Monday, 18 October 2021

தனுர்வேதம் | பால காண்டம் சர்க்கம் - 55 (28)

Dhanur Vedha | Bala-Kanda-Sarga-55 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மோதலில் விஷ்வாமித்ரரின் மகன்களும், படைவீரர்களும் அழிந்தது; சிவனிடம் தெய்வீக ஆயுதங்களைப் பெற்ற விஷ்வாமித்ரர்; வசிஷ்டரின் ஆசிரமத்தை அழித்தது...

விஷ்வாமித்ரரை நோக்கி தண்டம் உயர்த்திய வசிஷ்டர்

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "அப்போது வசிஷ்டர், விஷ்வாமித்ரரின் அஸ்திரங்களால் மோகமடைந்து சிதறியோடுபவர்களைக் கண்டு, "காமதேனுவே, உன் யோக சக்தியால் இன்னும் {படைகளை} உண்டாக்குவாயாக" என்று அவளை ஊக்கப்படுத்தினார்.(1) அவளது ஹுங்காரத்தில் இருந்து ரவியின் {சூரியனின்} ஒளிக்கொப்பான காம்போஜர்கள் பிறந்தனர், மடியில் இருந்து ஆயுதங்கள் தரித்த பஹ்லவர்கள் பிறந்தனர். யோனியில் இருந்து யவனர்கள் உண்டானார்கள். குதத்தில் இருந்து சகர்களும், ரோமக்கால்களில் இருந்து மிலேச்சர்களும், கிராதகர்களும் {கிராதர்களும்}, ஹாரீதர்களும் தோன்றினார்கள்.(2,3) இரகுநந்தனா, காலாட்படை வீரர்கள், யானைகள், குதிரைகள், தேர்கள் உள்ளிட்ட விஷ்வாமித்ரரின் சைன்னியமானது {படையானது} அந்தக் கணத்திலேயே அவர்களால் அழிக்கப்பட்டது.(4)

அப்போது விஷ்வாமித்ரரின் நூறு மகன்களும், மஹாத்மாவான வசிஷ்டரால் முற்றிலும் அழிக்கப்பட்ட சைன்னியத்தைக் கண்டு, பல்வேறு வகை ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, பெருங்குரோதத்துடன் ஜபவரரான வசிஷ்டரை நோக்கி விரைந்து சென்றனர். மஹானான அந்த ரிஷி {வசிஷ்டர்}, தமது ஹுங்காரத்தால் அவர்கள் அனைவரைம் முற்றிலும் எரித்தார்.(5,6) அஷ்வ, ரத, பாதாத்யர்களுடன் {குதிரை, தேர், காலாட்படையினருடன்} கூடிய விஷ்வாமித்ரரின் மகன்கள் ஒரு முஹூர்த்த காலத்தில் பஸ்மமாகினர் {சாம்பலாகினர்}.(7)

பெரும் மகிமைமிக்க விஷ்வாமித்ரர், புத்திரர்களும், படைகளும் முற்றிலும் அழிந்ததைக் கண்டு அவமானமடைந்து, சிந்தனையில் மூழ்கியவராகத் துயரில் விழுந்தார்.(8) அவர் வேகமற்ற {அலையற்ற} சமுத்ரத்தைப் போலவும், பல்லுடைந்த உரகத்தை {பாம்பைப்} போலவும், ஒளியற்ற ஆதித்யனைப் போலவும் ஆனார். உடனே புத்திரபலம் அழிந்து, தீனராகவும், சிறகொடிந்த பறவையைப் போலப் பிரகாசம் இழந்தவராகவும் அங்கிருந்து சென்றார்.(9,10அ) அவர் மிடுக்கையும்,உற்சாகத்தையும் இழந்து மனவெறுப்புற்றார். பிறகு தமது மகன் ஒருவனை நாட்டிற்காகக் கொடுத்து {தப்பிப் பிழைத்த ஒரு மகனை அரியணையில் அமர்த்தி}, "க்ஷத்திரிய தர்மத்துடன் பரிபாலிப்பாயாக" என்று சொல்லி வனத்திற்குச் சென்றார்.(10ஆ,11)

மஹாதபஸ்வியான அவர் {விஷ்வாமித்ரர்}, கின்னரர்களாலும், உரகர்களாலும் சேவிக்கப்பட்டவராக இமய மலைச்சாரலுக்குச் சென்று மஹாதேவனின் அருளைப் பெறும் நோக்கில் தவம் செய்தார்.(12) நீண்ட காலத்திற்குப் பிறகு, ரிஷபத்வஜனும் {காளைக் கொடியோனும்}, வரமருள்பவனுமான தேவேசன் {சிவன்}, விஷ்வாமித்ர மஹாமுனிக்குத் தரிசனம் கொடுத்து,(13) "இராஜாவே {விஷ்வாமித்ரரே}, என்ன காரணத்திற்காக நீ தவம் செய்கிறாய். சொல்லக்கூடியதைச் சொல்வாயாக. நான் வரம் அருள்பவன். நீ வேண்டும் வரமென்ன என்பதைத் தெரிவிப்பாயாக" என்று கேட்டான்.(14)

