Friday 24 September 2021

பஸ்பமான ஸாகரர்கள் | பால காண்டம் சர்க்கம் - 40 (30)

Saagaras turned into ash | Bala-Kanda-Sarga-40 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வடகிழக்கில் நுழைந்து கபில முனிவரைக் கண்டடைந்த சகரனின் மகன்கள்; அவர்கள் தம்மைத் தாக்க எத்தனித்தபோது யோக சக்தியால் அவர்களை சாம்பலாக்கிய கபிலர்...

kapila burning sagaras sons

பகவானான பிதாமஹன் {பிரம்மன்}, அனைவருக்கும் அழிவை ஏற்படுத்தும் {சகர புத்திரர்களின்} வலிமையால் {தேவர்கள்} குழப்பமடைந்து பேரச்சம் கொண்டிருக்கும் தேவர்களின் வசனத்தைக் கேட்டுப் பதிலளிக்கும் வகையில்,(1) "முழுமையான இந்த வசுதை {பூமி}, மாதவனின் மஹிஷியாவாள் {மனைவியாவாள்}. இவள் மதிமிக்கவனான வாசுதேவனுக்கு உரியவளாவாள். நித்தியமாகப் பூமியைத் தாங்கி வரும் பிரபுவான அந்த பகவானே {விஷ்ணுவே} கபில ரூபத்தை ஏற்று அந்த நிருபாத்மஜர்களை {மன்னன் ஸகரனின் மகன்களை} தன் கோபாக்னியால் தகித்துச் சாம்பலாக்குவான்.(2,3) பிருத்வி{பூமி} முழுமையாகத் தோண்டப்படுவதும், ஸகரப் புத்திரர்களின் விநாசமும் {முழுமையான அழிவும்} ஸநாதனர்களால் தீர்க்கதரிசனமாகக் காணப்பட்டுள்ளது" {என்றான் பிரம்மன்}.(4)

அரிந்தமா {பகைவனை அழிப்பவனான ராமா}, பிதாமஹனின் வசனத்தைக் கேட்ட முப்பத்து மூன்று தேவர்களும்[1] திரும்பும்போது நிறைவான பரம மகிழ்ச்சியுடன் திரும்பினர்.(5) ஸகரப் புத்திரர்கள் பிருத்வியைத் தோண்டிக் கொண்டிருந்தபோது இடி விழும் ஒலிக்கு ஒப்பான பேரொலி வெளிப்பட்டதை அவர்கள் கேட்டனர்.(6) மஹீ {பூமி} முழுவதையும் பிளந்து பிரதக்ஷிணம் செய்த {வலம் வந்த} ஸாகரர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி தங்கள் பிதாவிடம் {ஸகரனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னார்கள்:(7) மஹீ முழுமையும் நாங்கள் திரிந்து வந்தோம். சத்வவந்தர்களான தேவர்கள், தானவர்கள், ராக்ஷசர்கள், பிசாசங்கள், உரகர்கள், பன்னகர்கள் ஆகியோரைக் கொன்றோம். அஷ்வத்தையும், அஷ்வத்தை அபகரித்தவரையும் நாங்கள் காணவில்லை. நாங்கள் என்ன செய்வது? உனக்கு மங்கலம் உண்டாகட்டும். இக்காரியத்தில் புத்தியைச் செலுத்துவீராக" {என்றனர் ஸகரப் புத்திரர்கள்}.(8,9)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரம்மனிடம் முறையிட வந்த தேவர்களின் எண்ணிக்கை முப்பத்துமூன்று என்று சொல்லப்படுகிறது. இதனால் தேவர்கள் அனைவரும் அந்த எண்ணிகையிலானவர்கள் எனக் கொள்வது தகாது. முக்கியமான முப்பத்து மூன்று தேவ கணங்களுடன் இன்னும் பிறரும் உண்டு. எட்டு வசுக்கள், {பன்னிரெண்டு ஆதித்யர்கள்}, பதினோரு ருத்திரர்கள், இரண்டு அசுவினிகள் ஆகியோராவர்" என்றிருக்கிறது. மேற்சொன்ன அடிக்குறிப்பில் பனிரெண்டு ஆதித்யர்கள் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருக்கிறது. மஹாபாரதம் ஆதிபர்வம் 66ம் பகுதியில் உள்ள 6ம் அடிக்குறிப்பைக் காண்க 

