்களும்}, ரிஷிகளும் எவ்வாறு ஹவிஸை உண்பார்கள்?(13ஆ,14அ) விஷ்வாமித்ரரால் ஆளப்படும் மஹாத்மாக்களும், பிராமணர்களும் சண்டாள போஜனம் செய்வதால் எவ்வாறு சுவர்க்கத்தை அடைவார்கள்?"[1]{என்றனர் அந்த வாசிஷ்டர்கள்}.(14ஆ,15அ) முனிசார்தூலரே {முனிவர்களில் புலியே}, மஹோதயர் உள்ளிட்ட அந்த வாசிஷ்டர்கள் அனைவரும் இந்த வசனங்கள் அனைத்தையும் ஏளனத்துடன் சொன்னார்கள்" {என்றனர் சீடர்கள்}.(15ஆ,16அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மறைஞானம் அறியாதவன் யஜ்ஞம் செய்யத் துணிகிறான். ஒரு பிராமணனைப் போல வேதங்களைப் போதிக்க முடியாத நிலையிலும், யஜ்ஞம் செய்தாலும், அதை நடத்த {செய்விக்க} முடியாத நிலையிலும் உள்ள ஒரு மன்னன் அதை நடத்துகிறான். எனவே, செய்விப்பவன், செய்பவன் என்ற இருவரும் வேதத்தூய்மையற்றவர்கள் என்பது இங்கே பொருள்" என்றிருக்கிறது.
அந்த முனிபுங்கவர் {முனிவர்களில் உயர்ந்த விஷ்வாமித்ரர்}, அவர்களின் வசனங்கள் அனைத்தையும் கேட்டு, குரோதத்துடன் கண்கள் சிவக்க இவ்வாறு பேசினார்:(16ஆ,17அ) "உக்ரதவம் செய்த நான் துஷ்டனல்லன்[2]. என்னை தூஷிக்கும் துராத்மாக்கள் பஸ்மமாவார்கள் {சாம்பலாவார்கள்}. இதில் ஐயமில்லை.(17ஆ,18அ) இனி அவர்கள் காலபாசத்தால் கட்டி இழுக்கப்பட்டு, வைவஸ்வதனின் {யமனின்} வீட்டுக்குச் செல்வார்கள். இன்னும் எழுநூறு பிறவிகளுக்கு {ஜென்மங்களுக்கு} அவர்கள் பிணங்களைத் தின்பவராவார்கள்.(18ஆ,19அ) இரக்கமற்றவர்களாகவும், எப்போதும் நாய் மாமிசத்தை உண்பவர்களாகவும், கோர ரூபம் கொண்டவர்களாகவும் முஷ்டிகரெனும் பெயரில் இவ்வுலகில் திரிவார்கள்.(19ஆ,20அ) துர்புத்தியுடைய மஹோதயன் தூஷணம் செய்யத்தகாத {நிந்திக்கத்தகாத} என்னை தூஷித்ததால் சர்வலோகத்திலும் தூஷிக்கப்பட்டவனாக நிஷாதத்வ கதியை {வேடர்களின் இயல்பை} அடைவான்.(20ஆ,21அ) என் குரோதத்தினால் அவன் பிராணிகளைக் கொல்லும் விருப்பம் கொண்ட முற்றான காட்டுமிராண்டியாகி நெடுங்காலம் அந்த துர்கதியிலேயே சுழல்வான்" {என்று சபித்தார் விஷ்வாமித்ரர்}.(21ஆ,22அ) மஹாதபஸ்வியும், மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான விஷ்வாமித்ரர், ரிஷிகளின் மத்தியில் இந்த வசனத்தைச் சொல்லி நிறுத்திக் கொண்டார்" {என்றார் சதாநந்தர்}.(22ஆ,இ)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "தேஜோவிசேஷத்தினால் எவ்விதக் கெடுதியும் உண்டாகாதென்கிற நியாயம் ஒன்றில்லையோ? அதைப் பற்றியன்றோ சண்டாளனாயினும் அவனைக் கொண்டு யாகஞ் செய்விக்க யான் முயன்றனன். ஆகையால் நான் துஷ்டனாகக்கூடுமா? மேலும் நான் மிகக்கடுமையாகத் தவம் புரிந்தவனேயன்றி ஸாமாந்யனன்று" என்றிருக்கிறது. மூலத்தில் இவ்வளவு விரிவாகச் சொல்லப்படவில்லை. ஆனால் "அதுஷ்டம் மாம் தபோக்ரம் ஸமாஸ்திதம் {உக்ரதவம் செய்த நான் துஷ்டனல்லன்}" என்ற மேற்கண்ட நான்கு சொற்களில் இவ்வளவு பொருளும் அடங்கும்.
பாலகாண்டம் சர்க்கம் – 59ல் உள்ள சுலோகங்கள் : 22
Previous | | Sanskrit | | English | | Next |