அந்தத் தேவன் இவ்வாறு சொன்னதும், மஹாதபஸ்வியான விஷ்வாமித்ரர் அந்த மஹாதேவனை வணங்கினார். பிறகு விஷ்வாமித்ரர் இதைச் சொன்னார்:(15) "அநகா, மஹாதேவா, நீ நிறைவடைந்தால் அங்க உப அங்கங்களுடன் கூடிய தனுர்வேதத்தையும், உபநிஷத்துகளையும் எனக்கு அளிப்பாயாக[1].(16) அநகா, தேவர்கள், தானவர்கள், மஹரிஷிகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள் அகியோரிடம் உள்ள அஸ்திரங்களையும் எனக்கு அளிப்பாயாக" {என்று கேட்டார் விஷ்வாமித்ரர்}.(17,18அ) "அவ்வாறே ஆகட்டும்" என்ற வாக்கியத்தைச் சொல்லிவிட்டு அந்தத் தேவேசனும் வந்தவாறே மறைந்தான்.(18ஆ)

[1] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "தநுர்வேதங்களும், அதன் அங்கங்களும், அவைகளுக்குள்ள ரஹஸ்யமந்தரங்களும், குரூபதேசத்தினாலறிய வேண்டிய ரஹஸ்யார்த்தங்களும் எனக்குத் தாமே தோற்றும்படி அருள்புரிந்தளிக்க வேண்டும்" என்றிருக்கிறது.

{ஏற்கனவே} மஹாபலம்வாய்ந்தவரும், ஆணவங்கொண்டவருமான விஷ்வாமித்ரர், தேவேசனிடம் இருந்து அஸ்திரங்களை அடைந்த பிறகு பேராணவம் கொண்டவரானார்.(19) இராமா, பர்வ காலத்தில் {பௌர்ணமி போன்ற மங்கல நாளில்} வீரியத்துடன் எழும் சமுத்திரத்தைப் போன்றிருந்த அவர் {விஷ்வாமித்ரர்}, ரிஷி சத்தமரான வசிஷ்டர் அழிந்ததாகவே கருதினார்.(20) அந்தப் பார்த்திபர் {விஷ்வாமித்ரர், வசிஷ்டரின்} ஆசிரமபதத்திற்குச் சென்று அஸ்திரங்களை ஏவினார். அந்தத் தபோவனம் அஸ்திரத்தீயால் முற்றிலுமாக எரிந்தது.(21) நாற்றுக்கணக்கான முனிவர்கள், மதிமிக்கவரான விஷ்வாமித்ரர் ஏவிய அஸ்திரங்களைக் கண்டு அச்சமடைந்து பல்வேறு திசைகளில் தப்பி ஓடினர்.(22) வசிஷ்டரின் சீடர்களும், மிருகங்கள், பக்ஷிகள் ஆகியனவும் அச்சமடைந்து ஆயிரமாயிரமாகப் பல்வேறு திக்குகளில் தப்பி ஓடினர்.(23) மஹாத்மாவான வசிஷ்டரின் ஆசிரமபதம் சூன்யமானது. ஒரு முஹூர்த்த காலத்தில் அது வறண்ட நிலமாகி நிசப்தமடைந்தது.(24)

வசிஷ்டர், "அஞ்சாதீர், பனியை விலக்கும் பாஸ்கரனை {சூரியனைப்} போல அந்தக் காதேயனை {காதி மகன் விஷ்வாமித்ரனை} இப்போதே நான் அழிப்பேன்" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.(25) மஹாதேஜஸ்வியும், ஜபவரருமான வசிஷ்டர் இவ்வாறு சொல்லிக் கொண்டே விஷ்வாமித்ரரிடம் இந்த வாக்கியத்தையும் சொன்னார்:(26) "மூடா, நீண்ட காலம் செழிந்திருந்த இந்த ஆசிரமத்தை நீ அழித்துவிட்டாய். துராச்சாரா {கெட்ட நடத்தை கொண்டவனே}, நீ பிழைத்திருக்கமாட்டாய்" {என்றார் வசிஷ்டர்}.(27)

அவர் இதைச் சொன்ன உடனேயே புகையற்ற காலாக்னியைப் போலப் பரம குரோதமடைந்து, யமதண்டத்தைப் போன்ற தமது தண்டத்துடன் பொங்கி எழுந்தார் {விஷ்வாமித்ரரை எதிர்த்து நின்றார்}" {என்றார் சதாநந்தர்}.(28) 

பாலகாண்டம் சர்க்கம் – 55ல் உள்ள சுலோகங்கள் : 28

Previous | Sanskrit | English | Next

Labels

அக்னி அசுவபதி அம்சுமான் அம்பரீசன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இலக்ஷ்மணன் உமை கங்கை கசியபர் கபிலர் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதாமன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூளி தசரதன் தாடகை திதி திரிசங்கு திரிஜடர் திலீபன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஸு வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விஷ்ணு விஷ்வாமித்ரர் ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்