Bhageeratha | Bala-Kanda-Sarga-42 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அம்சுமானாலும், அவனது மகனான திலீபனாலும் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர முடியவில்லை; திலீபனின் மகனான பகீரதன் செய்த பெரும் முயற்சி; பிரம்மன் தந்த வரம்; கங்கையைத் தன் தலையில் தாங்கிய சிவன்...
{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "இராமா, ஸகரன் கால தர்ம கதியை அடைந்தும் {மரணம் அடைந்ததும்} அமைச்சர்களும், ஜனங்களும் தார்மிகனான {ஸகரனின் பேரனான} அம்சுமானை ராஜனாக அரியணையேற்றினர்.(1) இரகுநந்தனா, அந்த அம்சுமான் மஹாராஜனாகத் திகழ்ந்தான். அவனுக்கு திலீபன் என்ற புகழ்பெற்ற மஹான் புத்திரனாகப் பிறந்தான்.(2) இரகுநந்தனா, அவன் {அம்சுமான்}, திலீபனிடம் ராஜ்ஜியத்தை முழுமையாக ஒப்படைத்துவிட்டு, ரம்மியமான ஹிமய சிகரத்தில் கடுந்தவம் மேற்கொண்டான்.(3) பெரும்புகழ் பெற்ற அந்த ராஜா {அம்சுமான்}, வனத்தில் முப்பத்து இரண்டாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, தவத்தையே தனமாகக் கொண்டவனாக சுவர்க்கத்தை அடைந்தான்[1].(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவன் {அம்சுமான்}, தன் தவத்தின் வெகுமதியாக கங்கையை அடையாமல், தனக்காகப் புண்ணியத்தை மட்டுமே அடைந்து சொர்க்கத்தை அடைந்தான்" என்றிருக்கிறது.
மஹாதேஜஸ்வியான திலீபன், தன் பிதாமஹர்களின் {தன் பாட்டன் மாரும், ஸகரனுடைய அறுபதாயிரம் மகன்களுமான அவர்களின்} வதத்தைக் கேட்டு துக்கமடைந்து, {தன் தந்தையின் [அம்சுமானின்] அவல நிலையை நினைத்து} புத்தி சிதைந்து, ஒரு நிச்சயத்தை அடையாமல் இருந்தான்.(5) அவன், "கங்கையை அவதரிக்கச் செய்வது எவ்வாறு? அவர்களுக்கு {பாட்டன்மாருக்கு} ஜலக்கிரியை {தர்ப்பணம்} செய்வது எவ்வாறு? அவர்களை இந்தக் கதியில் இருந்து மீட்பதெவ்வாறு?" என்ற சிந்தனையில் எப்போதும் வருந்திக் கொண்டிருந்தான்.(6) ஆத்மாவை அறிந்தவனும், தர்மவானும், நித்தம் சிந்தித்துக் கொண்டிருந்தவனுமான அவனுக்கு {திலீபனுக்கு}, பகீரதன் என்ற பெயரில் தார்மிகனான புத்திரன் ஒருவன் பிறந்தான்.(7) மஹாதேஜஸ்வியான திலீபன் எண்ணற்ற யாகங்களைச் செய்தான். அந்த ராஜா முப்பத்தாயிரம் ஆண்டுகள் தன் ராஜ்ஜியத்தை ஆண்டான்.(8) நரசார்தூலா, அந்த ராஜா {திலீபன்} அவர்களின் {தன் பாட்டன்மாரின்} கதியை உயர்த்த ஒரு நிச்சயமான வழியை அறியாமல் வியாதியடைந்து காலதர்மத்தையும் அடைந்தான் {மரணமும் அடைந்தான்}.(9) நரரிஷபா {மனிதர்களில் காளையே ராமா}, அந்த ராஜா {திலீபன்}, தன் புத்திரன் பகீரதனுக்கு ராஜ்ஜியாபிஷேகம் செய்து வைத்து, தான் செய்த புண்ணியக் கர்மத்தால் இந்திரலோகத்தை அடைந்தான்.(10)
இரகுநந்தனா, தார்மிகனான ராஜரிஷி பகீரதன், பிள்ளையற்றவனாக இருந்தான். அந்த மஹாராஜா புத்திரர்களைப் பெற விரும்பியும், கங்கையை அவதரிக்கச் செய்ய விரும்பியும், பிரஜைகளையும் {குடிமக்களையும்}, ராஜ்ஜியத்தையும் மந்திரிகளின் கைகளில் ஒப்படைத்தான். மாதமொரு முறை ஆகாரம் கொண்டு, ஐந்து நெருப்புகளுக்கு[2] மத்தியில் உயர்த்திய கைகளுடன் கோகர்ணத்தில் {கோகர்ண மலையில்} நின்று, இந்திரியங்களை வென்றவனாகவும், உறுதிமிக்கவனாகவும் நீண்ட காலம் தவமிருந்தான்.(11,12,13அ) மஹாபாஹுவே {வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ராமா}, உறுதியுடன் கோர தவத்தை மேற்கொண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும், பிரஜைகளுக்குப் பதியும் {உயிரினங்களின் தலைவனும்}, ஈஷ்வரனுமான பகவான் பிரம்மன் அந்த மஹாத்மாவிடம் {பகீரதனிடம்} நிறைவடைந்தான்.(13ஆ,14)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஐந்து நெருப்புகள் என்பன பஞ்சாக்னிகளாகும். பூமியின் நான்கு திசைகளிலும் மூட்டப்பட்ட நெருப்பும், தலைக்கும் மேலே சூரியனும் சேர்ந்து பஞ்சாக்னிகளாகின்றன" என்றிருக்கிறது.
