Wednesday, 27 March 2024

பொழில் இறுத்தல் - பிரமதாவன பங்கம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 41 (21)

Royal pleasure garden destroyed | Sundara-Kanda-Sarga-41 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் பலத்தையும், அவனது அமைச்சர்களின் பலத்தையும் அறிய நினைத்த ஹனுமான்; இராவணனைச் சந்திப்பதற்கு ஏதுவாக அந்தப்புரச் சோலையை அழிக்க நினைத்தது; அதைச் செய்து முடித்தது...

Hanuman waiting at the gate of the pleasure garden

அவளுடைய {சீதையின்} போற்றுதலுக்குரிய வாக்கியங்களால் பூஜிக்கப்பட்ட அந்த வானரன் {ஹனுமான்}, அந்த தேசத்தில் {இடத்தில்} இருந்து புறப்பட்டு, அப்பால் சென்றதும் {பின்வருமாறு} சிந்தித்தான்:(1) “இந்தக் கருவிழியாள் காணப்பட்டதில் காரியம் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. {சாம, தான, பேதம் என்ற} மூன்று உபாயங்களையும் கடந்து, {தண்ட உபாயம் என்கிற} நான்காவதையே இங்கே பார்க்க வேண்டும்.(2) இராக்ஷசர்களிடம் ஸாம குணம் பயன்படக்கூடியதில்லை. ஏராளமான அர்த்தம் {செல்வம்} கொண்டவர்களிடம் தானம் பொருத்தமானதில்லை. பலத்தில் செருக்குடையவர்களிடம் பேதம் சாத்தியமில்லை. எனக்கு இங்கே {நான்காவது உபாயமான தண்டம் என்ற} பராக்கிரமம் மட்டுமே விருப்பத்திற்குரியது.(3) இந்தக் காரியத்தில் பராக்கிரமத்தைத் தவிர, தகுந்த வேறு எந்த நிச்சயமும் {தீர்மானமும்} பயன்படாது. போரில் ராக்ஷச பிரவீரர்கள் {மாவீரர்கள்} கொல்லப்பட்டால், இங்கேயே இப்போதே எப்படியாவது மார்தவத்தை {மென்மையை / அடக்கத்தை} அடைவார்கள்.(4)

காரியத்தில் ஏவப்பட்டு, பூர்வகாரியத்திற்கு {முன் செய்த செயல்களுக்கு} விரோதமில்லாமல் கர்மத்தைச் செய்து, பலவற்றை சாதிப்பவன் எவனோ, அவனாலேயே காரியத்தைச் செய்ய முடியும்.(5) இங்கே, அற்ப கர்மத்திற்கும் {சிறிய செயலுக்குங்} கூட சாதகமான ஒரே வழிமுறை என்று ஏதுமில்லை. அர்த்தத்தை {நோக்கத்தைப்} பலவழிகளில் நிறைவேற்றத் தெரிந்தவன் எவனோ, அவனே அர்த்தத்தை சாதிக்கும் சமர்த்தனாவான்[1].(6) நான் இங்கிருக்கும்போதே, பகைவருக்கும், நமக்கும் உண்டான விசேஷமான போர்முறைகள் குறித்த உண்மையை நிச்சயித்துக் கொண்டு, பிலவகேஷ்வர ஆலயத்திற்கு {தாவிச் செல்பவர்களின் தலைவரான சுக்ரீவரின் இருப்பிடத்திற்கு} சென்றால்தான், என் தலைவரின் சாசனத்தை {சுக்ரீவரின் ஆணையை} நிறைவேற்றியவனாவேன்.(7) இப்போது கட்டாயம் ராக்ஷசர்களுடன் எனக்கு நேரப்போகும் யுத்தமானது சுகமாக ஏற்படுவது எப்படியோ, அப்படியே போரில் தசானனனும் {பத்து முகங்கள் கொண்ட ராவணனும்}, நானும் {சுகமாக / எளிதாக} அவரவர் பலத்தை அறிந்து கொள்ள முடியும்.(8) பிறகு, போரில் மந்திரி கணங்களுடனும், படைகளுடனும் பயணிப்பவனான தசானனனை {பத்துமுகங்களைக் கொண்ட ராவணனை} நெருங்கி, அவனது ஹிருதயத்தில் உள்ள மதத்தையும் {கருத்தையும்}, பலத்தையும் {வலிமையையும்} அறிந்து கொண்டு, இங்கிருந்து சுகமாக நான் திரும்பிச் செல்வேன்.(9)

