River Ganga | Bala-Kanda-Sarga-35 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கங்கையாற்றங்கரையை அடைந்து பயணித்தது; கங்கை ஆற்றைக் குறித்துக் கேட்ட ராமன்; கங்கையின் வரலாற்றைச் சொன்ன விஷ்வாமித்ரர்...
விஷ்வாமித்ரர் எஞ்சியிருக்கும் ராத்திரியில் சோணை ஆற்றங்கரையில் மஹரிஷிகளுடன் தங்கி, இரவு கடந்து விடிந்ததும் பேசினார்:(1) "இராமா, பொழுது விடிந்துவிட்டது. கிழக்கில் வெள்ளந்தி முளைக்கிறது; விழித்தெழுவாயாக. நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. பயணத்திற்கு ஆயத்தமாவாயாக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(2)
அவரது அந்த வசனத்தைக் கேட்டவன் {இராமன் எழுந்து}, விடியற்காலையில் செய்ய வேண்டிய அறச்சடங்குகளைச் செய்து, பயணத்தில் விருப்பத்துடன் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(3) "பிராமணரே, சுபஜலம் {நல்ல நீரைக்} கொண்டதும், மணற்குன்றுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்த சோணை ஆழமற்றதாகவே இருக்கிறது. நாம் {நீர்வழி, நில வழி என்ற} இவ்விரு பாதைகளில் எவ்வழியில் எளிதாகக் கடக்க முடியும்?" {என்று கேட்டான் ராமன்}.(4)
இராமன் இவ்வாறு விஷ்வாமித்ரரிடம் சொன்னதும் அவர், "{இந்த} மஹரிஷிகள் எவ்வழியில் செல்வார்களோ அதே பாதையில் நாம் {நடந்தே} செல்வோம்" என்று சொன்னார்.(5)
மதிமிக்கவரான விஷ்வமித்ரர் இதைச் சொன்னதும், அந்த மஹரிஷிகள் விதவிதமான வனங்களைக் கண்டவாறே பயணம் செய்தனர்.(6) அவர்கள் தூரமாகச் சென்று பாதி நாளும் கடந்த போது, முனிவர்களால் துதிக்கப்படுபவளும், ஆறுகளில் சிறந்தவளுமான ஜாஹ்னவியை {கங்கையாற்றைக்} கண்டனர்.(7) புண்ணிய நீரைக் கொண்டவளும், ஹம்ஸங்களாலும் {அன்னங்களாலும்}, சாரஸங்களாலும் துதிக்கப்படுபவளுமான அவளைக் கண்டு ராகவர்கள் இருவருடன் கூடிய முனிவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.(8) பிறகு அனைவரும் அந்த தீரத்தில் களைப்பாறினர். அதன்பிறகு நீராடி, விதிப்படி பித்ருதேவதைகளுக்குத் தர்ப்பணஞ் செலுத்தி, அக்னிஹோத்திரத்திற்கான நெருப்பைத் தூண்டி, {ஹோமத்தில் எஞ்சிய} அமுதம் போன்ற ஹவியை உண்டு, நிறைந்த மனங்களுடன் மஹாத்மாவான விஷ்வாமித்ரரைச் சூழ்ந்திருந்த பரிவாரங்கள் அனைத்தும் {முனிவர்கள் அனைவரும்} மங்கலமான ஜாஹ்னவி தீரத்தில் {கங்கையாற்றங்கரையில்} அமர்ந்தனர்.(9-11அ)
{அவர்கள்} சுகமாக அமர்ந்ததும் ராகவர்களும் {ராமனும், லக்ஷ்மணனும்} விதிப்படி {அமர்வதற்கான} அனுமதிபெற்றனர் {அமர்ந்தனர்}. அப்போது ராமன் மனமகிழ்ச்சியுடன் விஷ்வாமித்ரரிடம் பேசினான்:(11ஆ,இ) "பகவானே, மூவழிகளில் செல்லும் கங்கா நதியைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். மூவுலகங்களில் பாய்பவளான இவள் நதநதீபதியை {நதங்களுக்கும், நதிகளுக்கும் தலைவனான பெருங்கடலை} எவ்வாறு அடைகிறாள்?" {என்று கேட்டான் ராமன்}.(12)
இராமவாக்கியத்தால் ஊக்கமடைந்த விஷ்வாமித்ர மஹாமுனி, கங்கையின் ஜன்மம் {பிறப்பு / தோற்றம்}, விருத்தம் {ஏற்றம் / வரலாறு} ஆகியனவற்றையும், தொடர்பானவற்றையும் இவ்வாறு சொன்னார்:(13) "இராமா, தாதுக்களின் மஹா கொள்ளிடமும், சைலேந்திரனுமான {மலைகளின் மன்னனுமான} ஹிமவானுக்கு {இமயமலைக்கு} ரூபத்தால் புவியில் ஒப்பற்ற கன்னிகைகள் இருவர் இருந்தனர்.(14) இராமா, மேனை {மனோரமை}[1] என்ற பெயர் படைத்தவளும், மேருவின் மகளும், மனங்கவர்பவளுமான ஒரு கொடியிடையாள் அந்த ஹிமவானின் பிரிய பத்தினியாக {அன்பு மனைவியாக} இருந்தாள்.(15) இராகவா, இந்த கங்கை ஹிமவானின் ஜேஷ்ட சுதையாக {மூத்த மகளாக} அவளிடமே {அந்த மேனையிடமே} தோன்றினாள். அதேவழியிலேயே உமை என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது கன்னிகையும் தோன்றினாள்.(16)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் ஆங்கிலப் பதிப்புகளில் இவளது பெயர் மேனை என்றும், நரசிம்மாசாரியர், தாதாசாரியர் ஆகியோரின் தமிழ்ப் பதிப்புகளில் இவளது பெயர் மனோரமை என்றும் இருக்கிறது.
பின்னர் தேவ காரியத்தில் விருப்பங்கொண்ட ஸுரர்கள் {தேவர்கள்} அனைவரும் திரிபதகையான {மூவழிகளில் பாய்பவளான} மூத்தவள் கங்கையை அந்த சைலேந்திரனிடம் {ஹிமவானிடம்} வரமாக வேண்டினர்.(17) தர்மவானான ஹிமவான், மூவுலகங்களின் நன்மையை எதிர்பார்த்தவனாக, உலகப் பாவங்களை அகற்றுபவளும், நினைத்த வழியில் பாய்பவளுமான கங்கையைக் கொடுத்தான்.(18) அப்போது அவர்கள் {தேவர்கள்}, மூவுலகங்களின் நன்மையை விரும்பி மூவுலகங்களின் அர்த்தமாக {செல்வமாக} விளங்கக்கூடிய கங்கையை வரவேற்று, அந்தராத்ம காரியம் நிறைவடைந்தவர்களாக {சொர்க்கத்திற்கே} திரும்பிச் சென்றனர்.(19)
இரகுநந்தனா, மலைமகளாக இருந்த இன்னொரு கன்னிகை {உமை} தவமே தனமாக உக்கிர விரதங்களை மேற்கொண்டு வந்தாள்.(20) சைலவரன் {மலைகளிற்சிறந்த ஹிமவந்தன்}, உக்கிர தவத்தில் ஐக்கியமடைந்தவளும், உலகங்களால் துதிக்கப்படுபவளும், ஒப்பற்றவளுமான தன் மகள் உமையை ருத்திரனுக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(21)
இராகவா, சைலராஜனின் {இமயத்தின்} மகள்களான ஆறுகளிற் சிறந்த கங்கையும், உமாதேவியும் உலகத்தால் நமஸ்கரிக்கப்படுகின்றனர்.(22) சிறந்த நடையைக் கொண்ட தாதா {ஐயா ராமா}, அந்தத் திரிபதகாமினி {மூவழிகளில் பாய்பவள்} சொர்க்கத்திற்குச் சென்றதையும், அவளது கதி தொடர்பான அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்[2].(23) ரம்யமானவளும், பாவமற்றவளும், ஜலவாஹினியுமான இந்த சைலேந்திரதனையள் {பர்வதராஜனின் மகளான இந்த கங்கை}, ஸுரநதியாகி {தேவநதியாகி} ஸுரலோகத்திற்கு {சொர்க்கத்திற்கு} உயர்ந்து சென்றவளாவாள்[3]" {என்றார் விசுவாமித்ரர்}.(24)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆற்றின் மூவழி பாய்ச்சலில் கங்கையாக இமயத்தின் மடியில் பாய்வது முதல் வழியும், பிறகு அவள் தேவகங்கையாகவோ, மந்தாகினியாகவோ, சுதீர்கிகையாகவோ தேவர்களுடன் சொர்க்கம் நோக்கிச் செல்வது இரண்டாம் வழியும், பிறகு அவள் சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு ஜாஹ்னவியாக வந்து, கடலை அடைந்து பாதாளத்திற்கும் செல்வது மூன்றாம் வழியும் ஆகும். இதில் சில வேறுபாடுகளும் சொல்லப்படுகின்றன. இந்த ஆறு முதலில் ஆகாயத்தில் இருந்தது, அடுத்தது சொர்க்கத்தில் நுழைந்தது, மூன்றாவதாகப் பூமியை அடைந்தது என்று சிலர் சொல்கின்றனர். தேவர்கள், பிற்காலத்தில் அவள் சொர்க்கத்திற்கு வருவதற்காக வானின் மத்தியில் விடவில்லை, எனவே, கங்கை, மந்தாகினி, ஜாஹ்னவி என்பவையே அவளது மூவழிகள் என்கின்றனர்" என்றிருக்கிறது.
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இந்நதி மூன்று மார்க்கங்களைப் பெற்ற விதத்தைச் சொல்லுகிறேன். இக்கங்கை, முதலில் ஆகாயமார்க்கத்தில் சென்றனள். பின்பு பாபமின்றி அழகாய் விளங்கி வற்றாத வெள்ளங்கொண்ட பர்வதராஜன் மகளாகிய இந்நதியே தேவலோகத்திற்குச் சென்று தேவநதியென்னும் பெயர் பெற்றனள்" என்றிருக்கிறது.
பாலகாண்டம் சர்க்கம் – 35ல் உள்ள சுலோகங்கள் : 24
Previous | | Sanskrit | | English | | Next |