அப்போது பிதாமஹன் {பெரும்பாட்டன் பிரம்மன்}, தவம் செய்து கொண்டிருந்த மஹாத்மாவான பகீரதனிடம், ஸுர கணங்களுடன் {தேவர்களின் கூட்டத்துடன்} வந்து இவ்வாறு பேசினான்:(15) "ஜனாதிபா, மஹாராஜா பகீரதா, உன் தவம் முழுமை அடைந்தது. நான் பிரீதியடைந்தேன் {மகிழ்ச்சியடைந்தேன்}. நல்விரதம் கொண்டவனே, ஒரு வரத்தை வேண்டுவாயாக" {என்றான் பிரம்மன்}.(16)
மஹாதேஜஸ்வியும், மஹாபாஹுவுமான பகீரதன், கைகளைக் குவித்து நின்று அந்த சர்வலோக பிதாமஹனிடம் {உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனிடம்} சொன்னான்:(17) "பகவானே, என் தவத்தில் நீ பிரீதியடைந்தால், என் தவத்திற்குப் பலனேதும் இருந்தால், ஸகராத்மஜர்கள் {ஸகரனின் மகன்கள்} அனைவரும் என்னிடம் இருந்து நீரைப் பெறட்டும்.(18) இந்த மஹாத்மாக்களின் பஸ்மம் {சாம்பல்} கங்கை நீரில் நனைந்தால், என் பிதாமஹர்கள் {பாட்டன்மார்கள்} அனைவரும் நித்தியமான சுவர்க்கத்தை அடைவார்கள்.(19) தேவா, இக்ஷ்வாகு குலத்திற்கான சந்ததியையும் நான் வேண்டுகிறேன். எங்கள் குலம் அழிவில் இருந்து மீள வேண்டும். தேவா, இதுவே நான் வேண்டும் மற்றொரு வரமாக இருக்கட்டும்" {என்றான் பகீரதன்}.(20)
சர்வலோக பிதாமஹன் {பிரம்மன்}, இத்தகைய வாக்கியத்தைச் சொன்ன ராஜனிடம் {பகீரதனிடம்} மறுமொழியாக சுபமான மதுராக்ஷரங்களுடன் கூடிய தன் நாவால்,(21) "மஹாரதனான {பெருந்தேர்வீரனான} பகீரதா, உன்னுடைய மனோரதம் மகத்தானது. இக்ஷ்வாகு குல வர்த்தனா {இக்ஷ்வாகு குலத்தைப் பெருகச் செய்பவனே}, நீ வேண்டியவாறே ஆகட்டும், நீ மங்கலமாக இருப்பாயாக.(22) இராஜாவே, ஹைமவதியான {இமயத்தில் பிறந்த} இந்த கங்கை, ஹிமவானின் மூத்த மகளாவாள். எனவே, இவளைத் தாங்குவதற்கு ஹரனை {சிவனை} நியமிக்க வேண்டும்.(23) இராஜாவே, கங்கையின் பாய்ச்சலை பிருத்வியால் {பூமியால்} சஹித்துக் கொள்ள முடியாது. இராஜாவே, அவளைத் தாங்கிக் கொள்ளும் சக்தனாக சூலபாணியை {சிவனைத்} தவிர வேறு ஒருவனையும் நான் காணவில்லை" {என்றான் பிரம்மன்}.(24)
உலகங்களைப் படைத்தவன் {பிரம்மன்}, அந்த ராஜனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, கங்கையிடமும் சொல்லிவிட்டு தேவ மருத் கணங்கள் அனைவருடன் திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றான்" {என்றார் விசுவாமித்ரர்}.(25)
பாலகாண்டம் சர்க்கம் – 42ல் உள்ள சுலோகங்கள் : 25
Previous | | Sanskrit | | English | | Next |