[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "உரையாசிரியர், "பெரும் துன்பங்களை அடைந்து சிறிய காரியத்தை நிறைவேற்றுபவன் சமர்த்தனல்ல; பல்வேறு வழிகளில் குறைந்த முயற்சியுடன் சாதிப்பவனே சமர்த்தன்" என்று இந்த சுலோகத்திற்குப் பொருள் சொல்கிறார்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "இவ்வுலகில் அற்பமான காரியத்திற்கும் ஒரே உபாயம் சாதகமாகமாட்டாது; ஆதலால் எவனொருவன் கோரிய பயனை பலவகையாலும் அறிகிறானோ அவன்தான் காரியத்தை ஸாதிப்பதில் வல்லவனாகிறான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "முயன்ற கார்யம் ஸ்வல்பமாயினும் அதை ஏதோ ஒரு ஹேதுவை மாத்ரம் பிடித்து ஸாதிக்க ஸாத்யமன்று. இனி மஹா கார்யத்திற்குச் சொல்ல வேண்டுமோ? ஆகையால் ஸீதையைக் கண்ட மாத்ரத்தினால் பயன் யாது? எவன் ஒரு கார்யத்திற்குள்ள பல ஹேதுக்களைக் கொண்டு பலவகை உபாயங்களால் நிறைவேற்ற அறிவானோ, அவனே கார்யத்தை ஸாதிக்கவல்லவனன்றி மற்றவனல்லன்" என்றிருக்கிறது.

Hanuman with a plucked tree in his hand

நானாவித மரங்கள், லதைகளுடன் {கொடிகளுடன்} கூடியதும், நேத்திரங்களையும் {கண்களையும்}, மனத்தையும் ஈர்ப்பதும், அந்தக் கொடூரனுக்குரியதுமான இந்த உத்தம வனம், {இந்திரனுக்குரிய} நந்தனத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது.(10) உலர்ந்த வனத்தை அனலன் {உலர்ந்த காட்டை அழிக்கும் அக்னி} போல, இதை {இந்த வனத்தை} நான் அழிப்பேன். இது பங்கமடையும்போது தசானனன் கோபத்தை அடைவான்.(11) பிறகு, அஷ்வங்கள், மஹாரதங்கள், துவீபங்கள் {குதிரைகள், பெருந்தேர்கள், யானைகள்} ஆகியவற்றையும், மஹத்தான திரிசூலங்கள், காலாயஸப் பட்டிசங்கள் ஆகிய ஆயுதங்களையும் கொண்ட பலத்திற்கு {படைக்கு} ராக்ஷசாதிபன் {ராவணன்} ஆணையிடும்போது, இங்கே மஹத்தான யுத்தம் உண்டாகும்.(12) சகித்துக் கொள்ள முடியாத விக்கிரமங்கொண்ட நானும், சண்டவிக்கிரமர்களான அந்த ராக்ஷசர்களைத் தாக்கி, ராவணனால் தூண்டபட்ட அந்த பலத்தை {படையை} அழித்து, கபீஷ்வர ஆலயத்திற்கு {குரங்குகளின் தலைவரான சுக்ரீவரின் இருப்பிடத்திற்கு} சுகமாகத் திரும்பிச் செல்வேன்" {என்று நினைத்தான் ஹனுமான்}[2].(13)

[2] இப்பொழிலினைக் கடிது இறுக்குவென் இறுத்தால்
அப்பெரிய பூசல்செவி சார்தலும் அரக்கர்
வெப்புறுசினத்தர் எதிர் மேல்வருவர் வந்தால்
துப்பு உறமுருக்கி உயிர் உண்பல் இது சூதால் (5434)
வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்
வெந்திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால்
முந்தும் எனின் அன்னவன் முடித்தலை முசித்து என்
சிந்தை உறு வெந்துயர் தவிர்த்து இனிது செல்வேன் (5435)

- கம்பராமாயணம், 5434, 5435 பாடல்கள், பொழில் இறுத்தபடலம்

பொருள்: "இந்தச் சோலையை விரைவில் முறித்து அழிப்பேன். அழித்தால், அந்தப் பெரும் ஆரவாரம் செவியில் பட்டதும், கொடுமைமிக்க அரக்கர்கள் கோபமடைந்து, என்னை எதிர்த்துப் போர் புரிய வருவார்கள். வந்தால், என் வலிமையைக் கொண்டு அவர்களை அழித்து உயிரைப் பறிப்பேன். இதுவே செய்யத்தக்கது.(5434) வருபவர்கள் அனைவரும் மீண்டு செல்லாதவர்களாக மடிந்ததும், கொடியவனும், வலிமைமிக்கவனுமான அரக்கனும் {ராவணனும்}, விலக்க முடியாத வலிமையுடன் போரிடுவானெனில், அவனது மகுடம் அணிந்த தலையை முறித்து, என் மனத்தில் உள்ள கொடுந்துயரைப் போக்கிக் கொண்டு, மகிழ்ச்சியாகத் திரும்பிச் செல்வேன்"(5435) {என்று நினைத்தான் ஹனுமான்}.

பிறகு, பீமவிக்கிரமனான மாருதி {வாயுமைந்தன் ஹனுமன்} குரோதமடைந்தபோது, மாருதத்தை {காற்றைப்} போன்ற மகத்தான தொடை வேகத்தால் மரங்களை முறித்துத்தள்ள ஆரம்பித்தான்.(14) அப்போது, வீரனான ஹனுமான், மதங்கொண்ட பறவைகளின் ஒலியுடன் கூடியதும், நானாவித மரங்கள், லதைகள் {கொடிகள்} ஆகியவற்றால் நிறைந்ததுமான பிரமதாவனத்தை பங்கம் செய்தான் {பெண்களுக்கான அந்தப்புரத்துடன் இணைந்த தோட்டத்தை அழித்தான்}.(15) முறிக்கப்பட்ட விருக்ஷங்களுடனும், இடிந்த நீர்த்தேக்கங்களுடனும், பொடியாக்கப்பட்ட பர்வத உச்சிகளுடனும் கூடிய அந்த வனம், காணப் பிரியமற்றதானது.(16) நானாவித பறவைகளின் ஒலியுடனும், நன்றாக இடிந்த நீர்த்தேக்கங்களுடனும், வாடிய மரங்கள், கொடிகள் ஆகியவற்றுடனும், வாடிவதங்கிய செந்தளிர்களுடனும்,{17} காட்டுத் தீயில் எரிந்ததைப் போல் அங்கே பொலிவிழந்த அந்த வனத்தில், ஆதாரக் கிளைகளில் இருந்து விடுபட்டக் கொடிகளும், கலைந்த ஆடைகளுடன் நடுங்கும் பெண்களைப் போலக் காணப்பட்டன.(17,18) 

Hanuman waiting at the gate of the garden

நாசமடைந்த லதாகிருஹங்களுடனும் {கொடிமாடங்களுடனும்}, சித்திர கிருஹங்களுடனும் {சித்திர மண்டபங்களுடனும்}, மஹா உரகங்களுடனும் {பெரும் பாம்புகளுடனும்}, கூச்சலிடும் காட்டு விலங்குகளுடனும், பொடியான சிலாகிருஹங்களுடனும் {கல் மண்டபங்களுடனும், வேறு பிற} கிருஹங்களுடனும் கூடிய அந்த மஹத்தான வனத்தின் ரூபம் நஷ்டமடைந்தது {வடிவம் குலைந்தது}.(19) கொடிகளடர்ந்த அசோகங்களுடன் கூடிய தசாஸ்யனின் பிரமதாவனமானது {பத்துத் தலை ராவணனின் மகளிருக்கான தோட்டமானது}, அந்தக் கபியின் {குரங்கான ஹனுமானின்} பலத்தால் அழிந்து, சோகக் கொடிகளால் அடர்ந்த வனஸ்தலமானது[3]. (20) 

[3] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "பிரமதையை {பெண்ணைப்} பாதுகாக்க வந்த கபியால் முற்றிலும் அழிக்கப்பட்ட ராவணனின் பிரமதாவனம் சோகக் கொடிகள் படர்ந்ததாகத் தெரிந்தது" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "அந்தப்புர மகளிர் விளையாடுவதற்குரியதும், அசோகமரங்களும், கொடிகளும் நிறைந்ததுமான அந்த வனம், இப்போது அந்த வானரத்தால் சோகக் கொடிகள் படர்ந்ததாக ஆக்கப்பட்டது" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "தசமுகனின் பெண்டுகள் விளையாடுவதற்கிடமாயிருந்த பூங்காவனத்தின் அந்த அசோகக் கொடிகள் கலையாமல் படர்ந்திருந்த சிங்கார வனமும், வானரத்தின் ஆண்மையினால் ஹதமானதாய் சோகக் கொடிகளடர்ந்ததாய் ஆயிற்று" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராவணனது காந்தைகளுக்கு ஸமஸ்த போகங்களையும் வளரச் செய்து கொண்டு காப்பாகிக் கொடிகளின் ஸமூஹங்கள் யாதொரு கெடுதியுமின்றி மேன்மேலும் வளர்ந்து வரப்பெற்ற ராவணனுடைய அந்தப் புரோத்யானமான அழகிய அவ்வசோகவனம், ஹனுமான் பலாத்காரமாக முறிக்கையில் கொடி ஸமூஹங்களும், செடிசெட்டுக்களும், புதர் முதலிய ஸ்தானங்களும் மிகுதியும் பாழாகிச் சோகத்திற்கிடமாயிருந்தது" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில், "அசோகக் கொடிகள் படர்ந்ததும், இராவணனுடைய அந்தப்புர மடந்தையரின் காமத்தை வளர்ப்பதுமான அந்த வனம், சீதையைக் காப்பாற்ற வந்த வானரத்தின் பலத்தால் அழிக்கப்பட்டு, சோகக் கொடிகளின் கூட்டத்தால் நிறைந்ததாக ஆக்கப்பட்டுவிட்டது" என்றிருக்கிறது.

மஹாத்மாவான அந்த மஹாகபி, அர்த்தபதியின் {அத்தோட்டத்தின் உரிமையாளனான ராவணனின்} மனத்தில் மஹத்தான வெறுப்பை உண்டாகச் செய்துவிட்டு, செழிப்பில் ஜுவலிப்பவர்களும், மஹாபலம்வாய்ந்தவர்களுமான பலருடனும் ஏகனாக யுத்தம் செய்வதற்காக தோரணத்தில் {தனியனாகப் போரிட நுழைவாயிலின் அருகில்} நின்றான்.(21)

சுந்தர காண்டம் சர்க்கம் – 41ல் உள்ள சுலோகங்கள்: 21


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை