Amshuman | Bala-Kanda-Sarga-41 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: குதிரையைத் தேடிச்சென்ற சிற்றப்பன்மார் சாம்பலானதை அறிந்த அம்சுமான்; கங்கையைக் கொண்டுவர அம்சுமானை அறிவுறுத்திய கருடன்; சொர்க்கத்திற்குச் சென்ற ஸகரன்...
{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "இரகுநந்தனா {இராமா}, ராஜா ஸகரன் தன் புத்திரர்கள் சென்று நீண்ட நாளானதை அறிந்து, தன்னைப் போன்ற தேஜஸைக் கொண்ட தன் பேரனிடம் {அம்சுமானிடம்} பேசினான்:(1) "சூரனும், கல்வியை முடித்தவனும், தேஜஸ்வியுமான நீ உன் பித்ருக்களுக்கு {மூதாதையருக்கு} இணையானவனாக இருக்கிறாய். எனவே, உன் பித்ருக்களின் கதியையும் {பாதையையும்}, அஷ்வத்தை அபகரித்தவனையும் தேடுவாயாக.(2) அந்தர்பூமியில் {பாதாளத்தில்} வாழ்வோரான வீரியவான்களையும், மஹான்களையும் நீ உன் நோக்கத்திற்காகத் திருப்பித் தாக்குவாயாக. வாளையும், வில்லையும் தரிப்பாயாக.(3) வணங்கத் தகுந்தவர்களை வணங்கி இடையூறு விளைவிப்பவர்களைக் கொன்று நோக்கத்தை நிறைவேற்றி என் யஜ்ஞத்தைக் கரை கடக்கச் செய்து பாதுகாப்பாகத் திரும்புவாயாக" {என்றான் ஸகரன்}.(4)
மஹாத்மாவான ஸகரனால் இவ்வாறு நிறைவாகச் சொல்லப்பட்ட அம்சுமான் தனுவையும், கட்கத்தையும் {வில்லையும், வாளையும்} எடுத்துக் கொண்டு நளிங் கூடிய வேகத்தில் புறப்பட்டுச் சென்றான்.(5) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்த ராமா}, அவன் {அம்சுமான்} அந்த ராஜாவால் {ஸகரனால்} தூண்டப்பட்டு, மஹாத்மாக்களான தன் பித்ருக்களால் {தன் சிற்றப்பன்மாரால்} தோண்டப்பட்ட அந்தர் பூமியின் மார்க்கத்தில் சென்றான்.(6) அந்த மஹாதேஜஸ்வி {அம்சுமான்}, தேவர்கள், தானவர்கள், ராக்ஷசர்கள், பிசாசங்கள், படகர்கள் {கழுகுகள்}, உரகர்கள் {பாம்புகள்} ஆகியோரால் பூஜிக்கப்பட்ட திசை கஜங்களைக் கண்டான்.(7) அவற்றை {திசை யானைகளை} பிரதக்ஷிணம் செய்து அவற்றின் நலத்தை விசாரித்தறிந்த அவன், தன் பித்ருக்களையும் {தன் சிற்றப்பன்மாரையும்}, குதிரைக் கள்வர்களையும் குறித்து அவற்றிடம் விசாரித்தான்.(8)
மஹாமதி படைத்த அந்த திசை கஜங்கள் அதைக் கேட்டுப் பதிலுக்கு, "ஆசமஞ்சா {அசமஞ்சனின் மகனான அம்சுமானே}, உன் நோக்கத்தையும், அஷ்வத்தையும் {குதிரையையும்} சீக்கிரமாக அடைந்து நீ திரும்புவாயாக" என்றன.(9)
திசை கஜங்கள் அனைத்தும் சொன்ன வசனத்தைக் கேட்ட அவன், அவற்றின் நிலை, நடைமுறை, நியாயம் ஆகியவற்றிற்கு இணங்க விசாரிக்கத் தொடங்கினான்.(10) வாக்கியங்களை அறிந்த வாக்கிய வித்தகர்களும், திசைகளைப் பரிபாலிப்பவையுமான அவை {அந்த யானைகள்}, "ஹயத்துடன் {குதிரையுடன்} நீ திரும்பிச் செல்வாய்" என்று சொல்லி அவனை {அம்சுமானைப்} பூஜித்தன.(11)
அவை சொன்ன வசனத்தைக் கேட்டவனும், லகுவான நடை கொண்டவனுமான அவன் {அம்சுமான்}, தன் பித்ருக்களான ஸாகரர்கள் பஸ்மக் குவியலாகக் கிடந்த இடத்தை அடைந்தான்.(12) அப்போது அந்த அசமஞ்ச சுதன் {அசமஞ்சனின் மகனான அம்சுமான்} துக்கவசப்பட்டவனாகப் பரம துயரமடைந்து, அவர்கள் {தன் சிற்றப்பன்மாரான ஸாகரர்கள்} வதம் செய்யப்பட்டதற்காக துக்கித்து அழுதான்.(13) துக்கமும், சோகமும் அடைந்த அந்தப் புருஷ வியாகரன் {மனிதர்களில் புலியான அம்சுமான்}, அருகில் மேய்ந்து கொண்டிருந்த யஜ்ஞ ஹயத்தை {வேள்விக்குதிரையைக்} கண்டான்.(14) மஹாதேஜஸ்வியான அவன் {அம்சுமான்}, ராஜபுத்திரர்களான அவர்களுக்கு ஜலக்கிரியம் {நீர்க் காணிக்கை / தர்ப்பணம்} செய்ய விரும்பி, ஜலத்தை வேண்டினாலும் ஜலமுள்ள இடம் ஒன்றும் அவனுக்குக் கிட்டவில்லை.(15)
இராமா, அளந்து காண்பதில் நிபுணனான அவன் {அம்சுமான்}, தன் பித்ருக்களின் மாதுலனும் {தன் தந்தைமாருக்கு மாமனும்}, பறவைகளின் மன்னனும், அநிலனுக்கு {வாயு தேவனுக்கு} ஒப்பானவனுமான சுபர்ணனை {கருடனைக்} கண்டான்.(16) மஹாபலனான அந்த வைனதேயன் {வினதையின் மகனான கருடன்} அவனிடம் இந்த வாக்கியத்தைப் பேசினான்: "புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, நீ வருந்தாதே. {உன் சிற்றப்பன்மார் கொல்லப்பட்ட} இந்த வதம் உலகங்களுக்கு ஏற்புடையதே.(17) மஹாபலர்களான அவர்களை அளவிடற்கரிய கபிலரே தகனம் செய்தார். அனைத்தையும் அறிந்தவனே, அவர்களுக்குத் தர்ப்பணஞ் செய்வது உனக்குத் தகாது[1].(18) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, மஹாபாஹுவே, ஹிமவானின் மூத்த மகளான கங்கையைக் கொண்டு உன் பித்ருக்களுக்கு ஜல காரியம் செய்வாயாக. அவளையே நீர்க் காணிக்கையாக அளிப்பாயாக.(19) லோகபாவனீயான {உலகத்தின் பாவத்தைப் போக்கி தூய்மையாக்குபவளான} அவள் பஸ்மக் குவியலாக்கப்பட்ட அவர்களின் {உன் சிற்றப்பன்மாரின்} நிலையை உயர்த்துவாள். உலகத்தால் துதிக்கப்படும் கங்கையால் நனைக்கப்பட்ட அறுபதாயிரம் புத்திரர்களையும் அவள் சொர்க்க லோகத்திற்கு அழைத்துச் செல்வாள்.(20) நற்பேறு பெற்றவனே, புருஷரிஷபா, அஷ்வத்தை {குதிரையை} இங்கிருந்து இட்டுச் செல்வாயாக. வீரா, உன் பிதாமஹனின் {பாட்டனான ஸகரனின்} யஜ்ஞத்தை நிறைவேற்றுவதே உனக்குத் தகுந்தது" {என்றான் கருடன்}.(21)
[1] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அக்கபிலர் ப்ராஹ்மணராகையால் அவரால் கொளுத்தப்பட்ட இவர்களுக்கு உலக வழக்கத்தின்படி ஜலங்கொண்டு தர்ப்பணஞ் செய்கை வீணாகையால் அங்ஙனஞ் செய்ய நீ முயல வேண்டாம். எல்லாவற்றையுமறிந்த உனக்கு இது தெரியாத விஷயமன்று" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சண்டாளனிடத்திலிருந்தும், ஜலத்திலிருந்தும், ஸர்ப்பத்தினிடத்திலிருந்தும், இடியிலிருந்தும், ப்ராஹ்மணனிடத்திலிருந்தும், கோரைப் பற்களையுடைய ஜந்துக்களிடத்தினின்றும், பசுக்களிடத்தினின்றும் மரணமுண்டாகின்றது. கீழ்ச்சொன்ன விதத்தில் மரணமடைந்தவர்களுக்குச் செய்யும் ஜலதர்ப்பணம் முதலிய பரலோக வ்யாபாரங்கள் அவர்களுக்குப் போய்ச் சேருகின்றவையல்ல. இடையில் நசித்துப் போகின்றன. ஆகையால் அவை வீண் என்று சொல்லப்பட்டது. இதைக் கருதியே இங்கு "ப்ராஹ்மணராகையால்" என்றது" என்றிருக்கிறது.
அதிவீரியவானும், பெரும்புகழ்பெற்றவனுமான அம்சுமான், சுபர்ணனின் வசனத்தைக் கேட்டுத் துரிதமாக ஹயத்தை {குதிரையை} அழைத்துக் கொண்டு {தன் பாட்டனான ஸகரனிடம்} திரும்பிச் சென்றான்.(22) இரகுநந்தனா, அப்போது தீக்ஷையில் இருந்த ராஜாவை {ஸகரனை} அடைந்து, கருடனின் வசனத்தை சமர்ப்பித்து, நடந்தவை அனைத்தையும் சொன்னான்.(23)
அந்த நிருபன் {மன்னன் சகரன்}, அம்சுமானிடம் இருந்து கோரமான அந்த வாக்கியத்தைக் கேட்டு சாத்திர நடைமுறைப்படி யஜ்ஞத்தை மீண்டும் தொடங்கினான்.(24) ஸ்ரீமானும், மஹீபதியுமான அவன் {ஸகரன்}, யஜ்ஞத்தை விரும்பியபடி நிறைவேற்றி தன் நகரை அடைந்தான். அந்த ராஜன் கங்கையைக் கொண்டு வருவதைக் குறித்து அப்போதும் நிச்சயத்தை அடைந்தானில்லை.(25) அந்த மஹாராஜன் {ஸகரன்} நெடுங்காலத்திற்குப் பிறகும் நிச்சயத்தை அடையாமல் தன் ராஜ்யத்தை முப்பதாயிரம் வருடங்கள் திவ்யமாக ஆட்சி செய்து சென்றான் {மரணமடைந்தான்}" {என்றார் விசுவாமித்ரர்}.(26)
பாலகாண்டம் சர்க்கம் – 41ல் உள்ள சுலோகங்கள் : 26
Previous | | Sanskrit | | English | | Next |