இரகுநந்தனா, தன் புத்திரர்களின் வசனத்தைக் கேட்ட ராஜ ஸத்தமன் ஸகரன், சீற்றத்துடன் கூடிய இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(10) "வசுதாதலத்தை {பூமியின் பரப்பை} பிளப்பீராக. மேலும் அது தோண்டப்படட்டும். அஷ்வத்தை அபகரித்தவனைப் பிடிப்பீராக. நோக்கங்களை நிறைவேற்றித் திரும்புவீராக. மங்கலம் உண்டாகட்டும்" {என்றான் ஸகரன்}.(11)

பிதாவும், மஹாத்மாவுமான ஸகரனின் வசனத்தைக் கேட்ட அறுபதாயிரம் புத்திரர்களும் ரஸாதலத்திற்கு[2] விரைந்து சென்றனர்.(12) அங்கே அதைத் தோண்டிக் கொண்டிருந்தபோது பர்வதத்திற்கு ஒப்பானதும், மஹீதலத்தை {பூமியின் பரப்பைத்} தாங்குவதுமான விரூபாக்ஷம் எனும் திக்கஜத்தை {கிழக்குத் திசையைச் சுமக்கும் யானையை} அவர்கள் கண்டனர்.(13) இரகுநந்தனா, மஹாகஜமான விரூபாக்ஷம், பர்வதங்கள், வனங்கள் ஆகியவற்றுடன் கூடிய {கிழக்குத் திசையின்} மொத்த பிருத்வியைத் தன் சிரசில் {தலையில்} தாங்கிக் கொண்டிருந்தது.(14) காகுத்ஸ்தா, அந்த மஹாகஜம், களைப்பகலும் நோக்கத்திற்காகத் தன் சிரசை அசைக்கும்போது நிலநடுக்கம் ஏற்பட்டது.(15)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பூமியின் மேற்பரப்பில் இருந்து அதன் உள் மையம் வரையிலான அடுக்குகள் ஏழாகும். அதலம், விதலம், ஸுதலம், தலாதலம், மஹாதலம், ரஸாதலம், பாதாளம் என்பன அந்த ஏழு அடுக்குகளாகும். இவை நரகங்களல்ல" என்றிருக்கிறது.

இராமா, அவர்கள், திசையை ஆளும் அந்த மஹாகஜத்தை பிரதக்ஷிணம் செய்து வழிபட்டு, ரஸாதலத்தைப் பிளக்கச் சென்றனர்.(16) அவர்கள், பூர்வதிசையை {கிழக்குத் திசையைப்} பிளந்து, பிறகு தக்ஷிணத்தை {தென் திசையைப்} பிளந்து, அந்த தக்ஷிண திசையிலும் பர்வதத்திற்கு ஒப்பானதும், சிரசில் தென் திசையைத் தாங்கியதும், மஹாத்மாவுமான மஹாபத்மமெனும் ஒரு மஹாகஜத்தைக் கண்டு அளவற்ற ஆச்சரியத்தில் மூழ்கினர்.(17,18)

மஹாத்மாவான ஸகரனின் அறுபதாயிரம் மகன்கள் அதை (தென் திசைக்கான யானையைப்} பிரதக்ஷிணம் செய்துவிட்டு மேற்கு திசையை அடைந்தனர்.(19) அந்த மஹாபலர்கள் மேற்குத் திசையில் எல்லையற்ற மலைக்கு ஒப்பான சௌமனஸம் என்ற திசைகஜத்தைக் கண்டனர்.(20) அதைப் பிதக்ஷிணம் செய்த அவர்கள், அதன் நலத்தைக் கேட்டுவிட்டுப் பிளந்தவாறே அங்கிருந்து ஸோமரஸம் கொண்ட திசையை {வடக்குத் திசையை} அடைந்தனர்.(21)

இரகுசிரேஷ்டா {ரகுகுலத்தில் சிறந்த ராமா}, உத்தரத்தில் {வடக்குத் திசையில்} பனியைப் போன்று வெண்மையானதும், மங்கல உடலைக் கொண்டதும், மஹீயைத் தாங்குவதுமான {வடக்குத் திசை பூமியைத் தாங்குவதுமான} பத்திரத்தைக் கண்டனர் {பத்திரம் என்ற பெயர் கொண்ட யானையைக் கண்டனர்}[3].(22) அந்த அறுபதாயிரம் புத்திரர்களும் அதைத் தொட்டுப் பிரதக்ஷிணம் செய்து வசுதாலத்தை {பூமியின் பரப்பைத்} தோண்டினர்.(23) அப்போது மங்கலமான வடக்குத் திசைக்குச் சென்ற அந்த ஸாகரர்களான ஸரகாத்மஜர்கள் {ஸகரனின் மகன்களான} அனைவரும், பிருத்வியைத் தோண்டிக் கொண்டே சென்றனர்.(24)

[3] நான்கு திசைகளுக்குரிய நான்கு யானைகளாக விரூபாக்ஷம் (கிழக்கு), மஹாபத்மம் (தெற்கு), சௌமனஸம் (மேற்கு), பத்திரம் (வடக்கு) ஆகியன சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு திசைகளுக்குரிய யானைகளாக வேறு ஒரு பட்டியலும் உள்ளது. (1) கிழக்கு - ஐராவதம்; (2) மேற்கு - ஸுப்ரதீகம்; (3) வடக்கு - ஸார்வபௌமம்; (4) தெற்கு - புஷ்பதந்தம்.  எட்டுத் திசைகளுக்குரிய யானைகளின் பெயர்கள் மஹாபாரதத்தின் ஆதிபர்வம் பகுதி 64 லில் உள்ளது.

மஹாத்மாக்களும், பயங்கர வேகம் கொண்டவர்களும், மஹாபலர்களுமான அவர்கள் அனைவரும் {வடகிழக்கை அடைந்ததும்} அங்கே ஸநாதன வாசுதேவனான கபில வடிவ தேவனின் அருகில் அந்த ஹயம் {குதிரை} திரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். இரகுநந்தனா, அப்போது அவர்கள் அனைவரும் ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைந்தனர்.(25,26)

அவரே {கபிலரே} ஹயஹரன் {குதிரைக்கள்வன்} எனக் கருதிய அவர்கள் குரோதங்கொண்ட விழிகள் கலங்க மண்வெட்டிகளையும், கலப்பைகளையும், பலவகையான விருக்ஷங்களையும் {மரங்களையும்}, கற்களையும் எடுத்துக் கொண்டு மூர்க்கமாக அவரை நோக்கி விரைந்து சென்று, "நில், நிற்பாயாக" என்று அதட்டினர்.(27,28அ) அவர்கள், "துர்மதி கொண்டவனே, எங்கள் யாகக் குதிரையைக் களவு செய்தவனே, இங்கே வந்திருக்கும் நாங்கள் ஸகராத்மஜர்கள் {ஸகரனின் மகன்கள்} என்பதை அறிவாயாக" என்றனர்.(28ஆ,29அ)

இரகுநந்தனா, அப்போது அவர்களின் வசனத்தைக் கேட்ட கபிலர் பெருங்கோபமடைந்தவராக ஹுங்காரமிட்டார் {ஹும் என்று அதட்டினார்}.(29ஆ,30அ) காகுத்ஸ்தா, அப்போது ஒப்பற்ற சக்தி கொண்ட மஹாத்மாவான அந்தக் கபிலரால் ஸகராத்மஜர்கள் அனைவரும் சாம்பற்குவியலாக்கப்பட்டனர்" {என்றார் விசுவாமித்ரர்}.(30ஆ,இ)

பாலகாண்டம் சர்க்கம் – 40ல் உள்ள சுலோகங்கள் : 30

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை